அபரிமிதமாக எண்ணெய் கிடைத்தாலும் மிக குறைவாகவே அதை பயன்படுத்தும் நாடு எது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கிலெர்மோ தி. ஓல்மோ
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நார்வே உலகின் மிகப் பசுமையான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதன் நகரங்களில் மிதிவண்டிகள் நிறைந்து காணப்படுகின்றன, இதன் 98 சதவீத மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கிறது மற்றும் 2024-இல் விற்கப்பட்ட ஒவ்வொரு பத்து புதிய வாகனங்களில் ஒன்பது மின்சார வாகனங்கள் ஆகும்.
நார்வே சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடும் கூட. இங்கே மொத்த எரிசக்தி நுகர்வில் மின்சாரத்தின் பங்கு மிக அதிகம். கார்பன் வரி விதித்த ஆரம்பகால நாடுகளில் இதுவும் ஒன்று.
ஆனால் இதனுடன் சேர்த்து, இந்நாடு எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாசு உண்டாக்கும் இந்த நிலக்கரி போன்ற எரிபொருள்கள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இதுதான் நார்வே அரசின் வருமானத்திற்குப் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.
இந்த வளங்களே 'ஆயில் ஃபண்ட்' என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற 'சாவரின் வெல்த் ஃபண்ட்' உருவாவதற்குக் காரணமாக அமைந்தன. இதுவே தாராளமான ஓய்வூதிய முறை மற்றும் நலன்புரி அரசின் நிதித் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
உள்நாட்டில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கும், உலக அளவில் புதைபடிவ எரிபொருட்களின் பெரிய ஏற்றுமதியாளராக இருப்பதற்கும் இடையே உள்ள இந்த முரண்பாடு 'நார்வேஜியன் பேரடாக்ஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளாகக் கடுமையான அரசியல் மற்றும் சமூக விவாதங்களை உருவாக்கி வருகிறது.
சுற்றுச்சூழல் குழுக்களும் இளைஞர் செயல்பாட்டாளர்களும் எண்ணெய் வணிகத்தைக் குறைப்பதற்கான உறுதியான வாக்குறுதிகளையும் காலக்கெடுவையும் கோரி வரும் நிலையில், பொருளாதாரத்தில் இதன் பங்களிப்பு மற்றும் இதனால் உருவாகும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காரணமாக இந்தத் தொழில் தனது முக்கியத்துவத்தைத் தக்கவைத்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியமான ஹோர்மூஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு, நார்வேயிற்குப் பெரும் எதிர்பாராத லாபத்தை அளித்துள்ளது. ஆனால் இது நாட்டின் மிகவும் சங்கடமான விவாதங்களில் ஒன்றை மீண்டும் வேகப்படுத்தியுள்ளது.
நார்வேயின் சுற்றுச்சூழல் அமைப்பான 'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் தி எர்த் நார்வே' தலைவர் ட்ரல்ஸ் குலோவ்சன் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "என்னைப் போன்ற ஒரு நார்வேஜியன் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு இந்தச் சூழல் வெட்கக்கேடானது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
நார்வேயின் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மூலோபாய முக்கியத்துவம்
ஐக்கிய நாடுகளின் மனித மேம்பாட்டுக் குறியீட்டின்படி, உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றான நார்வேயில் எரிசக்தித் துறை செழிப்பின் முக்கிய ஆதாரமாக உள்ளது.
நார்வேயின் மொத்த ஏற்றுமதியில் இந்தத் துறையின் பங்களிப்பு 60 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்திற்கும் மேலாகவும் உள்ளது.
நார்வேயின் கண்டக்கரை பகுதியில் மிகப்பெரிய ஆபரேட்டராக 'இக்வினோர் குரூப்' உள்ளது, இதில் பெரும்பான்மையான பங்குகள் அரசிடம் உள்ளன. அதன் லாபத்தின் பெரும் பகுதி சாவரின் வெல்த் ஃபண்ட் எனப்படும் 'ஆயில் ஃபண்டில்' செலுத்தப்படுகிறது.
ஒரு மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த நிதியில் மொத்தம் 1.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருந்தன, இது ஒரு குடிமகனுக்கு சுமார் 3.5 லட்சம் டாலர் சேமிப்பிற்குச் சமம்.
2026-ஆம் ஆண்டின் தற்போதைய சூழலில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் இது மேலும் அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது.
இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து, அரசுக்குக் கூடுதலாக 5 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது மற்றும் உள்ளூர் எரிசக்தி நிறுவனங்களின் செயல்பாடுகளால் ஓஸ்லோ பங்குச் சந்தை சாதனைகளைப் படைத்துள்ளது.

பட மூலாதாரம், Kristian Helgesen/Getty
நோபல் அமைதிப் பரிசு வழங்கும் ஒரு நாடு, போரின் கொந்தளிப்பால் பணக்கார நாடாக மாறுகிறது என்ற கருத்துக்குத் தொழிலாளர் கட்சி அரசு பதிலளிக்க முயன்றுள்ளது.
நார்வேயின் நிதி அமைச்சரும் நேட்டோவின் (NATO) முன்னாள் பொதுச் செயலாளருமான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இதை ஒரு முரண்பாடு என்று குறிப்பிட்டு, நார்வேவுக்கு 'அமைதியால் தான் அதிக லாபம் கிடைக்கிறது' என்றார்.
ஆனால் என்.ஆர்.கே-வின் (NRK) கட்டுரையாளர் செசிலி லாங்கும் பெக்கரின் வார்த்தைகளில், "கசப்பான உண்மை என்னவென்றால், உலகம் எரியும்போது நமது அரசு பட்ஜெட்டில் பணம் வந்து சேர்கிறது."
இந்தச் சூழல் 2022-லேயே தெளிவாகத் தெரியத் தொடங்கியது, அப்போது யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பிறகு ஐரோப்பாவிற்கான மாஸ்கோவின் ஏற்றுமதி வேகமாக சரிந்தது.
அப்போதிருந்து, எரிசக்தி நெருக்கடியில் தவிக்கும் கண்டத்திற்கு நார்வே மட்டுமே நம்பகமான விநியோகஸ்தராக உருவெடுத்துள்ளது.
நிதி நிறுவனமான நோர்டியாவின் ஆய்வாளர் தீனா சால்ட்வெட் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "இன்று நாம் ஐரோப்பாவில் நுகரப்படும் எரிவாயுவில் சுமார் 30 சதவீதத்தையும், எண்ணெயில் 15 சதவீதத்தையும் விநியோகிக்கிறோம், நமது மொத்த ஏற்றுமதியில் 90 சதவீதத்தை அங்கேயே அனுப்புகிறோம்" என்றார்.
நார்வேயின் கார்பன் உமிழ்வை குறைக்கும் கொள்கை

பட மூலாதாரம், Paul S. Amundsen/Getty Images
பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு கையிருப்பு இருந்தபோதிலும், நார்வே பல தசாப்தங்களாக ஐரோப்பாவின் தூய்மையான உள்கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அதன் நீர்மின் விநியோக கட்டமைப்பு ஆகும்.
1991-இல் பசுமை எரிசக்தியை ஊக்குவிக்க அரசு கார்பன் வரியை விதித்தது; 2005-இல் ஊக்கத்தொகைகள் காரணமாக மின்சாரக் கார்களில் நார்வே உலகின் முன்னணி நாடாக மாறியது; மற்றும் 2017-இல் நாடாளுமன்றம் 2030-க்குள் கார்பன் உமிழ்வை 50 சதவீதம் குறைக்கக் காலநிலைச் சட்டத்தை நிறைவேற்றியது.
இருப்பினும், தற்போதைய சர்வதேச நிலவரங்கள் இந்தப் போக்கைத் தடம் புரளச் செய்வது போலத் தோன்றுகின்றன. யுக்ரேன் மற்றும் இரான் மோதல்கள் மிகவும் 'பசுமை' கொள்கை கொண்ட அரசியல் கட்சிகளைக் கூட, ஐரோப்பிய எரிசக்தி பாதுகாப்பிற்கு நார்வேஜியன் எரிவாயு ஒரு 'தேவையான தீமை' என்பதை ஏற்கக் கட்டாயப்படுத்தியுள்ளன.
குலோவ்சனின் கூற்றுப்படி, உலகளாவிய உறுதியற்ற தன்மை, ஹைட்ரோகார்பன்கள் மீது இன்னும் அதிக சார்ந்திருப்பதை நியாயப்படுத்துகிறதா என்பதுதான் இப்போது பிரதான விவாதமாக உள்ளது.
"இப்போது ஆர்க்டிக் கடல் பகுதிகளின் புதிய இடங்களில் வேலை செய்வது பற்றிப் பேச்சுக்கள் நடக்கின்றன - அத்தகைய உணர்திறன் வாய்ந்த சூழலில், எந்தச் சூழ்நிலையிலும் அகழ்வாராய்ச்சி நடக்கக்கூடாது" என்று அவர் கூறினார்.
அடுத்தது என்ன?

பட மூலாதாரம், Chris Ratcliffe/Getty Images
நார்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோரேவின் அரசு சமீபத்தில் 57 புதிய ஆய்வு உரிமங்களை வழங்கியது.
"ஐரோப்பாவிற்கு விநியோகம் செய்ய இன்னும் கூடுதலான எண்ணெயைத் தொடர்ந்து தேடுவோம்" என்று அவர் உறுதியளித்தார்.
ஸ்டோரே 'எண்ணெய் துறையிலிருந்து வெளியேறும் கட்டத்தை' தீர்மானிப்பதை விட, தொழில்துறையின் 'வளர்ச்சிக்கு' ஆதரவாக உள்ளார்.
தனது கட்சியின் இளைஞர் பிரிவின் அழுத்தம் இருந்தபோதிலும், தொழில்துறையிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவை வழங்கும் எண்ணம் ஸ்டோரேவிற்கு இல்லை.
மாறாக, பழைய எண்ணெய் கையிருப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட, மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்ட பாரண்ட்ஸ் கடல் பகுதியில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இண்டஸ்ட்ரி எனர்ஜி யூனியனின் ஃப்ரோட் ஆல்ஃபைம் பிபிசி முண்டோவிடம் இந்தத் தொழிலின் சமூக முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார். "நாம் 2 லட்சத்திற்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்புகளைப் பற்றிப் பேசுகிறோம். இது ஐரோப்பாவிற்கான விநியோகத்தை நிறுத்துவதற்கான நேரம் அல்ல."
அதே நேரத்தில், "இந்தத் தொழில் அதன் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது என்பதை அதிகமான மக்கள் உணர்ந்து வருகின்றனர், ஆனால் இந்த மாற்றத்தின் பயணம் வலி நிறைந்ததாக இருக்கும்." என்று சால்ட்வெட் எச்சரித்தார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































