தாக்கப்படுவதை தவிர்க்க இரானுடன் ரகசிய ஒப்பந்தமா? ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் விளக்கம்

மார்ச் 14-ஆம் தேதி, ஃபுஜைராவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எரிசக்தி மையம் ஒன்றின் மீது இரான் தாக்குதல் நடத்தியது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, மார்ச் 14-ஆம் தேதி, ஃபுஜைராவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எரிசக்தி மையம் ஒன்றின் மீது இரான் தாக்குதல் நடத்தியது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அமெரிக்கத் தடைகளால் முடக்கப்பட்ட பல பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க இரான் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டதாக வெளியான தகவல்களை ஐக்கிய அரபு அமீரகம் முற்றிலும் மறுத்துள்ளது. இச்செய்திகள் ஆதாரமற்றவை என்று அந்த நாடு தெரிவித்துள்ளது.

இரானின் முடக்கப்பட்ட பல பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக்கொண்டதாகவும், ஏற்கெனவே மூன்று பில்லியன் டாலர்களை விடுவித்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நான்கு வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரத்யேக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கத் தடைகளின் கீழ் வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட இரானின் எண்ணெய் வருவாய் தொடர்பான பல பில்லியன் டாலர் நிதியை விடுவிப்பது குறித்த விவகாரமும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றிருக்கலாம் என்று தூதரக அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், கத்தார் மற்றும் இரான் இடையிலான ரகசிய ஒப்பந்தங்கள் குறித்தும் தகவல்கள் பரவி வருகின்றன.

இரானால் தாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக தெஹ்ரானுடன் கத்தார் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தகவலை 'பொய்யானது மற்றும் நம்பகத்தன்மையற்றது' என்று கத்தார் நிராகரித்துள்ளது. இத்தகைய செய்திகள், சமரச முயற்சியைப் பாதிக்கும் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

உண்மையில், இரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரைத் தணிக்க சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கும், தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கும் பல நாடுகள் இரானுடன் 'ரகசியப் பேச்சுவார்த்தையில்' ஈடுபட்டுள்ளதாகப் பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளும் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இரான் பலமுறை கூறியுள்ளது. இருப்பினும், இதைத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

உலகளாவிய எண்ணெய் இறக்குமதியில் 20 சதவிகிதமானது ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. போர் தொடங்கியதில் இருந்தே உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தியபோது, ஹோர்மூஸ் நீரிணையை இரான் மூடியது. தங்களது அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அந்த வழியாகச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்றும் இரான் அப்போது அறிவித்திருந்தது.

ராய்ட்டர்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன?

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால், வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Majid Saeedi/Getty Images

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதால், வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"ஐக்கிய அரபு அமீரகம் மொத்தம் 10 பில்லியன் டாலர் நிதியை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது, அதில் மூன்று பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுவிட்டது" என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தனது பிரத்யேக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை அறிந்த மேலும் இரண்டு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், "இரானின் மொத்தம் 20 பில்லியன் டாலர் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இரானியத் தாக்குதல்களைத் தடுப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளன.

மூன்று பில்லியன் டாலர் மதிப்பிலான முதல் தவணை ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டதாக, அந்தச் செய்தி நிறுவனம் தனது வட்டாரங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தத் தொகை ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமானதா அல்லது ஐக்கிய அரபு அமீரக வங்கி அமைப்பில் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த இரானியக் கணக்குகளில் உள்ளதா, அல்லது வேறு எங்கிருந்தாவது இந்த நிதி வருகிறதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இது குறித்துக் கருத்து தெரிவிக்கக் கோரியதற்கு வெள்ளை மாளிகை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

இதற்கிடையில், வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை பேசிய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், "அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கோ அல்லது எந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கோ இரானுக்கு நிதி எதுவும் விடுவிக்கப்படாது" என்று தெரிவித்தார்.

"தெஹ்ரான் தனது கடமைகளை நிறைவேற்றினால் மட்டுமே அதற்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் வகையில் சாத்தியமான ஒப்பந்தத்தின் கட்டமைப்பு உள்ளது" என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து இரான் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இரானியத் தாக்குதல்களைத் தடுப்பதற்காகப் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு

இரானியத் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Walaa Alshaer/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, இரானியத் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இரான் இடையிலான உறவில் இது ஒரு பெரிய மாற்றத்தைக் குறிப்பதாக ராய்ட்டர்ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது. போரின் பெரும்பாலான காலம், இந்த இரு நாடுகளுக்கும் இடையே வெளிப்படையான பகைமை நிலவியது.

அந்த அறிக்கையின்படி, "இரானியத் தாக்குதல்களால் துபையின் ஹோட்டல்கள் காலியாகின, சில புலம்பெயர்ந்தோர் நாட்டை விட்டு வெளியேறினர். ஒரு முக்கிய வர்த்தக மையமாகத் துபை கொண்டுள்ள நற்பெயருக்கு, இந்தச் பாதுகாப்புச் சிக்கல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின."

"இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்த ஒரு வட்டாரம் கூறுகையில், அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்கான ஒரு வழியை இது வழங்குகிறது. இதில் எந்தவொரு தரப்பும் தங்களின் 'சிவப்புக் கோட்டை' தாண்ட வேண்டிய அவசியம் இல்லை," என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

"போரினால் ஏற்பட்ட இழப்புக்கு இழப்பீடு பெற்றுவிட்டதாக இரான் உரிமை கோரலாம். அதேசமயம், நாங்கள் எவ்விதப் பணத்தையும் கொடுக்கவில்லை என்று வாஷிங்டன் கூறிக்கொள்ளலாம். இதனால் அபுதாபி மற்றும் துபை பாதுகாப்பு பெறும். மேலும், இதை அந்தப் பிராந்தியத்தில் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முதலீடாகவும் முன்வைக்கலாம்."

அந்த அறிக்கையின்படி, "இந்த ஒப்பந்தம் குறித்து அறிந்த மற்றொரு வட்டாரம் கூறுகையில், பணத்துக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இரான் நிறுத்திவிடும். அத்துடன், உளவுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்துக்காக, 'குறைந்தது மற்ற இரண்டு அரபு நாடுகளிடமும்' இரான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

"ஐக்கிய அரபு அமீரகம் மீது இரான் நடத்திய கடைசி நேரடித் தாக்குதல் ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. மே 4-ஆம் தேதி ஓமன் வளைகுடாவில் உள்ள ஃபுஜைரா துறைமுகத்தில் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது," என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அந்த அறிக்கையில் உள்ள தகவல்களின்படி, "பல வாரங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தைகள் தொடங்கின. ஆனால், இரானியப் புரட்சிகர காவலர் படை அதிகாரிகள் அபுதாபிக்குச் சென்ற பிறகுதான் அது வேகமெடுத்தது. அங்கு அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், அபுதாபியின் துணை ஆட்சியாளருமான ஷேக் தன்யூன் பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்தனர்."

"அந்தப் பயணத்துக்குப் பிறகு, அமீரக அதிகாரிகள் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டனர். அங்கு இந்த ஒப்பந்தத்தின் பிற அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டது."

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இரான் இடையிலான இந்த ஒப்பந்தம், ஒரு சிக்கலான நிதிச் சூழலில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் துபையின் பங்கு முக்கியமானதாக இருக்கலாம். துபை, அமீரகத்தின் முக்கிய வர்த்தக மையமாகவும், தெஹ்ரானின் மிக முக்கியமான பொருளாதார வாழ்வாதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

அந்த அறிக்கையின்படி, "துபை வங்கிகளில் நீண்டகாலமாக இரானுடன் தொடர்புடைய பெரிய கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தடைகள் காரணமாக அவற்றில் பெரும்பாலானவை முடக்கத்திலேயே உள்ளன. இரானின் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்க நிதி வலைப்பின்னலில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை இந்தத் தடைகள் உருவாக்குகின்றன."

"ஏப்ரல் 11 அன்று, இரானிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இரானியச் சொத்துகளை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்க அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை உடனடியாக மறுத்துவிட்டார்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராய்ட்டர்ஸ் அறிக்கை குறித்து ஐக்கிய அரபு அமீரகம் கூறியது என்ன?

அமெரிக்கத் தடைகள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல நாடுகளில் எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஈட்டிய இரானின் பல பில்லியன் டாலர் வருவாய் முடக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Fatemeh Bahrami/Anadolu via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கத் தடைகள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் உள்ளிட்ட பல நாடுகளில் எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஈட்டிய இரானின் பல பில்லியன் டாலர் வருவாய் முடக்கப்பட்டுள்ளது.

நிதி பரிமாற்றம் குறித்த செய்திகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை. முடக்கப்பட்ட இரானிய நிதி எதுவும் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக விடுவிக்கப்படவோ, மாற்றப்படவோ அல்லது வழங்கப்படவோ இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தக் குற்றச்சாட்டுகளில் மூன்று பில்லியன் டாலர் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் தகவலும் அடங்கும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று வெளியுறவு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஊடக நிறுவனங்கள் 'உண்மைகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ ஆதாரங்களை நம்பிச் செயல்பட வேண்டும்; உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையோ வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்' என்றும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனநாயகப் பாதுகாப்புக்கான அறக்கட்டளை (Foundation for Defense of Democracies) அமைப்பின் ஆய்வாளர் மேக்ஸ் மீஸ்லிஷ், ராய்ட்டர்ஸ் அறிக்கை குறித்துக் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தச் செயல்பாடுகள், இரானுக்கு எதிரான அமெரிக்காவின் 'அதிகபட்ச அழுத்த' கொள்கையைச் சிதைப்பதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேக்ஸ் மீஸ்லிஷ் தனது எக்ஸ் தளத்தில், "இரான் மீதான தடைகளை அமல்படுத்துவதில் ஐக்கிய அரபு அமீரகம் பலவீனமான பங்கையே கொண்டுள்ளது என்பது, அங்கு பெருமளவு இரானியப் பணம் இருப்பதிலிருந்தே தெளிவாகிறது. இது நீண்டகாலமாக முடக்கப்பட்ட கணக்குகளாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. இதையெல்லாம் பல ஆண்டுகளாகத் தெரிந்திருந்தும், ஐக்கிய அரபு அமீரக வங்கிகளும் அதன் கட்டுப்பாட்டாளர்களும் இதைத் தடுக்கவில்லை என்பதுதான் இதன் பொருள்." என தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் அறிக்கையிலேயே கூட, மாற்றப்பட்ட இந்த நிதி ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமானதா, அல்லது ஐக்கிய அரபு அமீரக வங்கி அமைப்பில் இருந்த இரானியக் கணக்குகளா அல்லது வேறு எங்கிருந்தாவது வந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மீஸ்லிஷின் கூற்றுப்படி, "எளிமையாகச் சொன்னால், அமெரிக்கப் கருவூலத் துறை ஐக்கிய அரபு அமீரகத்திடம் எதை முடக்கச் சொல்லியிருக்க வேண்டுமோ, அதுவே இந்த நிதியாக இருக்கலாம். இரான் இந்த நிதியைத் தனது கூட்டமைப்புக் குழுக்களுக்கு உதவவும், சீனாவிடமிருந்து ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், பிற செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தியிருக்கலாம்."

"யுத்தம் தொடங்குவதற்கு முன்பே அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தால், இரானுடன் பரிவர்த்தனை செய்த ஐக்கிய அரபு அமீரக வங்கிகள் மீது தடைகள் விதிக்கப்பட்டிருக்கலாம். இப்போது இந்த நிதியை விடுவிப்பது, இரான் மீது அழுத்தம் கொடுக்கும் 'அதிகபட்ச அழுத்த' கொள்கை எவ்வாறு பலவீனமடைகிறது என்பதைக் காட்டுகிறது."

கத்தாருடன் ரகசிய ஒப்பந்தம் - வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு

இரானியத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2-ஆம் தேதி ராஸ் லஃபானில் எல்என்ஜி உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக கத்தார் அறிவித்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானியத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2-ஆம் தேதி ராஸ் லஃபானில் எல்என்ஜி உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக கத்தார் அறிவித்தது.

இதற்கிடையில், தனது இயற்கை எரிவாயு வளாகமான ராஸ் லஃபான்-ஐத் தாக்குதல்களில் இருந்து காப்பதற்காக, இரான் உடன் கத்தார் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் மாத நடுப்பகுதியில் கத்தார் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையமான ராஸ் லஃபானில் இருந்து கரும்புகை வெளியேறுவது தெரிந்தது.

உலகளாவிய எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை வழங்கும் இந்த ஆலையின் சில பகுதிகள் இந்தத் தாக்குதலில் சேதமடைந்தன. இது சீனா மற்றும் பிற நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்களைச் சிக்கலுக்கு உள்ளாக்கியது.

அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் கத்தார், இந்த மோதலில் இழுக்கப்பட்டதால், போரை முடிவுக்குக் கொண்டுவரும் அதன் முயற்சிகளும் பின்னடைவைச் சந்தித்தன.

வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின்படி, "போரின் தொடக்கத்தில், உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி மையமான ராஸ் லஃபானை இரானியத் தாக்குதல்களில் இருந்து காக்க, தெஹ்ரானுடன் கத்தார் ரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது."

அந்த அறிக்கையில், "ராஸ் லஃபான் தாக்கப்பட்டால், தாங்களாகவே எரிவாயு உற்பத்தியை நிறுத்திவிடுவதாகக் கத்தார் இரான் முன் ஒரு முன்மொழிவை வைத்தது. இதனால் உலகளாவிய எரிசக்தி விலைகள் உயரும், அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது போரை விரைவாக முடித்துக்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தை உருவாக்கும் என்பதே இதன் நோக்கம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இரானிடமிருந்து கத்தாருக்கு எவ்வித உறுதியான வாக்குறுதியும் கிடைக்கவில்லை என்றாலும், போரின் மூன்றாவது நாளிலேயே ராஸ் லஃபானில் உற்பத்தி நிறுத்தப்பட்டது," என்று அந்த அறிக்கை கூறுகிறது.

வாஷிங்டன் போஸ்டின் கூற்றுப்படி, "பின்னர் கிடைத்த செயற்கைக்கோள் படங்களில் அங்கு நேரடிச் சேதத்துக்கான அறிகுறிகள் தென்படவில்லை. இருப்பினும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களே இந்த முடிவுக்குக் காரணம் என்று கத்தார் விளக்கம் அளித்தது."

"இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கத்தார் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இரான் உடன் எந்தவொரு ரகசிய ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படவில்லை என்றும், ஊழியர்கள், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி நிலையங்களின் பாதுகாப்புக்காக மட்டுமே உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது."

மேலும் அந்த அறிக்கையில், "சிஐஏ உள்ளிட்ட அமெரிக்க உளவு அமைப்புகளுக்கும், டிரம்ப் நிர்வாகத்துக்கும் கத்தார்-இரான் ரகசிய ஒப்பந்தம் குறித்துத் தெரிந்திருந்தது. ஆனால், இதனால் அமெரிக்கா-கத்தார் உறவில் எந்தவிதப் பதற்றமும் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை குறித்து கத்தார் அளித்த பதில்

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கை குறித்து, கத்தார் சர்வதேச ஊடக அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், வாஷிங்டன் போஸ்டின் கட்டுரை 'தவறான மற்றும் நம்பகத்தன்மையற்ற தகவல்களின் அடிப்படையில்' எழுதப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்டைக் குறிப்பிட்டு அந்த அறிக்கையில், "மோதலை முடிவுக்குக் கொண்டுவர நடந்துகொண்டிருக்கும் மத்தியஸ்த முயற்சிகளைப் பாதிப்படையச் செய்வது, கத்தாரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது மற்றும் கத்தார்-அமெரிக்கா இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை பலவீனப்படுத்துவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ராஸ் லஃபான் எல்என்ஜி ஆலையை மூடுவதற்காகச் சேதங்களை மிகைப்படுத்திக் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது. மோதல் தொடங்கிய உடனேயே, எல்என்ஜி ஒப்பந்தங்களுக்கு 'ஃபோர்ஸ் மெஜூர்' (தடுக்க முடியாத வலுக்கட்டாய நிலை) அறிவிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக கத்தார் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், கத்தார் ராணுவத்தின் இடர் மதிப்பீட்டுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது."

"தகவல்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதிலும், அரசியல் விவகாரங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதிலும் 'கத்தார் எனர்ஜி' நிறுவனம் நீண்டகால நற்பெயரைக் கொண்டுள்ளது. 'ஃபோர்ஸ் மெஜூர்' அறிவிக்கப்பட்டதற்கான காரணங்களை கத்தார் எனர்ஜி வேண்டுமென்றே தவறாகச் சித்தரித்ததாகக் கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது."

"வணிக நலன்களைக் காட்டிலும் தனது மக்களின் பாதுகாப்புக்கே கத்தார் எப்போதும் முன்னுரிமை அளிக்கும். இந்த முடிவை மீண்டும் தவறாகப் பொருள் கொள்வதோ அல்லது திரித்துக் கூறுவதோ அடிப்படையற்றது; இது வாசகர்களைத் தவறாக வழிநடத்தக்கூடும்."

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு