மார்பக புற்றுநோய் வந்தால் மார்பகத்தை அகற்றுவது ஒன்றே வேண்டுமா? மருத்துவர் விளக்கம்

காணொளிக் குறிப்பு, மார்பக புற்றுநோய் பாதித்தால் மார்பகத்தை அகற்ற வேண்டுமா?
மார்பக புற்றுநோய் வந்தால் மார்பகத்தை அகற்றுவது ஒன்றே வேண்டுமா? மருத்துவர் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன் பல பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் முதலில் எழும் அச்சம், "மார்பகத்தை முழுவதுமாக அகற்ற வேண்டியிருக்கும்" என்பதுதான். ஆனால் மருத்துவ அறிவியல் இன்று கூறுவது வேறு. மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் மார்பகத்தை அகற்றுவது கட்டாயமல்ல.

புற்றுநோய் எந்த கட்டத்தில் உள்ளது, அதன் அளவு என்ன, அது மார்பகத்தின் எந்தப் பகுதியில் உள்ளது உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து, பல பெண்களுக்கு மார்பகத்தைப் பாதுகாத்தபடியே புற்றுநோய் சிகிச்சை அளிக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் ஆய்வு நிறுவனமான IARC வெளியிட்ட GLOBOCAN 2024 தரவுகளின்படி, இந்தியப் பெண்களில் மிகவும் அதிகமாகக் கண்டறியப்படும் புற்றுநோய் மார்பக புற்றுநோயாகும். 2024ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 2.37 லட்சம் பேருக்கு புதிதாக மார்பக புற்றுநோய் பாதிப்பு பதிவாகியுள்ளன. இது பெண்களிடம் கண்டறியப்படும் அனைத்து புற்றுநோய்களிலும் சுமார் 30 சதவிகிதம் ஆகும்.

தமிழ்நாட்டிலும் மார்பக புற்றுநோய் பெண்களிடம் அதிகம் காணப்படும் புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாடு புற்றுநோய் பதிவேட்டு (TNCRP) தரவுகளின்படி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற நகரப் பகுதிகளில் மார்பக புற்றுநோயின் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. பெண்களிடம் கண்டறியப்படும் புற்றுநோய்களில் மார்பக மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய்கள் சேர்ந்து பெரும் பங்கை வகிக்கின்றன.

மார்பக புற்றுநோய் ஏற்பட்டால் மார்பகத்தை முழுமையாக அகற்ற வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் இல்லை என்று மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ் தெரிவித்துள்ளார்.

'மார்பகத்தை காப்பாற்றி அறுவை சிகிச்சை செய்ய முடியும் எனக் குறிப்பிட்ட அவர், கட்டியின் அளவு மற்றும் மார்பகத்தின் அளவை ஒப்பிட்டு ஆன்கோபிளாஸ்டிக் மறுசீரமைப்பு நுட்பங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று விளக்கினார்.

எப்போது மார்பகத்தைப் பாதுகாக்க முடியும்?

புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் செல்வி ராதாகிருஷ்ணன் ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்படும் மார்பக புற்றுநோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு மார்பகத்தை அகற்ற வேண்டிய அவசியமே இருக்காது என்கிறார்.

"குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் நோய் கண்டறியப்பட்டிருந்தால், புற்றுநோயுள்ள பகுதியை மட்டும் அகற்றி, மீதமுள்ள மார்பகத்தைப் பாதுகாக்கும் அறுவை சிகிச்சை (Breast Conservation Surgery) முறையைப் பயன்படுத்த முடியும். ஆனால் இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகச் சாத்தியமில்லை" என்று அவர் குறிப்பிடுகிறார்.

மார்பகத்தின் அளவு, கட்டியின் அளவு, கட்டி அமைந்துள்ள இடம், மார்பகத் திசுக்களின் தன்மை போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மார்பக அளவு சிறியது முதல் பெரியது வரை A, B, C, D, E, F, G, H என கணக்கிடப்படுகிறது என்று கூறும் மருத்துவர் செல்வி ராதாகிருஷ்ணன், "உதாரணமாக, சிறிய மார்பகத்தில் 2 அல்லது 3 செ.மீ. அளவிலான கட்டி கூட பெரிய பகுதியை பாதித்திருக்கலாம். அதே நேரத்தில், பெரிதான மார்பகத்தில் அதே அளவிலான கட்டி எளிதாக அகற்றப்படக்கூடியதாக இருக்கலாம்." என்று சுட்டிக்காட்டுகிறார்.

அவரது கூற்றின்படி, கட்டி மார்பகக்காம்புக்கு அருகில் உள்ளதா அல்லது மார்பகத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ளதா என்பதும் முக்கியம். அக்குள் பகுதிக்கு அருகில், வெளிப்புறப் பகுதியில் கட்டி இருந்தால், அதை அகற்றிவிட்டு மார்பகத்தைப் பாதுகாப்பது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும். ஆனால், மார்பகக் காம்பின் பின்புறம் அல்லது நடுப்பகுதியில் இருந்தால் சிகிச்சை சவாலாக மாறக்கூடும்.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு