நேபாளத்தில் தொடர் பேரிடர்கள் நிகழக் காரணம் என்ன? முன்கூட்டியே தடுப்பது சாத்தியமா?

நேபாளத்தில் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பவன் ராஜ் பௌடல்
    • பதவி, பிபிசி நியூஸ் நேபாளி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நேபாளத்தில், குறிப்பாக நேபாளம்-சீனா எல்லைப் பகுதிகளில், பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகின்றன.

நேபாளம்-சீனா எல்லையையொட்டிய இமயமலைப் பகுதியின் நிலவியல் அமைப்பே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், பனிப்பாறை ஏரிகளின் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களும் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளன.

புதன்கிழமை காலை ரசுவா மாவட்டத்தில் போடேகோஷி/திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம் காரணமாக, ரசுவா, நுவாகோட், தாதிங், கோர்கா, சித்வான் உள்ளிட்ட நேபாளத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உண்மையில், திபெத் பகுதியில் ஏராளமான பனிப்பாறை ஏரிகள் (இமால்) உள்ளன. நேபாளத்தை நோக்கி சரிவாக அமைந்துள்ள பகுதிகளில் பல குடியிருப்புகள் இருப்பதால், இந்த ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படுவதாலும், பனிச்சரிவுகள் ஏற்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

நேபாளத்தில் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

நேபாளத்தின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாகத் தலைமை அதிகாரி தர்மராஜ் உப்ரேட்டி கூறுகையில், "கடந்த கால அனுபவங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, உயரமான இமயமலைப் பகுதியில் வெப்பநிலை அதிகரித்ததும், அதன் காரணமாக அந்தப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களும் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று கருதலாம்" என்றார்.

கடந்த ஆண்டைப் போலன்றி, திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட இந்த வெள்ளம் நேபாளத்தில் உருவாகவில்லை என்றும், திபெத் பகுதியில் இருந்து உருவாகியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை காலை நேபாள பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

எனினும், நீர் மற்றும் வானிலை அறிவியல் துறையின் மூத்த வானிலை ஆய்வாளரும் செய்தித் தொடர்பாளருமான விபூதி போகரெல், இந்தச் சம்பவத்திற்கான சரியான காரணத்தை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.

அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் இதுதான் நடந்தது என்று இன்னும் உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் விளக்கினார்.

உண்மையில், திபெத் பகுதியில் ஏராளமான பனிப்பாறை ஏரிகள் (இமால்) உள்ளன. நேபாளத்தை நோக்கி சரிவாக அமைந்துள்ள பகுதிகளில் பல குடியிருப்புகள் இருப்பதால், இந்த ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படுவதாலும், பனிச்சரிவுகள் ஏற்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பட மூலாதாரம், Safal Prakash Shrestha/Anadolu via Getty Images

படக்குறிப்பு, நேபாள-சீன எல்லையை ஒட்டிய நுவாகோட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்குப் பிறகு, எல்லா இடங்களிலும் சிதைவுகள் காணப்படுகின்றன.

நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக் கழகத்தின் புல்சோக் வளாகத்தில் உள்ள பொறியியல் ஆய்வுகள் நிறுவனத்தின் பேரிடர் ஆய்வு மையத்தின் இயக்குநர் பசந்த் அதிகாரி தற்போது சீனாவின் சிச்சுவானில் உள்ளார். அங்கிருந்தபடி இந்தச் சம்பவத்தை அவர் கண்காணித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் விளக்குகையில், "இந்தச் சம்பவத்தின் தன்மையைப் பார்க்கும்போது, இதுவொரு பனிச்சரிவாக இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், தண்ணீர் முழுமையாக வடியாததால் ஆபத்து தொடர்ந்து இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செயற்கைக் கோள் ஆய்வுகள் மூலம் இது உறுதி செய்யப்படும் வரை காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்றார்.

மேலும், "கடந்த காலத்திலும், இதுபோன்ற வெள்ளச் சம்பவங்களுக்கு பனிப்பாறை ஏரிகள் உடைவதும், பனிச்சரிவுகளும் காரணங்களாகக் கண்டறியப்பட்டு இருப்பதாகவும்" அவர் குறிப்பிட்டார்.

எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் ஏன் தொடர்ச்சியாக நிகழ்கின்றன?

எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்வது ஏன்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நேபாளம் மற்றும் சீனாவுக்கு இடையிலான வடக்கு எல்லைப் பகுதி உயரமான இமயமலை நிலப்பரப்பைக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எல்லைக்கு அப்பால் திபெத் பீடபூமி அமைந்துள்ளது. அதேவேளையில், இமயமலையின் நேபாளப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள், அவற்றின் ஏரிகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் இந்த இயற்கைப் பேரிடர்களை மேலும் சிக்கலாக்குகின்றன.

குறிப்பாக பருவமழைக் காலங்களில் அதிக மழைப்பொழிவு, பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்கள், பனிச்சரிவுகள் ஆகியவை குறுகிய காலத்தில் அதிக அளவிலான நீர், பாறைகள், மண் ஆகியவற்றைத் தாழ்வான கடலோரப் பகுதிகளுக்குக் கொண்டு செல்கின்றன.

கடந்த ஆண்டும் ரசுவா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிர் மற்றும் உடைமைகளுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது.

"பனிப்பாறை ஏரிகள் உடைவதும், பனிச்சரிவுகளும் நேபாளம்-சீனா, குறிப்பாக திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்படும் முக்கிய வானிலை மற்றும் நிலவியல் அபாயங்களாகும்" என்று திரிபுவன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் சுதீப் துக்ரி கூறுகிறார்.

அவரது கூற்றுப்படி, "நேபாள பகுதியில் சரிவான நிலப்பரப்பில் குடியிருப்புகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அமைந்துள்ளன. திபெத்தில் ஏற்படும் பனிச்சரிவுகள் அல்லது பனிப்பாறை ஏரிகள் உடைவதால், நேபாளத்தின் தாழ்வான பகுதிகளில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளன."

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்

நிபுணர்களின் கூற்றுப்படி, உயரமான இமயமலைப் பகுதிகளில் பனிப்பாறைகள் உடைவதும், பனிச்சரிவுகளும் வழக்கமாக நடைபெறும் இயற்கையான நிகழ்வுகளாகும்.

"உயரமான இமயமலைப் பகுதிகளில், பனிப்பாறைகளில் இருந்து வரும் நீரால் ஏராளமான ஏரிகள் உருவாகியுள்ளன. அந்த ஏரிகளில் தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. எனவே, ஏரியின் அணையால் தாங்கக்கூடிய அளவைவிட அதிகமாக நீர் சேரும்போது, வெடிப்பு போன்ற நிலை ஏற்படலாம்" என்று துக்ரி கூறுகிறார்.

அதுகுறித்துப் பேசிய அவர், "அதேபோல், ஏரியில் பனிச்சரிவு ஏற்பட்டால், ஏரியிலுள்ள நீர் நிரம்பி வழியலாம். இதையும் பனிப்பாறை ஏரியில் ஏற்படும் வெடிப்பு என்று கூறலாம்" என்றார்.

"சில நேரங்களில் நிலநடுக்க அதிர்வுகளும் ஏரியின் நிலைமையைப் பாதிக்கக்கூடும். சில நேரங்களில் தொடர்ந்து பெய்யும் மழையும் ஏரியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தால் ஏரி உடைந்தால், வெடிப்பு போன்ற நிலை ஏற்படும்."

"புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்தைப் பொறுத்தவரை, லெண்டேகோலாவில் ஏற்பட்ட பனிச்சரிவால் நீர் தடைபட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. ஆனால், வெள்ளம் ஏற்படுவதற்கு முன் கோலாவில் நீர் தடைபட்டதற்கோ அல்லது நீர்மட்டம் குறைந்ததற்கோ எந்த ஆதாரமும் இல்லை" என்று நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக் கழகத்தின் புல்சோக் வளாகத்தில் உள்ள பொறியியல் ஆய்வுகள் நிறுவனத்தின் பேரிடர் ஆய்வு மையத்தின் இயக்குநர் பசந்த் அதிகாரி கூறினார்.

நேபாளத்தில் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

ஆரம்ப நிகழ்வுகள்

திரிபுவன் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் துக்ரி, இமயமலைப் பகுதியில் பனிப்பாறை ஏரிகள் உடைவது, பனிச்சரிவுகள் ஏற்படுவது போன்ற சிறிய மற்றும் பெரிய வானிலை நிகழ்வுகள் நடைபெறுவதை வழக்கத்திற்கு மாறானதாகக் கருதவில்லை.

இருப்பினும், புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தை அரிதான நிகழ்வாக அவர் கருதுகிறார். இதுகுறித்துப் பேசிய அவர், "இந்தச் சம்பவம் தொடர்பாக நாம் பார்த்த அனைத்து காணொளிகளும் இது ஒரு மிகப் பெரிய பேரிடர் என்பதையே காட்டுகின்றன. ஆற்றின் நீர்மட்டம் இயல்பைவிட 15 முதல் 20 மீட்டர் வரை உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது" என்றார்.

ரசுவாவில் இருந்த பிபிசி செய்தியாளர் சக்திமாயா தமாங், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சில முதியவர்களிடம் பேசினார்.

அப்போது, "கடந்த காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை இந்த அளவில் பார்த்ததில்லை" என்று அவர் கூறினார். கடந்த ஆண்டும் ரசுவாவில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இதில் உயிர் மற்றும் உடைமைகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், லெண்டே கோலாவின் மேல்பகுதி நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்த பனிப்பாறை ஏரி உடைந்தது தெரிய வந்தது.

அரசாங்க அறிக்கைகளின்படி, திடீர் வெள்ளம் கீழ்நோக்கிப் பாய்ந்தபோது, சுற்றியிருந்த பாறைகள், சேறு, மணல் ஆகியவற்றையும் தன்னுடன் அடித்துச் சென்று பேரழிவை ஏற்படுத்தியது.

இதனால் போடேகோஷி ஆற்றுப் படுகையில் சாலைகள், பாலங்கள், மின் நிலையங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்தன. 2024ஆம் ஆண்டு, சோலுகும்பு மாவட்டத்தில் உள்ள கும்பு பசாங்லாம்ஹு கிராமப்புற நகராட்சியின் தாமே பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திலும், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.

இதேபோல, 2016ஆம் ஆண்டு கோடாரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளமும் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. திபெத்தில் பனிப்பாறை உடைந்ததால் உருவான இந்த வெள்ளம், கோடாரி மற்றும் தாதோபானி பகுதிகளில் உள்ள கட்டடங்கள், அர்னிகோ நெடுஞ்சாலை, அப்பர் போடேகோஷி நீர்மின் திட்டம் ஆகியவற்றுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதேபோல், 2016-ஆம் ஆண்டு கோடாரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளமும் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. திபெத்தில் பனிப்பாறை உடைந்ததால் உருவான இந்த வெள்ளம், கோடாரி மற்றும் தாதோபானி பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், அர்னிகோ நெடுஞ்சாலை மற்றும் அப்பர் போடேகோஷி நீர்மின் திட்டம் ஆகியவற்றுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பு நிலநடுக்கத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேரிடரைத் தடுத்திருக்க முடியுமா?

இதுபோன்ற வானிலை நிகழ்வுகளைத் தடுக்க முடியாது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உயிர் மற்றும் உடைமைகளுக்கான இழப்புகளைக் குறைக்க முடியும் என்கிறார் திரிவியின் இணைப் பேராசிரியர் தாக்கூரி.

இது தொடர்பாக விரிவாகப் பேசிய அவர், "தற்போது 'முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு' (Early Warning System) பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது. இமயமலையில் உள்ள ஏரிகளிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ள இதுபோன்ற அமைப்புகள், ஏரியின் நீர்மட்டம் மற்றும் அணையின் நிலை குறித்த நிகழ்நேரத் தகவல்களை வழங்குகின்றன" என்றார்.

மேலும், "இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முன்கூட்டியே தகவல்களைப் பெற முடிந்தால், உயிரிழப்புகளைக் குறைக்க முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோல, புல்சோக் வளாக அதிகாரிகள், 'முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு' பயனுள்ளதாக இருக்கலாம் என்றாலும், நாடுகளைக் கடந்து ஏற்படும் சம்பவங்களைப் பொறுத்தவரை, அரசாங்க மட்டத்தில் சீனாவுடனான ஒருங்கிணைப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

"வெள்ளம் நேபாளத்தில் உருவாகியிருந்தால், அதை இங்கிருந்தே கண்காணித்திருக்க முடியும். ஆனால், தற்போதைய சூழலில், நாடுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்ற அமைப்பை வலுப்படுத்த வேண்டும். தற்போது அது நடைபெறுவதாகத் தெரியவில்லை."

"இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் இடங்களில் மனிதக் குடியிருப்புகள் இருப்பதில்லை. மக்கள் மூலமாக தகவல்களைப் பரிமாறிக் கொள்வது கடினமாக இருப்பதால், செயற்கைக்கோள் நிலையங்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்."

"இல்லையெனில், நமது குடியிருப்புகள் எல்லைப் பகுதிகளுக்குக் கீழே அமைந்திருப்பதால், நாம்தான் அதிகம் பாதிக்கப்படுவோம்" என்று அவர் விளக்குகிறார்.

நேபாளத்தின் சில ஆற்றுப் படுகைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இதுபோன்ற அமைப்புகள் நிறுவப்படத் தொடங்கியுள்ளன. ஆனால், இமயமலைப் பகுதிகளில் அவற்றின் பயன்பாடு இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

"மேலும், ஆபத்துக்குள்ளாகும் பகுதிகளை அடையாளம் கண்டு, ஆற்றங்கரையோர குடியிருப்புகளையும் வேறு இடங்களுக்கு மாற்ற முடியும். உயிர் மற்றும் உடைமை இழப்பைத் தடுக்க, ஆபத்தான பகுதிகளில் குடியிருப்புகளை அமைக்கக் கூடாது. இதுவே மிகவும் பயனுள்ள தீர்வாகும்" என்று திரிபுவன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் துக்ரி கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு