நோபல் பரிசு பெற்ற நவனீதம் பிள்ளை இலங்கை போருக்கு பின்னர் தமிழர் விவகாரத்தில் எப்படி செயல்பட்டார்?

நவனீதம் பிள்ளை
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை தன்வசப்படுத்திக் கொள்ளும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவனீதம் பிள்ளை, இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளார்.

இலங்கையில் நடந்தேறிய 3 தசாப்த உள்நாட்டு போர், 2009-ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது. இந்த போர் நிறைவுக்கு வரும் காலக் கட்டத்தில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளராக நவனீதம் பிள்ளை பணியாற்றியிருந்தார்.

இலங்கையில் போர் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் உள்ளிட்ட போரினால் மக்கள் எதிர்நோக்கிய பாதிப்புக்கள் தொடர்பில் நவனீதம் பிள்ளை தொடர்ச்சியாக குரல் கொடுத்ததுடன், இலங்கை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்திருந்தார்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்த தமிழர்களின் உரிமைக்கானவும், அவர்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களிலிருந்து அவர்களை மீண்டெடுப்பதற்காகவும் நவனீதம் பிள்ளை கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை அடுத்து, 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளராக நவனீதம் பிள்ளை இலங்கை வந்தார்.

இலங்கையில் போருக்கு பின்னர் தமிழர் விவகாரத்தில் நவனீதம் பிள்ளை எப்படி செயற்பட்டார்?

சுமார் ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருந்த அவர், வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

கொழும்பில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்ததுடன், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் சந்தித்திருந்தார்.

அவரது நடவடிக்கைகளில் கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது, கொழும்பை தாண்டி பல்வேறு பகுதிகளுக்கும் கள விஜயத்தை ஈடுபட்டமை சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளுக்கும் அவர் களவிஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை அவர் நேரடியாக சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்.

அத்துடன், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், 2009-ஆம் ஆண்டு இலங்கையின் வடப் பகுதிக்கு விஜயத்தை செய்திருந்ததன் பின்னர், வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உயரிய பதவியை கொண்ட ஐநா பிரதிநிதியாக நவனீதம் பிள்ளை வரலாற்றில் பதிவாகியிருந்தார்.

இந்த விஜயத்தின் இறுதி நாளில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்திய நவனீதம் பிள்ளை, இலங்கை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி படிப்படியாக மாறி வருகின்றதா என்ற அச்சம் எழுந்துள்ளதாக அவர் அப்போது கூறியிருந்தார்.

இலங்லையில் நடந்த உள்நாட்டு போர் முடிவடைந்த நான்கு வருடங்கள் (2013) முடிவடைந்துள்ள நிலையில், நாட்டின் ஜனநாயகம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டின் சட்ட ஆட்சி சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த நவனீதம் பிள்ளை

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த நவனீதம் பிள்ளை

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட மனித உரிமை தரங்களுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கி செயற்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்துவதே தமது பணி என அவர் இலங்கை அரசாங்கத்திற்கு குறிப்பிட்டிருந்தார்.

மேலும், போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு படைகளினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் தமிழ் மக்கள் தன்னிடம் முறையிட்டதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், நவனீதம் பிள்ளையினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

நவனீதம் பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்து, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் நேரடியாகவே குரல் கொடுத்தமை தொடர்பில் தமிழர்கள் மத்தியில் பாரிய வரவேற்பு காணப்பட்டது.

மேலும், நவனீதம் பிள்ளை, ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமை பொறுப்பில் பணியாற்றிய காலப் பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சார்பாகவும் குரல் கொடுத்திருந்தார்.

ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களுக்கு ஆதரவாக நவனீதம் பிள்ளை செயற்பட்டிருந்தார்.

குறிப்பாக 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் தலைமையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் என கோரி, 2014-ஆம் ஆண்டு 25/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைய, விசாரணை குழுவொன்றையும் அவர் நியமித்திருந்தமை பாரிய பேசுப் பொருளாக அமைந்திருந்தது.

சர்வதேச அங்கீகாரமான நோபல் பரிசை வென்றுள்ள நவனீதம் பிள்ளை, அந்த அங்கீகாரத்தை கொண்டு பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு குரலாக இருக்க வேண்டும் என இலங்கை அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர்.

''ஐநா மனித உரிமை ஆணையாளராக இருந்த போது, நவனீதம் பிள்ளை செயற்பட்ட விதத்திலேயே, இனியும் அவர் செயற்பட்டு, தமிழர் பிரச்னைக்காக இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்'' என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

 மனோ கணேசன்
படக்குறிப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்

நோபல் பரிசு என்பது முடிவல்ல, ஆரம்பம் என மனோ கணேசன் பிபிசி தமிழிடம் கூறினார்.

''2013-ஆம் ஆண்டு காலப் பகுதியில் மனித உரிமை ஆணையாளராக அவர் இலங்கைக்கு வந்தார். அது போருக்கு பிற்பட்ட காலம். இந்த காலத்தில் தேசிய ஒருமைப்பாட்டை எப்படி ஏற்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டிருந்த காலத்திலே, அதற்கான போராடிக் கொண்டிருந்த வேளையில், அதற்கு பங்களிப்பு வழங்கும் முகமாக நவிப்பிள்ளை எங்களுக்கு பயன்பட்டார்.

இன்று அவருக்கு அந்த விருது கிடைத்திருப்பது என்பது என்னை பொருத்தவரையில் ஆச்சரிப்படக்கூடியது அல்ல. அதேவேளை, தமிழ் வம்சாவளியாக இருந்த காரணத்தினாலே, அதையும் காரணமாக வைத்துக் கொண்டு அன்றைய அரசாங்கம் அவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தது. அவர் தமிழர்களுக்காக மாத்திரம் செயற்படவில்லை.

தமிழ் மக்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. போர் முடிந்து விட்டது. ஆனால், போருக்கான காரணம் இன்னும் அப்படியே தான் இருந்துக்கொண்டிருக்கின்றது. நவனீதம் பிள்ளை தனது அழுத்தத்தை இப்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் மீதும் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்" என மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
படக்குறிப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

''ஈழத் தமிழர்களுக்கு வரலாற்றில் நடந்த இனப்படுகொலையாக நாங்கள் குற்றஞ்சாட்டுகின்ற சம்பங்கள் தொடர்பாக நவனீதம் பிள்ளை, ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமை ஆணையாளராக வந்து பொறுப்பேடுத்ததற்கு பின்னர் முக்கியமான அக்கறையை காட்ட வேண்டிய ஒரு இடத்திற்கு சென்றிருந்தார்.'' என்கிறார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

''ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணை, சர்வதேச பங்களிப்பு இல்லாமல் இலங்கையில் ஒரு நீதியை நிலைநாட்ட முடியாது என்ற காரணங்களை அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருந்தார்.''

''ஆனால், ஒரு விமர்சன கண்ணோட்டத்திலே சொல்வதாக இருந்தால், அம்மையார் இன்றைக்கு புகழ் பெற்றிருப்பதற்கான காரணம், துணிச்சலாக காஸாவிலே நடைபெற்றது இனப்படுகொலை என்ற ஒரு கருத்தை வலியுறுத்தியிருந்ததே ஆகும். அதேபோன்றதொரு, இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்ற விடயத்தை அவர்கள் பதிவு செய்திருந்தால், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக பலமான விடயமாக இருந்திருக்கும். ஆனால், அவர்களுக்கு அந்த காலத்தில் போதியளவு விசாரணை செய்வதற்கான சந்தர்ப்பங்களை சர்வதேச நாடுகள் வழங்காதமையினால், அவர்களுக்கு அந்த முடிவுக்கு வராமல் இருந்திருக்கலாம்.

ஆனால், அவருக்கு கிடைத்திருக்கின்ற இந்த அங்கீகாரத்தை வைத்து உலகளாவிய ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கின்ற, தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாகின்ற மக்களுக்கு அவர் பலமான குரலாக இருக்க வேண்டும்" என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கின்றார்.

ஐ.நா.வில் பணியாற்றிய காலத்தில், இஸ்ரேலும் ஹமாஸும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டிய ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் சுயாதீன விசாரணை அறிக்கை தயாரிப்பதில் பிள்ளை பங்களித்தார்.
படக்குறிப்பு, காஸா

ஐ.நா.வில் பணியாற்றிய காலத்தில், இஸ்ரேலும் ஹமாஸும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டிய ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் சுயாதீன விசாரணை அறிக்கை தயாரிப்பதில் நவனீதம் பிள்ளை பங்களித்தார்.

இந்தத் தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; மேலும், 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். ஹோலோகாஸ்டுக்குப் பிறகு யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஒரே நாளில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய சம்பவமாக இது அமைந்தது.

அக்டோபர் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் காஸாவில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இதன் விளைவாகப் போர் மூண்டது. ஹமாஸ் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தப் போரில் 74,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பிள்ளை தலைமையிலான குழுவின் அறிக்கையில், 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களின்போது ஹமாஸ் அமைப்பினர் "வேண்டுமென்றே கொலை செய்தனர், காயப்படுத்தினர், தவறாக நடத்தினர், பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல்களுக்குப் பிறகு, காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளில், "போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றின் மீறல்கள்" நிகழ்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை முடிவுசெய்தது.

அடர்த்தியான மக்கள் வசிக்கும் பகுதிகளில், அதிக அழிவை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்களை இஸ்ரேலிய ராணுவம் பயன்படுத்துவது, "பொதுமக்கள் மீது திட்டமிட்டும் நேரடியாகவும் நடத்தப்படும் தாக்குதலாகும்" என்று பிள்ளை தலைமையிலான குழு தெரிவித்தது.

நவனீதம் பிள்ளை

நவனீதம் பிள்ளைக்கு கிடைத்திருக்கின்ற அங்கீகாரத்தின் ஊடாக, தொடர்ந்தும் மக்களுக்கான குரல் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் கூறுகிறார்.

''போரின் ஊடாக மிக மோசமான விடயங்களை இலங்கை அரசு செய்துள்ள காலக்கட்டத்தில் அவர் துணிச்சலாக செயற்பாட்டிருந்தார். இலங்கையை பொருத்த வரையில் தமிழீனத்தின் மீதான இனப் படுகொலைக்கும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் மிக நேர்த்தியாக தனது நடவடிக்கைகளை இதனூடாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்" என அவர் தெரிவிக்கின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு