காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திங்கள்கிழமையன்று நரேந்திர மோதி அரசுக்கு எதிராக இளைஞர்களின் கோபம் வீதிகளில் வெளிப்பட்டது.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றனர்.

காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்தனர்.

இந்தப் போராட்டத்தை காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) முன்னெடுத்த போதிலும், அரசின் கொள்கைகளால் அதிருப்தியடைந்த மக்களும் இதில் பங்கேற்றனர். இந்தப் போராட்டங்கள் குறித்து சர்வதேச ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகின்றன.

இந்தப் போராட்டத்தின் மிக முக்கிய ஆதரவாளரான 59 வயதான சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தபோது, போராட்டக் களத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்ததாக அமெரிக்க ஊடகமான புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கள்கிழமை பிற்பகலுக்குள், நாடாளுமன்ற வளாகத்திற்குச் செல்லும் பல முக்கிய சாலைகளில் பெருமளவிலான போராட்டக்காரர்கள் திரண்டனர்.

போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக காவல்துறையினர் பல இடங்களில் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்.

பிற்பகலில், சிஜேபி பிரதிநிதிகள் குழு ஒன்று அரசை சந்தித்து, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை முறைப்படி சமர்ப்பித்தது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இருப்பினும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

"சிஜேபி தலைவர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்ற தங்களின் முதன்மைக் கோரிக்கையில் உறுதியாக இருந்தபோதிலும், வீதிகளில் இறங்கிய போராட்டக்காரர்களின் கோபம் நேரடியாக பிரதமர் நரேந்திர மோதியை நோக்கியதாகவும் இருந்தது. இது அரசின் மீதான பரவலான அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது. 'மோதி பயப்படும் போதெல்லாம், அவர் காவல்துறையின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்' என்ற முழக்கம் டெல்லியில் தொடர்ந்து கேட்கப்பட்டது" என்று புளூம்பெர்க் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்குள், இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு இந்தப் போராட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

முன்னதாக மாணவர்கள் போராட்டத்தில் இருந்து விலகியிருந்த பல மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களும் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

25 நாட்கள் நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடரில், விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் ராமர் கோவிலில் காணிக்கை திருடப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் போன்ற விவகாரங்களில் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

இது அரசின் மீதான பரவலான அதிருப்தியைப் பிரதிபலிக்கிறது. 'மோதி பயப்படும் போதெல்லாம், அவர் காவல்துறையின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்' என்ற முழக்கம் டெல்லியில் தொடர்ந்து கேட்கப்பட்டது" என்று புளூம்பெர்க் நாளிதழ் எழுதியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லியில் சிஜேபி போராட்டங்கள் தொடர்கின்றன.

சக்திவாய்ந்த அரசாங்கத்திற்கு எதிரான வலுவான போராட்டங்கள்

"அடுத்த நான்கு வாரங்களில் ஒரு முக்கிய அரசியல் சர்ச்சையாகத் தொகுதி மறுவரையறை மசோதா இருக்கலாம். இந்த மசோதா மக்களவையின் 543 இடங்களை 850 ஆக விரிவுபடுத்தவும், தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்யவும் முன்மொழிகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இந்திய அரசியலில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அரசியலமைப்பு மாற்றங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மசோதா, கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசியலமைப்பு திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது" என்று புளூம்பெர்க் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

மேலும், "சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெற்ற வெற்றிகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோதி இந்த ஆண்டில் தனது அரசியல் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளார். 75 வயதான மோதி அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவில் அதிகாரத்தில் நீடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

இருப்பினும், சிஜேபி முன்னெடுத்துள்ள போராட்டங்கள் அதிகரித்து வரும் பொதுமக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன. இது உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வரவிருக்கும் தேர்தல்களில் பாஜகவுக்கு சவாலாக அமையக்கூடும்" என்றும் ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

"துடிப்பான ஜனநாயக நாடான இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோதியின் 12 ஆண்டுகால ஆட்சி காலம் போராட்டங்களுக்கும் மாற்றுக் கருத்துக்களுக்குமான இடத்தை கணிசமாகக் குறைத்துள்ளது. மாற்றுக்கருத்து தெரிவிப்பவர்களை ஒடுக்குவதாகவும், பல செயல்பாட்டாளர்களைச் சிறையில் அடைப்பதாகவும் அவரது அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது பொது போராட்டங்களைச் சுற்றி ஒருவித அச்ச உணர்வை உருவாக்கியுள்ளது" என்று அமெரிக்க செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய போராட்டத்தை வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி தொடங்கியது. இந்தியாவின் இளைஞர்களிடையே நிலவும் கோபத்தின் அடையாளமாக இந்த இயக்கம் மாறியுள்ளது. வேலையில்லா இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என்று ஒப்பிட்டு இந்திய தலைமை நீதிபதி கூறிய கருத்துகளுக்குப் பிறகு இந்த இயக்கம் உருவானது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி ஜூன் மாதத்தில் இந்த அமைப்பு தொடர் அமர்வு போராட்டத்தைத் தொடங்கியது'' என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பிரியம் துபே என்ற 26 வயதான ஆய்வாளர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம், ''2024-ஆம் ஆண்டு நான் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்தது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால், எனது முதுகலைப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை கிடைத்திருக்கும். ஆனால் பின்னர் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், மீண்டும் எழுத வேண்டும் என்றும் கூறப்பட்டது." என்றார்.

அவர் மேலும், "நான் தேர்வு எழுதியிருந்தேன். அது மிகவும் நன்றாகச் சென்றது. ஆனால் மறுநாள் காலையில் எழுந்தபோது, வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதை அறிந்தேன். மீண்டும் அதற்காகத் தயாராக விரும்பவில்லை." என்றார்.

தன்னைப் போன்ற இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை என்றும் அவர் கூறினார்.

கூட்டம் அதிகரித்ததால், போராட்டக் களத்தைச் சுற்றி இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது.

'ஆழ்ந்த அதிருப்தியின் அறிகுறியா?'

பிற்பகலில், நாடாளுமன்றத்திற்குச் செல்லும் சாலைகளில் திரண்டிருந்த போராட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதால் பதற்றம் அதிகரித்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திங்களன்று டெல்லியில் நடந்த போராட்டத்தின் ஒரு காட்சி.

"சிஜேபியின் அழைப்பைத் தொடர்ந்து, ஏராளமான போராட்டக்காரர்கள் திங்கள்கிழமை காலை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்லத் தொடங்கினர். அவர்கள், 'அரசு விழித்தெழுந்து எங்கள் குரலைக் கேட்க வேண்டும்' என்று வலியுறுத்தும் கொடிகளையும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். பிற்பகலில், நாடாளுமன்றத்துக்குச் செல்லும் சாலைகளில் போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. அதற்கு எதிர்வினையாக, போராட்டக்காரர்கள் 'மோதிஅஞ்சும்போதெல்லாம் காவல்துறையை முன்னிறுத்துகிறார்' என்று முழக்கமிட்டனர்." என பிரிட்டிஷ் நாளிதழான 'ஃபைனான்சியல் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்பதற்காக மதுராவிலிருந்து வந்த ஜவுளி தொழிலதிபரான மயங்க் சூரி, ''மாணவர்களுக்கு ஆதரவாக நான் இங்கு வந்துள்ளேன், ஏனெனில் இந்த அரசு, தான் நினைத்ததை எல்லாம் செய்துவிடலாம் என்று கருதுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எங்கள் கோரிக்கைகளைக் கொண்டு சேர்ப்பதற்காக நாடாளுமன்றத்தின் நுழைவாயில் வரை மட்டுமே நாங்கள் செல்ல விரும்புகிறோம். அரசு நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் போராட்டத்தைத் தொடர்வோம்'' என்று கூறியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக, இந்திய அரசியலில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 1980-களின் தொடக்கத்தில் இந்திரா காந்தியின் காலத்திற்குப் பிறகு இத்தகைய அரசியல் ஆதிக்கம் இப்போது மீண்டும் காணப்படுகிறது. எனினும், தேர்வு முறை தொடர்பான சர்ச்சைகள் பொதுமக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ள அதிருப்தியை வெளிக்கொண்டு வந்துள்ளன." என குறிப்பிட்டுள்ளது

மற்றொரு பிரிட்டிஷ் நாளிதழான 'தி கார்டியன்', டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து எழுதுகையில், "அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்த இயக்கங்கள் சமீபத்திய ஆண்டுகளில் ஆட்சிகளை வீழ்த்தியுள்ளன. அதற்கு நேர்மாறாக, இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவிலான வெளிப்படையான மாற்றுக்கருத்து கொண்ட போராட்டங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அரிதாகவே நடந்துள்ளன" என்று தெரிவித்துள்ளது.

"பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் கடந்த 12 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் பாஜக, மத்திய மற்றும் மாநில அளவிலும் முன்னெப்போதும் இல்லாத அளவு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. மேலும், தனது விமர்சகர்களையும் எதிர்ப்பாளர்களையும் அரசு தொடர்ந்து ஒடுக்கி, சிறையில் அடைப்பதாகவும், இதன் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான வாய்ப்புகளைக் கணிசமாகக் கட்டுப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

"சிஜேபி-யின் அழைப்பை ஏற்று, திங்கட்கிழமை காலை பெருமளவிலான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி செல்லத் தொடங்கினர். அரசு 'விழித்துக்கொண்டு எங்கள் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்' என்று வலியுறுத்தும் கொடிகளையும் பலகைகளையும் அவர்கள் ஏந்திச் சென்றனர்".

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போராட்டங்களின் போது பலரும் காயமடைந்தனர்.

கத்தாரின் செய்தி இணையதளமான அல்-ஜசீரா, அசோகா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான உதய சந்திரா எழுதிய கட்டுரையை வெளியிட்டது.

"இந்தியாவில் சிஜேபி இயக்கம் இணையத்தில் வைரலான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதன் இயக்கம் இப்போது ஒரு புதிய, நேரடி மோதல் கட்டத்தில் நுழைந்துள்ளது" என்று அக்கட்டுரையில் உதய சந்திரா குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவின் நெருக்கடியும் கொந்தளிப்பும் நிறைந்த அரசியலில், சமூக வலைதளங்களின் வாயிலாக உருவாகி, சிறிது காலம் வீதிகளில் தோன்றி பின் விரைவாக மறைந்துவிடும் ஒரு தற்காலிக, கேலிச்சித்திர இளைஞர் இயக்கமாக இனி சிஜேபி-யைப் பார்க்க முடியாது. 'கரப்பான் பூச்சி' என்ற அடையாளம் சமூகத்தில் பரவலாக இருந்த அதிருப்திக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்ததால் அது பெரும் வரவேற்பைப் பெற்றது"என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

"ஒருவரை 'கரப்பான் பூச்சி' என்று அழைப்பது, அவர் அசுத்தமானவர், முக்கியத்துவமற்றவர் மற்றும் கண்ணில் படாமல் மறைத்து வைக்கப்பட வேண்டியவர் என்பதையே உணர்த்துகிறது. கரப்பான் பூச்சி பொதுவாக அழகற்றதாகவும், கேலிக்குரியதாகவும், சமூகத்தின் விளிம்புகளில் வாழும் ஒரு உயிரினமாகவும் பார்க்கப்படுகிறது. அந்த உயிரினம் வெறுக்கத்தக்கது, அதை கொல்வது கடினம். மேலும் அது சமூகத்தின் பிளவுகளில் உயிர் வாழ்கிறது. விஷம், இருள் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றையும் மீறி அது உயிர் வாழ்கிறது. "என்றும் உதய சந்திரா அதில் குறிப்பிட்டுள்ளார்.

''வேலையின்மை, வினாத்தாள் கசிவுகள், அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பல இளம் இந்தியர்களுக்கு, இந்த அவமதிப்பு அவர்கள் ஏற்கனவே உணர்ந்துகொண்டிருந்த நிலையை பிரதிபலித்தது. சிஜேபி அந்த அவமதிப்பை அடையாளமாகவும், குரலாகவும் மாற்றியது. 'அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களை இப்படித்தான் பார்க்கிறார்கள் என்றால், அதே அடையாளத்துடன் நாங்கள் எங்கள் குரலை உயர்த்துவோம்' என்பதே அதன் செய்தி. இவ்வாறு, ஓர் அவமதிப்பு சொல் பெருமையின் அடையாளமாக மாறியது.'' என்று உதய் சந்திரா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு