இரான் 40 ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளில் இருந்தும் டிரோன் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தது எப்படி?

ஷாஹெட் 136 ட்ரோன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷாஹெட் 136 டிரோன் என்பது இரானியத் தொழில்துறையால் உருவாக்கப்பட்ட சமீபத்திய தொழில்நுட்பமாகும்.
    • எழுதியவர், அகமது ரௌப்
    • பதவி, பிபிசி அரபு சேவை
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ராணுவ நிபுணர் அக்ரம் காரிஃப் எழுதிய 'ஷாஹித்தின் நிழலில்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இரானின் டிரோன் தொழில்துறையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து அவர் ஆராய்கிறார். மேலும், அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ளவும், உலகளாவிய ராணுவத் தொழில்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக மாறவும் இரானுக்கு உதவிய அதன் உத்திகளை விரிவாக விளக்குகிறார்.

இஸ்ரேல் எல்லைப் பகுதியில் ஹெஸ்பொலா அமைப்பினரின் செயல்பாடுகள் குறித்த ராணுவ அறிக்கைகளில் இரானிய டிரோன்கள் முதன்முதலில் குறிப்பிடப்பட்டன.

பின்னர், ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய டிரோன்களின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்த பிறகு, அவை இரானியத் தயாரிப்புடன் தொடர்புடையவை என்பது கண்டறியப்பட்டது.

ஆனால் செப்டம்பர் 2022-இல், இரான் ரஷ்ய ராணுவத்திற்கு டிரோன் தொழில்நுட்பத்தை வழங்குகிறது என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியை உலகம் அறிந்தது.

அதனைத் தொடர்ந்து, யுக்ரேன் தலைநகரான கீவ் நகரின் வான்பரப்பில் ஜெரனியம்-2 (ஷாஹித்-136) ரக டிரோன் பறக்கும் முதல் படங்கள் வெளிவந்தன.

40 ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளின் கீழ் இருக்கும் ஒரு நாடு, சர்வதேச மோதல்களின் விதிகளை எப்படி மாற்ற முடிந்தது?

1979-க்குப் பிறகு, விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் இரானியத் தலைவர்களை மாற்று வழிகளையும் தற்போது ஏற்பட்டுள்ளது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் வெளியேறுவதற்கான தீர்வுகளையும் தேட நிர்ப்பந்தித்தன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெறுவதற்காக வெளிநாடுகளில் விநியோக வலையமைப்புகளை நிறுவ வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.

அவர்கள் சில சமயங்களில் ராணுவ பயன்பாடு அல்லாத பொது தொழில்நுட்பத்தையும் நாடினர். ஆனால் மிக முக்கியமாக, தங்களிடம் வளங்கள் குறைவாக இருந்தபோதிலும், இரானியர்கள் உத்திகளை வகுத்து, அவற்றை பொறுமையுடன் செயல்படுத்தினர்.

ஜனவரி 1979-இல் ஷா முகமது ரேசா பஹ்லவி பதவி விலகியபோது, ஆயுத பலத்தின் அடிப்படையில் பிராந்தியத்தில் வலிமையான ராணுவம் ஒன்றை அவர் விட்டுச் சென்றார்.

அப்போது இரானிய ராணுவம் எஃப்-14 டாம்கேட், எஃப்-4 ஃபாண்டம் மற்றும் எஃப்-5 டைகர் போன்ற போர் விமானங்களைக் கொண்டிருந்தது.

அந்தக் காலத்தில், ராணுவ உபகரணங்களின் அடிப்படையில் அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இரானிய ராணுவம் உலகில் ஐந்தாவது இடத்தில் இருந்தது.

குறிப்பாக இரானிய விமானப்படை ஜெர்மனி, சீனா மற்றும் இஸ்ரேலை விட முன்னேறியதாக இருந்தது. அக்காலத்தின் மிகவும் நவீனமான எஃப்-14 டாம்கேட் போன்ற விமானங்களை இரான் கொண்டிருந்தது.

இருப்பினும், அவற்றின் இயக்கம் மற்றும் பராமரிப்பு இரானில் தங்கியிருந்த ஏராளமான அமெரிக்கத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களைச் சார்ந்திருந்தது.

அவற்றின் உதிரி பாகங்கள் அமெரிக்க நிறுவனமான க்ரம்மன் மூலம் நேரடியாக வழங்கப்பட்டன.

ஷா ஆட்சி வீழ்ந்த பிறகு, ராணுவத் தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர், கொல்லப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர். அமெரிக்கத் தொழில்நுட்ப வல்லுநர்களும் பொறியாளர்களும் வெளியேறினர். அமெரிக்க நிறுவனங்கள் புதிய அரசாங்கத்துடனான உறவைத் துண்டித்துக் கொண்டன.

இரான் பில்லியன் கணக்கான டாலர்கள் கொடுத்து வாங்கிய விமானங்கள் பயனற்றுப் போயின.

ட்ரோன் திட்டத்தில் பணிபுரியும் மாணவர்கள்.

பட மூலாதாரம், Dans l'ombre du Shahed

படக்குறிப்பு, இஸ்பஹான் பல்கலைக்கழகத்தில் டிரோன் திட்டத்தில் பணிபுரியும் மாணவர்கள்.

தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்

செப்டம்பர் 1980-இல், இராக் படைகள் இரான் மீது படையெடுத்தன. இது எட்டு ஆண்டுகள் நீடித்த ஒரு பயங்கரமான போரைத் தொடங்கியது.

மிகக் கொடூரமான படுகொலைகள் மற்றும் அழிவு முறைகளைக் கொண்டிருந்த இந்தப் போரில், கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.

போரின் ஆரம்பக் கட்டங்களில், வான்வழி ஆதிக்கம் காரணமாக இராக் படைகள் சாதகமான நிலையில் இருந்தன. இராக் ராணுவம் சோவியத் யூனியனிடம் இருந்து உளவு விமானங்களை வாங்கியதுடன், எதிரிகளின் நிலைகள் மற்றும் நகர்வுகளைக் கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள் படங்களையும் அங்கிருந்து பெற்றது.

அதே சமயம், இரானிய ராணுவம் ஒரு தெளிவான உத்தி இல்லாமல் போராடிக்கொண்டிருந்தது. அமெரிக்கா விட்டுச் சென்ற மேம்பட்ட போர் விமானங்களை அவர்களால் இயக்க முடியவில்லை, தங்களுக்குத் தேவையான தொழில்நுட்பத்தையும் அவர்களால் வாங்க முடியவில்லை.

தங்கள் உயிர் பிழைப்பிற்காகப் போராட இரானியர்களுக்குத் தொழில்நுட்பம் மிக அவசியமாகத் தேவைப்பட்டது. ஆனால் பொருளாதாரத் தடைகள் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதைத் தடுத்தன. எனவே, மற்றவர்களிடமிருந்து பெறுவதை விட, இந்தத் தொழில்நுட்பத்தை தாங்களாகவே உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர்.

இதன் பின்னணியில் இருந்த சிந்தனை எளிமையானது.

எதிரி எல்லைக்குள் உளவு விமானங்களை பறக்கவிட முடியாவிட்டால், அதற்குப் பதிலாக மலிவான மற்றும் எளிதில் கண்டறிய முடியாத தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் கருவிகளை அனுப்பலாம் என்பதுதான் அந்த சிந்தனை.

இரானியர்கள் 1981லேயே இந்த சிறிய கருவிகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர்.

அவற்றில் கேமராக்களைப் பொருத்துவது குறித்து அவர்கள் பரிசீலித்தனர். இந்த யோசனை இஸ்பஹான் பல்கலைக்கழகத்தில் உருவானது. மாணவர்கள் மற்றும் பொறியாளர்கள் இந்த திட்டத்தில் பணியாற்றினர்.

அவர்கள் முன்மாதிரிகளை வடிவமைத்து, உருவாக்கி, சோதித்து மேம்படுத்தி, பின்னர் அவற்றை புரட்சிகர காவல்படை அமைப்பிடம் சமர்ப்பித்தனர்.

அது மிகவும் எளிமையான மற்றும் ஆரம்ப நிலை கருவியாக இருந்தது. பிளாஸ்டிக் துண்டுகள், ஒரு பலகை மற்றும் உறுதியான ஒரு மனம்.

பல ஆண்டுகால முயற்சிகள், தோல்விகள் மற்றும் இடைவிடாத கடின உழைப்பிற்குப் பிறகு, மூன்று இளைஞர்கள் இஸ்பஹானில் உள்ள ஒரு பல்கலைக்கழகப் பட்டறையில் வடிவமைப்புகளை உருவாக்கி, பின்னர் அவற்றை குசெஸ்தான் வயல்வெளிகளில் சோதித்தனர்.

அவர்களில் ஒருவர் ஃபர்ஷித் என்ற சிவில் விமானி, இரண்டாவது சயீத் என்ற இயற்பியல் மாணவர் மற்றும் மூன்றாவது நபர் மசூத் ஜாஹேதி.

முதன்முதலில் அதன் முன்மாதிரியை ராணுவ அதிகாரிகளிடம் காட்டியபோது, சிலர் அதைக் கண்டு ஏளனம் செய்தனர். பழைய கழிவுப் பொருட்களால் செய்யப்பட்ட அது, ஒரு குழந்தையின் விளையாட்டுக் கருவி போலத் தெரிந்தது. அதன் எரிபொருள் தொட்டியாக மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் 'ஐவி பேக்' இருந்தது.

இஸ்பஹான் பல்கலைக்கழக மாணவர்கள்

பட மூலாதாரம், Dans l'ombre du Shahed

படக்குறிப்பு, இஸ்பஹான் பல்கலைக்கழக மாணவர்கள் குசெஸ்தானில் ஒரு டிரோனைச் சோதிக்கின்றனர்.

முதல்முறையாகப் பயன்படுத்தப்பட்ட டிரோன்

1983-ஆம் ஆண்டில், இந்த "பொம்மை" விமானம் போர்க்களத்திலிருந்து இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இராக் ராணுவ நிலைகளுக்கு மேல் முதல்முறையாகப் பறந்தது. அது ராணுவ தளங்களின் தெளிவான படங்களுடன் திரும்பியது.

இதனைத் தொடர்ந்து 'தண்டர் பட்டாலியன்' என்ற பிரிவை உருவாக்கவும், முறையான டிரோன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இஸ்பஹான் பல்கலைக்கழகத்தின் மாணவர் பட்டறைகளில் தொடங்கிய இந்த முயற்சி, புரட்சிகர காவல்படையின் ராணுவத் தளபதிகள் வரை விரிவடைந்தது.

தேவையான பாகங்களைப் பெறுவதற்கு, அவர்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தவிர்த்து சர்வதேச சந்தைகளை அணுக வேண்டியிருந்தது.

புரட்சிகர காவல்படையினர் துபையில் நிறுவனங்களின் வலையமைப்பை நிறுவி, சிங்கப்பூரில் உள்ள இடைத்தரகர்கள் மூலம் டஜன் கணக்கான நாடுகளிலிருந்து உதிரி பாகங்களை வாங்கினர். இவை பின்னர் இஸ்பஹானுக்கு அனுப்பப்பட்டு அங்கு ஒன்றிணைக்கப்பட்டன.

இதன் காரணமாகவே, யுக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்ட 'ஷாஹித்-136' டிரோனில் அமெரிக்க சிப்புகள் கண்டறியப்பட்டன.

இந்த டிரோன்கள் தங்களின் உளவு பார்க்கும் திறனை நிரூபித்தன. 1983-க்குப் பிறகு, இரானியப் படைகள் இராக் படைகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தின.

இரானின் 'ராட் பட்டாலியன்' பொறியாளர்களும் ராணுவ அதிகாரிகளும் 1987-ஆம் ஆண்டிலேயே தாக்குதல் டிரோன்களை உருவாக்குவது பற்றி சிந்திக்கத் தொடங்கினர்.

எதிரி நாடுகளின் மேல் பறந்து அவர்களின் செயல்பாடுகளை வீடியோ எடுக்கும் ஒரு டிரோனை உருவாக்குவதே அந்த யோசனையாக இருந்தது. அதில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டால், அது எதிரியைத் தாக்கவும் முடியும்.

ஆனால் இதற்கு வேறுபட்ட தொழில்நுட்பமும் திறன்களும் தேவைப்பட்டன. இவை பின்னர் ராட் பிரிகேடால் உருவாக்கப்பட்டு, 'முஹாஜிர்' என்று பெயரிடப்பட்ட தாக்குதல் டிரோன்களை அவர்கள் உருவாக்கினர்.

இரானின் 'ராட் பட்டாலியன்' பொறியாளர்களும் ராணுவ அதிகாரிகளும் 1987-ஆம் ஆண்டிலேயே போர் ட்ரோன்களை உருவாக்குவது பற்றி சிந்திக்கத் தொடங்கினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் தாக்குதலால் இஸ்ரேலில் கட்டிடம் ஒன்று சேதமடைந்தது.

1988-ஆம் ஆண்டில் ஆயுதம் ஏந்திய ஆளில்லா வான்வழி வாகனங்களை (டிரோன்கள்) பயன்படுத்திய முதல் நாடுகளில் ஒன்றாக இரான் இருந்தது.

அமெரிக்கா, துருக்கி மற்றும் இஸ்ரேல் ஆகியவை இவற்றின் மேம்பாட்டிற்குப் பெயர் பெற்றவை என்றாலும், அவற்றை உருவாக்கிய முதல் நாடுகளின் வரிசையில் இரானும் இருந்தது.

1988-இல், இரானிய டிரோன்கள் 50 கிலோமீட்டருக்கும் குறைவான தூரம் மட்டுமே செல்லக்கூடியவையாக இருந்தன.

2026-ஆம் ஆண்டிற்குள், இரானியப் பரப்பிலிருந்து ஏவப்பட்ட அவர்களின் மேம்பட்ட டிரோன்கள், பல நாடுகளின் வான்வெளியைக் கடந்து சென்று இஸ்ரேலில் உள்ள இலக்குகளைத் தாக்கும் நிலையை எட்டியுள்ளன.

உண்மையில், அமெரிக்காவுடன் இணைந்து ராணுவத் தேவைகளுக்காக ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பயன்படுத்திய முதல் நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் இருந்தது. 1973 போரின் போது, எகிப்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளை குழப்பவும் பலவீனப்படுத்தவும் அது இவற்றைப் பயன்படுத்தியது.

இந்தக் கொள்கைதான் பின்னர் இரானிய டிரோன் திட்டத்திலும் பின்பற்றப்பட்டது.

1982-இல் லெபனான் மீதான படையெடுப்பின் போது, இஸ்ரேல் தனது ஸ்கவுட் மற்றும் மாஸ்டிஃப் டிரோன்களைப் பயன்படுத்தி சிரியாவின் ஏவுகணைத் தளங்களை இலக்கு வைத்தது. ஆயுத மோதல்களில் தாக்குதல் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

 அபாபில் எனப்படும் ட்ரோன்

பட மூலாதாரம், Dans l'ombre du Shahed

கண்ணோட்டத்தை மாற்றுதல்

லெபனானில் நடந்த நிகழ்வுகளை இரானிய நிபுணர்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர். இஸ்ரேலிய டிரோன்கள் குறித்த துல்லியமான தகவல்களைச் சேகரிக்க அவர்களது கூட்டாளியான ஹெஸ்பொலா உதவியது.

இந்த டிரோன்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிக்கலானவை அல்ல என்பதையும், தங்களது நிபுணர்களால் இதேபோன்ற கருவிகளை உருவாக்க முடியும் என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

ஆரம்பகால இரானிய டிரோன் மாதிரிகள் இஸ்ரேலின் ஸ்கவுட் மற்றும் மாஸ்டிஃப் டிரோன்களைப் போலவே பல அம்சங்களைக் கொண்டிருந்ததாகப் பல ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அம்சங்களுக்காக, இரானிய பொறியாளர்கள் இஸ்ரேலிய மாதிரிகளிலிருந்து உத்வேகம் பெற்றதாக அவர்கள் நம்புகிறார்கள்.

1970-களில் இருந்து, மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஆயுதமே மிகவும் பயனுள்ளது என்று நம்பப்பட்டு வந்தது.

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை , வழிகாட்டப்படாத நூற்றுக்கணக்கான தோட்டாக்களை விடச் சிறந்தது என்று அப்போது கருதப்பட்டது.

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை , வழிகாட்டப்படாத நூற்றுக்கணக்கான தோட்டாக்களை விடச் சிறந்தது என்று அப்போது கருதப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டில், சௌதி அரேபியாவில் உள்ள அராம்கோ நிறுவனம் ஒன்று டிரோன்கள் மூலம் தாக்கப்பட்டது.

அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மலிவான டிரோன்கள்

ஒரு இரானிய டிரோனின் விலை 20,000 டாலர். இது 20 லட்சம் டாலர் மதிப்புள்ள ஒரு க்ரூஸ் ஏவுகணைக்கு இணையாகாது, ஆனால் 100 டிரோன்கள் அனுப்பப்பட்டால், அவற்றை இடைமறித்து அழிக்க எதிரி நாடு 100 க்ரூஸ் ஏவுகணைகளை அல்லது அதற்கும் மேலாக ஏவ வேண்டியிருக்கும்.

இந்த டிரோன்களின் நோக்கம் துல்லியமான மற்றும் சக்திவாய்ந்த தாக்குதலை நடத்துவது மட்டுமல்ல, மாறாக எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளைச் சோர்வடையச் செய்வதும் அவர்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும்.

இரானியத் தாக்குதல்களை நீண்ட காலத்திற்குத் தொடர முடியும், ஏனெனில் அவை எதிரியின் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை விட 10 முதல் 20 மடங்கு மலிவானவை.

ஒரு எளிய கணக்கீடு என்னவென்றால், 100 டிரோன்களை ஏவுவதற்குத் தாக்குதல் நடத்தும் நாட்டிற்கு 20 லட்சம் டாலர் செலவாகும், ஆனால் அவற்றைத் தற்காத்துக் கொள்ளும் நாட்டிற்கு 20 கோடி டாலர் செலவாகக்கூடும்.

டிரோன்களின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அவை குறைந்த வேகத்திலும் உயரத்திலும் பறப்பதால் ரேடார் மூலம் கண்டறிவது கடினம்.

மேலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் அவற்றை பயன்படுத்துவது பாதுகாப்பு அமைப்புகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது, இதனால் சில நேரங்களில் அவை அனைத்தையும் இடைமறிக்க முடியாமல் போகலாம்.

சௌதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது 2019-ல் நடத்தப்பட்ட தாக்குதல் இதன் செயல்திறனை நிரூபிக்கிறது. அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகள் இரானிய டிரோன்களை இடைமறிக்கத் தவறின.

இதற்கு ஹூத்திகள் பொறுப்பேற்றாலும், இந்த டிரோன்கள் இரான் அல்லது இராக்கிலிருந்து ஏவப்பட்டதாகவே பொதுவாக நம்பப்படுகிறது.

அராம்கோ ஆலை மீதான தாக்குதல் பல பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட டிரோன்களின் விலை சில மில்லியன் டாலர்கள் மட்டுமே.

இந்த வேறுபாடு தான் டிரோன் போரில் யார் வெற்றி பெறுகிறார்கள், யார் தோல்வியடைவார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு