சௌதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்கும் அமெரிக்காவின் திட்டத்தால் சர்ச்சை ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டாம் பேட்மேன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
செளதி அரேபியாவுக்கு சுமார் 50 எஃப்-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் இந்த கொள்கை மாற்றம், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் கவலையையும் எதிர்ப்பையும் எழுப்பியுள்ளது.
எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் நெருங்கி சென்று தாக்கும் நவீன ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட எஃப்-35 ரக விமானங்களை வாங்குவதற்கு செளதி அரேபியா பல ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது.
ஆனால், அமெரிக்கா இதுவரை இதற்கு அனுமதி மறுத்து வந்ததற்கு முக்கியக் காரணம் அதன் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல்தான். மத்திய கிழக்கில் உள்ள எந்தவொரு அண்டை நாட்டை விடவும், இஸ்ரேல் உயர் தரமான அமெரிக்க ஆயுதங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதன் ராணுவ மேலாதிக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆயுதங்களின் மிகப்பெரிய வாடிக்கையாளரான செளதி அரேபியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள இந்த 24 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ஆய்வு செய்யவோ அல்லது அதைத் தடுத்து நிறுத்தவோ அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images
இந்த விற்பனைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றப் பிரதிநிதியான ராஜா கிருஷ்ணமூர்த்தி, வியாழக்கிழமை, "இந்த ஒப்பந்தமானது, அமெரிக்க ராணுவத் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட திறன்களைச் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கைக்கு எட்டும் தூரத்திற்குக் கொண்டு சென்றுவிடும் அபாயம் கொண்டது" என எச்சரித்தார்.
செளதி அரேபியாவுக்கு எஃப்-35 ரக விமானங்களை வழங்குவது குறித்து மற்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், சில அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளும் கவலைகளை எழுப்பியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையைப் பயன்படுத்தி, இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை சீனாவுடன் செளதி அரேபியா பகிர்ந்து கொள்ளக்கூடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வியாழக்கிழமை இந்த ஒப்பந்தத்தை முறைப்படி அறிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை, இத்திட்டம் அமெரிக்காவின் "வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களுக்கு" வலுசேர்க்கும் எனக் கூறியுள்ளது.
"வளைகுடா பிராந்தியத்தில் அரசியல் நிலைத்தன்மைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் காரணியாக விளங்கும், நேட்டோ அல்லாத ஒரு முக்கிய நட்பு நாட்டின் பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் மேலும் மேம்படுத்தும்" என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. "இந்த ஆயுத விற்பனை முன்மொழிவு, அப்பிராந்தியத்தின் தற்போதைய ராணுவ சமநிலையை எவ்விதத்திலும் மாற்றியமைக்காது" என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன், டொனால்ட் டிரம்ப் நெருங்கிய உறவைப் பேணி வருகிறார். முன்னதாக, கடந்த மே மாதம் ரியாத்தில் இருவரும் சந்தித்தபோது, 142 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதனை வெள்ளை மாளிகை "வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு தளவாட விற்பனை ஒப்பந்தம்" என்று வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.
செளதி அரேபியாவுக்காகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விற்பனை முன்மொழிவில், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 48 எஃப்-35 ரக விமானங்கள் இடம்பெற்றுள்ளன.
இது நிறைவேறினால், தற்போது 50 எஃப்-35 போர் விமானங்களைக் கொண்டுள்ள இஸ்ரேலுக்கு இணையான விமானப்படை வலிமையை செளதி அரேபியாவும் பெறக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், கடந்த மே மாதம் மற்றுமொரு எஃப்-35 போர் விமானப் படையணியைக் கொள்முதல் செய்யவுள்ளதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. இந்த ஒப்பந்தம் மூலமாக இஸ்ரேலின் எஃப்-35 விமானங்களின் எண்ணிக்கை இருமடங்காகி 100-ஆக உயரும் என 'ஜெருசலேம் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் எஃப்-35ஏ ரக ஜெட் விமானம் ஒன்றின் விலை மட்டுமே சுமார் 82.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
முன்னதாக, 2018-ஆம் ஆண்டில் செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செளதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் பல கேள்விகளை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுடனான உறவைச் செளதி அரேபியா சீராக்க முன்வந்தால், அதற்கு பதிலாக எஃப்-35 விமானங்களை வழங்கலாம் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஆலோசித்தது. ஆனால், அந்த ராஜதந்திர பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.
மேற்கு ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழுவினருடன் செளதி அரேபியா தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுவரும் சூழலிலேயே, இந்த புதிய ஆயுத விற்பனை முன்மொழிவு வெளியாகியுள்ளது.
செளதி ஆதரவு பெற்ற அரசுப் படைகளிடமிருந்து ஏமனின் செங்கடல் கடலோரப் பகுதிகள் பலவற்றை ஹூத்திகள் சமீபத்தில் கைப்பற்றியுள்ளனர். இதன் காரணமாக, ஹூத்திகளுக்கு எதிராக நேரடியாக ராணுவ நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் டிரம்பை செளதி பட்டத்து இளவரசர் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியுள்ளதாக, இத்துறை சார்ந்த இரு நம்பகமான வட்டாரங்கள் பிபிசியின் அமெரிக்க ஊடக கூட்டாளியான 'சிபிஎஸ் நியூஸ்' நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அமெரிக்க ராணுவத்தை நேரடியாகக் களமிறக்க டிரம்ப் இதுவரை சம்மதிக்கவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
கூடுதல் தகவல்கள்: சரீன் ஹபேஷியன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































