ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கலைப்படைப்பு ஆண்மை பற்றி என்ன சொல்கிறது?

ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கலைப்படைப்பு ஆண்மை பற்றி கூறுவது என்ன?

பட மூலாதாரம், Alamy

    • எழுதியவர், டெபோரா நிக்கோல்ஸ்-லீ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

11-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த கலைப்படைப்பில், உரிமை கோரப்பட்ட அரியணை குறித்த கதையில், ஆண்மை என்பது அதிகாரத்துடனும் மிகப்பெரிய மற்றும் பெருமிதம் கொண்ட ஆணுறுப்புடனும் ஒப்பிடப்படுகிறது.

பிரிட்டனில் விரைவில் காட்சிக்கு வைக்கப்படவுள்ள இந்தக் கலைப்படைப்பு, இன்றைய காலத்திலும் பரிச்சயமானதாகத் தோன்றும் ஒரு கதையைச் சொல்கிறது.

எம்பிராய்டரி செய்யப்பட்ட நீண்ட பேயோ துணி, இங்கிலாந்தை நார்மன்கள் கைப்பற்றியதைப் பற்றிய வன்முறை நிறைந்த கதையைச் சொல்கிறது.

அந்த கதை அவ்வப்போது ஆபாசமானதாகவும் கருதப்படுகிறது.

70 மீட்டர் (77 யார்டு) நீளமுள்ள லினன் துணியில் நுணுக்கமாகத் தைக்கப்பட்டுள்ள இந்த தலைசிறந்த கலைப்படைப்பு, வாக்குறுதிகள் மீறப்படுதல், பேராசை மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றின் கதையை சுட்டிக்காட்டுகிறது. அந்தக் கதை ஹேஸ்டிங்ஸ் போரில் இரண்டாம் ஹெரால்டு மன்னரின் மரணத்தில் முடிகிறது.

கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்சின் நார்மண்டியில் இருந்து இந்தப் புகழ்பெற்ற கலைப்படைப்பு மீண்டும் பிரிட்டனுக்குத் திரும்புகிறது.

1070-களில் பிரிட்டனில் நுணுக்கமாகத் தைக்கப்பட்ட இந்த கலைப்படைப்பு, வரும் செப்டம்பர் முதல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

இன்றைய டிஜிட்டல் 'ஆண் ஆதிக்க' உலகின் இடைக்கால வடிவத்தைச் சித்தரிக்கும் கலைப்படைப்பாக இது உள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அதாவது, அதீத ஆண்மை மற்றும் ஆண்களின் அனுபவங்களை மையமாகக் கொண்ட ஓர் உலகத்தை அது சித்தரிக்கிறது. அந்த உலகில் அளவு முக்கியத்துவம் பெறுகிறது.

11-ஆம் நூற்றாண்டு சமூகத்தை இந்த கலைப்படைப்பு சித்தரிக்கும் விதத்தில், ஆண்களின் பங்களிப்புகளே முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

அந்த சமூகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் ஆயுதம் ஏந்தியவர்களாக உள்ளனர். மற்றவர்கள் மரங்களை வெட்டுதல், படகு கட்டுதல் மற்றும் கட்டுமானப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரு மரம் வெட்டுபவர் நீளமான மரக்கட்டையின் மீது அமர்ந்தபடி, தனது கோடாரியைத் தயாராக வைத்திருக்கிறார். அதேவேளையில், வேட்டையாடுபவர்கள் தங்கள் இரையைத் துரத்திச் செல்லும்போது, தங்களது தலைக்கு மேல் பெரிய தடிகளைச் சுழற்றுகின்றனர்.

நார்மண்டி பிரபு வில்லியம் மற்றும் ஹெரால்டு காட்வின்சன் ஆகிய இரண்டு ஆதிக்கம் செலுத்தும் ஆண்களுக்கு இடையே மோதல் நெருங்கி வருவதன் பதற்றமான சூழலை இவை அனைத்தும் வெளிப்படுத்துகின்றன.

"இதைவிட அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் நிறைந்த ஒரு காட்சியைக் கண்டுபிடிப்பது கடினம்" என்று இடைக்கால பிரிட்டனின் கலாச்சார வரலாற்றாசிரியர் முனைவர் கிறிஸ்டோபர் மாங்க் கூறுகிறார்.

மார்பைத் தட்டி தங்களது ஆண்மையை வெளிப்படுத்தும் இந்தக் காட்சி, ஆண்களுக்காகவும் ஆண்களாலும் உருவாக்கப்பட்ட இடைக்கால சமூகத்தை வெளிப்படுத்துகிறது. அங்கு வன்முறை மூலம் பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. ஆண்களுக்கிடையேயான நகைச்சுவை அரசியல் ரீதியான புள்ளிகளைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் ஹேஸ்டிங்ஸ் பகுதியில் அட்டூழியம் செய்கின்றனர்.

கீழ்ப்பகுதியில் இறந்து கிடக்கும் வீரர்களின் உடைகள், அவர்களது கவசத்திற்காக அகற்றப்பட்டு, அவர்கள் நிர்வாணமாகக் காட்டப்படுகின்றனர்.

அதேபோல், அவர்களுக்கு மேலே கொல்லப்பட்ட ஹெரால்டும் தனது அரச உரிமையை இழந்தவராகக் காட்டப்படுகிறார்.

மீண்டும் மீண்டும் இடம்பெறும் ஆணுறுப்பு

இந்தப் புகழ்பெற்ற கலைப்படைப்பில் மீண்டும் மீண்டும் இடம்பெறும் ஒரு முக்கிய அம்சத்தைக் குறிப்பிட்டு கூற வேண்டுமானால், அது ஆணுறுப்பு தான்.

2018-ஆம் ஆண்டு, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இடைக்கால வரலாற்றுப் பேராசிரியர் ஜார்ஜ் கார்னெட், இந்தத் தையல் கலைப்படைப்பில் 93 ஆணுறுப்புகள் இருப்பதாகக் கணக்கிட்டார். அவை பெரும்பாலும் விறைப்புடன் காணப்படும் நிலையில் இருந்தன.

அவற்றில் 88 குதிரைகளுக்கும், ஐந்து மனிதர்களுக்கும் சொந்தமானவை. கீழ்நோக்கித் தொங்கும் உறை ஒன்றும் இதில் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், அதை அவர் கணக்கில் சேர்க்கவில்லை. இது கல்வியாளர்கள் மத்தியில் கணிசமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

"பேயக்ஸ் துணியில் அளவு முக்கியமானது" என்று 'ஃபெமினா: இடைக்காலத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்களின் பார்வையில், அக்காலகட்டத்தின் ஒரு புதிய வரலாறு' (2022) (Femina: A New History of the Middle Ages, Through the Women Written Out of It (2022) என்ற நூலில் பிரிட்டனின் வரலாற்றாசிரியர் ஜானினா ராமிரெஸ் குறிப்பிடுகிறார்.

உரிமை கோரப்பட்ட அரியணை குறித்து அந்தத் துணியில் தைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் கதையில், ஆண்மை என்பது அதிகாரத்துடன் ஒப்பிடப்படுகிறது.

மிகப்பெரிய மற்றும் பெருமிதம் கொண்ட ஆணுறுப்பு, "போருக்கு முந்தைய நாளில் வில்லியமுக்கு வழங்கப்பட்ட சிறந்த ஆண் குதிரைக்கே சொந்தமானது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

இரண்டாவது இடம் மன்னர் ஹெரால்டின் குதிரைக்கு வழங்கப்படுகிறது. "அதாவது, அவர் ஒரு தகுதியான எதிரி" என்ற கருத்து இதில் வெளிப்படுவதாக அவர் கூறுகிறார்.

உரிமை கோரப்பட்ட அரியணை குறித்த அந்த கதையில், ஆண்மை என்பது அதிகாரத்துடன் ஒப்பிடப்படுகிறது.

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, பேயக்ஸ் துணியில், தலைமை ஆண்மகனான வில்லியமின் குதிரை, அதன் உரிமையாளரின் ஆண்மையைப் பிரதிபலிக்கிறது

11-ஆம் நூற்றாண்டின் கலை மரபுகளில் வெளிப்படையான நிர்வாணக் காட்சிகள் வழக்கமான ஒன்றாக இருந்தன.

இந்த ஆணுறுப்பு குறித்த காட்சிகளைத் தைத்தவர்கள் கன்னியாஸ்திரிகளாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

"இடைக்காலத்தின் உயர்தட்டு சமூகத்தில் மிகவும் வெளிப்படையாகக் காணப்பட்ட ஒரு விஷயத்தை இவை பிரதிபலிக்கின்றன. பொதுவாக, அரசியல் இறையாண்மையை முன்னெடுத்துச் சென்றவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருந்தனர்" என்று மாங்க் பிபிசியிடம் கூறுகிறார்.

"மனிதர்களுடையதாக இருந்தாலும் அல்லது குதிரைகளுடையதாக இருந்தாலும் ஆணுறுப்புகளைப் பயன்படுத்துவது" என்பது "இடைக்கால இங்கிலாந்தில் புதிய ஆங்கிலோ-நார்மன் உலகத்திற்கு மாறிச் சென்ற சூழலில் இருந்த அரசியல் ஆண்மையைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் ஒரு வழி" என்று அவர் விளக்குகிறார்.

இதில் கூறப்பட்டுள்ள கதையில் பெண்களின் பங்கு குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம், "கதை முழுவதும் ஆண்களின் செயல்பாடுகளைச் சுற்றியே நகர்கிறது" என்று பிரிட்டனின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் இடைக்கால வரலாற்று விரிவுரையாளர் முனைவர் எமிலி ஜோன் வார்டு பிபிசியிடம் கூறுகிறார்.

"பெரும்பாலும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆண்களே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அந்தப் போர் காட்சிகளில் பெண்கள் இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

நூறு ஆண்களுக்கு ஒருவர் என்ற விகிதமும் சமநிலையற்றதாகத் தோன்றினால், இந்தக் கலைப்படைப்பு யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதில் அதற்கான ஒரு குறிப்பு இருக்கலாம்.

இந்தத் துணியை உருவாக்கச் செய்திருக்கக் கூடியவர் வில்லியமின் ஒன்றுவிட்ட சகோதரரும் பேயு பிஷப்புமான ஓடோ என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

அவர் அதில் முக்கியமாக இடம்பெற்றுள்ளார்.

வில்லியமின் ஆட்சிக்கான உரிமையை நிலைநாட்ட நடந்த போராட்டத்தில் தனது முக்கியப் பங்கை வலியுறுத்துவதற்காக அவர் இந்தத் துணியைப் பயன்படுத்தியிருக்கலாம்.

வில்லியமின் ஆட்சிக்கான உரிமையை நிலைநாட்ட நடந்த போராட்டத்தில் தனது முக்கியப் பங்கை வலியுறுத்துவதற்காக அவர் இந்த துணியைப் பயன்படுத்தியிருக்கலாம்.

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, நார்மண்டியின் கோமகன் வில்லியம் ஒரு போர்க்கப்பலைக் கட்டுமாறு உத்தரவிடுகிறார்.

"இதன் உள்ளடக்கம் அவருடனும் அவரது நெருங்கிய சமூக வட்டத்துடனும் ஒத்துப்போகும் வகையில் இருந்திருக்கலாம். அந்த சமூக வட்டம் பெரும்பாலும் ஆண்களை மட்டுமே கொண்டதாக இருந்திருக்கும்" என்று வேட் கூறுகிறார்.

நார்மன் ஆதரவாளரைக் கொண்ட இந்தக் கலைப்படைப்பில், அதன் செய்தியும் அதற்கேற்ற வகையில் இருக்க வேண்டியிருந்தது.

"கதைக்குள் அதிகமான பெண்களை அறிமுகப்படுத்துவது உண்மையில் சற்று ஆபத்தானதாக இருந்திருக்கலாம்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"பெண் வழித்தோன்றல் மூலம் அரியணைக்கான தனது உரிமையை வலியுறுத்த வில்லியம் மேற்கொண்ட முயற்சிகள், இந்த நுட்பமான உரிமைக் கோரிக்கையின் மீது கவனம் செலுத்துவதில் இருந்து வடிவமைப்பாளரையோ அல்லது ஆதரவாளரையோ தயங்கச் செய்திருக்கலாம்."

அந்த கலைப்படைப்பில் உள்ள ஆறு பெண்கள்

முக்கியக் கதையில் இடம்பெறும் பெண்கள் பெரும்பாலும், மாங்க் குறிப்பிடும் வகையில், "உணர்வுகளுக்கான நிறுத்தற்குறிகளாக" செயல்படுகின்றனர்.

அரசியல் ரீதியாக மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்த ராணி எடித், அவரது கணவர் எட்வர்ட் தி கன்ஃபெசர் தனது இறுதி மூச்சை விடும்போது, தனது கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார்.

மற்றொரு காட்சியில், பிரமாண்டமான நார்மன் வீரர்கள் சாதாரணமாக தங்கள் வீட்டுக்குத் தீ வைக்கும்போது, ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர்.

வித்தியாசமான முகபாவனைகள் மற்றும் உடல்வாகுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், இந்த காட்சி, "போர் என்பது ஆண்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தப்படும் நிகழ்வு அல்ல, போர்க்களத்தில் நடப்பவை மட்டுமே போர் அல்ல" என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்று வார்டு கூறுகிறார்.

வரலாற்றாசிரியர் கேத்தரின் கார்கோவை அவர் குறிப்பிடுகிறார்.

அதன் முக்கியப் பகுதியில் இடம்பெறும் பெண்கள், அதிகார உறவுகள் மாறும் தருணங்களில் தோன்றுவதாக கார்கோவ் குறிப்பிடுகிறார்.

"அதை அந்த வகையில் நாம் புரிந்துகொண்டால், அந்தத் துணியில் பெண்களுக்கு மிகவும் வலிமையான பங்கு இருப்பதை அது வெளிப்படுத்துகிறது" என்று வார்டு விளக்குகிறார்.

"அதை அந்த வகையில் நாம் புரிந்துகொண்டால், அந்தத் துணியில் பெண்களுக்கு மிகவும் வலிமையான பங்கு இருப்பதை அது வெளிப்படுத்துகிறது" என்று வார்டு கூறுகிறார்.

பட மூலாதாரம், Alamy

படக்குறிப்பு, நார்மன் படைவீரர்கள் அலட்சியமாக அவர்களது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தும்போது, ​​ஒரு பெண்ணும் குழந்தையும் அச்சத்துடன் நிற்கின்றனர்.

அந்தத் துணியின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் உள்ள அலங்கார விளிம்புகள், மையக் கதாபாத்திரங்கள் மீதான மறைமுக விமர்சனங்களைக் கொண்டிருப்பதால், இன்னும் அதிகமாக எதிர்க்கருத்துகளை வெளிப்படுத்தும் ஓர் உலகத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன.

பெரும்பாலும் இந்த விமர்சனங்கள் நீதிக்கதைகளின் வடிவில் இடம்பெறுகின்றன. இங்குதான் மூன்று பெண்கள் தோன்றுகிறார்கள்.

கீழ் விளிம்புப் பகுதியில், பாலியல் ரீதியாக தாக்க முயலும் ஒருவரிடம் இருந்து ஒரு பெண் பின்வாங்குகிறார். அவர் அந்தப் பெண்ணின் தந்தையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பின்னர், மேல் விளிம்புப் பகுதியில், நிர்வாண ஆண்களை நோக்கி சைகை செய்யும் இரண்டு நிர்வாணப் பெண்கள் இடம்பெறுகின்றனர்.

தங்களது உடல்களைப் பயன்படுத்தி ஏமாற்றிய ஒரு கவர்ச்சிகரமான பெண் மற்றும் ஒரு பாலியல் தொழிலாளி குறித்த கதைகளுடன் அவர்கள் தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இது ஹெரால்டு அளித்த வாக்குறுதியை மீறியதைச் சுட்டிக்காட்டுகிறது.

அரியணைக்கு ஈடாக ஒரு பகுதியாக ஹெரால்டுக்கு திருமணம் செய்து வைக்க முன்வைக்கப்பட்ட வில்லியமின் மகள், நார்மண்டியைச் சேர்ந்த அகதாவை நாம் காணவில்லை.

வில்லியமின் பிரமாண்டமான போர்க்கப்பல் இடம்பெற்றிருப்பதை வார்டு சுட்டிக்காட்டுகிறார்.

நார்மன் கடற்படையிலேயே மிகப்பெரியதும் வேகமானதுமான அந்தக் கப்பலுக்கு 'மோரா' என்று பெயரிடப்பட்டிருந்தது.

ஆனால், ராணியாக மாறுவதற்கு வழிவகுக்கும் ராணுவ வெற்றியை சாத்தியமாக்கும் வகையில், அந்தக் கப்பலுக்கான செலவை ஏற்ற வில்லியமின் வலிமை மிக்க மனைவியான ஃபிளாண்டர்ஸின் மாடில்டாவை நாம் காணவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

'இடைக்கால மீ-டூ இயக்கம்'

இருப்பினும், மர்மமான ஆடை அணிந்த ஒரு பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அது, ஏல்ஃப்ஜிவா (Aelfgyva).

பச்சை நிற மேலங்கி அணிந்த, பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ய முயல்வது போன்ற தோற்றமளிக்கும் ஒரு பாதிரியார் அவரது முகத்தைத் தொடுவதற்காகக் கையை நீட்டுகிறார்.

அதேவேளையில், அந்தத் துணியின் விளிம்புப் பகுதியில், மிகப்பெரிய ஆணுறுப்பைக் கொண்ட நிர்வாண மனிதர் ஒருவர், அந்தப் பாதிரியாரின் செய்கையைப் போலவே செய்கிறார்.

அவர் யார், அங்கு அவர் ஏன் இடம்பெற்றுள்ளார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

த ஸ்டோரி ஆப்ஃ த பேயோ டபேஸ்ட்ரி (The Story of the Bayeux Tapestry (2026) நூலின் இணை ஆசிரியரான முனைவர் டேவிட் மஸ்குரோவ் முன்வைக்கும் கருத்து, பாதிரியாரின் பாலியல் தொல்லை "இடைக்காலத்தின் #மீ டூ தருணத்தில்" வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுவதாகக் கூறுகிறது.

இது பொருத்தமான விளக்கமாகத் தோன்றுகிறது.

பச்சை நிற அங்கி அணிந்த ஒரு பாதிரியார் ஆல்ஃப்ஜிவாவின் முகத்தை நோக்கி கையை நீட்டுகிறார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பச்சை நிற அங்கி அணிந்த ஒரு பாதிரியார் ஆல்ஃப்ஜிவாவின் முகத்தை நோக்கி கையை நீட்டுகிறார். ஓரத்தில் ஒரு நிர்வாண ஆண் உருவம் அந்தப் பாதிரியாரின் காமவெறி பிடித்த தோரணையைப் போல பாவனை செய்கிறது.

மற்றவர்கள் இதை மிகவும் அலட்சியமாக அணுகியுள்ளனர்.

20-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஒருவர், "கதைக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு தருணத்தைத் தவிர, இது வேறு எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்பதால், அதை விட்டு விடுவதை நியாயமானதாகக் கருதினோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

துறவிகள் கையெழுத்துப் பிரதிகளின் விளிம்புகளில் சித்திரங்களைச் சேர்த்ததைப் போலவே, இந்த மையக் கதையின் மறைபொருள் கொண்ட குறிப்புகளில் பெண் தையல் கலைஞர்களுக்கும் சிறிதளவு படைப்புச் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கலாம்.

"அவர்கள் சந்தேகமின்றி ஒரு வடிவமைப்பைப் பின்பற்றியே பணியாற்றினர்" என்று பிபிசியிடம் கூறும் மாங்க் , "ஆனால், அதற்காக அவர்கள் மற்றொருவரின் விருப்பத்தை வெறுமனே நிறைவேற்றியவர்கள் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு விவரமும் அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை"என்கிறார்.

ஒருவேளை, அந்தத் துணியின் விளிம்புப் பகுதியில், இந்தக் கலைப்படைப்பின் பின்னால் மறைந்திருந்த பெண்களே இறுதியில் வெற்றி பெற்றிருக்கலாம்.

"போர்க்குணம் கொண்ட ஆண்கள் மீதான விரக்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக அது இருந்ததா? அல்லது அடக்கப்பட்ட ஆங்கிலப் பெண்களாக தங்களது சொந்த நிலை குறித்து அவர்கள் கொண்டிருந்த விரக்தியா? குறிப்பாக வில்லியமை கேலி செய்யும் நோக்கம் அதில் இருந்ததா? அல்லது நேரத்தைக் கடத்துவதற்காக விளையாட்டுத்தனமான, இயல்பான நகைச்சுவையில் அவர்கள் ஈடுபட்டார்களா?" என்று மாங்க் கேள்வி எழுப்புகிறார்.

"இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் பேயோ கலைப்படைப்பு, திறமையும் அறிவாற்றலும் கொண்ட பெண்களின் உழைப்பால் மட்டுமே உருவானது என்ற உண்மையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்."

ஒருவேளை, அந்தத் துணியின் விளிம்புப் பகுதியில், இந்தக் கலைப்படைப்பின் பின்னால் மறைந்திருந்த பெண்களே இறுதியில் வெற்றி பெற்றிருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அசல் திரைச்சீலை 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனுக்கு வந்துள்ளது, இது செப்டம்பர் மாதம் முதல் லண்டனில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

இறுதியில், அந்தத் துணியின் அசல் வடிவில் காணப்பட்ட சில ஆண்மையை மையப்படுத்திய அம்சங்களை அடக்கியது விக்டோரிய காலத்து சமூகப் பார்வைகள் தான்.

1885-ஆம் ஆண்டு, லீக் எம்பிராய்டரி சொசைட்டியைச் சேர்ந்த 35 பெண்கள் உருவாக்கிய நம்பகமான பிரதி ஒன்று, தற்போது ரீடிங் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதில் முன்னேறிச் செல்லும் படைகள் இன்னும் ஆண்களால் நிரம்பியுள்ளன. ஆனால், குதிரைகளின் மிகப்பெரிய ஆணுறுப்புகள் காணாமல் போயுள்ளன.

அந்தத் துணியின் விளிம்புப் பகுதியில் பாதிரியாரின் செய்கையைப் போலவே நடித்துக் கொண்டிருந்த, மிகப்பெரிய ஆணுறுப்பைக் கொண்ட நிர்வாண மனிதர், புதிய பதிப்பில் ஷார்ட்ஸ் அணிந்தவராகக் காட்டப்பட்டுள்ளார்.

மிக முக்கியமாக, 1885-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பதிப்பில் கூடுதலாக ஒரு விளிம்புப் பகுதி சேர்க்கப்பட்டது.

அதில் ஒவ்வொரு எம்பிராய்டரி கலைஞரும் தனது பெயரைத் தைத்திருந்தார். இதன் மூலம் அந்தப் படைப்பை உருவாக்கியவர்களுக்குக் கௌரவம் அளிக்கப்பட்டதுடன், அதில் பெண்களின் இருப்பும் நிலைநிறுத்தப்பட்டது.

ராமிரெஸ் சுட்டிக்காட்டுவது போல, "வான் கோ என்ற பெயரைக் குறிப்பிடாமல் 'ஸ்டாரி நைட்' ஓவியம் குறித்து யாரும் பேசுவார்கள் என்று நினைக்க முடியாது… ஆனால், பேயோ குறித்து பேசும் போது, அதை உருவாக்கிய பெண்களைப் பற்றி சிந்தித்துத் தொடங்குபவர்கள் மிகச் சிலரே."

நவீனமானதாக இருந்தாலும் இடைக்காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், ஆண்களை மையமாகக் கொண்ட ஓர் உலகம் ஆண்களின் அதிகாரம் குறித்த கதைகளைச் சொல்லலாம்.

ஆனால், அது வெளியேற்ற முயலும் பெண்களையே அதன் இருப்பு சார்ந்திருக்கக்கூடும்.

த பேயோ டபெஸ்ட்ரி செப்டம்பர் 10 முதல் 2027 ஜூலை 11 வரை லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 1885-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பதிப்பு 'ரீடிங் மியூசியம்'-இல் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு