இந்தியாவுக்கு எதிராக டிரம்பிடம் புதிய ஆயுதம் - 100% வரி விதிக்கப்படுமா?

இந்தியா, டிரம்ப், இறக்குமதி வரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிப்பதற்கான ஏற்பாட்டைக் கொண்ட மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

டிரம்பின் கையெழுத்தை தொடர்ந்து இம்மசோதா சட்டமாக மாறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராகவும் 100 சதவீதம் வரை வரி விதிப்பதற்கான அதிகாரம் டிரம்பிற்கு கிடைத்துள்ளது.

வியாழக்கிழமை இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்திய மாதங்களில் இவ்விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. "இருதரப்பு உறவுகளுக்கு மட்டுமல்லாமல், சர்வதேச எரிசக்தி சந்தையிலும் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை இந்தியத் தரப்பு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது" என இந்திய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்தப் புதிய நடவடிக்கை, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் முதல் 5 நாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கி ஆகியவை மீது புதிய வரிகள் விதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்கா இந்த புதிய அதிகாரங்களை பயன்படுத்துமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; இருப்பினும், இது அமெரிக்காவிற்கு ஒரு சக்திவாய்ந்த ஆயுதத்தை வழங்கியுள்ளது.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு ஐந்தில் ஒரு பங்காகும். இதன்படி, அமெரிக்காவே இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையாக விளங்குகிறது. இத்தகைய சூழலில், இறக்குமதி வரிகள் மேலும் உயர்த்தப்பட்டால் அது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.

இந்தியா மீதான டிரம்பின் கொள்கை பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுடனான உறவு காரணமாக மட்டுமே டிரம்ப் உண்மையிலேயே இந்தியா மீது கோபமாக இருக்கிறாரா அல்லது இந்த விவகாரம் அதையும் தாண்டியதா என்ற கோணத்திலும் ஆராயப்பட்டு வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பதற்கு ரஷ்ய எண்ணெய் மட்டுமே காரணம் அல்ல என, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதருமான நிருபமா மேனன் ராவ் கருதுகிறார்.

இந்தியா, டிரம்ப், இறக்குமதி வரி, பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் பாஜக அரசு அமெரிக்காவின் குடியரசுக் கட்சியுடன் இணக்கமாக உணர்ந்து வந்தது; ஆனால், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் நிலைமை முற்றிலும் மாறியுள்ளதாகத் தெரிகிறது

விவகாரம் ரஷ்யாவையும் தாண்டியது

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இது குறித்து எக்ஸ் தளத்தில் தனது கருத்தைப் பதிவிட்ட நிருபமா மேனன் ராவ், "கூட்டாண்மை என்பதன் பொருள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான வேறுபாட்டை டிரம்பின் கொள்கை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்கா பெரும்பாலும் மூலோபாய ஒத்துழைப்பை அரசியல் கடமையுடன் இணைத்துப் பார்க்கிறது. அதே வேளையில், இந்தியா இக்கூட்டாண்மையை இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பாகவே பார்க்கிறது. ரஷ்யா, இரான் மற்றும் சீனாவைக் கையாளுவதில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவும். இத்தகைய கருத்து வேறுபாடுகள், பகிரங்கமாக விசுவாசம் தொடர்பான பரிசோதனைகளாக மாற்றப்படும்போது, ராஜதந்திரம் என்பது உரையாடலாக இல்லாமல் வெறும் பாசாங்குத்தனமாக மாறிவிடுகிறது, சமரசம் அல்லது நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடுகின்றன."

நிருபமா மேனன் ராவ் மேலும் கூறுகையில், "இந்தியா புண்பட்ட தேசிய உணர்வுடன் எதிர்வினையாற்றத் தேவையில்லை. மூலோபாயத் தன்னாட்சியின் உண்மையான சோதனை என்பது, அத்தகைய அழுத்தம் எந்த அளவிற்கு விமர்சிக்கப்படுகிறது என்பதில் இல்லை, மாறாக ஒரு நாடு அதை எந்த அளவிற்குத் தாங்கிக் கொள்ள முடியும் என்பதில்தான் உள்ளது. இதற்கு பாதுகாப்புத் தளவாடங்களுக்கான விநியோக ஆதாரங்களைப் பன்முகப்படுத்துதல், மேம்பட்ட எரிசக்திப் பாதுகாப்பு, தொழில்நுட்பத் திறன், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் பின்னடைவுகளைத் தாங்கும் திறன் ஆகியவை தேவைப்படுகின்றன. இந்த அடித்தளங்கள் இல்லாமல், தன்னாட்சி என்பது சார்புநிலையை அடிப்படையாகக் கொண்ட வெறும் சொல்லாடலாகவே இருக்கும் .

"ஆனால் அமெரிக்காவும் தனது நிலைப்பாட்டில் உள்ள முரண்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆசியாவில் அமெரிக்காவிற்குச் சாதகமான அதிகார சமநிலையைப் பேணுவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது; ஆனால் மறுபுறம் புதுடெல்லி தனது சுதந்திரமான மூலோபாய சிந்தனையையும் முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்த விரும்புகிறது. ஒரு வலிமையான இந்தியாவுக்கான தேவையும், அமெரிக்க கொள்கைகளுக்கு இணங்கி நடக்கும் ஒரு இந்தியாவுக்கான எதிர்பார்ப்பும் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை."

இது குறித்து மேலும் எழுதியுள்ள நிருபமா மேனன் ராவ், "இந்த உறவு மிகவும் முக்கியமானது. யார் யாரிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறார்கள் என்ற விவாதத்துடன் மட்டுமே இதைச் சுருக்கிவிட முடியாது. தொழில்நுட்பம், முதலீடு மற்றும் ஆசியாவில் அதிகாரச் சமநிலைக்கு இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை. அதேபோல் சீன ஆதிக்கத்தை எதிர்கொள்ளக்கூடிய திறமையான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியா அமெரிக்காவிற்குத் தேவை."

"இரு நாடுகளுக்கும் நட்புறவு குறித்த உணர்ச்சிப்பூர்வமான உறுதிமொழிகள் தேவையில்லை. இரு நாடுகளுக்கும் தங்களது வரம்புகள் குறித்த ஒரு நிலையான புரிதலே தேவைப்படுகிறது. இந்தியா தனது மூலோபாய சுயாட்சியைத் தேசியத் திறனாக வலுப்படுத்த வேண்டும்; அதேவேளையில், கூட்டாண்மை என்பது மற்றொரு தரப்பைப் பணிய வைப்பதற்கான வேறு பெயர் அல்ல என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகளை முற்றிலுமாக தீர்ப்பது நமது வேலை அல்ல, மாறாக ஒவ்வொரு கருத்து வேறுபாடும் இரு நாடுகளின் உறவின் மீதான தீர்ப்பாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதே ஆகும்."

இந்தியா, டிரம்ப், இறக்குமதி வரி, சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்

அமெரிக்கா எத்தகைய இந்தியாவை விரும்புகிறது?

அமெரிக்கா, சீனாவுக்கு வழங்கிய அதே அளவிலான பொருளாதாரச் சலுகைகளை இந்தியாவுக்கு வழங்காது என்றும், சீனா பின்னர் அமெரிக்காவின் முக்கியப் போட்டியாளராக உருவெடுத்ததாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லேண்டோ இந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியிருந்தார்.

புதுடெல்லியில் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் குறித்து நடைபெற்ற 'ரைசினா உரையாடல்' மாநாட்டில் லேண்டோ பேசுகையில், "20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிடம் நாங்கள் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம் என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

லேண்டோவின் இந்த அறிக்கை, அமெரிக்கா இந்தியாவுடனான கூட்டாண்மையை எவ்வாறு பார்க்கிறது என்ற கேள்வியை எழுப்பியது.

புதுடெல்லியில் உள்ள 'கொள்கை ஆராய்ச்சி மையத்தின்' மூலோபாய ஆய்வுகளுக்கான பேராசிரியராகவும், பெர்லினில் உள்ள 'ராபர்ட் போஷ் அகாடமியின்' ஆய்வாளராகவும் உள்ள பிரம்மா செல்லானி, 'நீர்: ஆசியாவின் புதிய போர்க்களம்' (Water: Asia's New Battleground) என்பது உட்பட ஒன்பது புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்த ஆண்டு ஜூன் 3 அன்று ப்ராஜெக்ட் சிண்டிகேட்டில் செல்லானி எழுதுகையில், "2025-இல் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு மிக முன்பே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் வளர்ந்து வரும் மூலோபாய இருப்பு, இப்பகுதியில் இந்தியாவின் நிலையைத் தொடர்ந்து பலவீனப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவின் அண்டை நாடுகளில் அமெரிக்கா கடைப்பிடித்த கொள்கைகள், இந்தியாவின் நலன்களைப் புறக்கணிப்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் நேரடியாக இந்திய நலன்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளன." என்று குறிப்பிட்டுள்ளார்.

"உதாரணத்திற்கு வங்கதேசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். 2024-இல் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட போது, அமெரிக்கா அந்த ஆட்சி மாற்றத்தை ஆதரித்தது. இதனால் கடுமையான ஆபத்துகள் ஏற்படும் என்பதை இந்தியா முன்கூட்டியே அறிந்திருந்தது; இப்போது அந்த ஆபத்துகள் வெளிப்பட்டுள்ளன. இந்தியாவின் கிழக்கு எல்லையின் நிலைத்தன்மைக்கு இப்போது அச்சுறுத்தல் உருவாகியுள்ளது."

"அடுத்து மியான்மர் நிலைமை. 2021-இல் சிவில் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்றியதிலிருந்து, அமெரிக்கா அந்த ராணுவ ஆட்சிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில் கடுமையான பொருளாதாரத் தடைகளும், கிளர்ச்சிக் குழுக்களுக்கு 'உயிர்க்கொல்லி அல்லாத' ராணுவ உதவிகளை வழங்குவதும் அடங்கும். இத்தகைய அமெரிக்க நடவடிக்கைகள், இந்தியாவின் வடகிழக்கு எல்லைக்கு அருகே பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதைப் பொருட்படுத்தாமல் அமெரிக்கா இவற்றையெல்லாம் செய்துள்ளது."

இந்தியா, டிரம்ப், இறக்குமதி வரி, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்கு எதிராக 100 சதவீத வரி விதிப்பதற்கான ஏற்பாட்டைக் கொண்ட புதிய மசோதாவுக்கு, ஜனநாயகக் கட்சி எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்

இந்தியா: கூட்டாளியா அல்லது போட்டியாளரா?

"அமெரிக்கா தனது மூலோபாய முன்னுரிமைகளில் நேபாளத்தையும் தனியாகச் சேர்க்கத் தொடங்கியுள்ளது" என்று செல்லானி எழுதுகிறார். புவியியல், கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியாவுடன் நேபாளம் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது; ஆனால் அமெரிக்கா இப்போது அதைத் தனது இந்தியக் கொள்கையின் ஒரு பகுதியாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அதை ஒரு தனித்துவமான மூலோபாய முன்னுரிமையாகப் பார்க்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க உயர் அதிகாரிகள் காத்மாண்டிற்கு அடிக்கடி சென்று வருகின்றனர்; மேலும் பல நேரங்களில் இந்தப் பயணங்களில் அவர்களின் வழக்கமான புதுடெல்லிக்கான வருகை தவிர்க்கப்படுகிறது."

"டிரம்ப் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளார்; குறிப்பாகப் பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவை வளர்ப்பதற்கான அவரது முயற்சிகள் மூலம் நிலைமை தீவிரமடைந்துள்ளது. டிரம்பின் குடும்ப உறுப்பினர்களும் வணிகக் கூட்டாளிகளும் பாகிஸ்தானில் அதிக லாபம் தரும் வணிக ஒப்பந்தங்களைச் செய்துள்ளனர். இதுவே, இந்திய துணைக்கண்டத்தில் பழைய மற்றும் ஆபத்தான மூலோபாயக் கூட்டணிகளை டிரம்ப் நிர்வாகம் மீண்டும் புதுப்பிப்பதற்குப் போதுமான காரணமாகத் தெரிகிறது."

"அமெரிக்காவும் சீனாவிடம் ஒரு இணக்கமான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியுள்ளது" என்கிறார் செல்லானி. "இரு வல்லரசுகளுக்கும் இடையிலான மூலோபாயப் போட்டி இன்னமும் தீவிரமாக இருந்தாலும், சமீபத்தில் சில விவகாரங்களில் டிரம்பின் மென்மையான போக்கும் சமரச முயற்சிகளும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளன. இது குறிப்பாக இந்தியாவைப் பாதிக்கிறது; ஏனெனில் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு ஒரு சமநிலையை வழங்கும் இந்தியாவின் திறனே, அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் முக்கியத்துவமாக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது."

தெற்காசியாவில் எந்தவொரு தனி சக்தியும் அதிக செல்வாக்கு பெறுவதை அமெரிக்கா தடுக்க விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் உதவிச் செயலாளர் சமீர் பால் கபூர் இந்த ஆண்டு பிப்ரவரியில் தெரிவித்தார். கபூரின் இந்தக் கூற்று, டிரம்ப் நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு உத்தியையும் எதிரொலிக்கிறது.

அதன்படி, எந்தவொரு நாடும் அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் அளவிற்கு செல்வாக்கு பெறுவதை அமெரிக்கா அனுமதிக்க முடியாது. இதற்கு, அமெரிக்கா உலக மற்றும் பிராந்திய அளவில் அதிகாரச் சமநிலையைப் பேண வேண்டியது அவசியமாகிறது.

2017-ஆம் ஆண்டின் முந்தைய தேசியப் பாதுகாப்பு உத்தியைப் போலல்லாமல், புதிய தேசியப் பாதுகாப்பு உத்தி அறிக்கையில் இந்தியாவின் பெயர் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பில் பங்களிக்க இந்தியாவை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவுடனான வர்த்தக மற்றும் பிற உறவுகளை அமெரிக்கா மேம்படுத்த விரும்புகிறது என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.

இந்தியா, டிரம்ப், இறக்குமதி வரி, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

வாஷிங்டனில் உள்ள 'அட்லாண்டிக் கவுன்சில்' அமைப்பின் மூத்த ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் 'ராய்ட்டர்ஸ்' செய்தி முகமையிடம் கூறுகையில், "அமெரிக்க வரிகள் உட்பட பல காரணங்களால் கடந்த ஓராண்டில் அமெரிக்க-இந்திய உறவுகள் பாதிப்படைந்துள்ளன. ஆனால் இரு கட்சிகளின் வலுவான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய சட்ட மசோதா, ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனை அளிக்கும் வகையில் இதுவரை இல்லாத கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது; இதுவே அமெரிக்க-இந்திய உறவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக இருக்கலாம்" என்றார்.

அமெரிக்கா வரி விதிப்பதை தாமதித்தாலோ அல்லது அவற்றைக் குறைந்த அளவில் அமல்படுத்தினாலோ, பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். இருப்பினும், இந்தச் சட்டம், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக புதுடெல்லியில் நிலவும் அவநம்பிக்கையை அதிகரிக்கக்கூடும். ஒப்பந்தத்திற்கு இறுதி வடிவம் கொடுப்பதற்குத் தேவையான இறுதிக்கட்டத் தளர்வுகளுக்குச் சம்மதிப்பது, இந்தியப் பேச்சுவார்த்தையாளர்களுக்குச் சவாலாக இருக்கலாம்.

வர்த்தகப் பேச்சுவார்த்தையின் கோணத்தில் பார்த்தால், இந்தப் புதிய மசோதா மிக மோசமான தருணத்தில் வந்துள்ளது" என்று அவர் கூறினார். "இரு தரப்பும் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் உள்ளன; ஆனால், அதை முழுமையாக அடைய எச்சரிக்கையான ராஜதந்திரம் தேவைப்படும்."

புதிய அமெரிக்க மசோதா இந்தியாவில் ஏற்கனவே ஓர் அரசியல் பிரச்னையாக மாறியுள்ளது. பிரதமர் மோதி இன்னும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்படும் எந்தவொரு உயர்வும், மோதிக்கு அரசியல் ரீதியாகச் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் மோதியின் கட்சியான பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு