நேபாளம்: வெள்ளம் சூழ்ந்த பச்சை நிற வீட்டின் பால்கனியில் நின்றவர்கள் என்ன ஆயினர்?

காணொளிக் குறிப்பு, காணொளி: நேபாள வெள்ளத்தின் போது பால்கனியில் தப்பிய நபர்கள்
நேபாளம்: வெள்ளம் சூழ்ந்த பச்சை நிற வீட்டின் பால்கனியில் நின்றவர்கள் என்ன ஆயினர்?
பிரசுரிக்கப்பட்டது

பிபிசி வெரிஃபைட் செய்தியாளர் சார்லோட் கிரீன் பகிர்ந்த தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

நேபாளத்தில் வெள்ளம் சூழ்ந்த ஒரு பச்சை நிற கட்டடத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோ நேபாளத்தின் பிதூரில் இருந்து எடுக்கப்பட்டது.

வெள்ள நீரின் வேகமான ஓட்டம் நகரத்தின் பெரும் பகுதிகளை அழித்தது அல்லது அடித்துச் சென்றது.

புதன்கிழமை எடுக்கப்பட்ட அந்த கட்டடத்தின் முதல் காணொளியை பிபிசி வெரிஃபைட் உறுதி செய்துள்ளது.

வெள்ளம் உச்சத்தில் இருந்தபோது, வலுவான நீரோட்டங்களையும் பெரிய அலைகளையும் எதிர்த்து அந்தக் கட்டடம் உறுதியாக நிற்பதை அந்த வீடியோ காட்டியது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் அதற்குள் தஞ்சம் அடைவதும் வீடியோவில் காணப்படுகிறது.

வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்ட மற்ற கட்டடங்கள் மற்றும் வாகனங்களின் இடிபாடுகளும் அந்தக் கட்டடத்தின் மீது மோதுவது வீடியோவில் காணப்பட்டது. வெள்ள நீர் கட்டடத்தை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்திருந்தது.

மற்றொரு காணொளி, வெள்ளம் தொடங்கிய இடத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த பச்சை நிற வீடு, சுற்றியுள்ள பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டிருந்த போதிலும், கிட்டத்தட்ட சேதமடையாமல் இருப்பதைக் காட்டியது.

சரிபார்க்கப்பட்ட காணொளியில், குறைந்தது மூன்று பேர் தெரிகிறார்கள்: ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை (ஒரு சிறுமியாக இருக்கலாம்).

வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள பால்கனி போன்ற பகுதியில் அவர்கள் சிக்கியிருப்பதை காண முடிகிறது.

பெரிய கற்கள், குப்பைகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைச் சுமந்து கொண்டு, சேறு கலந்த வெள்ள நீர் அவர்களைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.

அந்தப் பொருட்கள் இன்னும் உறுதியாக நிற்கும் வீட்டின் மீது தொடர்ந்து மோதி, அதைத் தங்களோடு அடித்துச் செல்ல முற்படுகின்றன.

அதே வேளையில், வீட்டின் குடியிருப்பாளர்கள் பால்கனியில் செய்வதறியாது நிற்பதைக் காண முடிகிறது. ஒரு பெண் வீட்டின் கூரைக்குச் சென்று, உதவி கோரி சிவப்பு நிறத் துணியை அசைப்பதையும் காண முடிகிறது.

சமூக ஊடகங்களில் மக்கள் இந்தக் காணொளிக்குத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு