ஹோர்மூஸை கடக்கும் கப்பல்களுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை - அடுத்து என்ன நடக்கும்?

இரான் அரசுக்குச் சுங்கம் செலுத்திய எந்தவொரு கப்பலையும் சர்வதேசக் கடல் பகுதியில் தடுத்து நிறுத்தவும், சோதனை செய்யவும் அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், EPA/Shutterstock

படக்குறிப்பு, இரான் அரசுக்குச் சுங்கம் செலுத்திய எந்தவொரு கப்பலையும் சர்வதேசக் கடல் பகுதியில் தடுத்து நிறுத்தவும், சோதனை செய்யவும் அமெரிக்க கடற்படைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் இரான் இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலையும் இனி அமெரிக்கா தடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் இரான் இடையே சனிக்கிழமை நள்ளிரவு வரை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், எந்த முடிவும் எட்டப்படாமலேயே அவை முடிவுக்கு வந்தன.

இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் பேசுகையில், "எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை, நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் பேரில், அமெரிக்காவும் இரானும் இரண்டு வார காலப் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்திருந்தன என்பதுடன் பேச்சுவார்த்தைக்காக இரு நாடுகளின் பிரதிநிதிக் குழுக்களும் இஸ்லாமாபாத் சென்றிருந்தன. இரு தரப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஹோட்டலில் நடைபெற்றது.

'கட்டணம் செலுத்துபவர்களுக்குப் பாதுகாப்பான வழி கிடைக்காது'

ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழைய அல்லது அங்கிருந்து வெளியேற முயற்சிக்கும் 'ஒவ்வொரு கப்பலையும்' அமெரிக்கா முற்றுகையிடப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தன்னுடைய 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட நீண்ட பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "சந்திப்பு நன்றாக இருந்தது, பெரும்பாலான விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் உண்மையில் முக்கியமான ஒரே விஷயம் - அணுசக்தி - அதில் மட்டும் பேச்சுவார்த்தை கைகூடவில்லை."

அதே பதிவில் டொனால்ட் டிரம்ப் மேலும் கூறுகையில், "சர்வதேசக் கடல் பகுதியில் இரானுக்குக் கட்டணம் செலுத்தியிருக்கும் ஒவ்வொரு கப்பலையும் தடுத்து நிறுத்திச் சோதனையிடுமாறு தனது கடற்படைக்கு தான் உத்தரவிட்டிருப்பதாகவும்,ஹோர்மூஸ் நீரிணையில் இரானியர்கள் விரித்துள்ள கண்ணிவெடிகளை அமெரிக்கக் கடற்படை அழிக்கத் தொடங்கப் போகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

"சட்டவிரோதக் கட்டணம் செலுத்தும் எவருக்கும், திறந்த கடலில் பாதுகாப்பான வழி கிடைக்காது. அமைதியான முறையில் செல்லும் கப்பல்கள் மீதோ அல்லது எங்கள் மீதோ துப்பாக்கிச் சூடு நடத்தும் எந்தவொரு இரானியரும் நரகத்திற்கு அனுப்பப்படுவார்," என்று அவர் கூறினார்.

மேலும், "முற்றுகை விரைவில் தொடங்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்து விடுவதாக இரான் உறுதியளித்ததாகவும், ஆனால் அவர்கள் திட்டமிட்டே அவ்வாறு செய்யவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்து விடுவதாக இரான் உறுதியளித்ததாகவும், ஆனால் அவர்கள் திட்டமிட்டே அவ்வாறு செய்யவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

'இரான் வேண்டுமென்றே ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்கவில்லை'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ட்ரூத் சோஷியல் தளத்தில் மற்றொரு பதிவில் டொனால்ட் டிரம்ப், "ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்து விடுவதாக இரான் வாக்குறுதி அளித்திருந்தது, ஆனால் அவர்கள் வேண்டுமென்றே அதைச் செய்யவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

"இதன் காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள பல மக்களும் நாடுகளும் கவலைகளையும், குழப்பங்களையும், துன்பங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது," என அவர் தெரிவித்தார்.

அவர்கள் வாக்குறுதி அளித்தபடி, இந்தச் சர்வதேச நீர்வழியைத் திறக்கும் பணிகளை அவர்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும்," என்று அவர் மேலும் எழுதினார்.

இதன்பின் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை குறித்துக் குறிப்பிடுகையில், துணை அதிபர் ஜேடி வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் பேச்சுவார்த்தையாளர் ஜேரட் குஷ்னர் ஆகியோர் தனக்கு முழு விவரங்களையும் வழங்கியதாகத் தெரிவித்தார். அதேபோல், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குழுவினரின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

'சுமார் 20 மணிநேர' பேச்சுவார்த்தைக்குப் பிறகு, "இரான் தனது அணுசக்தி லட்சியங்களைக் கைவிடத் தயாராக இல்லை என்பதுதான் இதில் முக்கியமான ஒரே விஷயம்" என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.

"பல வழிகளில், உடன்பாடு எட்டப்பட்ட அம்சங்கள் நமது ராணுவ நடவடிக்கைகளை இறுதிவரை தொடர்வதை விடச் சிறப்பானவைதான். ஆனால், இப்படிப்பட்ட நிலையற்ற, கடினமான மற்றும் கணிக்க முடியாத நபர்களின் கைகளில் அணுசக்தி அதிகாரம் கிடைப்பதை ஒப்பிட்டால் அவை சாதாரணமானவை," என்று அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளதா?

செபாஸ்டியன் அஷர், உலக விவகாரங்கள் நிருபர்

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (இடது), பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (நடுவில் இருப்பவர்) மற்றும் இரான் நாடாளுமன்ற சபாநாயகர் பாகர் காலிபாஃப் (வலது)

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (இடது), பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (நடுவில் இருப்பவர்) மற்றும் இரான் நாடாளுமன்ற சபாநாயகர் பாகர் காலிபாஃப் (வலது)

இஸ்லாமாபாத்தில் நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் போது எழுந்திருந்த எதிர்பார்ப்புகள், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பழைய எதிரிகளான இருவருக்கும் இடையே தேவையான நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. சிக்கலாக இருந்த முக்கியப் பிரச்சினைகளும் இன்னும் தீர்க்கப்படவில்லை.

ஆனால், இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியது போல, பேச்சுவார்த்தை எவ்வளவு தீவிரமாக, உயர்மட்டத்தில் மற்றும் நீண்ட நேரம் நடந்தாலும், ஒரே ஒரு சந்திப்பிலேயே ஒப்பந்தம் எட்டப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தற்போதைக்கு, எஞ்சியுள்ள இரண்டு வாரப் போர்நிறுத்தக் காலத்தில் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு ஏதேனும் உறுதியான அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இரு தரப்பும் தங்களின் நலனுக்கும், உலகின் பிற பகுதிகளின் நலனுக்கும் உகந்த ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதும் இப்போது தெளிவாகத் தெரியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு