2-ஆம் உலகப்போரில் ஐரோப்பிய குடும்பத்தால் காப்பாற்றப்பட்ட சோவியத் போர் கைதியின் மர்மத்தை அவிழ்க்க உதவிய பிபிசி

டல்சி லெ பிரெட்டன்
படக்குறிப்பு, டல்சி லெ பிரெட்டன், போர்க்காலம் முதல் தன் குடும்பத்தினர் பாதுகாத்து வந்த போகேஜோன் அக்ரமோவின் புகைப்படம் ஒன்றை வைத்திருக்கிறார்.
    • எழுதியவர், ஓல்கா இவ்ஷினா
    • பதவி, பிபிசி நியூஸ் ரஷ்யா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரண்டாம் உலகப்போரின்போது நாசி ஆக்கிரமிப்பிலிருந்து தப்பித்து, சேனல் தீவுகளில் உள்ள ஒரு உள்ளூர் குடும்பத்தின் உதவியுடன் ஜெர்மன் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மறைந்து வாழ்ந்த சோவியத் போர்க் கைதிக்கு என்ன ஆனது என்பது குறித்து 80 ஆண்டுகளுக்கும் மேலாக யாருக்கும் தெரியவில்லை.

அவரது முதல் பெயரான போகெஜோன் அல்லது சுருக்கமாக டாம் என்ற பெயர் மட்டுமே அறியப்பட்டது. நாஜிகளின் கோட்டைகளை அமைப்பதற்காக ஜெர்சி தீவுக்கு அழைத்து வரப்பட்ட சுமார் 2,000 சோவியத் போர்க் கைதிகள் மற்றும் கட்டாயத் தொழிலாளர்களில் அவரும் ஒருவர்.

பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு இடையே அமைந்துள்ள சேனல் தீவுகளில் ஜெர்சி மிகப்பெரிய தீவாகும். இது சுயாட்சி நிர்வாகத்தைக் கொண்ட பிரிட்டிஷ் முடியாட்சி சார்பு பிரதேசமாகும்.

விடுதலைக்கு பிறகு, டாம் மற்றும் உயிர் பிழைத்த மற்ற போர்க் கைதிகள் சோவியத் ஒன்றியத்துக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர். தொடர்பில் இருப்பதாக அவர் உறுதியளித்திருந்தபோதிலும், அவர் திரும்பிச் சென்ற பிறகு அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஜெர்சியிலிருந்து வெகு தொலைவில், உஸ்பெகிஸ்தானின் தொலைதூர கிழக்குப் பகுதியில் அவரது சந்ததியினரை பிபிசி குழு கண்டுபிடித்தபோதுதான், அவரைப் பற்றிய தகவல் மீண்டும் கிடைத்தது.

1943-ஆம் ஆண்டு, ஜெர்சியில் இருந்த நாஜிகளின் கட்டாயத் தொழிலாளர் முகாம்களில் ஒன்றிலிருந்து டாம் தப்பினார்.

சோர்வடைந்து, பசியுடன், நம்பிக்கையிழந்த நிலையில், உள்ளூர் விவசாயிகளான ஜான் மற்றும் ஃபிலிஸ் லெ பிரெட்டனின் வீட்டுக் கதவைத் தட்டினார். அதனால் ஏற்படும் ஆபத்தை அறிந்திருந்தபோதிலும், அவர்கள் அவருக்கு அடைக்கலம் கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.

"காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை குவாரியில் இருந்து கற்களை வெட்டி எடுத்தோம். மதிய உணவாக சூப்பும், மாலை நேரத்தில் மிகவும் குறைந்த அளவு ரொட்டியும் வெண்ணெயும் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தன. காலை உணவு எதுவும் கிடையாது" என்று டாம் பின்னர் தனது நாட்குறிப்பில் எழுதினார்.

"சிறிய விஷயத்திற்குக் கூட அவர்கள் எங்களை மிகக் கொடூரமாக அடிப்பார்கள்... எங்களால் வேலை செய்ய முடியவில்லை என்றால், உணவு கொடுக்காமல் விட்டுவிட்டு மீண்டும் அடிப்பார்கள். நாங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்"என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக லெ பிரெட்டன் குடும்பத்தினர் அவரை மறைத்து வைத்திருந்தனர்.

ஜெர்சியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணான லூயிசா கோல்ட், ஃபியோடர் புர்ரி என்ற சோவியத்தை சேர்ந்த தப்பியோடியை மறைத்து வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, ராவன்ஸ்ப்ரூக் வதை முகாமுக்கு நாடுகடத்தப்பட்டார். பின்னர் அங்கு வாயு அறையில் கொல்லப்பட்டார்.

அவரது அண்டை வீட்டாரே அவரைப் பற்றி ஜெர்மன் அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக லெ பிரெட்டன் குடும்பத்தினர் அவரை மறைத்து வைத்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1940-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில், ஜெர்சி கடற்கரையில் ஒரு ஜெர்மானிய படை வீரர் நிற்கிறார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஜான் மற்றும் ஃபிலிஸ் லெ பிரெட்டன் தங்களிடம் தஞ்சமடைந்திருந்த அந்த சோவியத் வீரரை மிகவும் நம்பினர். தங்களது குழந்தைகளுக்கு அவர் கதைகள் வாசித்துக் காட்டவும், அவர்களுடன் விளையாடவும் அனுமதித்தனர். அந்தக் குழந்தைகளில் அவர்களது மகள் டல்சியும் ஒருவர்.

"எங்களின் அன்புக்குரிய அங்கிள் டாமை நாங்கள் மிகவும் நேசித்தோம். போர்கால நினைவுகளில் எனக்கு முதலில் நினைவுக்கு வருபவர் அவர்தான். இன்றும் அவரது புகைப்படம் என் படுக்கையருகில் உள்ளது," என்று வரும் ஜூன் மாதத்தில் 90 வயதை எட்டவுள்ள டல்சி கூறினார்.

"ஆனால், போருக்குப் பிறகு அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த கேள்வி இன்னும் என் மனதில் உள்ளது," என்றும் அவர் கூறினார்.

1945 மே மாதத்தில் சேனல் தீவுகள் விடுவிக்கப்பட்ட பிறகு, உயிர் தப்பிய மற்ற சோவியத் போர்க் கைதிகளைப் போலவே டாமும் சோவியத் ஒன்றியத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

ஐரோப்பா வழியாகத் தாய்நாட்டுக்குத் திரும்பிய அவரது பயணத்தின் போது, ஜெர்சிக்கு அவரிடமிருந்து மூன்று கடிதங்கள் வரை வந்தன. ஆனால் அதன் பிறகு அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

எப்போதும் சந்தேகத்தின் கீழ்

போர்க் கைதிகளாக இருந்து சோவியத் ஒன்றியத்துக்குத் திரும்பியவர்கள், என்.கே.வி.டி. எனப்படும் பாதுகாப்பு அமைப்பின் பரிசோதனை முகாம்களில் வழக்கமாக விசாரணைகளுக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அவர்களில், நாட்டுக்கு விசுவாசமற்றவர்களாகவோ அல்லது எதிரியுடன் ஒத்துழைத்தவர்களாகவோ இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை சோவியத் அதிகாரிகள் அடிக்கடி ஏற்படுத்தியது.

அவர்களில் சிலர் பின்னர் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், பலர் நம்பகமற்றவர்கள் என்ற முத்திரையுடன் வாழ நேரிட்டது. வேலை பெறுவதிலும் பதவி உயர்வு பெறுவதிலும் அவர்கள் பல தடைகளை எதிர்கொண்டனர். மேலும், அவர்கள் எப்போதும் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்பட்டனர்.

சிலர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த கட்டாயத் தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 1953-ஆம் ஆண்டு சோவியத் ஆட்சியாளர் ஜோசப் ஸ்டாலின் இறந்த பிறகும், முன்னாள் போர்க் கைதிகள் மீது இருந்த இந்தக் களங்கமும் சந்தேகமும் உடனடியாக மறைந்துவிடவில்லை.

சிலர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு, சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

பட மூலாதாரம், Le Breton Family Archive (Carolyn Horn)

படக்குறிப்பு, தப்பி ஓடிய போர்க் கைதியை மறைத்து வைப்பதில் உள்ள ஆபத்தை ஜானும் பில்லிஸ் லெ பிரெட்டனும் அறிந்திருந்தனர்.

லெ பிரெட்டன் குடும்பத்தினருக்கு எழுதிய கடிதங்களில் டாம், தனது பெயரை "போகிஜோன் அக்ரம்" என்று கையொப்பமிட்டிருந்தார். ஆனால், அவரது முழுப் பெயரோ அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதோ அந்தக் குடும்பத்தினருக்கும் ஜெர்சி வரலாற்றாய்வாளர்களுக்கும் தெரியவில்லை.

அப்போது, பிபிசியின் ரஷ்ய மொழிப் பிரிவு இந்தத் தேடலில் இணைந்தது.

சோவியத் ஒன்றியம் மற்றும் இரண்டாம் உலகப்போர் தொடர்பான ஆவணக் காப்பகங்களுடன் பல ஆண்டுகளாக நாங்கள் பணியாற்றி வந்திருந்தாலும், இது தனித்துவமான சவாலாக இருந்தது.

டாம் தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.

அவரது நாட்குறிப்பில் இடம்பெற்றிருந்த தகவல்களின் அடிப்படையில், பல்வேறு பதிவுகளையும் நூற்றுக்கணக்கான எழுத்து வடிவங்களையும் ஆய்வு செய்து, தேடலை படிப்படியாகக் குறுக்கினோம்.

அந்தக் குறிப்புகளின்படி, 1941-ஆம் ஆண்டு ராணுவ சேவைக்காக அழைக்கப்பட்டபோது அவருக்கு சுமார் 30 வயது இருந்திருக்கலாம். தற்போதைய யுக்ரேன் பகுதிக்குள் அவர் போரில் ஈடுபட்டு பின்னர் போர்க் கைதியாகப் பிடிபட்டிருந்தார். மேலும், அவர் மத்திய ஆசியாவைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்பதும் தெரியவந்தது.

இறுதியில், ஒரு சாத்தியமான பொருத்தம் கண்டறியப்பட்டது. தற்போது உஸ்பெகிஸ்தானில் உள்ள நமங்கன் பகுதியில் இருந்து ராணுவ சேவைக்காக அழைக்கப்பட்ட, 1910-ஆம் ஆண்டு பிறந்த போகெஜோன் அக்ரமோவ் என்பவருடன் தகவல்கள் பொருந்தின.

பல்வேறு ஆவணங்களையும், நூற்றுக்கணக்கான எழுத்து மாறுபாடுகளையும் ஆய்வு செய்தோம். அவர் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருந்த விவரங்களைக் கொண்டு தேடலை படிப்படியாகக் குறைத்தோம்.

பட மூலாதாரம், Alderney archives

படக்குறிப்பு, சேனல் தீவுகளின் முகாம்களில் ஒன்றில் இருந்த சோவியத் போர்க் கைதிகள் மற்றும் அடிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு தேசபக்திப் போருக்கான விருது வழங்கப்பட்டதாகக் குறிப்பிடும் ஓர் ஆவணப் பதிவை நாங்கள் கண்டறிந்தோம். முக்கியமாக, அந்தப் பதிவில் அவரது முகவரியும் இடம்பெற்றிருந்தது.

அதையடுத்து, பிபிசியின் உஸ்பெக் மொழிப் பிரிவினரும் இந்தத் தேடலில் இணைந்தனர். நமங்கனுக்குச் சென்று அந்த முகவரியைச் சரிபார்த்த அவர்கள், அங்கு போகெஜோனை நினைவில் வைத்திருப்பவர்கள் யாரேனும் இருக்கிறார்களா அல்லது லெ பிரெட்டன் குடும்பத்தினரிடம் இருந்த புகைப்படங்களைப் பார்த்து அவரை அடையாளம் காண்பார்கள் உள்ளார்களா என பார்க்க சென்றனர்.

பிபிசி குழுவினர் சென்றபோது கதவைத் திறந்த ஒருவர், "எனது தாத்தாவின் புகைப்படங்கள் உங்களிடம் எப்படி இருக்கின்றன? அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள்?" என்று கேட்டார்.

அவர் பெயர் ஷம்சுதீன் அகுன்பயேவ். அவர் போகெஜோன் அக்ரமோவின் பேரன்.

தொழிற்சாலையில் தோட்டக்காரர்

போர்கால புகைப்படங்களுக்குப் பின்னால் இருந்த கதையை அறிந்ததும், அகுன்பயேவ் கண்ணீர் விட்டு நெகிழ்ந்தார்.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, இரண்டாம் உலகப்போரின்போது தான் அனுபவித்த சம்பவங்களைப் பற்றி போகெஜோன் அரிதாகவே பேசுவார்.

ஆனால், ஒரு விஷயம் அவர்களுக்கு எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் தெளிவாக அறிவாற்றலும் திறமையும் கொண்டவராக இருந்தபோதிலும், சிறப்புத் திறன் தேவைப்படும் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, நமங்கனில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தோட்டக்காரராகப் பணியாற்றினார்.

போரின்போது அவர் போர்க் கைதியாக இருந்தது, அவரது பணிக்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று இப்போது கருதப்படுகிறது.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, போகெஜோன் அக்ரமோவ் நீண்ட காலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து, 1996-ஆம் ஆண்டு காலமானார். பின்னர் அவரது மகளும் காலமானார்.

சோவியத் போர்க்கைதியான "டாம்"
படக்குறிப்பு, சோவியத் போர்க்கைதியான "டாம்"-க்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் நம்பிக்கையில், லெ பிரெட்டன் குடும்பத்தினர் அவரது இந்தப் புகைப்படத்தைப் பாதுகாத்து வைத்திருந்தனர்.

பிபிசி, உஸ்பெகிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும், இன்றும் ஜெர்சியில் வசித்து வரும் டல்சி லெ பிரெட்டனுக்கும் இடையே காணொளி அழைப்பை ஏற்பாடு செய்தது.

"அன்புள்ள டல்சி, உங்கள் குடும்பத்தினரின் துணிச்சலுக்கும் கருணைக்கும் நன்றி தெரிவிக்கிறோம். எங்கள் தாத்தா போரில் இருந்து உயிர் தப்பி, எங்களுக்கு வாழ்க்கையை அளித்ததற்கு நீங்கள் செய்த உதவியே காரணம். உங்களைக் கண்டுபிடித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்களை உஸ்பெகிஸ்தானுக்கு வருமாறு அழைக்கிறோம். எங்கள் வீட்டுக்கு நீங்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறீர்கள்," என்று ஷம்சுதீன் அக்ரமோவ் அவரிடம் கூறினார்.

"என் பெற்றோர் தாங்கள் செய்தது சரியான காரியம் என்பதற்காக மட்டுமே அவர்கள் அதைச் செய்தார்கள். சோவியத் வீரர்களுக்கு உதவியவர்கள் ஜெர்சியில் அவர்கள் மட்டுமல்ல. இதுபோன்ற சம்பவங்கள் டஜன் கணக்கில் நடந்துள்ளன. அவற்றைப் பற்றியும் மக்கள் தெரிந்துகொண்டு, அவர்கள் அனைவரையும் நினைவுகூர வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்று டல்சி லெ பிரெட்டன் பதிலளித்தார்.

இந்தக் கதையை அறிந்த பிறகு, உஸ்பெகிஸ்தான் அரசு ஜான் மற்றும் ஃபிலிஸ் லெ பிரெட்டனுக்கு மரணத்துக்குப் பிந்தைய கௌரவமாக நட்புறவுக்கான விருதை வழங்க முடிவு செய்தது. "அவர்களின் துணிச்சல் மற்றும் கருணையை" பாராட்டும் வகையில் வழங்கப்படும் இந்த விருது, அந்நாட்டின் உயரிய அரசு விருதுகளில் ஒன்றாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு