கணுக்கால்களை வலுப்படுத்துவது எப்படி? காயங்களைத் தவிர்க்க உதவும் 3 வழிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எமிலி ஹோல்ட்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
உடலுக்கு ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும் முக்கிய அமைப்புகளில் கணுக்கால்களும் ஒன்று. உடலின் சமநிலையைப் பராமரிப்பது, நிற்பது, நடப்பது, ஓடுவது என பல்வேறு செயல்பாடுகளுக்கு அவை அவசியமானவை. ஆனால், கணுக்காலில் காயம் ஏற்படும் வரை அதன் முக்கியத்துவத்தைப் பற்றி நம்மில் பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை.
கணுக்கால் காயங்கள் மிகவும் பொதுவானவை என்கிறார், 'ஸ்ட்ரிக்ட்லி கம் டான்சிங்' உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றிய உடற்பயிற்சி மற்றும் செயல்திறன் மேம்பாட்டு இயன்முறை பயிற்சியாளர் மருத்துவர் ஜெனிவீவ் தவையா.
பிரிட்டனில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளில் 5 சதவிகிதத்தினரின் வருகைக்குக் கணுக்கால் காயங்கள் காரணமாக இருப்பதாக தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு மேம்பாட்டு நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆனால், நீங்கள் வலுவாக இருப்பதோடு பாதம் மற்றும் கணுக்கால் பற்றியும் அவற்றைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றியும் விழிப்புணர்வுடன் இருந்தால் இத்தகைய காயங்களைத் தவிர்க்க முடியும் என்கிறார் தவையா.
கணுக்கால்களை வலுப்படுத்த உதவும் மூன்று வழிகள் இங்கே:
1. மூளைக்கும் உடலுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துங்கள்
கணுக்கால்களை வலுப்படுத்தவும், காயங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் முதலில் செய்ய வேண்டியது, மூளைக்கும் உடலுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதுதான் என்கிறார் தவையா.
அதாவது, பாதம் மற்றும் கணுக்கால் எவ்வாறு அசைகின்றன என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளாமல், அவற்றின் இயக்கங்களை உணர்ந்து செயல்பட வேண்டும்.
"மூளையிலிருந்து பாதம் மற்றும் கணுக்காலுக்குத் தகவல்களை அனுப்புவதன் மூலம், உடலை நிலைப்படுத்தவும், அடுத்தடுத்த உடற்பயிற்சிகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் முடியும்," என்கிறார் அவர்.
இந்த விழிப்புணர்வை மேம்படுத்த, பாதத்தின் அசைவுகளைக் கவனித்தபடி சில பயிற்சிகளைச் செய்யலாம்.
முதலில், கால் விரல்களின் சிறிய அசைவுகளுக்குப் பயிற்சி அளிக்கலாம். ஏனெனில், கணுக்கால் வழியாக உடலின் எடை எவ்வாறு பகிரப்படுகிறது என்பதில் இந்த அசைவுகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதற்கு இரண்டு பயிற்சிகளை அவர் பரிந்துரைக்கிறார்:
- பெருவிரலைத் தரையில் அழுத்துதல்: பாதத்தின் பெருவிரல் நுனியைத் தரையில் அழுத்தி, அப்படியே சில விநாடிகள் வைத்திருக்க வேண்டும். அப்போது பாதத்தின் வளைவுப் பகுதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். பாதத்தின் வளைவுப் பகுதியில் ஏதோ ஒன்று இழுப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும் என்கிறார் அவர்.
- பெருவிரலைப் பக்கவாட்டில் நகர்த்துதல்: பாதத்தின் பெருவிரலுக்கு அருகில், அதற்கு இணையாக ஒரு பேனாவைத் தரையில் வைக்க வேண்டும். பின்னர், பெருவிரலை அந்தப் பேனாவை நோக்கிப் பக்கவாட்டில் நகர்த்த முயற்சிக்க வேண்டும். இந்த இயக்கம் பெருவிரலைப் பக்கவாட்டில் நகர்த்துதல் (Toe Abduction) என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
2. தசை வலிமை, இயக்கக் கட்டுப்பாடு, சமநிலையை மேம்படுத்துங்கள்
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
சமநிலையைப் பராமரிப்பது, உடல் எடையைத் தாங்குவது, உடலில் உருவாகும் விசையை மற்ற பகுதிகளுக்குக் கடத்துவது ஆகியவை கணுக்கால்களின் முக்கியப் பணிகள் என்கிறார் தவையா.
இதற்கான சில பயிற்சிகள்:
- குதிகாலை உயர்த்துதல் (Heel Raises): உறுதியான ஒரு பொருளின் அருகில் நின்றுகொள்ள வேண்டும். பின்னர், குதிகால்களைத் தரையிலிருந்து உயர்த்தி, பாதத்தின் முன்பகுதியைத் தாங்கி நிற்க வேண்டும். இந்தப் பயிற்சியின்போது கணுக்கால்கள் பக்கவாட்டில் ஆடாமலும், வெளிப்புறமாகச் சாயாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- சமநிலைப் பயிற்சி: ஜிம்னாஸ்டிக் வீரர்கள் குறுகிய மரப்பலகையின் மீது நடப்பதைப் போல, ஒரு காலின் முன்பாக மற்றொரு காலை வைத்து நேராக நடக்க வேண்டும். அப்போது பாதத்தின் இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
- இயக்கக் கட்டுப்பாட்டுப் பயிற்சி: உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்து நிற்பது, ஒரு காலையோ அல்லது இரண்டு கால்களையோ பயன்படுத்தி எழுந்து நிற்பது, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது போன்ற பயிற்சிகள் கணுக்கால்களின் சமநிலையையும் இயக்கக் கட்டுப்பாட்டையும் மேம்படுத்த உதவும்.
"படிக்கட்டுகளில் ஏறும்போது எப்போதும் ஒரே காலை முதலில் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தால், மற்றொரு காலைப் பயன்படுத்தி ஏறிப் பழகுங்கள்," என்கிறார் தவையா.
கணுக்கால் சுளுக்கிலிருந்து மீண்டு வருபவர்கள், ஒரு காலில் நின்றுகொண்டு பந்தைத் தூக்கி எறிந்து மீண்டும் பிடிக்கும் பயிற்சியை செய்யலாம். அல்லது, உடலை ஒரு பக்கமாகவும் மறுபக்கமாகவும் நகர்த்தி, அந்தப் பக்கத்தில் காலூன்றி நிலையாக நிற்கும் பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இதன் மூலம், கால் தரையில் ஊன்றப்படும்போது உடலைக் கட்டுப்படுத்தும் திறனை மேம்படுத்த முடியும்.
தசைநார் பாதிப்பால் (Tendinopathy) நீண்டகால வலியை எதிர்கொள்பவர்கள், குறைந்த வேகத்தில் அதிக சுமையைத் தாங்கும் பயிற்சிகளை மேற்கொள்வது முக்கியம். உதாரணமாக, கால்களுக்கான அழுத்தப் பயிற்சிக் கருவியில் (Leg Press) எடையைப் பயன்படுத்தி கெண்டைக்கால் உயர்த்தும் பயிற்சிகளைச் செய்யலாம்.

பட மூலாதாரம், Genevieve Tawiah
3. சரியான காலணிகளைத் தேர்ந்தெடுங்கள்
கணுக்கால்களுக்குப் போதிய ஆதரவு கிடைப்பதற்கு ஏற்ற காலணிகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்கிறார் தவையா.
"பலரும் முன்பகுதி தட்டையாகவும், குறுகலாகவும் இருக்கும் பாலே நடனக் காலணிகள், கூர்மையான முனை கொண்ட காலணிகள் அல்லது முன்பகுதி குறுகிய விளையாட்டுக் காலணிகளை அணியும் தவறைச் செய்கின்றனர்."
"காலணியின் மேற்பகுதி இல்லாமல் இருந்தால், உங்கள் கால் விரல்களுக்கு போதிய இடம் கிடைக்குமா அல்லது பெருவிரல் மற்ற விரல்களை நோக்கி அழுத்தப்படுமா என்று யோசித்துப் பாருங்கள்.
"காலணிகள் அணியாமல் நடப்பது போன்ற உணர்வைத் தரும் சிறப்புக் காலணிகள் (Barefoot Shoes) தற்போது அதிகம் பிரபலமாகி வருகின்றன. அவை பயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், அவற்றைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு பாதம் மற்றும் கணுக்கால்களில் போதிய வலிமை இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், அவற்றைப் பயன்படுத்தும் நேரத்தைப் படிப்படியாக அதிகரிக்க வேண்டும்," என்கிறார் அவர்.
காலணிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, பாதத்தின் வளைவுப் பகுதிக்கு ஓரளவு ஆதரவு அளிக்கும் வகையில் அவை இருப்பதையும் கவனிக்க வேண்டும் என்கிறார் தவையா. ஏனெனில், ஒரு செயலைச் செய்யும்போது பாதத்தின் வழியாக உடல் எடை எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை இது பாதிக்கிறது.
மேலும், ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஏற்ற வகையில் வெவ்வேறு காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
"நீங்கள் குந்தி எழும் பயிற்சிகளைச் (Squats) செய்தால், அடிப்பகுதி தட்டையாக இருக்கும் காலணிகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. மென்மையான, அதிகம் அழுத்தம் தரக்கூடிய அடிப்பகுதியைக் கொண்ட காலணிகளை அணிந்தால், சமநிலையைப் பராமரிப்பதும், உடல் எடையைச் சரியான இடத்தில் தாங்குவதும் கடினமாக இருக்கும்."
"ஆனால், ஓடும்போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்குவதற்கு அதிக மெத்தென்ற தன்மையும் அதிர்வுகளை உள்வாங்கும் வசதியும் கொண்ட விளையாட்டுக் காலணிகள் பொருத்தமானவையாக இருக்கலாம்".
"சமதளமற்ற பல்வேறு நிலப்பரப்புகளில் நீண்ட தூரம் நடப்பவர்களுக்கு, கணுக்காலில் ஏற்படும் கடுமையான சுளுக்கு அபாயத்தைக் குறைக்க மலைப்பயணக் காலணிகள் (Hiking Boots) பெரும்பாலும் உதவியாக இருக்கும். இருப்பினும், அவற்றை அன்றாடம் நீண்ட நேரம் அணிவது கணுக்காலின் அசைவுகளைக் கட்டுப்படுத்துவதால், அதன் நெகிழ்வுத்தன்மை குறைந்து விறைப்புத்தன்மை அதிகரிக்கக்கூடும்," என்கிறார் தவையா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































