தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது: திமுக, அதிமுக விமர்சனம் - காவல்துறை கூறியது என்ன?

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது - தமிழக காவல்துறை கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அருள் விக்னேஷை விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர் வேனில் அழைத்துச் சென்ற காட்சி செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், அவர் கைது செய்யப்பட்டதை தமிழக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த திங்கட்கிழமை (23.11.2026), கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அரசு அதிகாரி ஒருவர், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். அதே நாளில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உரிய சட்டப் பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணையை உள்ளூர் காவல்துறையினர் மேற்கொண்டனர். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாயன்று (24.11.2026) பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) என். காமினி மேற்பார்வையில், இவ்வழக்கின் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது." என்று குறிப்பிட்டுள்ளது.

"விசாரணையின் போது, புகார்தாரர் மற்றும் இதர சாட்சிகளிடம் விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, குற்றம் சாட்டப்பட்ட கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கின் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட 201 பதிவுகளை நீக்கியுள்ளனர்.

இது தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அந்த உத்தரவுக்கு முரணாக பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது - தமிழக காவல்துறை கூறியது என்ன?
படக்குறிப்பு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்

முன்னதாக, கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று மாலை காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். வீட்டின் முன்பு கூடியிருந்த தவெகவினரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். பின்னர், வீட்டிற்குள் சென்ற காவல்துறையினர் சுமார் 6.30 மணியளவில் அருள் விக்னேஷை தங்களது வேனில் அழைத்துச் சென்றனர்.

ஐஏஸ் அதிகாரி அளித்த புகாரின் பேரில் இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பெண் ஐபிஎஸ் அதிகாரியும் திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருமான சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 24-ஆம் தேதி தெரிவித்துள்ளது.

உள் புகார்கள் குழு விசாரணை

பெண் அதிகாரியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உள் புகார்கள் குழுவை (Internal Complaints Committee – ICC) அமைத்து தமிழ்நாடு அரசு நவம்பர் 24-ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உள் புகார்கள் குழுவின் தலைவராக கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் எஸ். மதுமதி, சட்டத்துறைச் செயலாளர் பி. சுமதி மற்றும் வெளிப்புற உறுப்பினராக சுனிதா ஜோ ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

இந்தக் குழு புகார் மீதான விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 2013-ன்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின், பழனிசாமி விமர்சனம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வேறு வழியின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு நடத்தைச் சான்று வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.

பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், "உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது தவெக எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தவெக எம்எல்ஏ மீதான நடவடிக்கை அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பதிவில், "நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம்'. இந்த வழக்கில், "அப்படி ஒன்று நடக்கவே இல்லை" என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம். இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு