ஒரு காலத்தில் குப்பைக்குள் உணவு தேடிய பெண் கோடீஸ்வரரானது எப்படி?

பட மூலாதாரம், MICHAEL TRAN/AFP via Getty Images
- எழுதியவர், கிறிஸ்டினா ஜே. ஓர்காஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஒரு கட்டத்தில் அவரது செல்வம் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி பியோன்சேயின் செல்வத்தைக் கூட மிஞ்சியது. ஆனால் அந்த நிலையை அடைவதற்கு முன், சோஃபியா அமரூசோ குப்பைக் குவியல்களில் உணவு தேடிய நாட்களும் இருந்தன. புத்தகங்களைத் திருடியது முதல், பிறரிடம் வாகனத்தில் ஏற்றிச் செல்லும்படி கேட்டுப் பயணம் செய்தது வரை வாழ்க்கையின் பல கடினமான அனுபவங்களை அவர் சந்தித்திருந்தார்.
அதன்பிறகு நடந்தது ஒருவரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிய வழக்கமான கதையாகத் தோன்றலாம். ஆனால் பிபிசி உலகச் சேவையின் பிஸினஸ் டெய்லி நிகழ்ச்சியில் சோஃபியா அமரூசோ கூறிய ஒரு விஷயம் கவனத்தை ஈர்க்கிறது.
அவரை கோடீஸ்வரராக்கிய நாஸ்டி காள் (Nasty Gal) ஆடைப் பிராண்டைத் தொடங்கியதற்கான முக்கிய காரணம், அவருக்கு வழக்கமான வேலை செய்வதில் விருப்பமில்லாததே.
வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வேறு வழி இருக்கும்போது, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான அலுவலக வேலை என்ற சுழற்சியில் சிக்கிக்கொள்வது அவருக்குப் பிடிக்கவில்லை.
2012க்குள் அவரது நிறுவனம் அமெரிக்காவில் அதிவேகமாக வளர்ந்த சில்லறை விற்பனை நிறுவனமாக மாறியதாக இங்க் இதழ் குறிப்பிட்டது. அவர் தொடங்கிய நாஸ்டி காள் நிறுவனத்தின் வருவாய் 100 மில்லியன் அமெரிக்க டாலரை(சுமார் ரூ.956 கோடி) கடந்தது.

பட மூலாதாரம், Getty Images
"இளமைக் காலத்தில் முதலாளித்துவ அமைப்பு எனக்கு முற்றிலும் பிடிக்கவில்லை. அனார்கிஸ்ட் புத்தக காட்சிகளுக்கு செல்வேன். இந்த அமைப்பிற்குள் வாழ விரும்பவில்லை. தொழில் தொடங்க வேண்டும் என்ற தீவிர ஆசையும் இல்லை. வேலைக்குச் செல்லாதிருக்க முயன்றபோது, தெரியாமலேயே மிகவும் சுவாரஸ்யமான ஒரு பேரரசை உருவாக்கிவிட்டேன்," என்று அவர் அந்த வானொலி நிகழ்ச்சியில் கூறினார்.
2006-ல் அவரிடம் பணம் இல்லை. எதிர்காலத்தில் என்ன செய்வது என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. மருத்துவக் காப்பீடு பெறவும், ஹெர்னியா அறுவைச் சிகிச்சைக்கான செலவைச் சந்திக்கவும், ஒரு கலைப் பள்ளியின் வரவேற்பறையில் அடையாள அட்டைகளைச் சரிபார்க்கும் வேலையில் சேர்ந்தார்.
அந்த வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கும் போது தான் பழைய கால ஸ்டைலான ஆடைகளை ஈபே மூலம் விற்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
இப்படித்தான் தொடங்கியது
இணையத்தில் விற்பனை செய்வது அவருக்கு முதல் அனுபவமல்ல. அதற்கு முன்பு அமேசான் வழியாக புத்தகங்களை விற்றிருந்தார்.
பின்னர் ஈபே தளத்தில் தனித்துவமான பாணியுடன் வின்டேஜ் ஆடைகளுக்கான கடையைத் தொடங்கினார்.
அது தெருக்களில் உலவிக்கொண்டிருந்த சாமான்ய இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இறந்தவர்களின் பொருட்களிலிருந்து பழமையான ஆடைகளை அவர் சேகரித்தார்.
அவற்றை தனது தோழிகளின் உதவியுடன் மாற்றியமைத்து நவீனமும் ஸ்டைலானதுமான வடிவங்களில் வழங்கலாம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
பிற கடைகள் என்ன விற்கின்றன, எந்தப் பொருட்கள் அதிகம் விற்பனையாகின்றன, வடிவமைப்பாளர்கள் எதிலிருந்து ஊக்கம் பெறுகின்றனர், ஃபேஷன் மேடைகளில் ஆயிரக்கணக்கான டாலருக்கு எதை விற்கின்றனர் என்பதைக் கவனிக்கத் தொடங்கினார்.
"அந்த ஆடைகள் மிகவும் குறைந்த விலையில் எங்கு கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். அதோடு, என்னிடம் படைப்பாற்றலும் இருந்தது," என்று அவர் கூறினார்.
அப்படித்தான் நாஸ்டி காளின் பயணம் தொடங்கியது. இந்தப் பெயரை அவர் பெட்டி டேவிஸின் ஒரு ஆல்பத்திலிருந்து எடுத்தார்.
ஆனால் இதற்காக தனது இணையதளத்தைத் தொடங்க முயன்றபோது, அந்த டொமைன் பெயர் முன்பு ஒரு ஆபாச இணையதளத்துக்குச் சொந்தமானது என்பதை அறிந்தார்.
"ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எல்லா வேலைகளையும் நானே செய்தேன். புகைப்படம் எடுப்பது, அவற்றைத் திருத்துவது, ஆடைகளுக்கு விலை நிர்ணயிப்பது, விவரங்களை எழுதுவது, எடை பார்ப்பது, அளவிடுவது, அனுப்புவது போன்ற அனைத்தையும் நானே செய்தேன். எல்லா ஏலங்களும் 9.99 டாலரில் தொடங்கும். ஒரு ஆடையை அற்புதமாகக் காட்டி, சரியான அணுகுமுறையும் ஸ்டைலும் கொண்ட ஒரு பெண்ணுக்கு அணிவித்தால் அதற்குக் கண்டிப்பாக உயர்ந்த மதிப்பு கிடைக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன்," என்று அவர் நினைவுகூர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பிராண்டுடன் உருவான உணர்வுப் பிணைப்பு
இந்தப் பிராண்டின் புதிய பிம்பம், அமரூசோவின் சிந்தனை முறையுடன் முழுமையாகப் பொருந்தியது.
2014ஆம் ஆண்டு வெளியான அவரது #கேர்ள்பாஸ் நூலில் பெண்களுக்கான தனது தத்துவத்தை விளக்கினார்.
"#கேர்ள்பாஸ் என்பது தாம் விரும்பியதை அடையும் பெண், ஏனெனில் அதை அடைய அவர் கடுமையாக உழைக்கிறார்," என்று அவர் கூறினார்.
"#கேர்ள்பாஸ்(பெண்களுக்கு அதிகாரமளித்தல்) பெண்கள் கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் போராளிகள். எப்போது எதிர்த்து நிற்க வேண்டும், எப்போது தாக்கத்தை ஏற்க வேண்டும் என்பதையும் அறிவார்கள். சில சமயங்களில் விதிகளை மீறுவார்கள். சில சமயங்களில் அவற்றைப் பின்பற்றுவார்கள். ஆனால் அது எப்போதும் அவர்களுடைய சொந்தத் தீர்மானமாகவே இருக்கும்," என்று அவர் எழுதினார்.
"நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால் அந்தப் பாதையில் மகிழ்ச்சியை அனுபவிக்காமல் இலக்கை அடையமுடியாது. முழுமையை விட நேர்மைக்கு மதிப்பளிப்பீர்கள். கேள்விகள் கேட்பீர்கள். வாழ்க்கையை தீவிரமாக எடுத்துக்கொள்வீர்கள், ஆனால் உங்களை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள்" என அவர் தன் புத்தகத்தில் எழுதினார்.
வாடிக்கையாளர்கள் அமரூசோ உருவாக்கிய பாணியுடன் மட்டுமில்லாமல், அந்த பிராண்டோடும் தங்களை முழுமையாக ஒன்றிணைத்துக் கொண்டுள்ளனர்; வெறும் ஆடைகளுடன் மட்டுமல்ல.
இதன் பின்னணியில் பல பெண்கள் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் ஒரு வலுவான சமூகம் உருவானது. அது ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பாக மாறியது. வளர்ச்சி வேகமெடுத்தது.
"பின்னர் பிரபல நடிகை ஆன் ஹாத்வே கூட என்னிடமிருந்து பொருட்கள் வாங்கினார். பத்திரிகையாளர்களும் ஃபேஷன் எழுத்தாளர்களும் எனது தயாரிப்புகளை வாங்கத் தொடங்கினர்," என்று அவர் கூறினார்.
"இணையதளத்தைத் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இணையதளத்தில் எதுவும் மீதமில்லை. என்னிடம் அனுப்ப வேண்டிய சில பார்சல்கள் மட்டுமே இருந்தன. பொருட்களை இணையதளத்தில் பதிவேற்றி ஏலத்திற்கு வைத்த பிறகு, அவை விற்க ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அப்போது உணர்ந்தேன். அதுவே நான் என் முதல் ஊழியரை நியமித்த தருணம்," என்று தாம் தொழில் தொடங்கிய ஆரம்ப நாட்களை அமரூசோ நினைவுகூர்ந்தார்.
முதல் ஆண்டில் சுமார் 75,000 டாலர், இரண்டாம் ஆண்டில் 250,000 டாலர், மூன்றாம் ஆண்டில் 1.1 மில்லியன் டாலர், நான்காம் ஆண்டில் 6.5 மில்லியன் டாலர் சம்பாதித்தார். ஐந்தாம் ஆண்டில் வருவாய் 30 மில்லியன் டாலரை (ரூ.286 கோடியை) எட்டியது.
இந்த வளர்ச்சிக்குப் பின்னால் முதலீட்டாளர்களின் ஆதரவு எதுவும் இல்லை. தொடக்க காலத்தில் அவரை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை.
தொழில் வளர்ச்சி அடைந்த பிறகு புகழும் பணமும் கதவைத் தட்டின.

பட மூலாதாரம், Getty Images
மகிழ்ச்சியின் உச்சகட்டம்
எந்த தயக்கமும் இல்லாமல் நாஸ்டி காள் நிறுவனத்தை 350 மில்லியன் டாலர் (ரூ, 3,344 கோடி) மதிப்புள்ள தொழில்நுட்ப நிறுவனமாக ஒரு வெஞ்சர் கேப்பிடல் நிறுவனம் மதிப்பிட்டது.
அந்தக் காலத்தில் டிஜிட்டல் வர்த்தகம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது இதற்கு காரணம்.
நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக பங்குகளுக்கு மாற்றாக 50 மில்லியன் டாலர் (ரூ.477 கோடி) முதலீடு கிடைத்தது.
அங்கிருந்துதான் பிரச்னைகள் தொடங்கியதாக அமரூசோ நம்புகிறார்.
"அந்தக் காலம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது. நிறுவனத்தின் வருவாயை 100 மில்லியன் டாலருக்கு மேல் உயர்த்தினேன். சிறந்த திறமையாளர்களை நியமித்தேன். சிறந்த படைப்பாக்க இயக்குநர்களுடன் பணியாற்றினேன்," என்று அவர் நினைவுகூர்கிறார்.
"எங்கள் அலுவலகங்கள் அழகாக இருந்தன. வணிக உலகின் மிகவும் படைப்பாற்றல் மிக்க நபர்களின் பட்டியலில் நான் இடம்பெற்றிருந்தேன். ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன் நிறுவனர் ஜெப்ரி காட்சன்பெர்க்குடன் உரையாடுவதற்கு கூகுள் நிறுவனம் என்னை கேன்ஸ் லயன்ஸ் (Cannes Lions - விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் துறையின் ஆஸ்கர் போன்றது) நிகழ்வுக்கு அழைத்துச் சென்றது" என்று அவர் கூறினார்.
"பலரின் தொழில் வாழ்க்கையில் நாஸ்டி காள் ஒரு அற்புதமான கட்டமாக இருந்தது. நாஸ்டி காளிலிருந்து தன்னிச்சையாகவோ அல்லது குற்ற உணர்ச்சியாலோ வெளியேறிய பலர் பின்னர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்தனர். அதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்," என அமரூசோ கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"சரிவு தொடங்கியது"
2008 முதல் 2011 வரை விற்பனை 10,000 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. ஆனால் விற்பனை உயர்ந்ததாலேயே வருமானம் உயர்ந்துவிட்டதாக அர்த்தமில்லை.
"எங்கள் வருவாயை விட பத்து மடங்கு அதிகமாக (அல்லது ரூ.3,350 கோடி என) நிறுவனத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டபோது சிக்கல்கள் தொடங்கின. நாங்கள் ஊபர் போல வளரக்கூடிய நிறுவனம் என்று பலர் நினைத்தனர். ஆனால் ஃபேஷன் நிறுவனங்கள் அந்த வகையில் விரைவாக வளர்வதற்காக உருவாக்கப்படுவதில்லை," என்று அவர் அந்த வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
"நிறுவனத்தின் நலன்களும், நிறுவனர்களின் நலன்களும், முதலீட்டாளர்களின் நலன்களும் எப்போதும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம் என்பதை தொழில்முனைவோர் புரிந்துகொள்ள வேண்டும்," என்று அமரூசோ கூறினார்.
நாஸ்டி காள் நிறுவனம் திவாலாகும் முன்பு, அதை ஏதேனும் ஒரு பெரிய நிறுவனம் விலைக்கு வாங்குமாறு செய்வதற்காக மாதக்கணக்கில் முயற்சிகள் நடந்தன.
"ஒரு நிறுவனம் ஒரே இரவில் திவாலாகாது. எங்களால் சப்ளையர்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சூழலில் தொழிலைத் தொடர்வது பொறுப்பற்ற செயலாக இருக்கும் என்பதால் அதை மூடிவிடவேண்டும் என்பதை உணர்ந்தேன்," என்றார்.
நாஸ்டி காள் நிறுவனம் நிர்வாக ரீதியாக வலுவாக உருவாகும் முன்பே மிக வேகமாக விரிவடைந்தது.
2014ஆம் ஆண்டில் அதன் வருவாய் சுமார் 8.5 மில்லியன் டாலராகக் குறைந்தது. 2015 ஜனவரியில் அமரூசோ தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகினார்.
அந்தப் பொறுப்புகள் ஷெரி வாட்டர்சனிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் செயல் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அதன்பிறகு பணியாளர் குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கின. "அனைத்தும் சரியத் தொடங்கின," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"லோகோவை மட்டுமே வாங்கினார்கள்"
2017ஆம் ஆண்டு பிப்ரவரியில், மான்செஸ்டரைச் சேர்ந்த ஃபாஸ்ட் ஃபேஷன் குழுமமான பூஹூ, நாஸ்டி காள் நிறுவனத்தை 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.191 கோடி) வாங்கியது.
ஆனால் கைமாறியது அறிவுசார் சொத்துரிமைகள், நாஸ்டி காள் பெயர், லோகோ, இணையதள இணைப்புகள், சமூக ஊடகத் தளங்கள், பிராண்டின் அடையாளம் மற்றும் வாடிக்கையாளர் தரவுத்தளம் மட்டுமே.
நிறுவனம், அதன் ஊழியர்கள், செயல்பாடுகள், நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்துதல், கடை வரவுகள் ஆகியவற்றுக்கான சட்டப்பூர்வப் பொறுப்புகளை பூஹூ ஏற்கவில்லை. அவர்கள் வாங்கியது உண்மையில் அந்தப் பிராண்டின் வாடிக்கையாளர் அடித்தளத்தையே.
தற்போது 42 வயதாகும் அமரூசோ, நாஸ்டி காளுக்குப் பிறகு கேர்ள் பாஸ் மீடியா என்ற ஊடக நிறுவனத்தைத் தொடங்கினார்.
அதன் கீழ் ஒரு புத்தகமும், 22 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட ஒரு பாட்காஸ்டும் இருந்தன. பின்னர் அந்த நிறுவனத்தையும் விற்றுவிட்டார்.
2023 முதல், பாரிஸ் ஹில்டன் உள்ளிட்ட பிரபலங்களின் ஆதரவுடன் இயங்கும் டிரஸ்ட் ஃபண்ட் என்ற சிறிய வெஞ்சர் கேப்பிடல் நிதியை நடத்தி வருகிறார்.
அவரது தத்துவம் இன்றும் அவரது முயற்சிகளில் பிரதிபலிக்கிறது. அதாவது
"பெண்கள்தான் உலகை ஆளுகிறார்கள்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































