சிஎஸ்கே வரலாற்று வெற்றி: சாம்சன் அணுகுமுறை எவ்வாறு மாறுபட்டு தனித்து நிற்கிறது?

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் தொடரின் 'எல் கிளாசிகோ' போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். முதலில் பேட்டிங் செய்து 207 ரன்கள் எடுத்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸை 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது.

ஐபிஎல் வரலாற்றில் ரன் அடிப்படையில் சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய வெற்றி இது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய தோல்வி இது.

சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கினார் சஞ்சு சாம்சன். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணி ஒரு நல்ல ஸ்கோரை எடுக்க உதவினார்.

தன்னுடைய இந்த சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்தார் சாம்சன். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல் சதம் அடித்த முதல் சிஎஸ்கே வீரர் இவர்தான். ஒரே சீசனில் 2 சதங்கள் அடிக்கும் முதல் விக்கெட் கீப்பர், இரண்டாவது சிஎஸ்கே வீரர் இவர்தான்.

அதுமட்டுமல்லாமல், சிஎஸ்கே வரலாற்றில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றிருக்கிறார். ஷேன் வாட்சன் 43 இன்னிங்ஸ்களில், முரளி விஜய் 70 இன்னிங்ஸ்களில், ருதுராஜ் கெய்க்வாட் 77 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் அடித்திருக்கும் நிலையில், சூப்பர் கிங்ஸுக்காக ஏழே இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் அடித்திருக்கிறார் சாம்சன்.

சாம்சனின் இந்த சாதனை சதம் பல்வேறு வகையில் இந்தப் போட்டியின் முடிவை தீர்மானித்தது. மற்ற பேட்டர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்த தடுமாறியபோது சாம்சனின் ஆட்டம் தனித்து நிற்கிறது. சூப்பர் கிங்ஸின் மற்ற எந்த வீரரும் 25 ரன்களைத் தாண்டவில்லை. மும்பை இந்தியன்ஸுக்காக 30+ ஸ்கோர் அடித்த திலக் வர்மா, சூர்யகுமார் இருவரும் கூட 130-க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் தான் ஆடினார்கள். இப்படியொரு போட்டியில் 187.03 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 101* ரன்கள் எடுத்திருக்கிறார் சாம்சன்.

அவரது அணுகுமுறை எதனால் மற்ற வீரர்களிடமிருந்து தனித்து தெரிகிறது? அவரது இந்த இன்னிங்ஸ் எப்படி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது? அலசுவோம்.

சுழலுக்கு எதிராக பூ பாதை, வேகப்பந்துக்கு எதிராக சிங்கப் பாதை

வழக்கமாக ஸ்பின்னர்களுக்கு சவால் கொடுக்கும் வான்கடே மைதானம் இந்தப் போட்டியில் அவர்களுக்கு நன்கு உதவியது. இந்த போட்டியில் ஸ்பின்னர்கள் வீசிய 16 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. வேகப்பந்துவீச்சாளர்கள் 7 விக்கெட்டுகள் தான் வீழ்த்தினார்கள். காரணம், இந்த ஆடுகளம் சற்று வழக்கத்துக்கு மாறாக இருந்தது.

பவர்பிளேவில் 200+ ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருந்தார் சாம்சன். பும்ரா வீசிய ஸ்லோயர் பவுன்சரை கூட அநாயசமாக புல் செய்து சிக்ஸர் அடித்திருந்தார். ஆனால், எப்போது மும்பை இந்தியன்ஸ் ஸ்பின்னர்கள் பந்துவீசத் தொடங்கினார்களோ, மறுமுணையில் இருந்த பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தத் தொடங்கினார்களோ, அப்போதே சாம்சன் பூ பாதையைக் கையில் எடுத்தார். ஜேமி ஓவர்டன் 7வது பேட்டராக இருந்ததால், பேட்டிங் ஆப்ஷன்கள் குறைவாக இருந்ததால், தான் நிலைத்து நிற்கவேண்டியதன் அவசியத்தை சாம்சன் உணர்ந்துகொண்டு நிதானமாக விளையாடத் தொடங்கினார்.

மிடில் ஓவர்களில் - அதாவது 7 முதல் 15 வரையிலான ஓவர்களில் சாம்சன் அடித்தது 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர். அந்த சிக்ஸர் மட்டும் கசன்ஃபார் பந்தில் வந்தது. மற்றபடி சான்ட்னர் மற்றும் கசன்ஃபார் பந்துகளில் அவர் ரிஸ்க் எடுக்கவில்லை. அந்த ஓவர்களில் சர்ஃபராஸ் கான், டெவால் பிரெவிஸ், கார்த்திக் ஷர்மா ஆகியோர் பவுண்டரிகள் அடித்துக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு வழிவிட்டார் சாம்சன்.

என்னதான் இந்தக் காலகட்டத்தில் நிதானம் காட்டியிருந்தாலும், அணியின் ரன்ரேட் பெருமளவு வீழாத வகையிலும் ஆடினார் சாம்சன். மிடில் ஓவர்களில் 21 பந்துகளை சந்தித்து 31 ரன்கள் எடுத்த சாம்சன், சரியாக அஷ்வனி குமார் பந்துவீச வந்தபோது பவுண்டரிகள் அடித்தார். அதனால் தான் சூப்பர் கிங்ஸ் ரன்ரேட் எந்த இடத்திலும் 9.7-க்கும் குறையாமல் சீராக இருந்தது.

சான்ட்னர் மற்றும் கசன்ஃபாருக்கு எதிராக இந்தப் போட்டியில் சாம்சன் சந்தித்தது 14 பந்துகள். அதில் அவர் 18 ரன்கள் எடுத்தார். என்னதான் நிதானமாக ஆடினாலும், அவர் பந்துகளையும் வீணடிக்கவில்லை. அந்த 14 பந்துகளில் ஒரேயொரு டாட் பால் மட்டுமே ஆடினார். 12 பந்துகளில் சிங்கிள்கள் எடுத்து சீராக ஸ்டிரைக்கை ரொடேட் செய்துகொண்டே இருந்தார் சாம்சன்.

15வது ஓவர் முடிந்தபோது ஸ்பின்னர்கள் இருவரின் ஸ்பெல்களும் முழுமையாக முடிந்துவிட்டன. அதன்பிறகு வேகப்பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களை வீச வர, சிங்கப் பாதையைத் தேர்ந்தெடுத்தார் சாம்சன். கடைசி 5 ஓவர்களில் 18 பந்துகளை சந்தித்த அவர், அதில் 39 ரன்கள் எடுத்தார். அதனால் தான் சூப்பர் கிங்ஸ் 200 ரன்களைக் கடந்தது.

இந்தப் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 128.6 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிய சாம்சன், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 207.5 என்ற ஸ்டிரைக் ரேட்டில் (40 பந்துகளில் 83 ரன்கள்) அதிரடி காட்டினார். பும்ராவுக்கு எதிராகவும் கூட 153.8 என்ற ஸ்டிரைக் ரேட்டில் (13 பந்துகளில் 20 ரன்கள்) விளையாடினார் அவர்.

ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அணுகுமுறையை மாற்றினார்

சாம்சனின் இந்த அணுகுமுறை மாற்றம் வெறும் ஸ்பின்னர்களின் சிறப்பான பந்துவீச்சால் மட்டும் ஏற்படவில்லை. ஆடுகளத்தின் தன்மை சற்று மாறுபட்டதுமே அதற்கு முக்கியக் காரணம்.

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை அரையிறுயிதிப் போட்டி நடந்த அதே ஆடுகளத்தில் தான் இந்தப் போட்டியும் நடந்தது. அன்று 499 ரன்கள் எடுக்கப்பட்ட ஆடுகளம் என்பதால், இந்தப் போட்டியிலும் அதற்கு இணையாக ரன்மழை பொழியும் என்று கருதப்பட்டது. ஆனால், சீக்கிரமே ஆடுகளத்தின் தன்மை மாறத் தொடங்கியது.

சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸ் முடிந்ததும் பேசிய மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர் அஷ்வனி குமார், "சரியான லென்த்தில் பந்துவீசும்போது ஒருசில பந்துகள் நின்று செல்கின்றன" என்று கூறினார். அது பேட்டர்களுக்கு சற்று சவால் கொடுக்கும். அதுவும் சாம்சனின் அணுகுமுறையில் தாக்கம் ஏற்படுத்தியது. அஷ்வனி குமார் பந்துவீச்சில் பிரெவிஸ் அவுட் ஆனது அப்படியொரு பந்தில் தான்.

இதை மற்ற சிஎஸ்கே பேட்டர்கள் சரியாக கணித்து அதற்கேற்ப ஆடவில்லை. அந்த இடத்தில் சாம்சனும் நிலைத்து நிற்காமல் விக்கெட்டை இழந்திருந்தால் அதில் இருந்து மீண்டு வருவது கடினமாக இருந்திருக்கும்.

இந்தப் போட்டியில் அதிரடியான தொடக்கம் கிடைத்தாலும், சீரான இடைவெளியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட்டுகளை இழந்துகொண்டுதான் இருந்தது. சாம்சனின் 101 ரன்களுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச ஸ்கோர் எடுத்தது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான் - 22 ரன்கள். மற்ற வீரர்கள் அதற்கும் குறைவான ரன்னே எடுத்தார்கள். இப்படி வேறு யாருமே பெரிய இன்னிங்ஸ் விளையாடாத நிலையில் இன்னொரு முணையில் சாம்சன் நிலைத்து நிற்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சூப்பர் கிங்ஸ் 200 ரன்களைக் கடந்திருக்காது. அது மிடில் ஓவர்களில் மும்பை பௌலர்களின் கை ஓங்குவதற்குக் காரணமாக அமைந்திருக்கும். ஆனால், சாம்சன் அதற்கு விடவில்லை.

போட்டி முடிந்த பிறகு பேசிய சாம்சன், "இது வழக்கமான வான்கடே ஆடுகளம் போல இல்லை. பந்து சற்று நின்று வந்தது. அதனால், அந்தச் சூழலில் இருந்து அணிக்கு என்ன தேவை என்பதே முக்கியமாக இருந்தது. நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்தோம், எனவே களத்தில் நிலைத்து நிற்கும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை இருப்பது அவசியம் என்று நினைத்தேன்; அதைத்தான் நான் செய்ய முயன்றேன், அதுவே இன்றும் நடந்தது." என்று குறிப்பிட்டார்.

பவர்பிளேவில் 15 பந்துகளில் 31 ரன்கள், மிடில் ஓவர்களில் 21 பந்துகளில் 31 ரன்கள், டெத் ஓவர்களில் 18 பந்துகளில் 39 ரன்கள் என சூழ்நிலைக்கு ஏற்ப தன் அணுகுமுறையை மாற்றி தன் இன்னிங்ஸை சிறப்பாகக் கட்டமைத்தார் சாம்சன்.

அகீல் ஹொசைன் ஆடுவதற்கும் காரணம்

சாம்சனின் மிடில் ஓவர் அணுகுமுறை இன்னொரு விதத்தில் சூப்பர் கிங்ஸுக்கு மிகப் பெரிய உதவி புரிந்தது. கார்த்திக் ஷர்மாவுடன் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் தான் இந்தப் போட்டியில் அகீல் ஹொசைன் 'இம்பேக்ட்' வீரராகக் களமிறங்குவதற்குக் காரணமாக அமைந்தது.

11 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே, சப்ஸ்டிட்யூட் வீரர்கள் பட்டியலில் இருந்த பிரஷாந்த் வீரை பேட்டிங்குக்குத் தயாராக்கியது. அந்த இளம் வீரர் தன் உடைமைகளை அணிந்து பேட்டிங் செய்ய தயாராக வார்ம் அப் செய்துகொண்டிருந்தார்.

சாம்சன் - கார்த்திக் ஷர்மா ஜோடி விரைவில் உடைந்திருந்தால், பிரஷாந்த் வீர் களமிறக்கப்பட்டிருப்பார். ஆனால், அந்த ஜோடி 35 பந்துகள் தாக்குப்பிடித்து 43 ரன்கள் எடுத்தது. 17வது ஓவர் வரை அவர்கள் தாக்குப்பிடித்து ஆடியதால், கடைசி 3 ஓவர்களுக்கு ஓவர்டன் மற்றும் அகீல் ஹொசைன் போதுமென்று முடிவு செய்து, பிரஷாந்த் வீரை களமிறக்கும் முடிவை மாற்றினார்கள். அகீல் ஹொசைனை இம்பேக்ட் வீரராகக் களமிறக்கினார்கள். அவர், 4 விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை அணி அவர்களின் மிகப்பெரிய ஐபிஎல் தோல்வியை சந்திக்க மிகமுக்கியக் காரணமாக விளங்கினார்.

ஒருவேளை பிரஷாந்த் வீர் களமிறங்கியிருந்தால் முகேஷ் சவுத்ரிக்கு சரியான பவர்பிளே பார்ட்னர் கிடைத்திருக்கமாட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும். அகீல் வந்ததுதான் அதைத் தடுத்தது என்றால், சாம்சன் - கார்த்திக் ஷர்மா ஜோடி நிலைத்து நின்றதுதான் அகீல் ஹொசைன் இந்தப் போட்டியில் ஆடுவதற்குக் காரணமாக அமைந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு