'தனது சொந்த எழுத்துக்களால் சிக்கிய சிரியல் கில்லர்' - அமெரிக்காவை மிரட்டிய நபர் கைதானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கிரெக் மெக்கெவிட்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
'யுனாபாம்பர்' நடத்திய வன்முறை கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாகப் புலனாய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த "புத்திசாலி" கணிதவியலாளர் "செய்த தவறுகள் போலீஸாரை நேரடியாக அவரின் வீட்டு வாசலுக்கே அழைத்து சென்றதாக பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.
ஏப்ரல் 3, 1996 அன்று, அமெரிக்க பெடரல் அதிகாரிகள் மொண்டானா காடுகளில் இருந்த ஒரு தொலைதூர மரத்தாலான குடிலைச் சூழ்ந்துகொண்டு, தியோடர் "டெட்" காசின்ஸ்கியை வெளியே அழைத்து வந்தனர். அதுவரை பொதுமக்களின் மனதில் "தேடப்படும் குற்றவாளி" என்ற போஸ்டர் சித்திரத்தில் கருப்புக் கண்ணாடி அணிந்த, முகமூடி போர்த்திய ஒரு மனிதராக மட்டுமே அவர் அறியப்பட்டார்.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக, யுனாபாம்பர் அமெரிக்காவின் மிக முக்கியமான தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக இருந்தார். எந்தவொரு தெளிவான உள்நோக்கமும் அல்லது முறையான பாணியும் இல்லாமல் அனுப்பப்பட்ட அவரது பழமையான பார்சல் குண்டுகள் ஒரு மர்மமாகவே இருந்தன.
இறுதியில் அவரைச் சிக்க வைத்தது அவரது சொந்த எழுத்துக்கள்தான். தான் இனி யாரையும் கொல்லமாட்டேன் என்று அவர் உறுதியளித்தால், தொழில்நுட்பத்திற்கு எதிரான அவரது கொள்கை அறிக்கையை வெளியிட இரண்டு முக்கிய அமெரிக்க செய்தித்தாள்கள் ஒப்புக்கொண்டன.
அவரது தனித்துவமான சொற்களை, அவர் அதுவரை நேரில் பார்த்திராத அவரது சகோதரரின் மனைவி முதன்முதலில் அடையாளம் கண்டார்.
பிபிசி நியூஸ்நைட் நிகழ்ச்சியின் கிருஷ்ணன் குருமூர்த்தி குறிப்பிட்டது போல, "ஒரு பழமையான குடிலில் வாழ்வதற்காகப் படிப்பைப் பாதியில் விட்ட அந்தப் கல்வியாளர், தனது சொந்த வீட்டு வாசலுக்கே போலீஸ் வர வகுத்துக் கொடுத்துவிட்டார்."
யுனாபாம்பருக்கான தேடுதல் மே 1978-இல் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு பழமையான கையால் செய்யப்பட்ட குண்டுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இரண்டாவது தாக்குதல் நடந்தது.
நவம்பர் 1979-இல், அவர் அனுப்பிய ஒரு குண்டு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடித்தது. அது அவர் திட்டமிட்டபடி முழுமையாகச் செயல்படவில்லை என்றாலும், புகையைச் சுவாசித்ததால் 12 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவரது இலக்குகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் விமான நிறுவனங்களாகத் தெரிந்ததால், எஃப்பிஐ இதற்கு 'UNABOM' (University and Airline Bomber) என்ற குறியீட்டுப் பெயரைச் சூட்டியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் மேலும் 13 முறை தாக்குதல்களை நடத்த அதிநவீன குண்டுகளைப் பயன்படுத்தினார். இதில் கணினி வாடகை கடை உரிமையாளர் ஹக் ஸ்க்ரட்டன், விளம்பரத் துறை நிர்வாகி தாமஸ் மோஸர் மற்றும் மரத் தொழில் லாபியிஸ்ட் கில்பர்ட் முர்ரே என மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
கட்டுரை அனுப்பிய கொலைதாரி
அவரது இலக்குகள் பெரும்பாலும் சீரற்றதாக இருந்ததாலும், அவரது குண்டுகள் மரத்துண்டுகள் மற்றும் விளக்கு கம்பிகள் போன்ற பொதுவான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாலும், புலனாய்வாளர்களுக்கு மிகக் குறைந்த தடயங்களே கிடைத்தன.
எஃப்பிஐ-யின் முதன்மை பாலிஸ்டிக்ஸ் புலனாய்வாளர் கிறிஸ் ரோனே அவரை "மறுசுழற்சி குண்டுதாரி" என்று அழைத்தார்.
அவர் 1996-இல் பிபிசியிடம் பேசுகையில் "அவர் குப்பைத் தொட்டிகளிலும், பயன்படுத்தப்பட்ட பொருட்களுக்கான கூடைகளிலும் தேடி, ஒரு நியாண்டர்தால் மனிதனைப் போல எதையாவது உருவாக்குகிறார்" என்றார்.
தனது வன்முறையை நியாயப்படுத்த, ஏப்ரல் 1995-இல் யுனாபாம்பர் 'நியூயார்க் டைம்ஸ்' மற்றும் 'வாஷிங்டன் போஸ்ட்' இதழ்களுக்கு 'தொழில்மயமான சமூகமும் அதன் எதிர்காலமும்' என்ற தலைப்பில் 35,000 வார்த்தைகள் கொண்ட ஒரு நீண்ட கட்டுரையை அனுப்பினார்.
அந்தக் கட்டுரையில், நவீன வாழ்க்கை மனித சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் சிதைப்பதாக அவர் வாதிட்டார். மேலும், தொழில்நுட்ப அமைப்புகளைத் தகர்ப்பது மட்டுமே மேலதிக உளவியல் மற்றும் சமூக பாதிப்புகளைத் தடுக்கும் என்றும் கூறினார்.
நாட்டின் மிகச் சிறந்த இரண்டு செய்தித்தாள்கள் இந்தக் கட்டுரையை வெளியிட்டால், தான் கொலை செய்வதை நிறுத்துவதாக அவர் நிபந்தனை விதித்தார்.
வாஷிங்டன் போஸ்ட் வெளியீட்டாளர் டொனால்ட் கிரஹாம் 2016-இல் பிபிசியிடம் கூறுகையில் " இந்த கோரிக்கைக்குப் பணிந்து ஆவணத்தை அச்சிட ஒப்புக்கொண்டால், அது இது போன்ற பிற ஆவணங்களை அச்சிடக் கோரும் மற்ற கோரிக்கைகளைத் தூண்டுமா? என்ற ஆரம்பத்தில் கவலை இருந்தது வெளிப்படையானது." என்று கூறினார்.
எஃப்பிஐ சிறப்பு முகவர் டெர்ரி டர்சி பிபிசியிடம் கூறுகையில், இந்த கொள்கை அறிக்கையை வெளியிடுவது தவறான யோசனை என்று புலனாய்வாளர்கள் முதலில் நினைத்தனர், ஏனெனில் "அது மிகவும் விசித்திரமாக இருந்தது". ஆனால் பின்னர் அவர்கள் மறுபரிசீலனை செய்தனர்.
இந்தக் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டால், அதன் பின்னால் இருக்கும் நபரை யாராவது நிச்சயமாக அடையாளம் காண்பார்கள் என்று அவர்கள் கருதினர், "ஏனெனில் அந்த வார்த்தைகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவை". மூன்று மாத காலத் தயக்கத்திற்குப் பிறகு, எஃப்பிஐ-யின் ஆலோசனையின் பேரில் செய்தித்தாள் நிறுவனங்கள் யுனாபாம்பரின் கட்டுரையை வெளியிட முடிவு செய்தன.
எஃப்பிஐ போஸ்டர்களில் காட்சியளித்த ஒரு தலைமறைவு குற்றவாளிக்கு, தனது கருத்துக்களைப் பரப்புவதற்கான ஒரு பொது மேடையைப் பரிசாக அளித்தது ஏன் என்று பல அமெரிக்கர்கள் ஆச்சரியப்பட்டனர்.

பட மூலாதாரம், Alamy
இருநூறு முக்கியமான சந்தேக நபர்கள்
யுனாபாம்பரை அடையாளம் காட்டி தண்டனை பெற்றுத் தருபவர்களுக்கு எஃப்பிஐ 1 மில்லியன் டாலர் வெகுமதி அளிப்பதாக அறிவித்தது. 1993-இல் அமைக்கப்பட்ட அதன் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு 50,000-க்கும் மேற்பட்ட தகவல்கள் வந்தன.
கொள்கை அறிக்கையில் இருந்த புதிய தடயங்களால், அந்த மர்ம குண்டுதாரியின் உருவம் தெளிவடையத் தொடங்கியது. "யுனாபாம்பரின் ஆணவம் அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்திருக்கலாம்," என்று பிபிசி நியூஸ்நைட்டில் குருமூர்த்தி கூறினார்.
"அவரது கட்டுரையில் உள்ள யோசனைகளைப் போலவே, அவர் முக்கிய விஞ்ஞானிகளுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து அவரது கல்விப் பின்னணி பற்றியும் அதிகம் அறியப்பட்டது.''
எஃப்பிஐ-யின் UNABOM பணிக்குழு 200 முக்கியமான சந்தேக நபர்களின் பட்டியலைத் தயாரித்தது. அவர்களில் ஐந்து பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர், அவர்கள் அனைவரும் புலனாய்வாளர்கள் அவர் பதுங்கியிருப்பதாகக் கருதிய வடக்கு கலிபோர்னியாவில் இருந்தனர்.
இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனை ஒரு எதிர்பாராத நபரால் ஏற்பட்டது. அவர் தனது கணவர் டேவிட் காசின்ஸ்கியுடன் பிரான்சில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த அமெரிக்க குடிமகள் லிண்டா பாட்ரிக்.
தத்துவப் பேராசிரியரான லிண்டா, பாரிஸிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான 'இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன்'-ல் யுனாபாம்பர் பற்றிய கட்டுரைகளைப் படித்து வந்தார்.
அவர் 2016-இல் பிபிசியிடம் பேசுகையில் "கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நான் இந்தக் கட்டுரைகளைப் பார்த்துவிட்டு, 'இது டேவிட் சகோதரரின் எண்ணத்தை போலவே இருக்கிறதே' என்று ஆச்சரியப்படுவேன்" என்றார்.
ஒரு செய்தி சந்தேக நபரின் தச்சுத் திறமையைக் குறிப்பிட்டது. மற்றொன்று தொழில்நுட்பத்தின் மீதான அவரது வெறுப்பை விவரித்தது. மற்றவை குண்டுகள் வெடித்த நகரங்களைப் பட்டியலிட்டன - அவை டேவிட்டின் சகோதரர் வாழ்ந்த அல்லது வேலை செய்த இடங்கள் என்று அவருக்குத் தெரியும். இவை அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தபோது, அந்த ஒற்றுமைகளைப் புறக்கணிக்க முடியாமல் போனது.
அவர் தனது கணவரிடம் அந்த சங்கடமான கேள்வியைக் கேட்க வேண்டியிருந்தது: "நான் கேட்டேன், 'உன் சகோதரர் யுனாபாம்பராக இருக்க வாய்ப்புள்ளதா?'"
டேவிட் இதை முதலில் நம்பவில்லை, ஆனால் அவர் அந்தக் கொள்கை அறிக்கையைப் படித்தபோது அதிர்ந்து போனார். "டேவிட் கணினித் திரையைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்," என்று பாட்ரிக் கூறினார். "அவர் முதல் பக்கத்தைப் படிக்கும்போதே அவரது முகம் முற்றிலும் மாறுவதைக் கண்டேன்." இது ஒரு பயங்கரமான சூழல் என்று டேவிட் பிபிசியிடம் கூறினார்.
"எனது சகோதரர் ஒரு தொடர் கொலையாளி, அமெரிக்காவில் - ஒருவேளை உலகம் முழுவதிலும் - அதிகம் தேடப்படும் நபர் என்ற சாத்தியத்தை நான் உண்மையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
கடினமான முடிவு
அந்த குடும்பத்திற்கு முன்னால் ஒரு கடினமான முடிவு இருந்தது. அவர்கள் மௌனமாக இருந்தால், மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். ஆனால் டெட் தான் யுனாபாம்பர் என்று நிரூபிக்கப்பட்டால், அவர் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்."எனது சகோதரரின் ரத்தத்தை என் கைகளில் ஏந்தியபடி மீதமுள்ள வாழ்க்கையை எப்படிக் கழிப்பது?" என்று டேவிட் கூறினார்.
யுனாபாம்பருக்கான 17 ஆண்டு காலத் தேடலில், தியோடர் காசின்ஸ்கி 2,416-வது சந்தேக நபராக இருந்தார். எஃப்பிஐ சிறப்பு முகவர் கேத்லீன் பக்கெட் 2025-இல் பிபிசியின் 'விட்னஸ் ஹிஸ்டரி' நிகழ்ச்சியில் "சிகாகோவில் இருந்த அவர்களது குடும்ப வீட்டில் அவர்களது தாய் வைத்திருந்த ஒரு பெட்டி இருந்தது, அந்தப் பெட்டியில் அந்தக் கொள்கை அறிக்கையின் அசல் கையால் எழுதப்பட்ட பிரதியைக் கண்டெடுத்தோம்" என்றார். அது காசின்ஸ்கி 1971-இல் எழுதிய ஒரு கட்டுரையாகும், அதில் அதே கருத்துக்கள் பல இருந்தன.
குழாய் மூலம் வரும் நீர் வசதியோ அல்லது மின்சார வசதியோ இல்லாமல் காசின்ஸ்கி வாழ்ந்து வந்த அந்தக் காட்டுப் பகுதி குடிலைத் தேடுவதற்குத் தேவையான ஆதாரங்களை புலனாய்வாளர்கள் சேகரித்தனர்.
பக்கெட்டின் கூற்றுப்படி, "அந்தக் குடில் முழுவதும் ஆதாரங்கள் நிறைந்திருந்தன. அது ஒரு தங்கச் சுரங்கம் போன்றது."
கண்டுபிடிக்கப்பட்டவற்றில் குண்டு தயாரிப்பதற்கான பாகங்கள், குண்டு சோதனைகள் மற்றும் யுனாபாம்பரின் குற்றங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய 40,000 பக்கங்கள் கொண்ட கையால் எழுதப்பட்ட நாட்குறிப்புகள் மற்றும் அஞ்சல் மூலம் அனுப்பத் தயாராக இருந்த ஒரு நேரடி குண்டு ஆகியவை அடங்கும்.
கணித மேதையிலிருந்து படிப்பை பாதியில் கைவிட்டது வரை
டெட் கைது செய்யப்பட்ட செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது அவரது சகோதரர் டேவிட் அதிர்ச்சியடைந்தார்.
அவர் 2006-இல் பிபிசி உலக சேவையிடம், "அவர் தனது குடிலிலிருந்து இரண்டு பெடரல் மார்ஷல்களுக்கு இடையே அழைத்து வரப்பட்டார், அவர் பார்க்கவே மிக மோசமாக இருந்தார். அவர் முற்றிலும் பராமரிப்பின்றி இருந்தார். அவரது ஆடைகள் வெறும் கந்தல்களாக இருந்தன, அவர் பல மாதங்களாகக் குளிக்கவில்லை. பின்னர் அவர் ஒரு தொடர் கொலையாளி, ஒரு பயங்கரவாதி என்று விவரிக்கப்படுவதைக் கேட்பதா? மக்களிடம் இருந்த தகவல்களில் டெட்டைப் பற்றி எனக்கு இருந்த நினைவுகள் இல்லை, அதாவது எனது அண்ணனாக இருந்த அந்தச் செல்லப் பையனின் நினைவுகள் அவர்களுக்குத் தெரியாது."என்றார்
காசின்ஸ்கியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி பற்றிய சித்திரம் விரைவில் வெளிப்பட்டது. 167 ஐக்யூ கொண்ட ஒரு கணித மேதையான அவர், தனது 16 வயதிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர இரண்டு வகுப்புகளைத் தவிர்ந்து முன்னேறினார். 20 வயதில் பட்டம் பெற்ற பிறகு, மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அவரது முன்னாள் பேராசிரியர் பீட்டர் டுரென் கருத்துப்படி, "அவரிடம் நிறைய நல்ல யோசனைகள் இருந்தன, அவர் மிகவும் தனித்துவமான கணிதவியலாளர். அவரது ஆய்வுக் கட்டுரையின் பலத்தால் அவருக்கு பெர்க்லியில் வேலை கிடைத்தது, கணிதத்தில் அவர் ஒரு சிறந்த வாழ்க்கையைத் தொடங்கப்போவது போலத் தெரிந்தது."
ஆனால் ஏதோ ஒன்று காசின்ஸ்கியின் உலகப் பார்வையை மாற்றியது என்கிறார் குருமூர்த்தி.
"தான் சிறந்து விளங்கிய துறையையே அவர் எதிர்த்தார், இரண்டு ஆண்டுகளுக்குள் கல்வித்துறையிலிருந்து வெளியேறினார். யூட்டாவில் சில காலம் இருந்த பிறகு, அவர் மொண்டானாவுக்குச் சென்றார், அங்கு சுமார் 1,000 பேர் மட்டுமே வாழும் ஒரு சிறிய சமூகத்தில் தனிமையான வாழ்க்கையைத் தொடங்கினார். அவரிடம் ஒரு விதிவிலக்கான அறிவு இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது'' என்று குருமூர்த்தி தொடர்ந்தார்.
"ஆனால் புலனாய்வாளர்கள் கூறுவது சரியாக இருந்தால், அந்த அறிவு அவரது உழைப்பு எதைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோ அதையே வெறுக்கும் ஒரு மனிதனின் கோபத்தைத் தூண்டவே உதவியது."
காசின்ஸ்கிக்கு 1996-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த மூன்று தசாப்தங்களை அமெரிக்கா முழுவதும் உள்ள சிறைகளில் கழித்தார்.
சிறையில் அவரை நேர்காணல் செய்த ஒரு மனநல மருத்துவலால் அவருக்கு 'பாரனாய்டு ஸ்கிசோஃப்ரினியா' இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும், தான் என்ன செய்கிறோம் என்பது தனக்கு எப்போதும் தெரியும் என்று அவர் கூறினார்.
"தனிப்பட்ட முறையில் நான் மனநலத்துடன் இருப்பதாகவே நம்புகிறேன்," என்று அவர் 1999-இல் 'டைம்' இதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார். உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காசின்ஸ்கி, 2023-ல் தனது 81-வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































