இஸ்ரோ ராக்கெட் தொழில்நுட்பங்களை தனியாரிடம் கொடுக்க திட்டமா? 9 தொழிற்சங்கங்களின் கடிதம் எழுப்பும் கேள்வி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அமரேந்திர யர்லகடா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தனியார்மயமாகிறதா என்ற விவாதம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதுதொடர்பாக தெளிவுபடுத்தக் கோரி, அந்நிறுவனத்தைச் சேர்ந்த 9 தொழிலாளர் சங்கங்கள் இஸ்ரோ தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
எனினும், இது "அடிப்படை ஆதாரமற்றது" என்று இஸ்ரோ தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
இது குறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (இன்-ஸ்பேஸ்) தலைவர் பவன் குமார் கோயங்கா தனது 'எக்ஸ்' பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.
''இந்திய விண்வெளித் துறைக்கு இஸ்ரோவே முதுகெலும்பாகத் திகழும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பப் பரிமாற்றம் என்பது கடந்த காலத்திலும் நடந்துள்ளது, எதிர்காலத்திலும் தொடரும் என்று மட்டுமே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) சார்பில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட பல தொழில்நுட்பங்கள், வணிக ரீதியான பயன்பாட்டிற்காக தொடக்க நிலை நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் பத்திரிகை தகவல் பணியகத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா 'பிபிசி'யிடம் தெரிவித்தார்.
'தனியார் மயமாக்கல்' விவாதம் எங்கே தொடங்கியது? பவன் கோயங்கா என்ன கூறினார்?

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 5 அன்று ஜி.எஸ்.எல்.வி. (GSLV) ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்த நிகழ்வு நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரோவிலுள்ள 9 தொழிலாளர் சங்கங்கள் இஸ்ரோ தலைவர் வி. நாராயணனுக்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதின.
தனியார்மயமாக்கல் மற்றும் எதிர்காலத்தில் இஸ்ரோவின் பங்கு போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களை முன்வைத்து ஊழியர்கள் இந்தக் கடிதத்தை வெளியிட்டனர்.
இஸ்ரோவில் பணிபுரியும் 18,100 ஊழியர்களில் 27 சதவீதத்தினரான 5,000 ஊழியர்களைத் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தொழிலாளர் சங்கங்கள் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இன்-ஸ்பே்ஸ் (IN-SPACe) அமைப்பின் தலைவர் பவன் குமார் கோயங்கா வெளியிட்ட கருத்துகள்தான் இந்த விவாதத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
கடந்த ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற 'பிசினஸ் டுடே' நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
''எதிர்காலத்தில் ராக்கெட்டுகளை இஸ்ரோ நேரடியாகத் தயாரிக்காது. அவற்றைத் தயாரிக்கும் பொறுப்பு முழுக்க முழுக்கத் தனியார் நிறுவனங்களுக்கும் அல்லது பொதுத்துறை நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுவிடும். ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் பொதுத்துறை நிறுவனங்களின் மூலமாகத்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
வழக்கமான தினசரி பயன்பாட்டுக்கான ஏவுதள ராக்கெட்டுகளைத் தவிர, ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் குறிப்பிட்ட சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்படும் ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் மட்டுமே இஸ்ரோ கவனம் செலுத்தும். அதன் பிறகும் அந்தத் தொழில்நுட்பம் தனியார் துறைக்குக் கைமாற்றப்படும்'' என்று பவன் குமார் கோயங்கா தெரிவித்தார்.
ஏற்கனவே 120 வகையான தொழில்நுட்பங்கள் தனியார் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பவன் குமார் கோயங்காவின் இந்தக் கருத்துகள் இந்திய விண்வெளித் துறையில் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்தே, பவன் குமார் கோயங்காவின் கருத்துகள் குறித்து எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தொழிலாளர் சங்கங்கள் இஸ்ரோ தலைவரைக் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டன.
''பவன் குமார் கோயங்காவின் கருத்துகள் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு, விண்வெளி ஆணையம் அல்லது விண்வெளித் துறை தரப்பில் ஏதேனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்'' என்று தொழிலாளர் சங்கங்கள் தங்களது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன.
''எல்.வி.எம்.-3 , பி.எஸ்.எல்.வி. , எஸ்.எஸ்.எல்.வி. (SSLV) போன்ற ராக்கெட்டுகளின் தொழில்நுட்பங்கள் தனியார் துறைக்கு மாற்றப்படுகின்றனவா என்பது குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்'' என்றும் சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராக்கெட் தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கான திட்டங்கள்

பட மூலாதாரம், skyrootaerospace
இஸ்ரோவுக்குச் சொந்தமான பல்வேறு தொழில்நுட்பங்களை மத்திய அரசு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக பவன் குமார் கோயங்கா கூறும் முன்பே, பத்திரிகை தகவல் பணியகம் அதுகுறித்து தெரிவித்தது.
தனியார் துறையில் ராக்கெட்டுகளின் தயாரிப்பு மற்றும் ஏவுதலுக்காகப் பி.எஸ்.எல்.வி மற்றும் எல்.வி.எம் மார்க்-3 ஆகியவற்றின் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்காக இன்-ஸ்பேஸ் திட்டங்களை வகுத்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
தற்போது இதே விவகாரம் தொடர்பாக அரசாங்கம் என்ன மாதிரியான கொள்கை சார்ந்த முடிவுகளை எடுத்துள்ளது என்பதை விளக்குமாறு இஸ்ரோ தொழிலாளர் சங்கங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
எதிர்காலத்தில் இஸ்ரோவின் பங்கு என்னவாக இருக்கும்? பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்காலத்தில் ராக்கெட் தயாரிப்புப் பணியில் இருந்து விலக்கப்படுமா? பொதுமக்களின் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் தனியார் துறைக்குத் தாரைவார்க்கப்படுமா? இஸ்ரோவின் நிறுவனக் கட்டமைப்பு மீது இதன் தாக்கம் எப்படி இருக்கும்? தொழிலாளர் சங்கங்களுடன் இது குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பன போன்ற பல கேள்விகளை ஊழியர்கள் தங்களது கடிதத்தில் எழுப்பியுள்ளனர்.
ஊழியர்களால் எழுப்பப்பட்ட இந்தச் சந்தேகங்கள் குறித்துப் பவன் குமார் கோயங்கா மற்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் ஆகியோரிடம் பிபிசி மின்னஞ்சல் வாயிலாகக் கருத்துகளைக் கோரியுள்ளது. அவர்களிடமிருந்து பதில் வந்ததும் இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.
பவன் குமார் கோயங்கா, இஸ்ரோ கூறியது என்ன?
இந்த முழு விவகாரம் குறித்தும், பவன் குமார் கோயங்கா மற்றும் இஸ்ரோ தரப்பில் 'எக்ஸ்' தளம் வாயிலாக அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரோவின் எதிர்காலம் குறித்து ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருவதாகவும், இந்திய விண்வெளித் துறையில் இஸ்ரோவின் முக்கியப் பங்கைக் குறைக்கும் எந்தவொரு எண்ணமும் இல்லை என்றும் பவன் குமார் கோயங்கா தெளிவுபடுத்தினார்.
இந்திய விண்வெளித் துறையின் முதுகெலும்பாக இஸ்ரோ எப்போதும் திகழும் என்றும், இந்தத் துறையை மேலும் விரிவுபடுத்துவதற்காகவே கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
''ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் பிற கட்டமைப்பு அமைப்புகளைத் தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் தயாரித்தால், நவீன தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு , அறிவியல் தொடர்பான திட்டங்கள் மற்றும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் இஸ்ரோ முழுமையாகக் கவனம் செலுத்தும். இந்த வகையான உயர் தொழில்நுட்பங்களை நேரடியாக உருவாக்குவது தனியார் துறைக்குச் சாத்தியமில்லை'' என்று பவன் கோய்கா தெரிவித்தார்.
விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து இஸ்ரோ தரப்பிலும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
''இஸ்ரோ எதிர்காலத்தில் ஆற்றப் போகும் பங்கு குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இஸ்ரோ தனியார்மயமாக்கப்படும் என்றோ அல்லது அதன் பங்கு குறைக்கப்படும் என்றோ பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை'' என்று இஸ்ரோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
'இஸ்ரோவின் பங்கு குறைக்கப்படவில்லை'

பட மூலாதாரம், Getty Images
விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகரிக்கப்படுவதால் இஸ்ரோவின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதில்லை என்று அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
''இந்திய விண்வெளித் துறையை அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நகர்த்துவதற்கு இஸ்ரோவுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்'' என்று இஸ்ரோ கூறியுள்ளது.
விண்வெளித் துறையில் இந்தியா நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்குத் தனியார் துறையின் பங்கு அவசியமானது என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டான 'விக்ரம்-1' ராக்கெட்டை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சமீபத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
''இஸ்ரோவையும், தனியார் விண்வெளித் துறையையும் தனித்தனியாகப் பார்க்கக் கூடாது; அவை இரண்டும் இணைந்தே செயல்பட வேண்டும். இதில் இஸ்ரோவே முதுகெலும்பாகத் திகழ்கிறது, அதேசமயம் தனியார் நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டும் கைகோர்த்தால் மட்டுமே இந்திய விண்வெளித் துறை மேலும் உயரங்களை எட்ட முடியும்'' என்று அவர் கூறினார்.
விண்வெளி கொள்கை 'தனியார் துறைக்கு' ஊக்கம் அளிக்கிறது

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டில் 'இந்திய விண்வெளி கொள்கையை' அறிமுகப்படுத்தியது. 2024 பிப்ரவரியில் விண்வெளித் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக, விண்வெளித் துறையில் ஏராளமான புத்தாக்க நிறுவனங்கள் உருவாயின. தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றுக்கு ஊக்கமளிப்பதற்கும் 'இன்-ஸ்பேஸ்' அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 2033 ஆம் ஆண்டுக்குள் 45 பில்லியன் டாலர்களை (சுமார் 4,248,000 கோடி ரூபாய்) எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 11 பில்லியன் டாலர் (சுமார் 1,038,000 கோடி ரூபாய்) மதிப்பிலான ஏற்றுமதி இருக்கும் என்று இந்தியா கணக்கிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூலை நிலவரப்படி, இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் சுமார் 8.4 பில்லியன் டாலர்களாக உள்ளதாகப் பத்திரிகை தகவல் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒரே ஒரு விண்வெளித் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனம் (ஸ்டார்ட்அப்) மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி இந்திய புத்தாக்க நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் 618.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் 58,340 கோடி ரூபாய்) எட்டியுள்ளன.
கடந்த 2021-22 காலகட்டத்தில் இந்த முதலீடுகள் 100.5 மில்லியன் டாலர்களாக (சுமார் 9,480 கோடி ரூபாய்) மட்டுமே இருந்தன, ஆனால் இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி அவை ஆறு மடங்காக அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டு ஆகஸ்ட் நிலவரப்படி, இந்தியாவில் 440 விண்வெளித் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.பி.ஐ.ஐ.டி. ஸ்டார்ட்அப் இந்தியா போர்டல் (DPIIT Startup India portal) புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி பிஐபி செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் உள்ள விண்வெளித் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் உட்பட 52 அரசு சாரா நிறுவனங்கள் விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான 113 அனுமதிகளைப் பெற்றுள்ளன.
''தனியார் துறையின் முன்னேற்றம் என்பது இந்திய விண்வெளித் துறைக்கு ஒரு பெரும் 'ஊக்கமருந்தாக' அமையும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, தனியார் விண்வெளித் துறைக்குள் பில்லியன் டாலர் கணக்கில் முதலீடுகள் வந்துள்ளன என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன'' என்று பவன் குமார் சந்தனா பிபிசியிடம் தெரிவித்தார்.
இஸ்ரோ பயன்படுத்திவரும் இயந்திரங்களில் 80 சதவீதக் கூறுகளைத் தனியார் நிறுவனங்களே தயாரித்து வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































