இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய வரி விதித்த அமெரிக்கா - யாருக்கு எவ்வளவு?

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி விதித்த அமெரிக்கா: யாருக்கு எவ்வளவு?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தனது முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும். இதில் சீனா அதிகபட்சமாக 40% வரை வரியை எதிர்கொள்கிறது. அடுத்ததாக வியட்நாமுக்கு 35 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்.

தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு 25% வரை வரி விதிக்கப்பட உள்ளது. ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 20% வரை வரி விதிக்கப்படும்.

இருப்பினும், டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுடன் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக, உண்மையில் செலுத்த வேண்டிய வரி விகிதங்கள் இதைவிடக் கணிசமாகக் குறைவாக இருக்கும் என்று பிபிசியின் வணிகப் பிரிவு செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தற்போது அறிவித்துள்ள வரிகள் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அமெரிக்காவுக்குக் கூடுதல் பேரம் பேசும் வலிமையை அளிக்கக்கூடும் என்று பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பலமுறை வரிகளை விதிப்பதாக எச்சரித்தும், சில வரிகளை நடைமுறைப்படுத்தியும் வந்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் உற்பத்தித் துறை வளர்ச்சியடைவதுடன், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று அவர் கூறி வருகிறார்.

இந்தப் புதிய வரி விதிப்புக்கான முன்மொழிவுகள் வெளியாகியுள்ள நிலையில், டிரம்ப் ஏற்கெனவே விதித்திருந்த சில வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், வரிகளை விதிக்கும் முயற்சியை டிரம்ப் நிர்வாகம் கைவிடவில்லை. மாற்றுச் சட்ட வழிகளைப் பயன்படுத்தி இறக்குமதி வரிகளை விதிப்பது குறித்து வெள்ளை மாளிகை ஆராய்ந்து வந்த நிலையில், இன்று அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கை அதற்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி விதித்த அமெரிக்கா: யாருக்கு எவ்வளவு?

இப்போது வரி ஏன்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளி நாடுகள் சிலவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உற்பத்தித் துறைகளில் அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் மற்றும் அதிக உற்பத்தி குறித்து மேற்கொள்ளப்பட்ட பிரிவு 301 விசாரணையைத் தொடர்ந்து இந்த வரிகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ளன.

சீனா, ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இந்தோனீசியா, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, தென்கொரியா, வியட்நாம், தைவான், வங்கதேசம், ஜப்பான் மற்றும் இந்தியா போன்றவை இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆனால், இறக்குமதிப் பொருட்கள் மீதான வரிகள் பணவீக்கத்தை அதிகரித்து, நுகர்வோர் வாங்கும் பொருட்களின் விலையை உயர்த்தக்கூடும் என்றும், உலகளாவிய வர்த்தகத்தைக் குறைக்கக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தப் புதிய வரிகள் தொடர்பான அறிவிப்பு, மற்ற நாடுகளின் வர்த்தக நடைமுறைகள் குறித்து மார்ச் மாதத்தில் வெள்ளை மாளிகை விசாரணையைத் தொடங்கியதைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

சில வர்த்தகக் கூட்டாளி நாடுகள், "நியாயமற்ற அல்லது பாரபட்சமான நடைமுறைகளைக் கையாண்டு, அமெரிக்காவின் வர்த்தகத்துக்குச் சுமையை ஏற்படுத்துகின்றனவா அல்லது அதைக் கட்டுப்படுத்துகின்றனவா" என்பது குறித்து, பிரிவு 301 விசாரணை எனப்படும் விசாரணையை மார்ச் மாதத்தில் அமெரிக்கா தொடங்கியது.

அப்போது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், "உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி மிகை காரணமாக ஏற்படும் பிரச்னைகளை மற்ற நாடுகள் எங்கள் மீது சுமத்தக்கூடும். அத்தகைய நாடுகளுக்காக அமெரிக்காவின் தொழில்துறை அடித்தளத்தை இனியும் நாங்கள் பலிகொடுக்க மாட்டோம். முக்கியமான விநியோகச் சங்கிலிகளை மீண்டும் அமெரிக்காவுக்குக் கொண்டுவரவும், உற்பத்தித் துறைகளில் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதிபர் டிரம்ப் உறுதியாக இருக்கிறார்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "பல துறைகளில், அமெரிக்காவின் வர்த்தகக் கூட்டாளி நாடுகள் தங்கள் சொந்த நாடுகளில் நுகரப்படக்கூடிய அளவைவிட அதிகமான பொருட்களை உற்பத்தி செய்கின்றன" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு