பல ஆயிரம் ஆண்டுகள் பழைய வரலாற்று ரகசியங்களை ஏஐ மூலம் வெளிக்கொணர முயலும் விஞ்ஞானிகள்

‘போர்க் மறைக்குறியீடு’ என்று அறியப்படும் இந்த 408 பக்க கையெழுத்துப் பிரதி கிட்டத்தட்ட புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. 34 தெளிவற்ற குறியீடுகள், சில ரோமானிய எழுத்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இது குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் அட்டையில் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Beáta Megyesi, Stockholm University

    • எழுதியவர், சாண்ட்ரின் சியூர்ஸ்டெமான்ட்
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

வாடிகன் நூலகத்தின் ஆவணக் காப்பகத்தின் ஆழமான பகுதியில், விசித்திரமான குறியீடுகளால் எழுதப்பட்ட மர்மமான கையெழுத்துப் பிரதி ஒன்று 400 ஆண்டுகளுக்கும் மேலாக வாசிக்கப்படாமல் இருந்தது.

அதன் பின்பக்க அட்டையில் பொறிக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பின்படி, அதன் புரியாத பக்கங்களில் "மனித உடலின் நோய்களுக்கான" ரகசிய சிகிச்சை முறைகள் மறைந்திருந்ததாகத் தெரிகிறது.

அந்தக் காலத்தில் இதுபோன்ற மருத்துவ சிகிச்சை முறைகள் ரகசியமாக வைக்கப்பட்டன. ஏனெனில் அவை சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும் அல்லது சூனியம் செய்ததாகக் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

'போர் மறைக்குறியீடு' (Borg cipher) என்று அறியப்படும் இந்த 408 பக்க கையெழுத்துப் பிரதி கிட்டத்தட்ட புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. 34 தெளிவற்ற குறியீடுகள், சில ரோமானிய எழுத்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இது குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் அட்டையில் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

அதில் உள்ள தகவல்களைப் புரிந்துகொள்வதற்கான எந்தவொரு திறவுகோலும் இதுவரை அறியப்படவில்லை. காலப்போக்கில் சில பக்கங்களும் சேதமடைந்துள்ளதால், அந்தக் குறியீட்டை வாசிப்பது மேலும் கடினமாகியுள்ளது. ஆனால், செயற்கை நுண்ணறிவின் ஒரு வடிவமான இயந்திரக் கற்றலின் உதவியுடன், ஆய்வாளர்கள் அந்தக் குறியீட்டைக் கண்டறிய முடிந்தது.

அதில் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த உயர்தர சிவப்பு ஒயினை பல கிளாஸ் குடிப்பது அல்லது ஜாதிக்காயை அதிகளவில் நொதிக்கச் செய்வது போன்ற ஆயிரக்கணக்கான வழக்கத்திற்கு மாறான சிகிச்சை முறைகள் இடம் பெற்றிருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

"ஒவ்வொரு குறியீடும், ஒவ்வொரு வடிவமும், குறிப்பிட்ட அளவு கிடைக்கும் ஒவ்வொரு தீர்வும், ஒருவரது ரகசியங்களையும் தொலைந்து போன வரலாற்று உலகத்தையும் நெருங்கிப் புரிந்துகொள்ள உதவும் துப்புகளைத் தரும் துப்பறியும் பணியைப் போன்றது" என்று இந்தக் குறியீட்டைப் புரிந்துகொண்ட ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் பல்கலைக் கழக கணக்கீட்டு மொழியியல் பேராசிரியர் பீட்டா மெக்யேஷி விளக்குகிறார்.

செயற்கை நுண்ணறிவின் உதவி இருந்தபோதிலும், இந்தக் குறியீட்டைப் புரிந்துகொள்ளும் செயல்முறை மிகவும் கடினமானதாக இருந்தது. தற்போது, வரலாற்று காலக் குறியீடுகளை மிகவும் திறம்படப் புரிந்து கொள்வதற்காக செயற்கை நுண்ணறிவின் திறனைப் பயன்படுத்தும் முயற்சிகளுக்கு மெக்யேஷியும் அவரது சகாக்களும் தலைமை தாங்கி வருகின்றனர்.

இதன் மூலம், இதுவரை புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த கடந்த காலத்தைச் சேர்ந்த ஏராளமான குறியாக்கப்பட்ட தகவல்களை வெளிக்கொணரக்கூடும். உலகம் முழுவதும் உள்ள ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருக்கும் ஆவணங்களில் சுமார் 1% முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ குறியாக்கம் செய்யப்பட்டு இருப்பதாகச் சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அறியப்பட்ட மிகப் பழமையான சில குறியாக்க முறைகள் பண்டைய கிரீஸ் மற்றும் ரோமானிய காலத்தைச் சேர்ந்தவை.

பல ஆயிரம் ஆண்டுகள் பழைய வரலாற்று ரகசியங்களை ஏஐ மூலம் வெளிக்கொணர முயலும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Images

ஏமாற்று வித்தைகள், வழக்கொழிந்த மொழிகள், மோசமான கையெழுத்து

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், குறியாக்கம் செய்யப்பட்ட இந்த வரலாற்று ஆவணங்களுக்குள் தூதரகத் தகவல்கள், ரகசிய அமைப்புகளின் சடங்குகள், மருத்துவ அறிவு, காதல் விவகாரங்கள் அல்லது மக்கள் ரகசியமாக வைத்திருக்க விரும்பிய அன்றாட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் மறைந்துள்ளன.

இந்தத் தகவல்கள் தற்போது வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெறாமல் உள்ளன. சில சந்தர்ப்பங்களில், இந்த ஆவணங்களின் குறியீடுகளைப் புரிந்துகொள்வதன் மூலம் ஒரு பிரபலமான நபரைப் பற்றியோ அல்லது ஒரு முழு வரலாற்றுக் காலகட்டத்தைப் பற்றியோ நாம் அறிந்திருப்பதை மாற்றி எழுதும் வாய்ப்பும் உள்ளது.

(இதற்கான சமீபத்திய உதாரணமாக, பிரிட்டனில் நீண்ட காலம் சிறையில் இருந்தபோது மேரி ஸ்டூவர்ட் எழுதியதாகக் கண்டறியப்பட்ட குறியீட்டுக் கடிதங்களின் தொகுப்பைக் குறிப்பிடலாம். அவை, அரியணையை மீண்டும் பெறுவதற்கான சதித் திட்டங்களில் அவரது ஈடுபாட்டையும், ஸ்காட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸும் பிரிட்டனின் வருங்கால மன்னருமான அவரது மகனுடனான அவரது சிக்கலான உறவையும் வெளிப்படுத்தின.)

வரலாற்றுக் குறியீடுகள் ஒப்பீட்டளவில் எளிமையானவையாகவும் இருக்கலாம். உதாரணமாக, போர்க் சைஃபரில் நேரடி மாற்றுக் குறியீட்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, எழுதப்பட்ட தகவலை மறைப்பதற்காக ஒவ்வொரு குறியீடும் ஒரு ரோமானிய எழுத்துக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், வேறு சில குறியீடுகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம்.

சில சந்தர்ப்பங்களில், இதுவரை புரிந்து கொள்ளப்படாத அந்த உரை முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதே தெரியாமல் இருக்கலாம். குறியீட்டைப் புரிந்துகொள்ள முயல்பவர்களைத் தவறாக வழிநடத்துவதற்காக, எந்த அர்த்தமும் இல்லாத கூடுதல் குறியீடுகளையும் அதில் சேர்த்திருக்கலாம். வேறு சில சந்தர்ப்பங்களில், ஒரே எழுத்தைக் குறிக்கப் பல குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்.

பல ஆயிரம் ஆண்டுகள் பழைய வரலாற்று ரகசியங்களை ஏஐ மூலம் வெளிக்கொணர முயலும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Images

இதனால், மிகக் குறைந்த அளவிலான உரையைக் கூட புரிந்து கொள்வதற்குப் பெரும்பாலும் பலமுறை முயன்று தவறுகளைச் சரி செய்யும் முறையில் மிகப் பெரிய அளவிலான உழைப்பு தேவைப்படலாம்.

பிரான்ஸில் நான்சி நகரிலுள்ள பிரெஞ்சு தேசிய கணினி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான இன்ரியாவை (இன்ரியா) சேர்ந்த குறியீட்டியல் நிபுணர் செசில் பியரோவும் அவரது சகாக்களும், புனித ரோமானிய பேரரசரும் ஸ்பெயின் மன்னருமான ஐந்தாம் சார்லஸ் எழுதிய 500 ஆண்டுகள் பழமையான கடிதத்தின் குறியீட்டுத் திறவுகோலை படிப்படியாகக் கண்டறிய ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டனர்.

மூன்று பக்கங்களைக் கொண்ட அந்தக் கடிதம் 120 வெவ்வேறு குறியாக்கக் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருந்தது.

(குறியீடு புரிந்துகொள்ளப்பட்ட அந்தக் கடிதம், தனது காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக இருந்த ஐந்தாம் சார்லஸ், தன்னைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் குறித்த அச்சத்தில் இருந்ததை வெளிப்படுத்தியது. பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்சிஸிடம் பணியாற்றிய இத்தாலிய கூலிப்படை வீரர் ஒருவர் தன்னைக் கொல்லப் போவதாக அச்சத்தில் இருந்தார்.)

குறியீடுகளைப் புரிந்துகொள்ளும் பணியைத் தொடங்குவதற்கு முன், கையால் எழுதப்பட்ட குறியீட்டு ஆவணத்தை, குறியீடுகளை உடைக்கும் மென்பொருளில் உள்ளிடக் கூடிய டிஜிட்டல் ஆவணமாக ஆய்வாளர்கள் முதலில் மிகுந்த கவனத்துடன் மாற்ற வேண்டும். தெளிவற்ற கையெழுத்து மற்றும் மையின் நிறம் மங்கியிருப்பது இந்தப் பணியை மேலும் கடினமாக்கக்கூடும்.

தனக்குப் பரிச்சயமில்லாத குறியீடுகள் இடம் பெற்றுள்ள இரண்டு பக்கக் கடிதத்தை எழுத்துப் பதிவு செய்து டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றுவதற்குப் பொதுவாக ஒரு நாள் ஆகும் என்று பியரோ கூறுகிறார்.

போர் மறைக்குறியீடு சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது

பட மூலாதாரம், Vatican Apostolic Library 2026

படக்குறிப்பு, போர் மறைகுறியீடு சுமார் 400 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது, மேலும் அதன் 408 பக்கங்களில் மறை குறியீட்டுச் சின்னங்களும் சில லத்தீன் எழுத்துகளும் கலந்துள்ளன

ரகசியங்களை விரைவாகக் கண்டறிய ஏஐ எவ்வாறு உதவுகிறது?

சமீப காலமாக, செயற்கை நுண்ணறிவு இந்தச் செயல்முறையை வேகப்படுத்தத் தொடங்கியுள்ளது. நார்வே-வில் உள்ள ஒஸ்லோ பல்கலைக் கழகத்தின் ஜெர்மன் மொழியியல் பேராசிரியர் மிஷெல் வால்டிஸ்பூலும் அவரது சகாக்களும், 'டிரான்ஸ்கிரிபஸ்' எனப்படும் இணைய வழி செயற்கை நுண்ணறிவுத் தளத்தைப் பயன்படுத்தி, 1637ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டின் தலைமை வேந்தர் ஆக்செல் ஆக்சென்ஸ்டியர்னாவுக்கு பிரபு சிகிஸ்முண்ட் ஹாய்ஸ்னர் வான் வாண்டர்ஸ்லெபென் எழுதிய ரகசியக் கடிதம் ஒன்றை சமீபத்தில் எழுத்துப் பதிவு செய்தனர்.

அந்தக் கடிதம், இறுதியில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்ததுடன், ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை அழித்த 30 ஆண்டுக்கால போர் என்ற மத மோதல் உச்சத்தில் இருந்தபோது எழுதப்பட்டது. இந்தக் கருவி பல நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல மொழிகள், எழுத்து முறைகள் மற்றும் கையெழுத்து பாணிகளில் பயிற்சி பெற்றுள்ளது.

ஓர் ஆவணத்தின் படத்தை இந்த அமைப்பில் பதிவேற்றியதும், செயற்கை நுண்ணறிவு முதலில் உரையின் பகுதிகளையும் தனித் தனி வரிகளையும் கண்டறிகிறது. பின்னர், முழு உரையையும் ஒவ்வொரு எழுத்தாக ஸ்கேன் செய்து, அதை டிஜிட்டல் வடிவமாக மாற்றுகிறது. கையால் சில திருத்தங்கள் தேவைப்பட்டாலும், வான் வாண்டர்ஸ்லெபெனின் கடிதத்தில் இந்தக் கருவி சிறப்பாகச் செயல்பட்டது.

ஏனெனில், அந்தக் கடிதம் எண்களைப் பயன்படுத்தி ஓரளவு மட்டுமே குறியாக்கம் செய்யப்பட்டிருந்தது. அந்த எண்கள் புள்ளிகளால் பிரிக்கப்பட்டு, அவற்றுக்கிடையே தெளிவான இடைவெளிகளுடன் எழுதப்பட்டிருந்தன. கடிதத்தின் பிற பகுதிகள் குறியாக்கம் செய்யப்படாமல், 17ஆம் நூற்றாண்டின் ஜெர்மன் எழுத்து முறையில் சாதாரணமாக எழுதப்பட்டிருந்தன.

கண்டுபிடிக்கப்பட்ட குறியீடுகள், ஜோதிடக் குறியீடுகள் அல்லது வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட எண்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான எழுத்துருக்கலைப் பயன்படுத்தி கையெழுத்துப் பிரதிகள் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும்போது, தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு எழுத்துப் பதிவு தளங்கள் பெரும்பாலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

ஆனால், மெக்யேஷி, வால்டிஸ்பூல் மற்றும் அவர்களது சகாக்கள், பன்னாட்டு 'டெஸ்கிரிப்ட்' திட்டத்தின் ஒரு பகுதியாக, குறியீடுகள் அல்லது புரியாத எழுத்து முறைகளைக் கொண்ட வரலாற்றுக் கால கையெழுத்து உரைகளை இயந்திரங்களால் படிக்கக் கூடிய ஆவணங்களாக மாற்றுவதற்கான தங்களது சொந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியை உருவாக்கி வருகின்றனர்.

"பல்வேறு எழுத்து முறைகள், எழுத்துக் குறி தொகுப்புகள் மற்றும் குறியீட்டு முறைகளில் பயிற்சியளிக்கப்பட்டு சோதிக்கப்படும் வகையில், மேலும் தகவமைத்துக் கொள்ளக்கூடிய மாதிரிகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்" என்று மெக்யேஷி குறிப்பிடுகிறார்.

“பல்வேறு எழுத்துமுறைகள், எழுத்துக்குறித் தொகுப்புகள் மற்றும் குறியீட்டு முறைகளில் பயிற்சியளிக்கப்பட்டு சோதிக்கப்படும் வகையில், மேலும் தகவமைத்துக்கொள்ளக்கூடிய மாதிரிகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்று மெக்யேஷி குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகெங்கிலும் உள்ள பல ஆவணக் காப்பகங்களிலும் நூலகங்களிலும், மதிப்புமிக்க வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கக் கூடிய மறைகுறியாக்கப்பட்ட உரைகள் உள்ளன.

ஒரு ரகசிய ஆவணம் எழுத்துப் பதிவு செய்யப்பட்டவுடன், ஆய்வுப் பணி தொடங்குகிறது. தற்போது, குறியாக்கவியல் நிபுணர்கள் பொதுவாக செயற்கை நுண்ணறிவு இல்லாத சிறப்பு மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த மென்பொருட்கள், பயன்படுத்தப்பட்ட குறியாக்க முறையைக் கண்டறிந்து குறியீட்டைப் புரிந்துகொள்ள முயலும் அல்காரிதம்களை பயன்படுத்துகின்றன.

எளிய குறியீடுகளை, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடுகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்து, ஒரு மொழியில் அதே அளவு அடிக்கடி தோன்றும் எழுத்துகளுடன் அவற்றை ஒப்பிடுவதன் மூலம் பெரும்பாலும் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ஆங்கிலத்தில் 'E' என்ற எழுத்துதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளையில், 'Z', 'Q', 'X' ஆகிய எழுத்துகள் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், 30 ஆண்டுக்கால போரின் போர்முனையில் இருந்து வான் வாண்டர்ஸ்லெபென் எழுதிய கடிதத்தில், 'E' என்ற ஒரே எழுத்தைக் குறிக்க எட்டு வெவ்வேறு குறியீடுகள் வரை அவர் பயன்படுத்தியிருந்தார். இதனால், வால்டிஸ்பூலின் பழைய ஜெர்மன் மொழி குறித்த அறிவுடன், சோதனை செய்து தவறுகளைக் கண்டறியும் முறையும் இணைந்து பயன்படுத்தப்பட்டு, படிப்படியாக அந்தக் குறியீட்டைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

"இது இயந்திரத்திற்கும் மனித சரிபார்ப்பாளருக்கும் இடையே தொடர்ந்து நடந்த பரிமாற்றத்தின் செயல்முறையாக இருந்தது" என்று நினைவுகூர்ந்த வால்டிஸ்பூல், "ஒரு கட்டத்தில், செயற்கை நுண்ணறிவால் இதை முழுமையாகத் தானாகவே செய்ய முடியும்" என்றார்.

இந்தக் குறியாக்கத்திற்குப் பின்னால், போரில் ஸ்வீடனின் புராடஸ்டன்ட் கூட்டணிப் பிரிவுகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து வான் வாண்டர்ஸ்லெபென் விடுத்த எச்சரிக்கைகள் இருந்தன.

சாக்சனியின் பிரபு ஃபிரான்ஸ் ஹெய்ன்ரிச் உள்ளிட்ட தனது கூட்டாளிகளிடையே ஒரு சதித் திட்டம் இருப்பதை அறிந்த பின்னர், போரில் இருந்து தந்திரோபாய ரீதியான பின்வாங்கல்களை மேற்கொள்ளத் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் ஆக்சென்ஸ்டியர்னாவிடம் தெரிவித்தார்.

பல ஆயிரம் ஆண்டுகள் பழைய வரலாற்று ரகசியங்களை ஏஐ மூலம் வெளிக்கொணர முயலும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Images

அறியப்படாத குறியீடுகளை மீண்டும் அறிந்து கொள்ளுதல்

மெக்யேஷியும் அவரது குழுவினரும், எழுத்துப் பதிவு செய்யும் கட்டத்தையே முழுமையாகத் தவிர்த்து, பக்கங்களின் புகைப்படங்களை நேரடியாக ஆய்வு செய்து ரகசிய செய்திகளைப் புரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குறியீடு என மாற்றப்படும் எளிய குறியீடுகளில் இந்த முறையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் சமீபத்தில் நிரூபித்தனர். ஏற்கெனவே புரிந்து கொள்ளப்பட்ட 105 பக்கங்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதியான 'கோபியேல் சைஃபர்' மூலம் அவர்கள் இந்த அமைப்பைச் சோதித்தனர். 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் ரகசிய அமைப்பு ஒன்றின் சடங்குகள், விதிமுறைகள் மற்றும் கொள்கைகள் குறித்து அந்தக் கையெழுத்துப் பிரதி விவரிக்கிறது.

பொதுவான கையெழுத்துகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி அளித்த பின்னர், குறியீட்டில் இடம்பெற்ற குறிப்பிட்ட வரிகளின் படங்களையும், அவற்றுக்குரிய குறியீடு நீக்கப்பட்ட ஜெர்மன் உரையையும் பயன்படுத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம், இதற்கு முன் பார்க்காத உரையின் சில பகுதிகளையும் இந்த அமைப்பால் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

குறிப்பாக, குறியாக்கம் செய்யப்பட்ட உரையின் அடிப்படை மொழி என்னவெனத் தெரியாதபோது இந்த அமைப்பு பயனுள்ளதாக இருக்கும்.

"வழக்கத்திற்கு மாறான மற்றும் தரநிலைக்கு உட்படாத எழுத்து முறைகளுக்கு இது மிகவும் சுவாரஸ்யமான வாய்ப்புகளைத் திறக்கிறது. எழுத்துப் பதிவு மற்றும் குறியீடு நீக்குதல் ஆகிய இரண்டையும் ஒரே கட்டமாக இணைப்பதே இறுதி இலக்கு," என்று மெக்யேஷி கூறுகிறார்.

“வழக்கத்திற்கு மாறான மற்றும் தரநிலைக்கு உட்படாத எழுத்து முறைகளுக்கு இது மிகவும் சுவாரஸ்யமான வாய்ப்புகளைத் திறக்கிறது” என்று மெக்யேஷி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரீட் தீவில் உள்ள மினோவன் அரண்மனை இடிபாடுகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்ட, 4,000 ஆண்டுகள் பழமையான ஃபைஸ்டோஸ் வட்டில் உள்ள குறியீடுகளின் பொருள் பெரும்பாலும் அறியப்படவில்லை.

வால்டிஸ்பூலும் 'டெஸ்கிரிப்ட் ' திட்டத்தைச் சேர்ந்த அவரது சக ஆய்வாளர்களும், குறியாக்கம் செய்யப்பட்ட எழுத்து முறைகளைத் தேடி பழைய ஆவணக் காப்பகங்களை ஆராய்ந்து, அவற்றை ஒரு தரவுத் தளமாகத் தொகுத்து வருகின்றனர். குறியீடுகளைப் புரிந்து கொள்ளக் கூடிய செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சியளிக்கப் போதுமான தரவுகளைச் சேகரிப்பதில் இது முக்கியப் பங்காற்றக்கூடும்.

சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களுக்கான அடிப்படையாக இருக்கும் பெரிய மொழி மாதிரிகள், புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் இணையதளங்களில் இருந்து பெறப்பட்ட பில்லியன் கணக்கான சொற்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகின்றன.

குறியீடுகளைப் புரிந்து கொள்வதற்காக இதற்கு இணையான அளவு தரவுகளைக் கண்டறிவது ஒரு பெரிய சவாலாக உள்ளது. அவர்கள் சேகரித்துள்ள ஆவணங்களில், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறியீட்டு எழுத்து முறையில் எழுதப்பட்ட 400 மர்மமான அஞ்சல் அட்டைகளும் அடங்கும்.

இதுவரை புரிந்து கொள்ளப்பட்டுள்ள சில சிறிய பகுதிகள், அவற்றில் சில ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. மெக்யேஷியின் குழு, எழுத்துப் பதிவு, குறியீடு நீக்குதல் ஆகிய இரண்டையும் ஒரே கட்டமாக இணைக்கும் சாட்பாட் போன்ற செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கத் தங்களது பணியைப் பயன்படுத்தியுள்ளது.

இந்த சாட்பாட், குறியாக்கம் செய்யப்பட்ட எழுத்து ஜோடிகள் மற்றும் அவை குறிக்கும் உரையின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்ட குறியீடு நீக்குதல் அல்காரிதம்களுடன், வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த வரலாற்று உரைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட பெரிய மொழி மாதிரிகளையும் இணைத்து, ஒரு குறியீட்டைப் புரிந்து கொள்வதற்கான தடயங்களை வழங்க உதவுகிறது. குறிப்புகளுடன் கூடிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்ட பட அங்கீகார அல்காரிதம்களும் இதில் இணைக்கப்பட்டு வருகின்றன.

இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியைப் பயன்படுத்தும் நிபுணர்கள் வழங்கும் திருத்தங்களையும் அதில் சேர்ப்பதன் மூலம் கருவியை மேலும் மேம்படுத்த முடியும். ஆய்வாளர்கள் அல்லது பொது மக்கள்கூட ஒரு குறியீட்டு வரலாற்று உரையை இந்த சாட்பாட்டிடம் வழங்கினால், அது அதன் பொருளை வெளிப்படுத்தும் என்பதே இதன் நோக்கம்.

பல ஆயிரம் ஆண்டுகள் பழைய வரலாற்று ரகசியங்களை ஏஐ மூலம் வெளிக்கொணர முயலும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Images

ஆய்வாளர்கள் தங்களது செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை போர்க் சைஃபர் மூலம் சோதித்தபோது, 500 குறியீடுகளைக் கொண்ட ஒரு பகுதியை வெறும் 29 நிமிடங்களுக்கும் சற்று அதிகமான நேரத்தில் மொழி பெயர்த்து, குறியீட்டை நீக்க முடியும் என்பதை மெக்யேஷியும் அவரது சகாக்களும் கண்டறிந்தனர். அது ஆங்கில மொழிபெயர்ப்பையும் வழங்கியது. மேலும், செயல்முறையையும் பதிவு செய்து, அந்தத் தீர்வு ஏன் நம்பத் தகுந்தது என்பதையும் விளக்கியது.

செயற்கை நுண்ணறிவு தானாக கற்பனை செய்து தவறான விளக்கங்களை உருவாக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கு இது முக்கியமானது. வேறு இரண்டு குறியீடுகளைக் கொண்டும் இந்த அமைப்பை ஆய்வாளர்கள் சமீபத்தில் சோதித்தனர். அந்தக் குறியீடுகள் வெவ்வேறு காலகட்டங்கள், மொழிகள், ரகசியக் குறியீடுகளின் வகைகள் மற்றும் சிக்கலான நிலைகளைச் சேர்ந்தவையாக இருந்தன. அவற்றையும் அது விரைவாகப் புரிந்துகொண்டது. இதன் மூலம் பல்வேறு வகையான குறியீடுகளைக் கையாளும் அதன் திறன் நிரூபிக்கப்பட்டது.

"பெரிய அளவில் பயன்படுத்துதல், வேகம், வடிவங்களைக் கண்டறிதல், பணிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு குறிப்பாகப் பயனுள்ளதாக இருப்பதாக" மெக்யேஷி கூறுகிறார். இதுவரை புரிந்துகொள்ளப்படாமல் இருந்த வரலாற்றுக் காலக் குறியீடுகளைப் புரிந்து கொள்வதில் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும்.

இன்றைய காலத்தில் யாராலும் வாசிக்க முடியாத எழுத்து முறைகளில் எழுதப்பட்ட பண்டைய உரைகளைப் புரிந்து கொள்வதிலும் இவை பெரிதும் உதவியாக இருக்கும். உதாரணமாக, 4,000 ஆண்டுகள் பழமையான கிரீட் தீவைச் சேர்ந்த பைஸ்டோஸ் வட்டத் தட்டு இதுவரை புரிந்து கொள்ளப்படாமலே இருக்கிறது. அதேபோல, பண்டைய கிரேக்க எழுத்து முறையான லீனியர் ஏ-வும் இதுவரை புரிந்து கொள்ளப்படவில்லை.

"ஒரு குறிப்பிட்ட வரலாற்று மர்மத்தைத் தீர்க்கும் சாத்தியம் மட்டுமல்ல, பல்வேறு சூழல்களில் ஆய்வாளர்களுக்கு உதவக் கூடிய முறைகளை உருவாக்கும் வாய்ப்புதான் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது" என்று மெக்யேஷி குறிப்பிடுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு