'தவெக ஆட்சி அமைக்கும்' என்ற கணிப்பு குறித்து தமிழக அரசியல் கட்சிகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், TVKPartyHQ/X
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்று தெரிவித்துள்ள நிலையில், ஒரு கருத்துக் கணிப்பு தவெக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் செய்த தவறையே, மீண்டும் அந்த நிறுவனம் இந்த கருத்துக் கணிப்பிலும் செய்திருப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் அனைத்தும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானவை அல்ல, கடந்த காலங்களில் முடிவுகள் கருத்துக்கணிப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளன. நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான தேர்தல் முடிவுகள் மே 4 அன்று வெளியாகும்.
கணிப்புகள் கூறியது என்ன?
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், புதன்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
தமிழகத்தில் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜேவிசி (டைம்ஸ் நவ்) மற்றும் வோட் வைப் (சிஎன்என் நியூஸ் 18) கருத்துக் கணிப்புகள் அதிமுக ஆட்சியமைக்கும் என்று கணித்துள்ளன.
இந்தியா டுடே–ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பின்படி, திமுக கூட்டணி மற்றும் தவெக ஆகியவற்றுக்கு தலா 35 சதவீத வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 23 சதவீத வாக்குகளும் கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திமுக கூட்டணி 92 - 110 இடங்களிலும், தவெக 98 –120 இடங்களிலும், அதிமுக கூட்டணி 22–32 இடங்களிலும் வெல்லும் என்று கணித்துள்ளது.
இந்தியாவின் பிரபல தேர்தல் கணிப்பு முகமைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக்கணிப்பில், புதிய கட்சியான தவெக தனிப்பெரும்பான்மை பெறுமென்று கூறியிருப்பது தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்
தவெக முன்னிலை பெறுமென்ற கணிப்பு, தவெக ஆதரவாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் அக்கணிப்பை விமர்சிக்கின்றனர்.
பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம், ''நாங்கள் களத்துக்கு சென்றவரையிலும், இந்த கணிப்புகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வேறாகத்தான் இருக்குமென்று தெரிகிறது. கொங்குநாடு முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டபோது, மேற்கு மண்டலத்தில் பல தொகுதிகளில் முதலிடம், இரண்டாமிடம் பெறுமென்று கணித்தார்கள். ஆனால், பெரும்பாலான தொகுதிகளில் டெபாஸிட் வாங்கவில்லை. அதேபோல்தான், இப்போதும் நடக்கும். அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.'' என்றார்.
இந்த விஷயத்தில் அதிமுகவின் கருத்தையே பிரதிபலிக்கும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''தவெக தனித்து ஆட்சியமைக்கும் என்று இப்போது கணித்துள்ள நிறுவனம்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெறும் என்று கணித்தது. அந்த தவறான கணிப்புக்காக தொலைக்காட்சி விவாதத்தில் அப்போது அழுதார்கள். இப்போது இந்த கணிப்புக்காக மீண்டும் அதையே வாக்கு எண்ணிக்கை நாளில் செய்வார்கள்" என்றார்.

பட மூலாதாரம், KASengottaiyan/X
தவெக கூறுவது என்ன?
தவெக 200 இடங்களில் வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், இன்று (ஏப்ரல் 30) கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
''தவெக 200 இடங்களில் வெற்றி பெறும். விஜய் தமிழகத்தை ஆள்வார். பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி, சோசலிசப் புரட்சி போல தமிழகத்தில் நடக்கும் விசில் புரட்சி உலகளவில் பேசப்படும்.'' என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தவெக ஆட்சியமைக்கும் அளவுக்கு, தேர்தலில் அதன் வீச்சு இருந்திருந்தால் அது மற்ற கணிப்புகளில் சிறிதேனும் எதிரொலித்திருக்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கணிப்புகள், திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று கூறியிருப்பதால் அதுதான் சரியான கணிப்பாக இருக்க முடியும் என்றார்.

இதுபற்றி மேலும் விளக்கிய பத்திரிகையாளர் ப்ரியன், ''நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்த நிறுவனத்தின் கணிப்பு தவறானது. அவர்கள் மீண்டும் அதே தவறைச் செய்திருக்கிறார்கள். அந்த நிறுவனம் ஒவ்வொரு தொகுதியிலும் 188 பேரிடம் போனில் கருத்துக் கேட்டு இதை வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதன் நம்பகத்தன்மை எப்படியிருக்குமென்று தெரியவில்லை. 25–30 இடங்களை தவெக வெல்லும் என்றாலும் நம்பலாம். ஆனால் ஆட்சி அமைக்கும் என்பதை யாருமே நம்ப மாட்டார்கள்.'' என்றார்.

கருத்துக் கணிப்புகளில் குறைகளா?
தவெக ஆட்சியமைக்கும் என்ற கணிப்பில் பல குறைபாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் கோபண்ணா.
''அந்த கணிப்பு களநிலவரத்தைப் பிரதிபலிக்காமல் உள்ளது. மாதிரி சரியில்லை. உள்ளார்ந்த களப்பணி மேற்கொள்ளப்படவில்லை. ஊரகப் பகுதிகளில் கணிப்பு எடுத்ததாகவே தெரியவில்லை. நகர்ப்புறம், பெருநகரங்களில் விஜய்க்கு ஆதரவு அதிகமிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அது ஆட்சியமைக்கும் அளவுக்கு இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை.'' என்றார் கோபண்ணா.
அதுபற்றி விளக்கிய அவர், ''கட்சிக்குக் கட்டமைப்பு இல்லை, சரியான வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. விஜய்க்காக விழும் வாக்குகளை வைத்தே, முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்கும் என்பதெல்லாம் அதீதமான கற்பனை மட்டுமே. இளைஞர்கள், ரசிகர்கள், உணர்ச்சிமயமாக முடிவெடுப்பவர்கள் வாக்களிப்பார்கள். அது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.'' என்றார்.
இந்த கருத்தில் பெருமளவு உண்மை இருப்பதாகக் கூறுகிறார், தேர்தல் வியூக வகுப்பாளரான லியோ ரீகன். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் தாங்கள் களப்பணி செய்ததாக அவர் கூறினார்.
தவெகவிற்கு களப்பணி, கட்டமைப்பு இல்லாத நிலையில், விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை வாக்காக மாற்றும் வாய்ப்பை அக்கட்சி தவற விட்டிருப்பதை தாங்கள் களத்தில் அறிந்ததாக அவர் தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய லியோ ரீகன், ''ஊரகப்பகுதிகளில் தவெக வேட்பாளர்கள் அறிமுகமே இல்லாதிருந்தனர். வாக்குச்சாவடி அளவில் களப்பணி நடக்கவில்லை. வேட்பாளர்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. விஜய் முகத்தை வைத்தே முழுக்க முழுக்க தேர்தல் பரப்புரை நடந்தது. திமுக எதிர்ப்பில் தீவிரமாக இருந்த விஜய், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி தொகுதிகளில் பரப்புரை செய்யவேயில்லை. கட்சியின் முக்கிய முகங்களான செங்கோட்டையன், அருண்ராஜ் தொகுதிகளிலும் பரப்புரைக்குச் செல்லவேயில்லை.'' என்றார்.

பட மூலாதாரம், AGopanna/X
தவெக எவ்வளவு வாக்குகளை வாங்கலாம்?
தவெக எவ்வளவு சதவீத வாக்குகளைப் பெறும், அது எந்தக் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்ற விவாதங்களும் பரவலாக நடந்து வருகின்றன.
இதுபற்றி பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் கோபண்ணா, ''ஊரகத் தொகுதிகளில் 10 சதவீதத்துக்கு குறைவாகவும், நகர்ப்புறங்களில் 15 சதவீதமும், பெருநகரங்களில் 20 சதவீததமும் விஜய்க்கு கிடைக்கலாம். சென்னையில் 25 சதவீதமாகலாம். பெரம்பூரில் அதற்கும் அதிகமாகவே வாங்குவார். அவர் ஜெயிப்பாரா என்பதை இப்போதைக்குக் கணிக்க முடியவில்லை.'' என்றார்
கட்சி அபிமானத்தைத் தவிர்த்து, மாற்றம் வேண்டுமென்பதற்காக வாக்களிக்கும் ஒரு பிரிவினர் இருப்பார்கள் என்று கூறிய பாஜக விவசாய அணி மாநில செயலாளர் ஜி.கே.நாகராஜ், புதிய வாக்காளர்கள் 12 சதவீதம் பேர் உட்பட எப்படிப் பார்த்தாலும் தவெகவுக்கு 20 சதவீதத்துக்கு மேல் வாக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்றார்.
சென்னையில் வேண்டுமானால் இது 30 சதவீதமாக அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
ஆனால், தவெக சராசரியாக 17–22 சதவீதம் வாக்குகளை வாங்கும் என்று கூறும் தேர்தல் வியூக வகுப்பாளர் லியோ ரீகன், இதில் குறைந்தபட்சம் என்பது ஊரகப்பகுதிகளிலும், அதிகபட்சம் என்பது நகர்ப்புறங்களிலும் கிடைக்கும் என்றார்.
''தவெக சராசரியாக 20–25 சதவீதம் வரை வாக்கு பெறலாம். ஊரகப் பகுதிகளில் அது 15 சதவீதமாகக் குறையும், நகர்ப்புறங்களில் 25 சதவீதமாகவும், பெருநகரங்களில் 30 சதவீதமாகவும் இருக்கலாம். ஆனாலும் 15 தொகுதிகளில் வெற்றி பெறவே வாய்ப்புள்ளது. உதாரணமாக கேரளத்தில் பாஜகவுக்கு 14 சதவீத வாக்குகள் கிடைக்குமென்று கணித்துள்ள நிறுவனங்கள், 4 இடங்களில் மட்டுமே வெல்லுமென்று கூறியுள்ளன. அந்த கோணத்தில் பார்க்கும்போது தவெக பெறும் 20 சதவீத வாக்குகளுக்கு 7 இடங்கள்தான் தரமுடியும்.'' என்றார் பத்திரிகையாளர் ப்ரியன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































