காணொளி: தூங்கிக்கொண்டிருந்த சிறுமி எங்கே? செஞ்சியில் 9 நாட்களாகத் தொடரும் தேடுதல்

காணொளிக் குறிப்பு, செஞ்சியில் 6 வயது சிறுமி மாயம்: 9 நாட்களாகியும் துப்பு கிடைக்கவில்லை
காணொளி: தூங்கிக்கொண்டிருந்த சிறுமி எங்கே? செஞ்சியில் 9 நாட்களாகத் தொடரும் தேடுதல்
பிரசுரிக்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த கிராமத்தில் காணாமல் போன ஆறு வயது சிறுமியைத் தேடும் பணி ஒன்பது நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 11ஆம் தேதி சிறுமியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், மறுநாள் காலை அவர் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் மேற்பார்வையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மோப்ப நாய்கள், ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் காட்டுப் பகுதிகள், நீர்நிலைகள், மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் நடைபெறுகிறது.

சம்பவத்தன்று அந்தப் பகுதியில் பதிவான சுமார் 600 செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், 14 இடங்களில் கிடைத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எனினும், சிறுமி காணாமல் போனதற்கான காரணம் குறித்தோ, அவர் இருக்கும் இடம் குறித்தோ இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு