வாக்குப்பதிவு உயர தவெக ஒரு காரணமா? இது திமுகவுக்கு பாதகமா? தேர்தல் வரலாறு தரும் படிப்பினைகள்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தற்போது நடந்து முடிந்திருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. வாக்குகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்? வாக்கு சதவீதம் அதிகரிப்பதை வைத்து தேர்தல் முடிவுகளைக் கணிக்க முடியுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்தியா சுதந்திரமைடந்த பிறகு, தமிழ்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல்களில் இவ்வளவு அதிக சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது இதுவே முதல் முறை என்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். இதற்கு முன்பாக, 2011ஆம் ஆண்டின் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிகபட்சமாக 78.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

ஆகவே இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகரித்திருக்கும் வாக்கு சதவீதத்தை வைத்து, தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கலாம் என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்தால் அது அப்போதைய ஆளும் கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்பது பொதுவான புரிதலாக இருக்கிறது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடந்த பொதுத் தேர்தல்களில் வாக்கு சதவீதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், வெவ்வேறு விதமான காட்சிகள் காணக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் முதன்முதலில் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்த தேர்தலில், அது எல்லோரும் கருதுவதைப் போலவே ஆளும் கட்சிக்கு பாதகமாகவே இருந்தது. 1967ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் 76.57ஆக இருந்தது. இது முந்தைய தேர்தலில் வாக்களித்தவர்களின் விகிதத்தைவிட சுமார் ஆறு சதவீதம் அதிகம். அந்தத் தேர்தலில், இந்தியா விடுதலையடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வீழ்த்தப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது.

இதற்குப் பிறகு, எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கியபோது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, அந்தக் கட்சி சந்தித்த முதல் சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலேயே வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அந்த முறை வாக்கு சதவீதம் மிகக் குறைவாக, அதாவது வெறும் 61.58 சதவீதமாகவே இருந்தது.

ஆனால், இதற்குப் பிறகு 1984ல் வாக்கு சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து 73.47 சதவீதமாக இருந்தாலும், ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆரின் உடல்நலம், பிரதமர் இந்திரா காந்தியின் மரணம் ஆகியவையே இதற்குக் காரணமாக இருந்தன. இதற்குப் பிறகு 1989, 1991, 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் வாக்கு சதவீதம் குறைவாகவே இருந்தது. 2006ஆம் ஆண்டில்தான் வாக்களித்தோர் சதவீதம் 70ஐ (70.82% ) தொட்டது.

இதற்குப் பிறகு, 2011ஆம் ஆண்டில் வாக்குப் பதிவு சதவீதம் உச்சத்தைத் தொட்டு 78.01% சதவீதமாக இருந்தது. அந்த முறை, ஆட்சியில் இருந்த தி.மு.கவை வீழ்த்தி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. இதற்குப் பிறகு வாக்கு சதவீதம் அடுத்தடுத்து குறைந்துவந்த நிலையில், இந்த முறை முன்னெப்போதும் இல்லாத அளவாக 85 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறது.

2026ஆம் ஆண்டின் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, ஆளும் தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க. என இரு பெரிய கூட்டணிகள் களத்தில் இருக்க, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இருந்தன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது பிரசாரங்களில் தி.மு.க. எதிர்ப்பிற்கே மிகுந்த முக்கியத்துவம் அளித்த நிலையில், இந்த வாக்கு சதவீத அதிகரிப்பு வரவிருக்கும் தேர்தல் முடிவுகளை எந்த விதத்திலாவது சுட்டிக்காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆனால், வியூக வகுப்பாளர்களைப் பொருத்தவரை அப்படியேதும் இல்லை என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாக நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தால், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம், ஒரே வாக்காளரின் பெயர் இரு இடங்களில் இருப்பதைச் சரிசெய்வது போன்றவை நடந்திருப்பதால் வாக்கு சதவீதம் ஓரளவுக்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

"சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்குப் பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக இருக்கிறது. வாக்காளர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், எல்லாத் தேர்தல்களுக்கும் இடையில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப் போலத்தான் இப்போதும் அதிகரித்திருக்கிறது. ஆகவே, இதற்கென தனியான ஒரு அர்த்தம் கொடுத்துப் பார்க்க வேண்டியதில்லை" என்கிறார் வியூக வகுப்பாளரான ஆர். வெங்கடரமணி.

மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமும் இதே கருத்தையே எதிரொலிக்கிறார். "பொதுவாக ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் முந்தைய தேர்தலோடு ஒப்பிட்டால் வாக்களிப்போர் எண்ணிக்கை 20 லட்சம் அளவுக்கு உயரும். இந்த முறையும் அதேபோல்தான் உயர்ந்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிட்டால், சுமார் 30 லட்சம் என்ற எண்ணிக்கையில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனை 234 தொகுதிகளுக்கும் பிரித்தளித்தால், ஒரு தொகுதிக்கு, 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வாக்குகள் வரை அதிகரிக்கலாம். இறுதி வாக்காளர் எண்ணிக்கை வரும்போது இந்த எண்ணிக்கை எவ்வளவு என்பது துல்லியமாக தெரியவரும். ஆனால், தோராயமாக இதுதான். நான்கு முனைப் போட்டி தீவிரமாக இருக்கும் ஒரு தேர்தலில் ஒவ்வொரு கட்சியுமே தமது கட்சி வாக்காளர்களை வாக்குச் சாவடிக்குக் கொண்டுவர தீவிரம் காட்டுவார்கள். அதனாலும் இது நடந்திருக்கும்" என்கிறார் அவர்.

அவர் சுட்டிக்காட்டுவதைப் போலவே, தேர்தல் ஆணைய தரவுகளின்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் அதிகரித்தே வந்திருக்கிறது. 2011-ல் 3.67 கோடியாக இருந்த வாக்களித்தோர் எண்ணிக்கை, 2016-ல் 4.29 கோடியாக உயர்ந்தது. இது 2021ல் 4.58 கோடியாக (தபால் வாக்குகள் உட்பட) அதிகரித்தது. இந்த முறை அந்த எண்ணிக்கை தோராயமாக 4.88 கோடியைத் தொட்டிருக்கிறது.

இப்படி அதிகரித்த வாக்குகள் யாருக்கு விழுந்திருக்கும்? "இது ஒரு சிக்கலான கணக்கு. வாக்காளர்களை வயதுவாரியாக பார்க்கும்போது, எந்த வயதைச் சேர்ந்த வாக்காளர்களின் சதவீதம் அதிகரித்திருக்கிறது என்பது தெரிந்தால்தான் இதனைப் புரிந்துகொள்ள முடியும். 18 முதல் 29வரையிலான வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தால், அதில் பெரும்பகுதி தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்றிருக்கலாம். அதே நேரம், 30 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தால், அது அ.தி.மு.க., தி.மு.கவுக்கே விழுந்திருக்கும்" என்கிறார் ஆர். வெங்கட்ரமணி.

பொதுவாக வாக்கு சதவீதம் அதிகரிக்கும்போது, அது ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே இருக்கும் என்ற கணிப்பு இருக்கிறது. இந்த முறையும் அப்படி புரிந்துகொள்ள முடியுமா? என்று கேட்டால் அப்படிப் புரிந்துகொள்ள முடியாது என்கிறார் ஷ்யாம். "நான்கு முனைப் போட்டி தீவிரமாக இருக்கும் ஒரு தேர்தலில், ஆளும் கட்சி தவிர்த்த மற்ற மூன்று முனைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக இருந்தால், பலன் யாருக்கு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்கிறார் அவர்.

இம்மாதிரி பல முனைப் போட்டி நிலவும்போது, அது ஏன் ஆளும் கட்சிக்கு பாதகமாக இருக்காது என்பதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார் ஆர். வெங்கட்ரமணி. "வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது பொதுவாக ஆளும்கட்சிக்கு பாதகமாக இருக்கும் என பொதுவாகக் கருதுகிறார்கள். ஆனால், அது அப்படியல்ல. இருமுனைப் போட்டி நிலவும்போது வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஒருவேளை ஆளும் கட்சிக்கு பாதகமாக இருக்கலாம். ஆனால், மும்முனைப் போட்டியோ, இப்போதிருப்பதைப் போல நான்கு முனைப் போட்டியோ நிலவினால், அது ஆளும் கட்சிக்கே சாதகமாக இருக்கும். 2016ஆம் ஆண்டில் மூன்று முனைப் போட்டி நிலவியது. அப்போது சுமார் 74 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகின. ஆனால், அது ஆளும் கட்சிக்கே சாதகமாக இருந்தது. காரணம், மும்முனைப் போட்டி நிலவும் போது, கடுமையான போட்டி என்பது 2வது, மூன்றாவது இடங்களில் உள்ள கட்சிகளுக்கு இடையேதான் இருக்கும்" என்கிறார் அவர்.

வாக்கு சதவீதம் அதிகரிப்பு என்பது தேர்தலில் வெற்றி - தோல்வியை அறிந்துகொள்ள மிக முக்கியமான அளவுகோல் என்கிறது மூத்த பத்திரிகையாளர் பிரணாய் ராயும் தோரப் ஆர். சோபரிவாலாவும் இணைந்து எழுதிய 'தீர்ப்பு' (The Verdict) நூல். அதாவது, அடிமட்டத்தில் மிகச் சிறப்பான தொண்டர்களைக் கொண்ட கட்சிகளைப் பொறுத்தவரை குறைவான வாக்குப் பதிவு என்பது சாதகமான அம்சம். ஏனென்றால், அந்தத் தொண்டர் படையினர் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடிவர்களை கண்டிப்பாக வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்திருப்பார்கள். தானாக வருபவர்களின் எண்ணிக்கை அந்தத் தேர்தலில் குறைவாக இருக்கும். ஆகவே, அந்தத் தேர்தல் அடிமட்டத்தில் கட்டமைப்புடைய கட்சிக்கு சாதகமாக இருக்கும். அதே நேரம், வாக்குப் பதிவு அதிகமாக இருந்தால், யாரும் தூண்டாமலேயே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவுசெய்கிறார்கள்; அவர்கள் அடிமட்டத்தில் கட்டமைப்புடைய கட்சியைத் தாண்டிய வாக்காளர்கள். எனவே, வாக்குப் பதிவு அதிகமாக இருப்பது அடிமட்டத்தில் கட்டமைப்புடைய கட்சிக்கு சாதகமாக இருக்காது என்கிறது அந்த நூல்.

அதாவது, கீழ் மட்டத்தில் சிறப்பான கட்டமைப்புடைய கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது என்றும், வாக்குப் பதிவு குறைவாக உள்ள தொகுதிகள் அந்தக் கட்சிக்கு சாதகமானவை என்றும் வாக்குப் பதிவு அதிகம் உள்ள தொகுதிகள் காங்கிரசிற்குச் சாதகமானவை என்றும் இந்த நூல் கூறுகிறது. ஆனால், இது அகில இந்திய அளவிலான தேர்தல் முடிவுகளை வைத்து உருவாக்கப்பட்ட கருத்து. இது தமிழ்நாட்டிற்குப் பொருந்துமா என்பதை வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தலாம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு