காமன்வெல்த் போட்டியில் மிராபாய் சானு 'ஹாட்ரிக்' தங்கம்

பட மூலாதாரம், Getty Images
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வென்றுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
2022-ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதையும் மீராபாய் சானு வென்றார். பொதுமக்கள் வாக்களிப்பின் அடிப்படையில் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
அதற்கு முன், 2021-ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதையும் அவர் பெற்றிருந்தார்.
பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மீராபாய் சானு மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கினார். இதில், ஸ்நாட்ச் பிரிவில் 85 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோவும் அடங்கும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஸ்நாட்ச் பிரிவில் மீராபாய் சானு தூக்கிய 85 கிலோ எடை புதிய சாதனையாகும்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானு, இதற்கு முன்பும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
2014-ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியிலும், 2022-ஆம் ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, அந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனையாகவும் திகழ்கிறார்.

பட மூலாதாரம், Mattia Ozbot/Getty Images
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை, இந்தியா இரண்டு பதக்கத்தை வென்றது.
மணிப்பூரைச் சேர்ந்த ரிஷிகாந்த் சிங் சனம்பம், ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் இறுதிப்போட்டியில் மொத்தம் 264 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். மீராபாய் சானுவைப் போலவே அவரும் மணிப்பூரைச் சேர்ந்தவர்.
இதன் மூலம் இந்தியா மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. இதற்கு முன் வெள்ளிக்கிழமை, பாரா பவர் லிஃப்டிங் போட்டியில் ஜாண்டு குமார் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் தகவலின்படி, ரிஷிகாந்த் சிங் ஸ்நாட்ச் பிரிவில் 121 கிலோ எடையைத் தூக்கி புதிய போட்டி சாதனையைப் படைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 143 கிலோ எடையைத் தூக்கினார். மொத்தமாக 264 கிலோ எடையைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































