நெடுஞ்சாலையில் இளம்பெண்ணை இறக்கிவிட்ட ஊபர் ஓட்டுநர் - குடும்பத்துக்கு ரூ.383 கோடி வழங்க உத்தரவு

பட மூலாதாரம், Panish, Shea, Ravipudi
- எழுதியவர், மேட்லின் ஹால்பர்ட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
கலிபோர்னியா நெடுஞ்சாலையில் 23 வயது பெண் ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்தில், அவரை காரில் இருந்து இறங்குமாறு ஊபர் நிறுவனத்தின் ஓட்டுநர் வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 383 கோடி) இழப்பீடு வழங்க ஊபர் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆகஸ்ட் 12 அன்று, வீட்டுக்குச் செல்வதற்காக எமிலி நார்மண்டின்-பார்க்கர் தனது தோழியுடன் ஊபர் காரை முன்பதிவு செய்திருந்தார். அப்போது அவரது தோழிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காருக்கு உள்ளேயே வாந்தி எடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மது அருந்தியிருந்த அந்த இரு பெண்களையும் ஓட்டுநர் நெடுஞ்சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, காரில் இருந்து இறங்குமாறு வற்புறுத்தியதாக எமிலியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு எமிலி மற்றொரு வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
ஓட்டுநர் ஒர் ஒப்பந்ததாரர் என்றும், அவரது செயல்களுக்கு ஊபர் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றும் அந்த நிறுவனம் வாதிட்டிருந்தது.
'பாதுகாப்பாக வீட்டுக்குக் கொண்டுசெல்ல ஊபரை நம்பினோம்'
"ஊபர் பயணிகளிடம் என்ன செய்ய வேண்டுமெனக் கூறுகிறதோ, அதை எமிலி செய்தார். வாகனம் ஓட்ட வேண்டாம் என்ற பொறுப்பான முடிவை அவர் எடுத்தார். அவரைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஊபரை நம்பினோம். ஆனால், அந்த நம்பிக்கை எங்கள் மகளின் உயிரைப் பறித்துவிட்டது" என்று கலிபோர்னியா பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சலிஸ் வளாகத்தில் படித்துப் பட்டம் பெற்ற தங்கள் மகள் குறித்து எமிலியின் பெற்றோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நாட்கள் நடந்த நடுவர் விசாரணை செயல்முறைக்குப் பிறகு, எமிலியின் பெற்றோருக்கு 40 மில்லியன் டாலர் வழங்க ஊபர் நிறுவனத்திற்கு நீதிபதி ரிச்சர்ட் ஸ்டோன் உத்தரவிட்டதாக, குடும்பத்தின் சார்பில் வழக்காடிய சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்திற்கு வெளியே, தகுதியான நடுவர் ஒருவர் மூலம் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளும் மாற்று நடைமுறையே நடுவர் விசாரணை. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நடுவராகச் செயல்பட்டார்.
பெண்களை நெடுஞ்சாலையில் இறக்கிவிட்ட பிறகு, ஓட்டுநர் வு டிரான் அவர்களுக்கு உதவி கோரி அழைக்கவில்லை என்று குடும்பத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மாறாக, அவர் அங்கிருந்து காரை எடுத்துச் சென்று ஊபரை தொடர்புகொண்டு, காரை சுத்தம் செய்ததற்கான கட்டணத்தை எமிலியிடம் வசூலிக்குமாறு கேட்டதாக வழக்கறிஞர்கள் கூறினர்.
"தனது புதிய கார் மீது அவர் கொண்டிருந்த அக்கறை, தனது பயணிகள் மீதான அக்கறையைவிட அதிகமாக இருந்தது" என்று நடுவர் ஸ்டோன் தெரிவித்தார். மேலும், அவர் நெடுஞ்சாலையில் இருந்து அடுத்த வெளியேறும் பாதையில் சென்று, பெண்களைப் பாதுகாப்பான இடத்தில் இறக்கிவிட்டிருக்கலாம் என்றும் நீதிபதி கூறினார்.
ஊபர் நிறுவனம் கூறியது என்ன?
இந்தச் சம்பவத்திற்கு ஊபர் நிறுவனம் சட்டரீதியாகப் பொறுப்பேற்க வேண்டுமென்று நடுவர் கூறியது தவறு என்று தாங்கள் நம்புவதாக ஊபர் தெரிவித்துள்ளது.
"பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில், புதிய தொழில்நுட்பங்கள், கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பல ஆண்டுகளாக எங்களது பாதுகாப்பு நடைமுறைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். பாதுகாப்பற்ற இடங்களில் பயணிகளை இறக்கிவிடுவதைத் தவிர்ப்பது குறித்து ஓட்டுநர்களுக்குக் கூடுதல் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளோம்" என்று அந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
''இந்தச் சம்பவம் குறித்து எமிலியின் பெற்றோர் வெளியில் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன், ஆரம்பத்தில் 10 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க ஊபர் முன்வந்ததாகத் தெரிவித்தது. ஆனால், அந்த முன்மொழிவை பெற்றோர் நிராகரித்தனர்'' என்று இந்தக் குடும்பத்தின் சார்பில் வழக்காடிய சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































