அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் இரான் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?

பட மூலாதாரம், Fatemeh Bahrami/Anadolu via Getty Images
- எழுதியவர், பிபிசி பாரசீக சேவை
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரான் தலைநகர் தெஹ்ரான் போன்ற நகரங்களில் அன்றாட வாழ்க்கை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
ஆனால் சமூக ஊடகங்களில் இரான் பயனர்களின் வெவ்வேறு அனுபவங்கள் வெளிவருகின்றன.
இது ஒருபுறம் வாழ்க்கையை சாதாரணமாகத் தொடர முயற்சிக்கும் கதையாகவும், மறுபுறம் மனச்சோர்வு, பொருளாதார அழுத்தம் மற்றும் இணையத்திற்கான சமமற்ற அணுகல் குறித்த விவாதமாகவும் உள்ளது.
இந்த அனுபவங்கள் சிலரின் தனிப்பட்ட பார்வையை மட்டுமே பிரதிபலிக்கின்றன, இவை ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதித்துவம் அல்ல.
இருப்பினும், கடந்த வாரங்களில் எழுந்த இணையக் கட்டுப்பாடுகள், பொருளாதார அழுத்தம் மற்றும் போரினால் ஏற்பட்ட கவலை போன்ற பல சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன என்பதையே இவை காட்டுகின்றன.
இந்தச் செய்திகளுக்கு இடையே, நிலைமையைச் சமாளிக்கும் விதம் குறித்துக் கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன.
ஆடை வாங்குவது அல்லது கஃபேக்களுக்குச் செல்வது போன்ற சாதாரண அன்றாட விஷயங்களைப் பற்றிச் சில பயனர்கள் எழுதுவதை தற்போதைய சூழலைப் புறக்கணிப்பதாகும் என மற்றவர்கள் விமர்சித்துள்ளனர்.

பட மூலாதாரம், Fatemeh Bahrami/Anadolu via Getty Images
போருக்கு இடையே வாழ்க்கையைத் தொடரப் போராட்டம்
இதற்கு மாறாக சிலர் தங்கள் வாழ்க்கையைத் தொடரும் உரிமையை ஆதரிக்கின்றனர்.
"நேற்றிரவு முதல் இப்போது வரை பலமுறை அழுதுவிட்டேன், இருப்பினும் நான் அழகான ஆடைகளை அணிந்துகொண்டு நண்பர்களுடன் எங்காவது வெளியே செல்லக்கூடும். இதற்காக யாரும் என்னைக் குறை சொல்லக்கூடாது," என ஒரு பயனர் எழுதினார்.
மற்றொரு பயனர் கால்பந்து போட்டியைப் பற்றி எழுதியதைக் குறிப்பிட்டு, "நமது மூளைக்கும் அவ்வப்போது வேறு விஷயங்களில் கவனம் தேவை... எனவே 'வெள்ளை சிம்-கார்டு' வைத்திருப்பவர்களை (அதாவது குறைவான கட்டுப்பாடுகள் உள்ளவர்கள்) குற்றம் சொல்லாதீர்கள்" என்றார்.
இரானில் வெள்ளை சிம் வைத்திருப்பவர்கள் மற்ற பயனர்களை விட இணையத்தை சிறப்பாக அணுக முடியும். பொதுமக்களுக்குக் கிடைக்காத பல தளங்களை இவர்களால் பார்க்க முடியும்.
இன்னொரு பயனர், "இது விசித்திரமானது அல்ல... நாம் உடைந்து போகாமல் இருக்க நமது மூளைக்குச் சிறிது நேரம் வேறு விஷயங்களில் கவனம் தேவை. ஒருவேளை நமது வாழ்க்கை இன்னும் நீண்ட காலத்திற்கு இப்படித்தான் இருக்கப்போகிறது" என்று எழுதியுள்ளார்.
சில செய்திகளில் பதற்றத்தைச் சமாளிக்கும் வெவ்வேறு முயற்சிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒரு பயனர், "என் பதற்றம் அதிகமாகிவிட்டது, அதனால் காலை ஆறு மணிக்கே வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டேன்" என்று எழுதியுள்ளார்.
இரானில் "இன்டர்நெட் ப்ரோ" என்பது ஒரு வகை சிறப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட இணைய வசதியாகும், இது சில பயனர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைவான கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படுகிறது.
இணையப் பிரச்னை இன்னும் மக்களின் விவாதப் பொருளாகவே உள்ளது. கட்டுப்பாடுகள், அதிக விலை மற்றும் அது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துப் பயனர்கள் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images
வரையறுக்கப்பட்ட இணைய வசதி குறித்து கோபம்
இணையத்தை அணுகுவதில் உள்ள சிக்கல்களைச் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு பயனர், "மிகவும் கஷ்டப்பட்டு ஒரு ஜிபி டேட்டாவை வாங்க முடிந்தது, இதற்காக நான் அதிக செலவிட வேண்டியிருந்தது" என்று எழுதியுள்ளார்.
மற்றொரு பயனர் தனது இணையம் சீக்கிரம் தீர்ந்துவிடுமோ என்று கவலையடைந்து, "இந்த விலையுயர்ந்த இரண்டு ஜிபி டேட்டா முடிந்துவிட்டால், நான் மீண்டும் இருளுக்குள் சென்றுவிடுவேன் என்று பயமாக இருக்கிறது" என்கிறார்.
அதே நேரத்தில், இணையம் என்பது ஒரு பொது உரிமை என்பதைப் பயனர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு செய்தியில், "திறந்த இணையம் என்பது அனைவரின் உரிமை" என்று எழுதப்பட்டுள்ளது.
மற்றொருவர், "உரிமை பிச்சையாகக் கேட்கப்படுவதில்லை... இணையம் என்பது வெறும் இணையம்தான், அதில் எந்த நிபந்தனைகளும் இருக்கக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பயனர்களின் உரையாடல்களில் "இன்டர்நெட் ப்ரோ" என்ற திட்டம் அடிக்கடி அடிபடுகிறது.
இந்தச் சொல் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு (வணிகம் அல்லது பல்கலைக்கழகங்களுடன் தொடர்புடையவர்கள்) வழங்கப்படும் இணைய வசதியைக் குறிக்கிறது.
இவர்கள் கூடுதல் கட்டணம் அல்லது குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் மூலம் குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட இணையத்தைப் பயன்படுத்தலாம்.
ஆனால் சாதாரண மக்களுக்கு இணையம் எப்போதும் போலக் கட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது.
'இன்டர்நெட் ப்ரோ' குறித்து ஏன் இவ்வளவு விவாதம்?

பட மூலாதாரம், Getty Images
பயனர்கள் இந்த நிலையை "வர்க்கம் சார்ந்த இணையம்" (இணையப் பிரிவினை) என்று அழைக்கின்றனர்.
பல செய்திகளில், இந்த ஏற்பாடு சமமற்ற இணைய அணுகலுக்கு உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது.
ஒரு பயனர், இன்டர்நெட் ப்ரோ என்பது ''ஒரு பொது உரிமையை வர்க்கங்களாகப் பிரிப்பதாகும்" என்று எழுதியுள்ளார்.
மற்றொருவர், வெவ்வேறு குழுக்களுக்கு வெவ்வேறு இணைய வசதிகளை வழங்குவது "சமூக மற்றும் வர்க்கப் பிரிவினையை மேலும் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.
திறந்தநிலை இணையத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதன் மீதான கட்டுப்பாடுகள் குறித்தும் பிற செய்திகள் விவரித்தன.
மற்றொரு செய்தியில், "ஆயிரக்கணக்கான மணிநேரங்களாக இணையம் கிடைக்காத மக்களின் குரலாக மாறுங்கள்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களைப் போலவே, இந்தச் சூழல் தங்கள் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளதாகப் பல பயனர்கள் எழுதியுள்ளனர்.
பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியிருப்பது குறித்து சில செய்திகள் விவரித்தன.
குறிப்பாக, சிறு வணிகங்கள் மற்றும் இணையத்தைச் சார்ந்திருக்கும் வேலைவாய்ப்புகள் மீது இது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஓரு சிற்றுண்டிச் சாலையின் நிலையை விவரித்த பயனர் ஒருவர், அதன் உரிமையாளர் உதவியற்ற நிலையில், "இந்த இடம் இப்போது மெழுகுவர்த்தியைப் போல உருகிக் கொண்டிருக்கிறது, ஒரு நூலிழையில்தான் உயிர் பிழைத்திருக்கிறது," என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு செய்தியில், பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களின் தயாரிப்பு விற்பனை நின்றுபோனது குறித்துப் பேசப்பட்டுள்ளது. நிலைமை இப்படியே நீடித்தால், அவர்களின் "வாழ்க்கை மற்றும் எதிர்காலம்" பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பயனர்கள் தாங்கள் அல்லது தங்களைச் சுற்றியுள்ளவர்கள் வேலையிழந்தது குறித்தும் எழுதியுள்ளனர்.
உதாரணமாக ஒரு நபர், "நானும் என் முழு குடும்பமும், ஸ்டீல் மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகள் மீதான தாக்குதல்கள் காரணமாக வேலையிழந்து வீட்டில் முடங்கியுள்ளோம்," என்று கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வு குறித்த பிரச்னையும் மீண்டும் மீண்டும் முன்னுக்கு வருகிறது.
சில பயனர்கள் அன்றாடப் பொருட்களின் விலைகளை விரிவாகக் குறிப்பிட்டு, இது அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்தின் அறிகுறி என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு செய்தியில் ரொட்டி மற்றும் பாலாடைக்கட்டி முதல் மருந்துகள் வரையிலான விலைப் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது, மற்றொன்றில் கடந்த சில மாதங்களில் முட்டைகளின் விலை அதிகரித்தது குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Fatemeh Bahrami/Anadolu via Getty Images
போரின் அச்சமும் மன அழுத்தமும்
பல செய்திகளில் மன அழுத்தத்தின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன.
கவலை, அழுகை மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகள் குறித்துப் பேசப்படுகிறது.
ஒரு பயனர், "பதற்றத்தால் என் உடல் முழுவதும் நடுங்குகிறது" என்று எழுதியுள்ளார்.
போர் அனுபவங்கள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்தும் சில செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திடீர் சத்தங்களைக் கேட்டுப் பயப்படுவது அல்லது மீண்டும் போர் தொடங்குமோ என்ற கவலை போன்றவை இதில் அடங்கும்.
ஒரு பயனர் இடிச் சத்தத்தைக் கேட்டு, "எங்காவது குண்டு விழுகிறதோ" என்று நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர் "போரினால் ஏற்பட்ட அதிர்ச்சியை" குறிப்பிட்டு, "பலர் இன்னும் சாதாரண சத்தங்களை போர் விமானங்கள் அல்லது வெடிப்புச் சத்தங்களாகத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்" என்று எழுதியுள்ளார்.
இதற்கெல்லாம் மேலாக, சில செய்திகளில் போர் மீண்டும் தொடங்குவது குறித்த அச்சமும் தெரிகிறது.
ஒரு பெண் "ஒருவேளை நாளை மீண்டும் போர் தொடங்கலாம்" என்று தனது பயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே சமயம் மற்றொரு பயனர், தான் இன்னும் மீள முடியாத "ஒரு புதிய, உயிருக்கு ஆபத்தான பயம்" பற்றிப் பகிர்ந்துள்ளார்.
இந்தச் செய்திகளின் ஒரு பகுதியில் சமூக சமத்துவமின்மை மற்றும் அதிகரித்து வரும் இடைவெளி குறித்த உணர்வும் வெளிப்பட்டுள்ளது.
அது இணைய வசதி கிடைப்பதில் உள்ள வேறுபாடாக இருந்தாலும் சரி அல்லது அன்றாட அனுபவங்களில் உள்ள வித்தியாசமாக இருந்தாலும் சரி.
சில பயனர்கள் இந்தச் சூழலை விமர்சித்து, இதனால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
ஒரு செய்தியில், "இதனால் பொருளாதார இழப்பு, மக்கள் அதிருப்தி மற்றும் மக்களிடையே வர்க்கப் பிரிவினை மற்றும் சமூக இடைவெளியைத் தவிர வேறு என்ன கிடைக்கிறது?" என்று எழுதப்பட்டிருந்தது.
இந்தச் செய்திகள் அனைத்தும், எல்லைக்குட்பட்டதாகவும் சிதறியும் இருந்தாலும், கடந்த வாரங்களில் எழுந்த பல சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
உதாரணமாக, இணையக் கட்டுப்பாடுகள், பொருளாதார அழுத்தம், போரினால் ஏற்பட்ட கவலை மற்றும் எதிர்காலம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வு போன்றவை.
இவை அனைத்திற்கும் இடையில், வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சி, சோர்வு, கவலை மற்றும் சமத்துவமின்மை என அனைத்தும் ஒன்றாகக் கலந்த ஒரு அனுபவத்தைப் பயனர்கள் விவரித்து வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































