ஜபல்பூர் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், PTI
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த காமராஜ் (38) அவரது மனைவி கார்குழலி(36) , அவரது மகன்கள் தமிழ் வேந்தன்(6) புவிதரன்(10) மற்றும் காமராஜின் உறவினர் திருப்பூர் தாராபுரம் பகுதியை சேர்ந்த சௌபாக்கியம்(42) அவரது மகன் மயூரன் (8), மகள் இனியா(12) என ஏழு பேர் உட்பட 40 பேர் படகு சவாரி சென்று உள்ளனர்.
படகு கவிழ்ந்து எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் படகில் பயணித்த காமராஜ் அவரது மனைவி கார்குழலி அவரது இளைய மகன் தமிழ் வேந்தன் மற்றும் மைத்துனரின் மனைவி சௌபாக்கியம், மற்றும் மைத்துனரின் மகன் மயூரான் ஆகிய ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதில் காமராஜ் மூத்த மகன் புவிதரன் மற்றும் சௌபாக்கியத்தின் மகள் இனியா ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் இறந்தவர்களின் உடலை சொந்த ஊரான திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதிக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜின் தந்தை மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறந்தவர்களின் உடல்கள் இன்று இரவு தனி விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
















