You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வருவாய் பகிர்வு' முறையில் சம்பளம் பெறக்கோரும் தயாரிப்பாளர்கள் - நடிகர் சங்கம் கூறும் பதில் என்ன?
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தது. இதனால், தனுஷ், சிம்பு, விஷால், விஜய்ஆண்டனி நடிக்கும் படங்கள் உட்பட 35க்கும் அதிகமான படங்களின் படப்பிடிப்பு ரத்தாகி உள்ளது.
சென்னை மட்டுமல்ல, வெளியூரில் நடந்த படப்பிடிப்புகளும் ரத்தானதால் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு, ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.
ஏன் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமாக நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் கூறும் புகார் மற்றும் இதற்கு நடிகர்கள் சங்கம் அளிக்கும் விளக்கம் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.
ஏன் வேலை நிறுத்தம்?
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்களான எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ''வருவாய் பகிர்வு' என்ற முறையில் நடிகர்கள் சம்பளம் வாங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம் என கூறியுள்ளனர்.
இதற்கான காரணங்களை விளக்கிய அவர், "தயாரிப்பாளர்களின் நலனில் நடிகர்கள் பங்கேற்க வேண்டும் என்று வருவாய் பகிர்வு சம்பள முறை குறித்து தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திடம் கடந்த 3 ஆண்டுகளாக கடிதம், பத்திரிகை வாயிலாக தெரிவித்தும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. ஆகவேதான் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது '' என்று கூறினர்
வருவாய் பகிர்வு முறை என்றால் என்ன?
நடிகர்களுக்கு வருவாய் பகிர்வு முறையில் சம்பளம், லாபத்தில் பங்கு முறையில் சம்பளம் என்றெல்லாம் பேசப்படுகிறதே. அது பற்றி விரிவாக கூற முடியுமா? இப்போது இந்த முறைக்கு மாற தயாரிப்பாளர்கள் அழுத்தம் கொடுப்பது ஏன் என்ற கேள்விகளுடன் தயாரிப்பாளர்களை பிபிசி தமிழ் அணுகியது.
இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த தயாரிப்பாளரும், சினிமா ஆய்வாளருமான தனஞ்செயன், ''ஒரு படத்தை தயாரிப்பாளர் தயாரிக்கும்போது நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. நடிகர்களுக்கு வருவாய் பகிர்வு முறையில் சம்பளம் என்றால், ஒரு படத்தின் அனைத்து வியாபாரத்திலும் இத்தனை சதவீத பங்கு என்ற முறையில் சம்பளம். அதாவது தியேட்டர் வியாபாரம், டிஜிட்டல், சாடிலைட் வியாபாரம், வெளிமாநில, வெளிநாடு உரிமை, இசை, ரீமேக் உரிமை, வணிகரீதியான வருமானம் என அனைத்து வியாபாரத்தில் இருந்தும் நடிகர்களை பொறுத்து 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பங்கு என பிரிப்பார்கள்." என்று தெரிவித்தார்.
இது பற்றி மேலும் விளக்கிய அவர், "இப்படி ஒட்டு மொத்தமாக ரூ.100 கோடி வியாபாரம் ஆனால் 30 % வருவாய் பகிர்வு என்றால், நடிகர்கள் சம்பளமாக ரூ.30 கோடி பெறுவார்கள். இது படத்தின் வியாபாரத்தை பொறுத்து அதிகரிக்கும் அல்லது குறையும். லாபத்தில் பங்கு என்றால் படம் முடிந்தபின் செலவுகளை தவிர்த்து கிடைக்கும் லாபத்தில் இத்தனை சதவீத பங்கு என்ற முறையில் சம்பளம். ஒரு சிலர் லாபத்தில் பங்கு என்ற முறைக்கு மாறினார்கள். அதாவது செலவு தவிர்த்து தயாரிப்பாளருக்கு கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம்'' என்கிறார்.
"ராதிகா, கென் படங்களில் நடந்தது"
தமிழ் சினிமாவில் இந்த வருவாய் பகிர்வு முறைக்கு இதுவரை பெரிய நடிகர்கள் யாரும் வரவில்லை என குறிப்பிடும் தனஞ்செயன்,சமீபத்திய உதாரணம் என ஒரு பெயர் குறிப்பிடாத ஒரு ஒரு படம் பற்றி விளக்கினார்.
"குறிப்பிட்ட அந்த பெரிய படத்திற்கு அந்த ஹீரோ ரூ.55 கோடி சம்பளம் வாங்கிவிட்டார். அந்த படம் ரூ.120 கோடி செலவு, ஆனால் ரூ. 80 கோடிதான் மொத்தமான வருமான் ஈட்டியது. தயாரிப்பாளருக்கு ரூ. 40 கோடிவரை நஷ்டம். இதுவே அவர் 30 சதவீதம் என்ற வருவாய் பகிர்வு முறையில் சம்பளம் வாங்கியிருந்தால் தயாரிப்பாளரின் நஷ்டம் குறைந்த இருக்கும். நடிகரின் சம்பளத்தில் கொஞ்சம் குறைந்து இருக்கும்" என்றார்.
மேலும் தனஞ்செயன் கூறுகையில் "'தாய்கிழவி' படத்துக்காக ராதிகாவுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பளம் கொடுத்துவிட்டு, மீதியை லாபத்தில் 10சதவீத பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்தார்கள். 'யூத்' படத்துக்கும் கென் இப்படி வாங்கினார். இந்த படம் நன்றாக ஓட, இருவருக்கும் லாபத்தில் பங்கு வர, நல்ல வருமானம் கிடைத்தது'' என்றார்.
லாபத்தில் பங்கு என்ற முறையில் 'பராசக்தி' படமும் வந்தது. அந்த படத்தில் சம்பளம் தவிர சில நடிகர்கள் லாபத்தில் ஒரு தொகையை பெற்றார்கள். அந்த படம் பிஸினஸ் குறைந்தாலும், தயாரிப்பாளருக்கு பாதிப்பு இல்லை. அவருக்கு ரூ. 40 கோடிவரை தப்பித்தது' என்றார்
குறிப்பாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு வருவாய் பகிர்வு முறை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
"டிஜிட்டல் வியாபாரம் இல்லை. நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை"
பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், '' தமிழ் சினிமா நிலவரம் மோசமாக போய்க்கொண்டு இருக்கிறது. ஆண்டுக்கு 200க்கும் அதிகமான படங்கள் வெளியானாலும் 10% படங்கள் கூட வெற்றி பெறுவது இல்லை." என்கிறார்.
மேலும்,"வருவாய் பகிர்வு முறை குறித்து நடிகர் சங்கத்திடம் கடிதம் மூலமாகவும், நேரடி பேச்சுவார்த்தையிலும் இது குறித்து பேசியிருக்கிறோம். அவர்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு வரவில்லை. " என கூறும் அவர், "சம்பளத்தை வருவாய் பகிர்வு முறைக்கு மாற்ற டாப் 10 நடிகர்களிடம் பேச வேண்டும். செயற்குழு, பொதுக்குழுவில் பேச வேண்டும் என்று காலம் தாழ்த்தி வருகிறார்கள்'' என்றார்,
சம்பள பகிர்வு என்பது சம்பளம் மட்டுமின்றி பல விதங்களில் தங்களுக்கு உதவும் என்கிறார் தனஞ்செயன், ''வருவாய் பகிர்வு என்ற சம்பள முறைக்கு நடிகர்கள் வந்தால் தயாரிப்பாளர்களுக்கு பல வகைகளில் நிம்மதி. பெரும்பாலானவர்கள் வட்டிக்கு பணம் வாங்கிதான் படம் தயாரிக்கிறார்கள். இந்த முறைக்கு நடிகர்கள் மாறினால் முதலில் அவர்களுக்கு பெருந்தொகையை கொடுக்க வேண்டியதில்லை. படத்தின் வியாபாரம் முடிந்தபின் கொடுத்தால் போதும். முதலில் ஒரு தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்தால் போதும். எங்களுக்கு வட்டி குறையும்'' என்றும் அவர் விளக்குகிறார்.
நடிகர் சங்கம் கூறுவது என்ன?
நடிகர் சங்கம் மீது தயாரிப்பாளர் சங்கம் குற்றம் சாட்டும் நிலையில், நடிகர் சங்க துணைத்தலைவரான கருணாஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில் ''நடிகர்களின் சம்பளத்தை அவர் மார்க்கெட்டும், அவருக்கு சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளரும்தான் நிர்ணயம் செய்கிறார்கள். இவ்வளவு சம்பளம் என்று நடிகர்கள் கேட்கிறார்கள்.அதை தயாரிப்பாளர்தானே முடிவு செய்கிறார். இதில் எப்படி நடிகர் சங்க தலையிட முடியும்." என கேள்வி எழுப்புகிறார்.
"வியாபாரம் இருக்கும் நடிகர்களுக்குதான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். அதனால், தயாரிப்பாளர்களுக்கு சாடிலைட், டிஜிட்டல் உடனே விற்கிறது. குறைந்த பட்ச வியாபாரம் இருக்கிறது' என்பது கருணாஸின் வாதமாக உள்ளது.
மேலும் அவர் கூறுகையில் '' தெலுங்கு மற்றும் மற்ற மொழிகளில் வருவாய் பகிர்வு முறையை தயாரிப்பாளர்கள் உதாரணம் காண்பிக்கிறார்கள். ஆனால் அங்கே பட ரிலீஸ் சமயத்தில் நடிகர்களுக்கு பிரஷர் இல்லை. படம் ரிலீஸ் ஆக அவர்கள் சம்பளத்தை விட்டுகொடுப்பது இல்லை." என்கிறார்.
நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை முயற்சிக்கு பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர்," நடிகர் சங்கம் இந்த பேச்சுவார்த்தையை சரியாக கொண்டு சென்றது. எங்களிடம் எழுத்துபூர்வமான ஆவணம் இருக்கிறது. எங்கள் சங்கம் மீது தயாரிப்பாளர் சங்கம் புகார் சொல்லக்கூடாது. இன்றைய வேலை நிறுத்தத்தை கூட அவர்கள் எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. '' என்றார்.
மேலும்,"சினிமா என்பது ரிஸ்கான தொழில். நடிகர்களால் வியாபாரம் இருக்கிறது. ஆனால், அவர்கள் சம்பளம் விஷயத்தில் சங்கம் தலையிடாது. அவர்கள வருவாய் பங்கு, லாபத்தில் பங்கு என்று சென்றாலும், நாங்கள் தடுக்க முடியாது" என்றார் கருணாஸ்.
வியாபாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லையா?
இந்த சம்பள முறையில் என்ன சிக்கல்? இது நடைமுறையில் சாத்தியமா? என்று தயாரிப்பாளர், வினியோகஸ்தர் கேபிள் சங்கரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம் ''இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கூட சினிமாவில் கணக்கு வழக்கு சரியாக காண்பிக்கப்படுவது இல்லை. வியாபாரம், தியேட்டர் வசூல் சரிவர சொல்லப்படுவது இல்லை. இந்த சூழ்நிலையில் எந்த நம்பிக்கை அடிப்படையில் நடிகர்கள் லாபத்தில் பங்கு, வருவாய் பகிர்வு முறையில் வருவார்கள்? மாறாக இந்தியில் பிஸினஸ் கணக்குகளில் வெளிப்படை தன்மை இருப்பதால், அங்கே சாத்தியமாகிறது" என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில் "சம்பளத்துக்கு பதில் வியாபாரத்தில் பங்கு என்பது நல்லதுதான். கார்ப்பரேட் கம்பெனிகள் திரைப்படத்தின் வசூல் கணக்கில் மாற்றம் செய்யாது. ஆனால் அனைவரிடமும் அதை எதிர்பார்க்க முடியாது" என்கிறார்.
அதேசேமயம், கார்ப்பரேட் கம்பெனிகள் இந்தமுறைக்கு வரமாட்டார்கள் என கருதும் சங்கர், "அவர்கள் நடிகர்களுக்கு சம்பளத்தை கொடுத்துவிட்டு, படத்தை வைத்து பலவழிகளில் பிஸினஸ் செய்து லாபம் சம்பாதிக்க நினைப்பார்கள்'' என்கிறார்.
ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தாலும், அடுத்து அதே நடிகர்களை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள் என கூறும் சங்கர், அதனால், இந்தமுறைக்கு மாற வேண்டும் என்று நடிகர்களுக்கு செக் வைக்க முடியவில்லை என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு