குவைத்தை ஆக்கிரமித்து சதாம் உசேன் உருவாக்கிய 'நாடு' நான்கே நாட்களில் இல்லாமல் போனது எப்படி?

குவைத், சதாம் உசேன், ஒபெக் அமைப்பு, கச்சா எண்ணெய் விலை
படக்குறிப்பு, கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குவைத் மீது படையெடுக்குமாறு சதாம் உசேன் உத்தரவிட்டார்
    • எழுதியவர், வாலித் பத்ரான்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1990 ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று, குவைத்துக்கு எதிராக திடீர் ராணுவ நடவடிக்கையின் இராக் மேற்கொண்டது. அப்போதைய இராக் அதிபர் சதாம் உசேனின் உத்தரவின்பேரில் நடந்த இந்த ஊடுருவல், பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் மாபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம், பின்னர் இரண்டாம் வளைகுடா போர் வெடிப்பதற்கும் காரணமானது.

இராக் – குவைத் இடையிலான இந்த மோதலுக்குப் பின்னால் பல அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் இருந்தன.

கடந்த1988ஆம் ஆண்டு இரான் – இராக் போர் முடிவுக்கு வந்தபோது, இராக் பெரும் கடன் சுமையில் சிக்கியிருந்தது. குறிப்பாக போரின்போது நிதியுதவி அளித்த வளைகுடா நாடுகளான குவைத், செளதி அரேபியா ஆகியவற்றுக்குப் பெருமளவு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு குவைத் வலியுறுத்தியது.

மேலும், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஓபெக் நிர்ணயித்த உற்பத்தி வரம்பை மீறிக் குவைத் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்வதாக இராக் குற்றம் சாட்டியது. இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்து, இராக்கின் வருவாய் பாதிக்கப்பட்டதாக அந்நாடு கருதியது. இதுவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்தது.

இதுதவிர, இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ருமைலா எண்ணெய் வயலில் இருந்து குவைத் எண்ணெயைத் திருடுவதாகவும் இராக் குற்றம்சாட்டியது.

இத்தகைய பதற்றங்களுக்கு மத்தியில், 1990 ஆகஸ்ட் 2-ஆம் தேதி குவைத்தை ஊடுருவ சதாம் உசேன் உத்தரவிட்டார். இராக்கின் கட்டுப்பாட்டுக்குள் குவைத் வந்ததைத் தொடர்ந்து, சதாம் உசேனின் உறவினரான அலி ஹசன் அல்-மஜித், அந்நாட்டின் ராணுவ ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

குவைத், சதாம் உசேன், ஒபெக் அமைப்பு, கச்சா எண்ணெய் விலை
படக்குறிப்பு, 1991 பிப்ரவரி: குவைத்தை விடுவிப்பதற்காக அமெரிக்க மற்றும் செளதி படைகள் குவைத் நகரை நோக்கி முன்னேறின

குவைத்தில் இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது என்ன நடந்தது?

இதையடுத்து குவைத்தில் தங்கள் இருப்புக்குச் சட்டபூர்வமான தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இராக் நாட்டு அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டனர். அதன் ஒரு பகுதியாக, 'குவைத் குடியரசு' உருவாக்கப்பட்டது. சுதந்திர குவைத் அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

குவைத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது 1990 ஆகஸ்ட் 4ஆம் தேதி, 'குவைத் குடியரசு' நிறுவப்பட்டதாக சதாம் உசேன் அறிவித்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தக் குடியரசு சுதந்திரமான அரசியல் அமைப்பாகச் செயல்படும் என்றும், 'மக்கள் புரட்சி' மூலம் நிர்வகிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ராஜா ஹசன் மினாவி எழுதிய, 'குவைத்: படையெடுப்பும் விடுதலையும்' என்ற நூலில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, இந்த அறிவிப்பு சதாம் உசேனின் காலதாமத மற்றும் அரசியல் குழப்பத்தை உருவாக்கும் உத்தியின் ஒரு பகுதி.

குவைத்தை இராக்குடன் நேரடியாக இணைத்துக் கொண்டதாக அறிவிப்பதற்குப் பதிலாக, அங்கு நடந்தது ஒரு உள்நாட்டுப் புரட்சி என்று இராக் ஆட்சியாளர்கள் சித்தரிக்க முயன்றனர். 'காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் முகவராக'ச் செயல்பட்ட ஆட்சிக்கு எதிராக குவைத் மக்களே புரட்சியில் ஈடுபட்டதாகக் கூறினர். அரபு நாடுகள் ஊடுருவியது மற்றும் சர்வதேச அளவில் நிலவிய பொதுக் கருத்தை நியாயப்படுத்தவும் இராக் ஊடகங்கள் இத்தகைய கருத்துகளைப் பரப்பின.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 'சுதந்திர குவைத்' நாட்டுக்கான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதில் முன்னாள் குவைத் ராணுவ அதிகாரிகள் ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இராக் ஆட்சியுடன் சாதகமாக நடந்துக் கொண்டவர்கள் அல்லது இராக்குடன் ஒத்துழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

கர்னல் அலா உசேன் அலி அல்-கஃபாஜி அல்-ஜாபர், இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகவும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்களின் பொறுப்புகளையும் அவர் ஏற்றார்.

லெப்டினன்ட் கர்னல் வலீத் சவுத் முகமது அப்துல்லா வெளியுறவு அமைச்சராகவும், பெட்ரோலிய அமைச்சராகவும், லெப்டினன்ட் கர்னல் புவாத் உசேன் அகமது நிதி நியமிக்கப்பட்டனர். மேஜர் ஃபதில் ஹைதர் அல்-வஃப்கி தகவல் மற்றும் போக்குவரத்துத் துறைகளையும், லெப்டினன்ட் கர்னல் உசேன் தஹிமான் அல்-ஷம்ரி சமூக விவகாரத் துறையையும் கவனித்துக்கொண்டனர்.

ராஜா ஹசன் மினாவியின் நூலின்படி, அலா உசேன் 1948-ம் ஆண்டு குவைத்தில் பிறந்தவர். பாக்தாத் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, இராக்கின் பாத் கட்சியில் இணைந்தார். அவர் குவைத் ராணுவத்தின் முன்னாள் அதிகாரியுமாவார்.

இராக் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குவைத் அரசுத் தொலைக்காட்சியில் அலா உசேனின் அறிக்கை ஒளிபரப்பப்பட்டது. அதில், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த அவர், அந்த நிர்வாகத்துக்கு ஒத்துழைக்குமாறு குவைத் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

புதிய அரசாங்கம் பல்வேறு 'புரட்சிகர முடிவுகளை' அறிவித்தது. மேற்கத்திய நிறுவனங்களை நாட்டுடைமையாக்குவது, ஆளும் குடும்பத்தினரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது, குவைத் தேசிய சட்டமன்றத்தைக் கலைப்பது, அமீரகத்தை குடியரசாக மாற்றுவது, அப்போது குவைத்தில் வசித்துவந்த அனைத்து அரபு நாட்டினருக்கும் குடியுரிமை வழங்குவது ஆகியவை அவற்றில் அடங்கும்.

இராக்குடன் குவைத்தை இணைக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தவர்கள் யார்?

குவைத், சதாம் உசேன், ஒபெக் அமைப்பு, கச்சா எண்ணெய் விலை, அலி ஹசன் அல்-மஜித்
படக்குறிப்பு, அலி ஹசன் அல்-மஜித் குவைத்தின் ஆளுநர் பதவியை வகித்தார்.

இந்த அரசாங்கத்திற்கு உண்மையில் அதிகாரம் எதுவும் இருக்கவில்லை. அது பெயரளவிலான ஓர் அமைப்பாக மட்டுமே நீடித்தது. இராக்குடன் குவைத்தை இணைக்கும் முடிவை நியாயப்படுத்துவதற்காக, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பொதுமக்களின் கருத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற இராக் ஆட்சியாளர்கள் இந்த அரசாங்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால், குவைத் மக்கள் இந்த அரசாங்கத்தை நிராகரித்தனர். குவைத்தின் எதிர்க்கட்சியினரும் இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.

இந்த இடைக்கால அரசாங்கம் நான்கு நாட்கள் மட்டுமே நீடித்தது. 1990 ஆகஸ்ட் 8-ஆம் தேதி, குவைத்தை அதிகாரப்பூர்வமாக இராக்குடன் இணைப்பதாக சதாம் உசேன் அறிவித்தார். இந்த இணைப்பை இடைக்கால அரசாங்கமே தன்னிடம் கோரியதாகவும் அவர் கூறினார். இதனால், அந்த அரசாங்கத்தின் இருப்பு சட்டரீதியாகவும் நடைமுறையிலும் அர்த்தமற்றதாகிப் போனது.

1990 ஆகஸ்ட் 28-ஆம் தேதி, குவைத்தை இராக்கின் 19-வது மாகாணமாக அறிவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. கஸ்மா (குவைத் நகரம்), ஜஹ்ரா, அஹ்மதி ஆகிய பகுதிகள் அந்த மாகாணத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இராக்கைச் சேர்ந்த அஜீஸ் சாலிஹ் அல்-நுமானை குவைத்தின் ஆளுநராக சதாம் உசேன் நியமித்தார்.

இடைக்கால அரசாங்கம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அலா உசேன் அலியை இராக்கின் துணைப் பிரதமராக நியமிக்க சதாம் உசேன் உத்தரவிட்டார். மற்ற அமைச்சர்கள், அமைச்சர்களுக்கு இணையான அந்தஸ்தில் அதிபர் அலுவலகத்தின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு, இராக்கின் ஒரு மாகாணமாக குவைத் இணைக்கப்பட்டது. இதையடுத்து, குவைத் முழுவதும் இராக்கின் சட்டங்களை அமல்படுத்த இராக் ராணுவம் நடவடிக்கை எடுத்தது. பள்ளிப் பாடத்திட்டங்களை மாற்றுவது, நாணயத்தை மாற்றுவது, குவைத் செய்தித்தாள்களுக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குவைத்தில் செயல்பட்டு வந்த வெளிநாட்டுத் தூதரகங்கள் மூடப்பட்டன. பல நாடுகளின் தூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். உள்ளூர் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், சித்திரவதை, தன்னிச்சையான கைது, மரண தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ராணுவத்தின் ஆதிக்கம் நிலவியது. இதற்கிடையே, "குவைத் தனது தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்டது" என்று சதாம் உசேன் அறிவித்தார்.

பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, 'குவைத் குடியரசு' என்ற அறிவிப்பு, சர்வதேச அளவில் அதிகரித்து வந்த அழுத்தங்களுக்கு மத்தியில் கால அவகாசம் பெறுவதற்காக இராக் மேற்கொண்ட அரசியல் நாடகம் மற்றும் தந்திரோபாய நடவடிக்கை மட்டுமே.

இராக்குடன் குவைத்தை நேரடியாக இணைப்பதாக ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தால், சர்வதேச சமூகத்திடமிருந்து கடும் எதிர்ப்பு எழும் என்பதை இராக் தலைவர்கள் அறிந்திருந்தனர். எனவே, இந்த ஆக்கிரமிப்பை முதலில் 'உள்நாட்டு மக்கள் புரட்சி'யாகவும், பின்னர் இராக்குடன் இணைவதற்கான மக்களின் 'கோரிக்கை'யாகவும் சித்தரிக்க அவர்கள் முயன்றனர்.

அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கை

குவைத் மீதான இராக்கின் படையெடுப்பை கண்டித்த ஐக்கிய நாடுகள் சபை, 1990 ஆகஸ்ட் 6-ஆம் தேதி அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.

தொடர்ந்து, அதே ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி, ஐ.நா. பாதுகாப்புச் சபை 678-வது தீர்மானத்தை நிறைவேற்றியது. இராக்கிற்கு எதிராகப் படைபலத்தைப் பயன்படுத்த இந்தத் தீர்மானம் அனுமதியளித்தது. மேலும், குவைத்திலிருந்து இராக் படைகள் வெளியேறுவதற்கு 1991 ஜனவரி 15-ஆம் தேதி நள்ளிரவு வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.

1991 ஜனவரி மாதத் தொடக்கத்தில், போரைத் தவிர்த்து நெருக்கடிக்குத் தீர்வு காணத் தீவிரமான ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல போர் மூளும் சூழல் தவிர்க்க முடியாததாக மாறியது.

அரபு நாடுகள் மேற்கொண்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜேவியர் பெரெஸ் டி குயலார், இராக் அதிபர் சதாம் உசேனைச் சந்தித்துப் பேசினார். எனினும், குவைத்திலிருந்து படைகளைத் திரும்பப் பெறவோ, அது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தவோ சதாம் உசேன் இணங்கவில்லை.

1991 ஜனவரி 9-ஆம் தேதி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் பேக்கருக்கும் இராக் வெளியுறவுத்துறை அமைச்சர் தாரிக் அஜிஸுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து, ராஜதந்திர ரீதியாக நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான அனைத்து வழிகளும் முடிந்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஜனவரி 12-ஆம் தேதி, இராக்கிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குவைத் மீதான இராக்கின் ஆக்கிரமிப்பு பல மாதங்களாக நீடித்த நிலையில், அந்நாட்டை விடுவிக்க அமெரிக்கா தலைமையில் 34 நாடுகளைக் கொண்ட சர்வதேசக் கூட்டணி ராணுவ நடவடிக்கையைத் தொடங்க முடிவு செய்தது. 'ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்' எனப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, 1991 ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது.

அதே ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் குவைத் முழுமையாக விடுவிக்கப்பட்டது. சர்வதேசக் கூட்டணிப் படைகளின் கடுமையான ராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் இராக் படைகள் பின்வாங்கின.

ஆனால், குவைத்திலிருந்து வெளியேறும்போது இராக் படைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. எண்ணெய்க் கிணறுகளுக்குத் தீ வைத்ததுடன், நாட்டின் உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின.

1991 மார்ச் 14-ஆம் தேதி, குவைத் அமீர் ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா நாடு திரும்பினார். அதற்கு முன்பு, அவரது அரசாங்கம் பல மாதங்களாக செளதி அரேபியாவிலிருந்து தற்காலிகமாகச் செயல்பட்டு வந்தது.

இராக்கின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு குவைத்தில் என்ன நடந்தது?

குவைத், சதாம் உசேன், ஒபெக் அமைப்பு, கச்சா எண்ணெய் விலை
படக்குறிப்பு, குவைத் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் சட்டபூர்வ அரசாங்கம் 1991 மார்ச் 14-ஆம் தேதி மீண்டும் நாடு திரும்பியது.

குவைத் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இராக் ஆதரவுடன் செயல்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர்கள் 1991 ஏப்ரல் 27-ஆம் தேதி குவைத் திரும்பினர். அலா உசேன் அலியைத் தவிர, பிற உறுப்பினர்கள் அனைவரும் நாடு திரும்பியதும் குவைத் அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.

அவர்கள் குவைத் அரசின் பாதுகாப்புச் சேவையின் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தப் பிரிவினர் 1991 மே 15-ஆம் தேதி விசாரணையை முடித்தனர். பின்னர், ஜூலை 22-ஆம் தேதி அந்த நபர்களை அரசு பாதுகாப்பு வழக்கறிஞர் அலுவலகத்திடம் ஒப்படைத்தனர்.

விசாரணையின்போது, குவைத் நாட்டுக்கும் அதன் தலைவருக்கும் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்திய அவர்கள் அனைவரும் அலா உசேன் அலிக்கு எதிராகச் சாட்சியமும் அளித்தனர்.

1991 செப்டம்பர் 9-ஆம் தேதி, அப்போதைய குவைத் நீதித்துறை அமைச்சர் காசி உபைது அல்-சமர், இந்த இடைக்கால அரசாங்கம் தொடர்பான விசாரணையின் முடிவை அறிவித்தார். விசாரணை நிறைவடைந்துவிட்டதாகக் கூறிய அவர், அந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்தப்பட்டே அந்தச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். மேலும், அவர்கள் அடித்தல், மிரட்டல், உடல் மற்றும் மனரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறினார்.

"ராணுவ உளவுத்துறைத் துறை மற்றும் அரசு பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது," என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, அவர்கள் குவைத் பாதுகாப்பு அமைச்சகத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தனர். ராஜா ஹசன் மினாவியின் 'குவைத்: படையெடுப்பும் விடுதலையும்' என்ற நூலின்படி, காலப்போக்கில் குவைத் சமூகம் இந்தச் சம்பவத்தைக் கடந்து சென்றது.

இந்த இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கிய அலா உசேன் அலி, 1998-ஆம் ஆண்டு இராக்கிலிருந்து துருக்கிக்குச் சென்றார். பின்னர், அங்கிருந்து நார்வேக்குக் குடிபெயர்ந்தார்.

2000-ஆம் ஆண்டு அவர் குவைத்துக்குத் திரும்பி, இராக் சார்பாகச் செயல்பட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடும் நோக்கில் அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

அவர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், பின்னர் அந்தத் தண்டனை ஆயுள் சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இராக் அதிகாரிகள் தனது குடும்பத்தினரைச் சிறையில் அடைத்துக் கொன்றுவிடுவதாக மிரட்டியதால்தான், இந்த 'பொம்மை அரசாங்கத்திற்குத்' தலைமை தாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அலா உசேன் அலி நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான போர்க் கைதிகள் இருந்தபோதிலும், குவைத்தில் இந்தப் பொம்மை அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கத் தன்னையே ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தனக்குப் புரியவில்லை என்றும் அவர் கூறினார். போர் முடிந்த பிறகும், 1998-ஆம் ஆண்டு வரை இராக்கிலேயே இருக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் தன்னை வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம், அலா உசேன் அலியின் குவைத் குடியுரிமையை அந்நாட்டு அரசு ரத்து செய்தது.

சட்டரீதியாகப் பார்த்தால், இந்த 'குவைத் குடியரசு' ஒரு தனி நாடாகச் செயல்படுவதற்கான அடிப்படைத் தகுதிகள் எதையும் கொண்டிருக்கவில்லை. அதற்கென இறையாண்மை இருக்கவில்லை, எந்தவொரு நாடும் அதை அங்கீகரிக்கவில்லை.

எனவே, சர்வதேச சட்டத்தின் பார்வையில், அந்தக் குடியரசின் இருப்பு செல்லுபடியாகாத ஒன்றாகவே இருந்தது. மேலும், இந்த அரசாங்கம் எவ்வளவு விரைவாக உருவாக்கப்பட்டதோ, அதே வேகத்தில் கலைக்கவும் பட்டது.

இந்த உண்மைகள், 'குவைத் குடியரசு' உண்மையான அரசியல் அமைப்பாகச் செயல்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. மாறாக, இராக்கின் படையெடுப்புக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் இருப்பதுபோல் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட தற்காலிக ஏற்பாடாகவே அது இருந்தது.

'சுதந்திர குவைத்தின் இடைக்கால அரசாங்கம்' எந்தச் சட்டங்களையும் இயற்றவில்லை. நிர்வாகப் பணிகளையோ தூதரகப் பணிகளையோ மேற்கொள்ளவில்லை. சர்வதேச நாடுகளுடனும் எந்தவிதத் தொடர்பையும் பேணவில்லை.

இந்த அரசாங்கம் மிகக் குறுகிய காலமே நீடித்தபோதிலும், குவைத் மக்களின் நினைவில் கசப்பான அத்தியாயமாகப் பதிந்துவிட்டது. அதேவேளையில், இந்தச் சம்பவம் குவைத் மக்களிடையே தேசிய ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தியதுடன், நாட்டின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் மீண்டும் உணர்த்தியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு