நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?

பட மூலாதாரம், Reuters
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது. மேலும் பலரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த வெள்ளத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைப் பாதுகாப்பாக மீட்க வேண்டுமென அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் 49 பேரும், கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் 57 பேரும் நேபாளம் சென்றிருந்தனர்.
டெல்லி செல்லும் அமைச்சர்கள், நேபாளம் செல்லும் தமிழ்நாடு அரசு அதிகாரி

பட மூலாதாரம், TNDIPR
இந்த நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன், தென்னரசு, வினோத், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் சதீஸ் ஆகியோர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலம் மற்றும் வான்வழித் தேடல், மீட்புப் பணிகளுக்காக நேபாள ராணுவம் 2,000 வீரர்களைக் களமிறக்கியுள்ளது. மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளான ராசுவா, நுவாகோட் மாவட்டங்களில் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜாராம் பஸ்நெட் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதுவரை வெள்ளத்தில் சிக்கியிருந்த 97 பேரை ராணுவம் மீட்டுள்ளதாக அவர் கூறினார். அவர்களில் மூவர் திரிசூலி ஏ நீர்மின் திட்டத்தின் சுரங்கப் பாதையில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக நேபாள காவல் துறையும் ஆயுதப் படையும் தங்கள் அதிகாரிகளை களமிறக்கியுள்ளன.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றி அமைச்சர் விளக்கம்
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்றிருந்த 103 நபர்களைப் பற்றிய தகவல்களை சட்டப்பேரவையில் கூறினார்.
கும்பகோணத்தில் இருக்கும் சூப்பர் யாத்ரா ஏஜென்ஸி என்ற நிறுவனம் நேபாளத்தின் சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பயணத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், EPA
அதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 11 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 5 பேர், தஞ்சாவூரில் இருந்து 16 பேர், தருமபுரியில் ஒருவர், திருச்சியில் இருந்து நால்வர், திருவண்ணாமலையில் ஒருவர், திருவாரூரில் இருந்து இருவர், நாமக்கல்லில் இருந்து ஒருவர், மயிலாடுதுறையில் இருந்து 7 பேர், சென்னையில் இருந்து 6 பேர் என 10 மாவட்டங்களைச் சேர்ந்த 54 தமிழர்களையும் சேர்த்து, புதுச்சேரியை சேர்ந்த 3 நபர்கள் என மொத்தம் 57 பேர் கைலாஷ் யாத்திரைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், "இவர்கள் லாங்டாங் என்ற இடத்தில் இருந்து ரஸ்வாகத்தி என்ற இடத்திற்கு மூன்று வாகனங்களில் பயணம் செய்தனர். ரசுவா மாவட்டத்தில் இருக்கும் போட்டேகோஷி ஆற்றின் அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நடுவில் சென்ற வாகனம் சிக்கியுள்ளதாக முதலில் தகவல் வந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்த 20 தமிழர்கள் தங்களது உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு திமுரே என்ற பகுதியில் ஆயுத காவல்படையிடம் தஞ்சமடைந்தனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது தரைவழியாக மாற்றுப் பாதையில் காத்மாண்டு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 34 பேரை பற்றிய விவரங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், TNDIPR
அதோடு, "சென்னையில் இருந்து இயங்கக்கூடிய மகாதேவ் கைலாஷ் யாத்திரா நிறுவனம் 49 தமிழர்களை அழைத்து சென்ற விவரம் தெரிய வந்துள்ளது. அவர்களைப் பற்றிய முழு விவரங்களைச் சேகரித்து வருவதாகவும்" அமைச்சர் சட்டப்பேரவையில் கூறினார்.
அயலக தமிழர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கட்டணமில்லா உதவி எண்களில் 937 அழைப்புகள் வந்ததாகவும், அவர்களுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவிதார். நேபாள அரசு, இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்கார்.

பட மூலாதாரம், Getty Images
அதிகாரிகளின் கூற்றுப்படி, காணாமல் போன சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவில் இருந்து 100க்கும் மேற்பட்டோர், அமெரிக்காவில் இருந்து 54 பேர், ஆஸ்திரேலியாவில் இருந்து 34 பேர் மற்றும் பிரிட்டனில் இருந்து 33 பேர், அத்துடன் நேபாளத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும் அடங்குவர்.
போடேகோஷி ஆற்றின் கிளை நதியான லெந்தே ஆற்றின் ஓட்டத்தை ஒரு பனிச்சரிவு தடுத்ததால்தான் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. வெள்ளநீர் முதலில் சீன எல்லைக்கு அருகிலுள்ள ரசுவாகடி அருகே உள்ள திமுரே பகுதியை வந்தடைந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வந்த அந்தப் பகுதியின் பரந்த நிலப்பரப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. அதன் பிறகு வெள்ளநீர் வேகமாக கீழ்பகுதிகளுக்குப் பாய்ந்து சென்றது.
அந்தப் பகுதியில் மழை பெய்யும் என எந்த முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதனால், இந்தப் பேரிடர் குறித்து அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை. வெள்ளம் தாக்கிய நேரத்தில் மக்கள் தங்களின் அன்றாட வேலைகளில் வழக்கம் போல் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
உதவி எண்கள் அறிவிப்பு
நேபாளம் பெரு வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளலாம்.
அதன்படி அரசு அறிவித்துள்ள உதவி எண்கள்:
இந்தியாவிற்குள்: 1800 309 3793
வெளிநாடு: +91 80 6900 9900 ( Missed call )
தொடர்புக்கு: +91 80 6900 9901
தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி: 9289516712 ( கட்டுப்பாட்டு அறை )
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































