'ஊசி முனை அளவில் மீச்சிறு குண்டு' - லண்டனில் விஷக்குடை மூலம் சோவியத் உளவுத்துறை செய்த படுகொலை

 ஜார்ஜி மார்கோவ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஃபியோனா மேக்டொனால்ட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

1978ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, லண்டனில் ஜார்ஜி மார்கோவ் குடை ஒன்றால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். கேஜிபியுடன் (KGB - சோவியத் ஒன்றியத்தின் முதன்மை தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு) தொடர்புடைய அரசியல் நோக்கில் அவருக்கு விஷம் செலுத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். அடுத்த ஆண்டு, மார்கோவின் மனைவியும் மூத்த சகோதரரும், கொலைச் சதித் திட்டம் குறித்து சில மாதங்களுக்கு முன்பே அடையாளம் தெரியாத ஒருவர் தங்களை எச்சரித்ததாக பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.

"அவரது தொடையில் யாரோ குத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவர் திரும்பிப் பார்த்தபோது, பின்னால் ஒருவர் நின்றிருந்தார். அந்த நபர் மன்னிப்புக் கேட்டுவிட்டு, ஒரு குடையைக் கீழே போட்டுவிட்டுச் சென்றார்."

பல்கேரிய அரசுக்கு எதிரான கருத்துகளுக்காக அறியப்பட்ட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜார்ஜி மார்கோவைப் பற்றி அவரது மனைவி அன்னபெல் மார்கோவ் கூறிய வார்த்தைகள் இவை.

1978ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, 49 வயதான மார்கோவ் மத்திய லண்டனில் உள்ள வாட்டர்லூ பாலத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, குடையால் குத்தப்பட்டதாகக் கூறினார். நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். முதலில் மருத்துவர்கள் அவரது மரணத்துக்கு ரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மையே காரணம் என்று கருதினர். ஆனால், பின்னர் விசாரணை அதிகாரிகள் இது அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்ட கொலை என்பதை உணர்ந்தனர். மிகவும் நுட்பமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட இந்தத் தாக்குதல், மற்றொரு நாடு கடத்தப்பட்ட பல்கேரியரையும் குறிவைத்திருந்தது.

மார்கோவின் மனைவியும் மூத்த சகோதரரும், மார்கோவ் கொல்லப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவருக்கு விஷம் கொடுத்து கொல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத ஒருவர் எச்சரித்ததாக 1979ஆம் ஆண்டு பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.

அப்போது முதன்முறையாக பொதுவெளியில் பேசிய கேஜிபி கொலைப் படையின் முன்னாள் தலைவர் ஒருவரும், பல்கேரிய ரகசிய உளவுப் பிரிவின் முன்னாள் கர்னல் ஒருவரும் அளித்த பேட்டிகள், இந்தக் கொலை பல்கேரிய மற்றும் சோவியத் அரசுகளின் மிக உயர்ந்த மட்டத்தில் திட்டமிடப்பட்டதாகக் காட்டின.

மார்கோவின் மரணத்தைத் தொடர்ந்து வந்த நாட்களில், பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு ஒரு முக்கிய தடயத்தைக் கண்டுபிடித்தது. அதன் மூலம், இது மிகவும் தனித்துவமான முறையில் திட்டமிடப்பட்ட கொலைச் சதி என்பதை அவர்கள் நம்பினர்.

பல்கேரிய அரசை விமர்சித்தவர் பிரிட்டனில் விஷம் தடவிய குடையால் கொல்லப்பட்ட வரலாறு

பட மூலாதாரம், BBC One: Panorama

கொல்லப்பட்டது எப்படி?

"ஸ்காட்லாந்து யார்டின் தடயவியல் ஆய்வகத்தில், மார்கோவின் தொடையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மிகச் சிறிய உலோகப் பொருளை தலைமை அறிவியல் அதிகாரி ஆய்வு செய்தார்," என்று பனோரமா நிகழ்ச்சியின் செய்தியாளர் மைக்கேல் காக்கரெல் கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"நுண்ணோக்கியின் கீழ் பார்த்தபோது, ​​அந்தப் பொருள் ஊசி முனையின் அளவே கொண்ட, மிக நுட்பமான ஒரு சிறு குண்டு என்பது தெளிவாகத் தெரிந்தது. அதில் நான்கு மிகச்சிறிய துளைகள் இருந்தன; அத்துளைகளில் மிகக் குறைந்த அளவிலான, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய கொடிய நச்சுப்பொருள் இருந்திருக்கக்கூடும் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதியாக நம்பினர்."

மிக ரகசியமாக செயல்பட்டு வந்த பிரிட்டனின் ரசாயன மற்றும் நுண்ணுயிரியல் ஆயுத ஆராய்ச்சி நிறுவனமான போர்டன் டவுனில் (Porton Down) பணியாற்றிய விஞ்ஞானிகள், மார்கோவின் மரணத்துக்குக் காரணமானது மிகவும் கொடிய நச்சுப் பொருளான ரிசின் (ricin) என்று நம்பினர். பிரிட்டனில் கொலைக்காக ரிசின் பயன்படுத்தப்பட்டது அதற்கு முன்பு பதிவானதில்லை என்று பனோரமா தெரிவித்தது.

மார்கோவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்பு, மற்றொரு நாடுகடத்தப்பட்ட பல்கேரியரும் இதேபோன்ற முறையில் தாக்கப்பட்டிருக்கலாம் என்பது பின்னர் தெரியவந்தது.

விளாடிமிர் கோஸ்டோவ் தனது மனைவியுடன் பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த போது, முதுகில் திடீரென கூர்மையான வலி ஏற்பட்டதாக உணர்ந்தார். அவருக்கு மூன்று நாட்கள் கடுமையான காய்ச்சல் இருந்தது. ஆனால் அவர் குணமடைந்தார்.

மார்கோவின் சகோதரர் நிக்கோலா

பட மூலாதாரம், BBC One: Panorama

படக்குறிப்பு, மார்கோவின் சகோதரர் நிக்கோலா

மார்கோவின் மரணம் குறித்து அறிந்த பிறகு, கோஸ்டோவ் தனது முதுகில் எக்ஸ்-ரே எடுத்துக்கொண்டார். அதில் மிகச் சிறிய உலோகப் பொருள் ஒன்று இருப்பது தெரியவந்தது.

பாரிஸில் உள்ள ஒரு மருத்துவமனையில், பிரெஞ்சு காவல்துறை அதிகாரி ஒருவர் அறுவைச் சிகிச்சை உடை மற்றும் முகக்கவசம் அணிந்து கண்காணித்தபடி, அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர் அந்த உலோகப் பொருளை அகற்றினார்.

"அறுவை சிகிச்சை நிபுணர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. அந்த உலோகத் துகளைத் தொடாமல் அவர் அதை அகற்றினார்," என்று கோஸ்டோவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

பின்னர் அது ஸ்காட்லாந்து யார்டு காவல் ஆய்வாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆய்வுக்காக இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதிக சக்தி கொண்ட ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தி, ஸ்காட்லாந்து யார்டைச் சேர்ந்த உலோகவியல் நிபுணர்கள் கோஸ்டோவின் முதுகில் இருந்து அகற்றப்பட்ட அந்த உலோகத் துகளை ஆய்வு செய்தனர். அது மார்கோவின் தொடையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட துகளுடன் அப்படியே ஒத்திருந்தது.

"இரண்டு துகள்களும் ஒரே எடையைக் கொண்டிருந்தன. அவற்றில் இருந்த துளைகளும் ஒரே இடத்தில் இருந்தன. அரிய வகை பிளாட்டினம்-இரிடியம் கலவையால் இரண்டும் தயாரிக்கப்பட்டிருந்தன," என்று காக்கரெல் கூறினார்.

கோஸ்டோவின் திசுக்களில் ரிசின் ஆன்டிபாடிகள் இருப்பதை போர்டன் டவுன் நச்சியல் நிபுணர்கள் கண்டறிந்தனர். அந்த உலோகத் துகளில் போதுமான அளவு விஷம் இல்லாததால்தான் அவர் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.

பயன்படுத்தப்பட்ட நுட்பத்தின் அதிநவீன தன்மையும், தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களும், மார்கோவின் மரணத்தில் ஏதோ ஓர் அரச ரகசிய உளவு அமைப்பு பங்கு வகித்திருப்பதாக ஸ்காட்லாந்து யார்டை நம்ப வைத்தன.

யார் அந்த மார்கோவ்?

தனது சொந்த நாட்டில் புகழ்பெற்ற நாவலாசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்த மார்கோவ், அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். 1969ஆம் ஆண்டு, அப்போது கம்யூனிஸ ஆட்சியில் இருந்த பல்கேரியாவிலிருந்து அவர் வெளியேறி மேற்கு நாடுகளுக்குச் சென்றார்.

பிரிட்டனில் குடியேறிய பிறகு, பல்கேரிய அரசின் வெளிப்படையான விமர்சகராக மாறிய அவர், பிபிசியின் உலக சேவையிலும், அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் செயல்பட்ட ஊடக அமைப்பான ரேடியோ ஃப்ரீ ஐரோப்பாவிலும் (RFE) பணியாற்றினார்.

மார்கோவைக் கொல்லும் சதித் திட்டம் குறித்து தங்களுக்கு எச்சரிக்கை கிடைத்ததாக அன்னபெல் மார்கோவ் கூறினார். 1978ஆம் ஆண்டு மே மாதம், ஒருவர் ஜார்ஜி மார்கோவைத் தொடர்புகொண்டதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"அவர்கள் அன்று மாலை முழுவதும் பல்கேரிய மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது ஜார்ஜி என்னைப் பார்த்து, ஆங்கிலத்தில், 'இந்த மனிதர் சொல்வது நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது' என்று கூறுவார்."

ரேடியோ ஃப்ரீ ஐரோப்பாவுக்காக ஜார்ஜி எழுதி வந்த வெளிப்படையான விமர்சனக் கட்டுரைகள் மற்றும் உரைகள் காரணமாக, அவரைக் கொல்லும் முடிவு பல்கேரியாவின் மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்த நபர் கூறியதாக அன்னபெல் தெரிவித்தார்.

பல்கேரிய அரசை விமர்சித்தவர் பிரிட்டனில் விஷம் தடவிய குடையால் கொல்லப்பட்ட வரலாறு

பட மூலாதாரம், BBC One: Panorama

மார்கோவின் சகோதரர் நிக்கோலாவும் இதை உறுதிப்படுத்தினார். 1977ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.

"ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, ஜார்ஜியைக் கொல்லவும், எந்த தடயமும் இல்லாமல் அவரை அழித்துவிடவும் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று கூறினார்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"முதலில் நான் அதை நம்பவில்லை. அது அபத்தமானதாக தோன்றியது. ஆனால், அந்த நபர் குறிப்பிட்ட சில விவரங்களைச் சொன்னார். அதனால் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை என தோன்றியது. முதல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதே ஜார்ஜிக்கு விஷம் கொடுக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். ஒருவிதமான விஷமோ அல்லது ஏதோ ஒரு வகை பாக்டீரியாவோ பயன்படுத்தப்படலாம் என கூறினார், ஆனால் இரண்டில் எது பயன்படுத்தப்படும் என்று அவருக்குத் துல்லியமாகத் தெரியவில்லை, அது ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்."

'வெளிப்படையான விமர்சகர்'

பிரிட்டனுக்குச் சென்ற பிறகும், ரேடியோ ஃப்ரீ ஐரோப்பாவில் வழங்கிய உரைகள் மூலம் பல்கேரியாவில் மார்கோவ் தொடர்ந்து பிரபலமாக இருந்தார். பல்கேரிய சமூகத்தின் உயர்மட்டத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர் வாரந்தோறும் நிகழ்ச்சிகளை வழங்கினார்.

அவரது நிகழ்ச்சிகளில் ஒன்றுக்கு 'திரைக்குப் பின்னுள்ள வாழ்க்கை' (Life Behind the Curtains) என்று பெயரிட்டிருந்தார். அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடிஸ் கார்களின் பக்கங்களிலும் பின்புறத்திலும் இருக்கும் சிறிய திரைச்சீலைகளைக் குறிக்கும் வகையில் அந்தப் பெயர் அமைந்திருந்தது.

அதிகாரத்தின் முழுமையான தவறான பயன்பாடு குறித்து கிசுகிசு பாணியில் இருந்தாலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், உறவினர்களுக்கு ஆதரவாக அதிகாரத்தைப் பயன்படுத்துதல், நிதி முறைகேடுகள், ஊழல் உள்ளிட்டவற்றை தனது நிகழ்ச்சிகளில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.

மார்கோவின் நிகழ்ச்சிகள் தங்கள் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று பல்கேரிய அரசு அதிகாரப்பூர்வமாக மறுத்தது. ஆனால், பல்கேரிய அதிபர் டோடோர் ஷிவ்கோவ், 'டோடோர் ஷிவ்கோவ்-உடனான எனது சந்திப்புகள்' (My Meetings with Todor Zhivkov) என்ற தலைப்பில் மார்கோவ் வழங்கிய தொடர் நிகழ்ச்சிகளுக்கு குறிப்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததை பிபிசி கண்டறிந்தது.

"ஷிவ்கோவைச் சந்தித்தது தொடர்பாக மார்கோவ் பேசிய நிகழ்ச்சிகளால் அவர் மிகவும் கோபமடைந்திருந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம்," என்று ரேடியோ ஃப்ரீ ஐரோப்பாவில் பணியாற்றிய பல்கேரிய ஒலிபரப்பாளர் கிரில் பனோவ் கூறினார்.

"பல்கேரியாவில் பேசக்கூடாதவை என்று கருதப்படும் விஷயங்கள் குறித்து மார்கோவ் பேசினார். அந்த ஆட்சி பேச விரும்பாத, பொதுமக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அது கருதிய விஷயங்கள் அவை."

1956ஆம் ஆண்டு முதல் ஷிவ்கோவ் பல்கேரியாவை ஆட்சி செய்து வந்தார். சோவியத் ஒன்றியத்துடன் அவருக்கு மிகவும் நெருக்கமான உறவு இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை, ஒரே உடலில் இருக்கும் இரண்டு நுரையீரல்களைப் போன்றது என்றும், ஒரே ரத்த ஓட்டத்தால் அவை இயங்குகின்றன என்றும் அவர் வர்ணித்திருந்தார்.

மார்கோவ் கொலையில் சோவியத் ஒன்றியத்திற்கு நிச்சயமாகத் தொடர்பிருக்கும் என்று நிபுணர்கள் உறுதியாக நம்பினர்.

1971ஆம் ஆண்டு பல்கேரியாவிலிருந்து வெளியேறிய அந்த நாட்டின் ரகசியக் காவல்துறையின் கர்னலாக இருந்த ஸ்டீஃபன் ஸ்வெர்ட்லோவ், 1979ஆம் ஆண்டு பிபிசியிடம் கூறுகையில், "தர்ஷாவ்னா சிகுர்னோஸ்ட் [பல்கேரிய ரகசிய உளவுப் பிரிவு] அமைப்பின் ஒவ்வொரு துறையும் ரஷ்ய கேஜிபியின் ஆலோசகர் ஒருவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்களை சில நேரங்களில் 'அங்கிள்' என்று அழைப்பார்கள். அவர்கள் நேரடியாக மாஸ்கோவுக்குத் தகவல் தெரிவிப்பார்கள். ரஷ்யர்களுக்குத் தெரியாமல் இதுபோன்ற செயல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை." என்றார்.

கேஜிபிக்கான படுகொலைப் படையின் முன்னாள் தலைவரும், இந்தத் தாக்குதல் முறையே சோவியத் தொடர்பைச் சுட்டிக்காட்டுவதாகக் கூறினார்.

"இந்த நுட்பம்... கிட்டத்தட்ட நம்ப முடியாத அளவுக்கு அதிநவீனமானது," என்று நிகோலாய் கோக்லோவ் கூறினார்.

"அந்த நடவடிக்கையைத் திட்டமிட்ட அதிகாரிகள் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள ஒருவரைத் திருப்திப்படுத்த முயன்றார்கள் என்பதை அது எனக்குச் சொல்கிறது."

மார்கோவ் மீது நடத்தப்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய தாக்குதல், பல்கேரிய அதிபர் டோடோர் ஷிவ்கோவ் பிறந்த நாளன்று நடத்தப்பட்டது.

சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பிறகு, ரிசின் நிரப்பப்பட்ட சிறு உலோகத் துகள்களை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தக்கூடிய குடையை கேஜிபி உருவாக்கியிருந்தது தெரியவந்தது.

பின்னர் கேஜிபியிலிருந்து வெளியேறிய அதன் முன்னாள் அதிகாரிகள் இருவர், தங்களது அமைப்பு இந்தக் கொலையில் உதவியதாகத் தெரிவித்தனர். ஆனால், இந்தக் கொலை இத்தாலியைச் சேர்ந்த 'பிக்காடில்லி' என்ற ரகசியப் பெயரால் அழைக்கப்பட்ட ஒரு குற்றவாளியால் (Piccadilly) நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.

மார்கோவின் படுகொலை தொடர்பாக இதுவரை யாரும் குற்றஞ்சாட்டப்படவில்லை. சந்தேக நபர்கள் எவரும் இல்லாததால் பல்கேரியா 2013ஆம் ஆண்டு இந்த வழக்கை மூடியது. ஆனால், பிரிட்டனில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்கிறது.

மார்கோவின் மரணத்தைத் தாண்டி, வெளிநாடுகளில் இருந்த எதிர்ப்பாளர்கள் மீது மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதால், இந்தக் கொலை சோவியத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகளில் பயனளித்திருக்கும் என்று முன்னாள் கேஜிபி அதிகாரி கோக்லோவ் 1979ஆம் ஆண்டு பிபிசியிடம் தெரிவித்தார்.

"இது, தொலைவில் இருந்தாலும் தங்களுக்கு பாதுகாப்பில்லை, மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளாலும் தங்களைப் பாதுகாக்க முடியாது என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகும்," என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "யாருடைய பின்னாலும் சென்று அவரது காதில், 'நாங்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் உங்களைத் தாக்க முடியும். உங்களைக் கொல்ல முடியும்' என்று கிசுகிசுப்பதைப் போன்றதுதான் இந்த நடவடிக்கை." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு