காமனெயி இறந்த 132 நாளுக்கு பிறகு உடல் அடக்கம் - தாமதம் பற்றி இஸ்லாமிய சட்டத்தை ஒட்டி விவாதம் ஏன்?

காமனெயி இறுதிச்சடங்கு, இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மொஜ்தபா காமனெயி

பட மூலாதாரம், ATTA KENARE / AFP) (Photo by ATTA KENARE/AFP via Getty Images

படக்குறிப்பு, அயதுல்லா அலி கமேனியின் உடல், அவர் மறைந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது
    • எழுதியவர், மசூத் அஸார்
    • பதவி, பிபிசி பாரசீக மொழி சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இரான் முன்னாள் அதிஉய தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உடல் வியாழக்கிழமை மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரசா புனிதத் தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கும் உயிரிழந்த அவரது குடும்ப உறுப்பினர்களுக்குமான இறுதிச் சடங்குகள் தெஹ்ரானில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்கள் நடைபெற்றன.

பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களின் ஆரம்பக் கட்டத்திலேயே அலி காமனெயி வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள வளாகம் குறிவைக்கப்பட்டபோது அவர் கொல்லப்பட்டார்.

அலி காமனெயி இறந்து 125 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூலை 3-ஆம் தேதி காலையில் அவர் மற்றும் அவரோடு சேர்த்து கொல்லப்பட்ட அவரது குடும்பத்தினரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் முதன்முறையாக தெஹ்ரானின் 'இமாம் கொமேனி முசல்லா'வில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

முன்னாள் அதிஉயர் தலைவர் இறந்த பிறகு 125 நாட்களாக அவரது உடல் எங்கே, எப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து இரான் அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தெளிவான தகவலையும் வெளியிடவில்லை.

இமாம் கொமேனி முசல்லாவில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சவப்பெட்டிகள் மீதும் இரானின் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. அவை சாதாரண சவப்பெட்டிகளை விட உயரமாக இருந்ததோடு, சிறப்பு கண்ணாடிக் கூண்டுகளுக்குள் வைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு அம்சங்களைத் தாண்டி, அந்தக் கண்ணாடிக் கட்டமைப்புகளின் தோற்றமானது, அவற்றிற்குள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் குளிர்சாதன வசதி இருந்திருக்கலாம் என்றும் தோன்றியது.

அலி காமனெயி மரணத்திற்கு காரணமான உடல் ரீதியான காயங்கள் குறித்து இரானிய அதிகாரிகள் இதுவரை விரிவான தகவல்கள் எதையும் வழங்கவில்லை. அந்த வளாகத்தில் நடந்த தாக்குதல் மிகவும் சக்திவாய்ந்தவையாக இருந்தன என்று மட்டுமே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், முன்னாள் அதிஉயர் தலைவரின் மரணம் அறிவிக்கப்பட்டதற்கும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதற்கும் இடைப்பட்ட காலதாமதம் சமூக ஊடகங்களில் பல கேள்விகளை எழுப்பியது.

உடல் அடக்கம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இச்சூழ்நிலைக்குப் பொருந்தக்கூடிய இஸ்லாமிய மற்றும் மத நடைமுறைகள் குறித்த விவாதங்கள் எழுந்தன.

இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே, இறுதிச் சடங்குகள் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு இரானிய அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளித்தனர்.

இறுதிச் சடங்கு ஏற்பாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் இமான் அத்தர்சாதே கூறுகையில், "உடல்கள் மத மற்றும் சட்ட விதிகளின்படி முழு மரியாதையுடனும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவை எங்கும் அடக்கம் செய்யப்படவும் இல்லை, வேறு எங்கும் தற்காலிகமாக வைக்கப்படவும் இல்லை." என தெரிவித்தார்.

சடலத்திற்கு உரிய மரியாதை

காமனெயி இறுதிச்சடங்கு, இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மொஜ்தபா காமனெயி

பட மூலாதாரம், ISNA

படக்குறிப்பு, இஸ்லாமிய போதனைகளின்படி, ஒரு மனிதனின் உயிர் பிரிந்த உடனே, அவரது உடலுக்கு மரியாதைக்குரிய அந்தஸ்து கிடைத்துவிடுகிறது
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கண்ணாடிக் கூண்டுகளுக்குள் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளைப் பார்க்கும்போது, அவற்றில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் குளிர்சாதன வசதி இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

அத்தர்சாதே இந்த "ஷரியத் விதிகளைப்" பற்றி விரிவாக விளக்கவில்லை, ஆனால் முஸ்லிம்களிடையே வழக்கத்தில் உள்ள தற்காலிகமாக அடக்கம் செய்யும் ஒரு முறையான "வதீஅஹ்" என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

எளிமையான சொற்களில் கூறுவதானால், "வதீஅஹ்" என்றால் ஒரு நபர் தனது பாதுகாப்பிற்காக ஒரு பொருளை மற்றொருவரிடம் தற்காலிகமாக ஒப்படைப்பதாகும்.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில், இஸ்லாமியரின் சடலத்தைக் கையாள்வது குறித்து ஷரியத் விதிகள் என்ன கூறுகின்றன என்றும், இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் மத ரீதியான அறிவுறுத்தல்கள் என்ன என்பது பற்றிய விவாதமும் நடந்து வந்தது.

இஸ்லாமிய போதனைகளின்படி, ஒரு மனிதனின் உயிர் பிரிந்த உடனே, அவரது உடலுக்கு மரியாதைக்குரிய அந்தஸ்து கிடைத்துவிடுகிறது.

உடல் அடக்கம் செய்யப்படும் வரை, அது சார்ந்த குறிப்பிட்ட சடங்குகளும் மரபுகளும் பின்பற்றப்படுகின்றன. இவற்றில் சில மரபுகள் ஹதீஸ்கள் மற்றும் மதப் போதனைகளிலிருந்தும், சில சமூக மற்றும் கலாசார மரபுகளிலிருந்தும் வந்தவையாகும்.

காமனெயி இறுதிச்சடங்கு, இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மொஜ்தபா காமனெயி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இறந்தவர்களின் உடலை கூடிய விரைவில் அடக்கம் செய்யவேண்டும் என சுன்னி பிரிவை சேர்ந்தவர்கள் அறிவுறுத்துகின்றனர்

இஸ்லாமிய மார்க்கம் இறந்தவரை மதிப்பதற்கும், அவருடைய உடலின் கண்ணியத்தைப் பேணுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் காரணமாகவே, உடலை விரைவாக அடக்கம் செய்வது இறந்த உடலுக்குச் செய்யப்படும் மரியாதையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

"ஷியா சமூகத்தில், ஒரு மனித சடலத்திற்கு உயிருடன் இருக்கும் ஒருவருக்கு அளிக்கப்படும் அதே அளவிலான மரியாதை அளிக்கப்படுகிறது," என்று மத ஆய்வாளர் ஹசன் ஃபெரெஷ்டியன், பிபிசி பாரசீக சேவையிடம் கூறினார்.

ஹசன் ஃபரஷ்தியானின் கூற்றுப்படி, இறந்த உடலை மதிப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன:

  • முதலாவதாக, இறக்கும் ஒவ்வொரு நபருக்கும் குடும்பத்தினரும் உறவினர்களும் இருக்கிறார்கள்; உடலை அவமதிப்பது குடும்பத்தினரின் உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தும்.
  • இரண்டாவதாக, இறந்த உடலை மதிப்பது என்பது சமூக ஒழுக்கத்தின் ஒரு பகுதியாகும்; எந்தவொரு மனித உடலையும் அவமதிப்பது இந்த கூட்டுச் சமூக மதிப்பைச் சீர்குலைக்கும்.
  • மூன்றாவதாக, இறந்தவர்களின் உடலெச்சங்கள் உட்பட அவர்களுடன் தொடர்புடைய நினைவுகளும் அடையாளங்களும், அவர்களைப் பிரிந்து வாழும் மனிதர்களுக்கு மிகுந்த மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாக விளங்குகின்றன.

ஷியா மற்றும் சுன்னி சமூகங்கள் என்ன நினைக்கின்றன?

காமனெயி இறுதிச்சடங்கு, இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மொஜ்தபா காமனெயி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு உடலை எவ்வளவு அதிகபட்ச காலத்திற்குப் பாதுகாக்கலாம் என்பதை இஸ்லாமியச் சட்டம் குறிப்பிடவில்லை என ஹசன் ஃபராஷ்டியன் கூறுகிறார்

இஸ்லாமிய சட்டத்தில் இறந்த உடலின் உறுப்புகளுக்குச் சேதம் விளைவிப்பது குறித்தும் குறிப்பிட்ட விதிகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார். உயிருடன் இருக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பது எந்தவொரு மத மற்றும் சட்ட ரீதியான விளைவுகளை ஏற்படுத்துமோ, அதேபோன்று இறந்த உடலின் உறுப்புகளைத் துண்டிப்பதற்கும் அல்லது அதற்குச் சேதம் விளைவிப்பதற்கும் எதிராகவும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மரணத்திற்குப் பிறகும் மனிதனின் கண்ணியம் இஸ்லாத்தில் மதிக்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது.

ஆயதுல்லா அலி காமனெயி உடல் அடக்கம் செய்யப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து ஹசன் ஃபரஷ்தியான் கூறுகையில், "உடலை விரைவாக அடக்கம் செய்வது என்பது ஷரியத் எனப்படும் இஸ்லாமிய சட்டத்தின் வலுவான பரிந்துரைகளில் ஒன்றாகும், ஆனால் ஷியா பிரிவில் இது கட்டாயமாக்கப்படவில்லை" என்கிறார்.

ஷியா சமூகத்தில் உடனடியாக அடக்கம் செய்வது நல்லதாகக் கருதப்பட்டாலும், அது கட்டாயமில்லை என்றும், இறந்தவரின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாப்பதே இந்த நடைமுறைக்கான ஒரு காரணம் என்றும் அவர் விளக்குகிறார்.

இதற்கு நேர்மாறாக, சில சுன்னி அறிஞர்கள் உடலை விரைவாக அடக்கம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, சாத்தியமானால் இறந்த அன்றே உடலை அடக்கம் செய்துவிட வேண்டும்.

ஹசன் ஃபர்ஷ்டியனின் கூற்றுப்படி, மத நூல்களில் காணப்படும் பல பரிந்துரைகள் வழிகாட்டுதல்களாக இருப்பதோடு, சமூகம் மற்றும் பொது சுகாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

முந்தைய காலங்களில் சடலங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான நவீன வசதிகள் இருக்கவில்லை. எனவே, உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அது உயிருடன் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்; இதன் காரணமாகவே உடலை விரைவாக அடக்கம் செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

காமனெயி இறுதிச்சடங்கு, இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மொஜ்தபா காமனெயி, ஆயதுல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயிக்கு இறுதி மரியாதை

ஹசன் ஃபரஷ்தியானின் கூற்றுப்படி, இன்றைய காலகட்டத்தில் தடய அறிவியல் சோதனை, நிர்வாக நடைமுறைகள் மற்றும் இரங்கல் கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக, மரணத்திற்கும் அடக்கம் செய்வதற்கும் இடைப்பட்ட நேரம் பெரும்பாலும் ஒரு நாளுக்கும் மேலாகிவிடுகிறது.

சமீபத்தில், கும் நகரில் அலி காமனெயி உடல் "வதீஅஹ் தஃபன்" அதாவது தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டதாக வந்த செய்திகளை இரானிய அதிகாரிகள் மறுத்தபோது, இந்த வகையான அடக்க முறை குறித்தும் கேள்விகள் எழுந்தன.

ஹசன் ஃபரஷ்தியானின் கூற்றுப்படி, ஷியா மரபில் இத்தகைய அடக்க முறையும் வழக்கத்தில் உள்ளது; இதில் உடலை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பின்நாட்களில் கொண்டு செல்லும் நோக்கில், தகுந்த நேரம் வரும் வரை ஒரு தற்காலிக இடத்தில் சில காலம் அடக்கம் செய்து வைப்பார்கள்.

அவரது கூற்றுப்படி, இரானில் குறிப்பாக 'காஜார்' காலம் மற்றும் ஆரம்பகால 'பஹ்லவி' காலம் வரை, பல மதக் குடும்பங்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களின் உடல்களை அல்லது அவர்களின் எலும்பு எச்சங்களை, பின்னர் நஜாஃப் அல்லது கர்பலா போன்ற புனித நகரங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, முதலில் தற்காலிகமாக அடக்கம் செய்து வந்தனர். பல நேரங்களில், பல வருடங்களுக்குப் பிறகு அந்த மனித எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அவர்களின் இறுதி ஓய்விடத்திற்குக் கொண்டு சேர்க்கப்பட்டன.

இரானிய சிந்தனையாளர் அலி ஷரியாதியின் உதாரணத்தையும் அவர் குறிப்பிடுகிறார். இவரது உடல் ஆரம்பத்தில் சிரியாவின் ஜைனபியா பகுதியில் தற்காலிகமாகவே அடக்கம் செய்யப்பட்டிருந்தது.

அவரைப் பொறுத்தவரை, இறந்தவரின் உயில் அல்லது குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு இணங்க, ஒரு உடலை பின்னர் வேறொரு இடத்திற்கு மாற்றும் நோக்கத்துடன், தற்காலிகப் பொறுப்பாக அடக்கம் செய்யும் நிகழ்வுகளை இன்றும் காணமுடிகிறது.

அலி காமனெயி மரணத்திற்கும் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கும் இடையே ஏற்பட்ட இந்த நீண்ட கால இடைவெளி குறித்து பல்வேறு விதமான கருத்துகளும் எதிர்வினைகளும் வெளிவந்துள்ளன.

ஹசன் நஸ்ரல்லாவின் உடல் ஐந்து மாதங்களுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது

காமனெயி இறுதிச்சடங்கு, இரான், அமெரிக்கா, இஸ்ரேல், மொஜ்தபா காமனெயி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஹசன் நஸ்ரல்லா 2024 செப்டம்பர் 27 அன்று கொல்லப்பட்டார்; அவரது இறுதிச் சடங்குப் பிரார்த்தனை ஏறக்குறைய ஐந்து மாதங்களுக்குப் பிறகு, 2025 பிப்ரவரி 23 அன்று நடைபெற்றது

இரான் எதிர்கொண்ட போர் மற்றும் அதன் விளைவுகளால் உருவான அசாதாரண சூழல்கள், முன்னாள் அதிஉயர் தலைவரின் அடக்கச் சடங்கை வெறும் மத மற்றும் சமூக நிகழ்வாக மட்டுமன்றி, அரசியல், பாதுகாப்பு மற்றும் பிரசாரம் சார்ந்த பரிமாணங்களைக் கொண்ட நிகழ்வாகவும் மாற்றின.

இதற்கு ஒரு முக்கிய உதாரணம், ஹெஸ்பொலாவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாகும். ஹசன் நஸ்ரல்லா 2024 செப்டம்பர் 27 அன்று கொல்லப்பட்டார். அவரது இறுதி அஞ்சலித் தொழுகை சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, 2025 பிப்ரவரி 23 அன்றுதான் நடத்தப்பட்டது.

அச்சமயத்தில், இஸ்ரேலுடன் தொடர்ந்து நடந்து வந்த போர் மற்றும் புதிய தாக்குதல்களுக்கான அச்சுறுத்தல் காரணமாக, ஹெஸ்பொலாவால் பகிரங்கமாக இறுதி ஊர்வலத்தை நடத்த முடியாத சூழ்நிலை இருந்ததாகப் பல்வேறு ஆதாரங்கள் தெரிவித்தன. எனவே, அவரது உடல் தற்காலிகமாக ஒரு ரகசிய இடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் பெய்ரூட்டில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன, இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு ஒரு அரசியல் ரீதியான எழுச்சியாகவும், ஹெஸ்பொல்லாவின் வலிமையைக் காட்டும் அடையாளமாகவும் பார்க்கப்பட்டது.

ஹசன் நஸ்ரல்லா மற்றும் அலி காமனெயி போன்றவர்களின் விஷயத்தில், ஒரு உடலை எவ்வளவு காலம் பாதுகாத்து வைக்கலாம் என்பது குறித்து இஸ்லாமியச் சட்டம் எந்தவொரு கால வரம்பையும் குறிப்பிடவில்லை என்று ஹசன் ஃபரஷ்தியான் குறிப்பிடுகிறார்.

அவரது கூற்றுப்படி, மரணத்திற்கும் அடக்கம் செய்வதற்கும் இடைப்பட்ட காலம் சில மணிநேரங்கள், சில நாட்கள், சில வாரங்கள் அல்லது சில மாதங்களாகக் கூட இருக்கலாம். மத ரீதியாகப் பார்க்கும்போது மிக முக்கியமான விஷயம், உடலை கண்ணியமாக நடத்துவதும், அதன் பராமரிப்பு தொடர்பான விதிகளைப் பின்பற்றுவதும் ஆகும்.

இதுபோன்ற பல விஷயங்கள் அந்தந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் நிலவும் சமூகச் சூழல்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியவை என்று அவர் கருதுகிறார்.

இன்று உலகின் பல்வேறு நாடுகளில், குறிப்பாக சந்தேகத்திற்கிடமான மரணங்கள் நிகழும்போது, நீதிமன்ற மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு பல நாட்கள் அல்லது அதற்கும் மேலாக ஆகலாம். இதன் காரணமாகவே, பல நேரங்களில் உடல் அடக்கம் செய்யப்படுவது பல நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

ஹசன் ஃபரஷ்தியானின் கூற்றுப்படி, இறந்தவர்களின் உடலைப் பாதுகாக்கும் முறைகளும் காலம் மற்றும் கிடைக்கக்கூடிய வசதிகளுக்கு ஏற்ப காலப்போக்கில் மாறி வந்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு