கூடங்குளம் அணு உலை ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்ததா?

கூடங்குளம் அணு உலை, ஆவணங்கள் கசிவு, டார்க் வெப்

பட மூலாதாரம், Pallava Bagla/Getty Images

படக்குறிப்பு, கூடங்குளம் அணு உலை (கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு உலை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த ஆவணங்கள் ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து கசிந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளதாகவும் இது தொடர்பாக அந்நிறுவனம் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

என்ன நடந்தது?

வேர்ல்ட் லீக்ஸ் என்கிற தரவுகளைத் திருடி வெளியிடும் குழு (Ransomware group) டார்க் வெப்பில் இந்தியாவின் மிகப்பெரிய அணு உலையான கூடங்குளம் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுள்ளது என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியின்படி, அணு உலையின் சில பகுதிகளின் வரைபடங்கள் எனக் கூறப்படுபவையும் விநியோகஸ்தர்களின் தகவல்களும் வெளியாகியுள்ளது.

ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், யோட்டா என்கிற மூன்றாம் தரப்பு இந்திய தரவு சேவை மையத்தின் சர்வரில் இருந்து இருந்த அதன் தரவுகள் கசிந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் அவை எந்தெந்த ஆவணங்கள் என ரிலையன்ஸ் குழுமம் கூறவில்லை.

"ஜூன் 11 முதல் இவை இணையத்தில் இருக்கின்றன. கூடங்குளம் அணு உலை எனத் தேடினால் 14.3 ஜிபி அளவு கொண்ட சுமார் 19,000 ஆவணங்கள் வருகிறது," என சுயாதீன சைபர் பாதுகாப்பு ஆய்வாளரான ராகேஷ் கிருஷ்ணன் என்பவர் தான் முதலில் தங்களிடம் தெரிவித்ததாக ராய்டர்ஸ் கூறியுள்ளது.

கூடங்குளம் அணு உலை, ஆவணங்கள் கசிவு, டார்க் வெப்

பட மூலாதாரம், Getty Images

2016 முதல் 2025 வரையிலான இந்த ஆவணங்களை ராய்டர்ஸ் ஆராய்ந்துள்ள நிலையில் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ராய்டர்ஸ் செய்தியின்படி, வேர்ல்டு லீக்ஸ் இணையத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்தம் 8.58 லட்சம் ஆவணங்கள் வெளியாகியுள்ளது. அதில் கூடங்குளம் அணு உலையுடன் தொடர்புடைய சுமார் 19,000 ஆவணங்கள் தான் முக்கியமானதாக உள்ளது.

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்‌ஷர், 2018-ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலையில் மூன்று மற்றும் நான்காம் அலகை வடிவமைத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை வென்றிருந்தது.

இது தொடர்பாக யோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்குச் சொந்தமான, தாங்கள் பராமரிக்கும் சர்வர் ஒன்றில் மே 29 அன்று சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தோம். அந்தச் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டதுடன், சந்தேகத்திற்குரிய ரான்சம்வேர் இயக்கம் தடுக்கப்பட்டது." எனத் தெரிவித்துள்ளது.

ஆனால் ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில், ஜூன் இறுதியில் 'மூன்றாம் தரப்பினால்' தரவு கசிவு நிகழ்ந்ததாகச் செய்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது என்றும் யோட்டாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்றாம் தரப்பு தரவு கசிவை தங்களால் உறுதி செய்ய முடியவில்லை எனத் தெரிவித்துள்ள யோட்டா நிறுவனம், தனது விரிவான தொழில்நுட்ப விசாரணையை ரிலையன்ஸிடம் பகிர்ந்துள்ளதாகவும் தற்போது நடைபெற்று வரும் விசாரணைக்கு உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

வேர்ல்ட் லீக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்கள், அணு உலைகளின் மைய அமைப்புகளுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்றும் ராய்டர்ஸ் செய்தி கூறுகிறது. இவை ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ரோசாட்டம் நிறுவனத்தால் வழங்கப்படுகின்றன.

கூடங்குளம் அணு உலை அலகுகளின் கட்டமைப்பு, உபகரணங்கள் வழங்குபவர்களின் தகவல்கள், காப்பீடு தொடர்பான தரவுகளும் கசிந்திருப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது.

கூடங்குளம் அணு உலை, ஆவணங்கள் கசிவு, டார்க் வெப்

பட மூலாதாரம், Getty Images

இந்தச் செய்தி அதிர்ச்சியளிப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டவிரோத இணையத்தில் கூடங்குளம் அணு உலை தொடர்பாக கிடைக்கும் திருடப்பட்ட தரவுகள் மிகவும் தீவிரமான அபாயத்தை உருவாக்கக்கூடிய தரவுகள் என வல்லுநர்கள் தெரிவித்திருப்பது நம் கவலையை அதிகரித்துள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசின் மெளனம் நமது அச்சத்தை அதிகரிக்கிறது," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு உடனடியாக தனது விளக்கத்தை வெளியிட வேண்டும் எனக் கூறும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, இது தொடர்பாக ஒன்றிய அரசை உடனடியாக தமிழ்நாடு அரசு அணுகி விளக்கம் பெற்று மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு