ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது தங்கத்தை வட அமெரிக்காவில் இருந்து மாற்றியது ஏன்?
தங்கள் நாட்டின் கையிருப்பு தங்கத்தில் பல டன் அளவை வட அமெரிக்காவுக்கு வெளியே மாற்றியுள்ளதாக நெதர்லாந்தின் மத்திய வங்கி இந்த வாரம் உறுதி செய்தது. இந்த இடமாற்றம் தங்களை கடுமையான நெருக்கடிகளைச் சமாளிக்க சிறப்பாக தயார்படுத்தும் என்றும் நெதர்லாந்தின் மத்திய வங்கி தெரிவித்தது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் சுமார் 313 டன் தங்கத்தில் இருந்து 86 டன் தங்கம், அதிகரித்து வரும் உலக அரசியல் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு லண்டனுக்கு மாற்றப்பட்டதாக அது தெரிவித்தது. இதையடுத்து நெதர்லாந்து இவ்வாறு செய்வது ஏன்? எதிர்காலத்தில் ஏதேனும் பெரிய பொருளாதார அதிர்ச்சியை அவர்கள் எதிர்பார்க்கிறார்களா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
அவர்கள் அவ்வாறு எதிர்பார்ப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், வர்த்தக மற்றும் ராணுவப் போர்கள் காரணமாக உலகம் எதிர்கொண்டுள்ள நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற நிலைக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரான்ஸ் தனது தங்க கையிருப்பை அமெரிக்காவிலிருந்து தனது நாட்டுக்கே திரும்பக் கொண்டு வந்துள்ளதாக அறிவித்தது. முன்னர் ஜெர்மனியும் இதே போல செய்திருக்கிறது. ஆக, உலகளாவிய நிலையற்ற சூழல்களில் இதுபோன்ற உத்தி ஏற்கெனவே பின்பற்றப்பட்டிருக்கிறது.
"பனிப்போரின்போது, சில ஐரோப்பிய மத்திய வங்கிகள் தங்களது தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை நியூயார்க்குக்கு மாற்றின," என்று கோல்ட்மேன் சாக்ஸின் ஆய்வாளர்களான லினா தாமஸ் மற்றும் டான் ஸ்ட்ரூய்வென் தெரிவித்தனர்.
போர்கள் மற்றும் வர்த்தகப் பதற்றங்கள் காரணமாக இருந்தாலும் அவை பிரதான காரணமில்லை என உலக தங்க கவுன்சிலின் மூத்த சந்தை உத்தியாளர் ஜோசப் கவடோனி பிபிசியிடம் தெரிவித்தார்.
பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் தங்கத்தை விரைவாக வர்த்தகம் செய்யக்கூடிய இடத்தில் வைத்திருப்பது ஆகியவையும் இதில் பங்கு வகிக்கின்றன.
மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட தங்கம் தற்போது இங்கிலாந்து வங்கியின் பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து மத்திய வங்கி தெரிவித்தது.
"அவற்றை நாங்கள் ஒருபோதும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படாது என எதிர்பார்க்கிறோம். ஆனால், நெருக்கடியைச் சமாளிக்கும் திறனையும் தயார்நிலையையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது," என நெதர்லாந்து மத்திய வங்கி ஆளுநர் கூறினார்.
உலகின் முக்கிய வர்த்தக மையமாக லண்டன் இருப்பதால், அது சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. நெருக்கடியான சூழ்நிலையில் தங்கத்தை விரைவாக வாங்கவோ விற்கவோ விரும்பினால், அதற்கான சிறந்த இடம் லண்டன். இதனால், இங்கிலாந்து வங்கி தங்கத்தை சேமித்து வைக்கும் பிரபலமான இடமாக உள்ளது.
இந்த வங்கி உலகின் மிகப்பெரிய தங்கப் பாதுகாப்பாளர்களில் ஒன்று. இதில், 200 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக மதிப்புள்ள சுமார் 4 லட்சம் தங்கக் கட்டிகள் உள்ளன.
சரி, இந்த தங்கம் எப்படி இடமாற்றம் செய்யப்படும்?
நவீன உலகில், நாடுகள் தங்கத்தை பல்வேறு வழிகளில் இடமாற்றம் செய்ய முடியும். நெதர்லாந்து நியூயார்க்கில் சுமார் 59 டன் தங்கத்தை விற்றுவிட்டு, பின்னர் லண்டனில் அதிக அளவில் தங்கத்தை வாங்கியது. இதனால், அந்த அளவு தங்கத்தை அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
ஆனால், 27 டன்னுக்கும் அதிகமான தங்கம் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து நெதர்லாந்தின் ஸைஸ்ட் நகருக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்பட்டன. இத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களால் தங்கள் செயல்பாட்டு முறை குறித்து ரகசியம் காக்கின்றன.
உலக தங்க கவுன்சிலைச் சேர்ந்த கவடோனி கூறுகையில், தங்கக் கையிருப்பை இடமாற்றம் செய்வதற்கான வழக்கமான முறைகளில் ஒன்று, ஒரு இடத்தில் தங்கத்தை விற்றுவிட்டு, மற்றொரு இடத்தில் வாங்குவது என்றார்.
"நான் தங்கத்தை நியூயார்க்கில் வைத்திருக்க விரும்புகிறேன், ஆனால் அது லண்டனில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நான் அதை லண்டனில் விற்றுவிட்டு, அதே நாளில், அதே நேரத்தில் நியூயார்க்கில் வாங்க முடியும். இதன் மூலம், தங்கத்தை வேறு எந்த இடத்துக்கும் கொண்டு செல்ல வேண்டிய அவசியமின்றி, கணக்கில் மட்டும் இடமாற்றம் செய்துவிட முடியும்," என அவர் கூறுகிறார்.
எல்லைகளைக் கடந்து தங்கத்தை அனுப்பும் பணியை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வெகு சிலவே உள்ளன. சரி, தங்கத்தை ஏன் ஒரு நாடு வெளிநாட்டில் சேமித்து வைக்கிறது என உங்களுக்கு கேள்வி எழலாம்.
இது பற்றி விளக்கும் கோல்ட்மேன் சாக்ஸின் தாமஸ் மற்றும் ஸ்ட்ரூய்வென், தங்கத்தை சொந்த நாட்டிலேயே சேமித்து வைப்பதற்கு செலவு ஏற்படும் என்கின்றனர்.
"உள்நாட்டில் தங்கத்தைச் சேமித்து வைப்பதற்கு பாதுகாப்பு, தணிக்கை கட்டமைப்பு மற்றும் காப்பீடு ஆகியவற்றில் முதலீடு தேவைப்படுகிறது. சிறிய மத்திய வங்கிகளுக்கு இந்தச் செலவுகள் அளவுக்கு அதிகமானதாக இருக்கலாம்," என அவர்கள் கூறினர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



