'சமஸ்கிருதத்தில் 52, தமிழில் 247 எழுத்துக்கள்' - சபரிமலை வழக்கில் சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசியபோது என்ன நடந்தது?

சபரிமலை, இந்து கோவில்கள், சமஸ்கிருதம், தமிழ், உச்ச நீதி​மன்றம்

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கேரளத்தின் சபரிமலை​ கோவிலில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனு​ம​தித்த 2018 தீர்ப்​புக்கு எதி​ரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது சமஸ்கிருதம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சில வாதங்களும், அப்போது தமிழை குறிப்பிட்டு நீதிபதி அளித்த கருத்துகளும் கவனத்தை ஈர்த்துள்ளன.

உச்ச நீதி​மன்றம் அளித்த தீர்ப்பு

கேரளம் மாநிலத்தின் சபரிமலைக் கோவிலுக்குள் மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் நுழைவதைத் தடுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அந்த அமர்வில் அங்கம் வகித்தனர்.

பழக்க வழக்கங்களும் நடைமுறையும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டுமென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கினர்.

சபரிமலை கோயில் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமான கோயில் இல்லை என்பதால் பழைய வழக்கங்களையே பின்பற்ற முடியாது என்று நீதிபதி நாரிமன் தன் தீர்ப்பில் கூறியிருந்தார். பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமையை மறுக்க முடியாது என்றும் பெண்களை நுழைய அனுமதி மறுக்கும் வழக்கம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த அமர்வில் அங்கம் வகித்த பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா, "மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏனெனில், பிற மத வழிபாட்டு இடங்களிலும் இது பெரிய தாக்கத்தை உண்டாக்கும்," என்று மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்.

இருப்பினும், உச்ச நீதிமன்றம், மாதவிடாய் வயதில் உள்ள பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுப்பது அரசியலமைப்பின் 25வது பிரிவுக்கு எதிரானது என்று 4:1 பெரும்பான்மையுடன் தீர்ப்பளித்தது.

பாரம்பரிய நம்பிக்கையைவிட ஒரு நபர் தனது மதத்தை வழிபடுவதற்கான அடிப்படை உரிமைக்கு நீதிமன்றம் முன்னுரிமை அளித்தது.

சபரிமலை, இந்து கோவில்கள், சமஸ்கிருதம், தமிழ், உச்ச நீதி​மன்றம்

தற்போதைய வழக்கு என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உச்ச நீதிமன்றம் 2018இல் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.

உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமையிலான, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம். சுந்தரேஷ், அஹ்சானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், பிரசன்னா பி. வரலே, ஆர். மகாதேவன் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையின்போது, பல்வேறு மதங்களைச் சார்ந்த இது போன்ற பிற வழக்குகளையும் இந்த ஒன்பது நீதிபதிகளின் அமர்வு பரிசீலிக்கும்.

எனவே, பார்சி கோவில்கள் மற்றும் முஸ்லீம் மசூதிகளுக்குள் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படலாமா, மதத் தலைவர்கள் மக்களைச் சமூகத்திலிருந்து விலக்கி வைக்க முடியுமா மற்றும் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு நடைமுறையின் சட்டப்பூர்வத் தன்மை ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் உதவும்.

நீதிமன்றத்தின் இந்த முடிவு பெண்களின் மத சுதந்திரம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழையும் உரிமை ஆகியவற்றில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சபரிமலை, இந்து கோவில்கள், சமஸ்கிருதம், தமிழ், உச்ச நீதி​மன்றம்
படக்குறிப்பு, சபரிமலை இந்தியாவின் மிகவும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாகும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டு, பகுப்பாய்வு செய்யும் பத்திரிகைத் தளமான 'சுப்ரீம் கோர்ட் அப்சர்வர்' இந்த வழக்கில் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள முக்கிய கேள்விகளாக பின்வருபவற்றை குறிப்பிடுகிறது.

  • இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ஒரு மத நடைமுறை தொடர்பான நீதித்துறை மறுஆய்வின் (Judicial Review) நோக்கம் மற்றும் வரம்பு என்ன?
  • இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26-வது பிரிவுகளின் கீழ் 'ஒழுக்கம்' (Morality) என்ற வார்த்தையின் நோக்கம் மற்றும் வரம்பு என்ன, மேலும் அது அரசியலமைப்பு ஒழுக்கத்தை (Constitutional morality) உள்ளடக்கியதா?
  • இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவின் கீழ் மத சுதந்திரத்திற்கான உரிமையின் நோக்கம் மற்றும் வரம்பு என்ன?
  • இந்திய அரசியலமைப்பின் 26-வது பிரிவின் கீழ் ஒரு மதப் பிரிவினரின் (Religious denomination) உரிமைகள், பொது அமைதி, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றைத் தவிர, இந்திய அரசியலமைப்பின் பகுதி III-ன் பிற விதிகளுக்கு உட்பட்டதா?
  • இந்திய அரசியலமைப்பின் 25 (2) (b) பிரிவில் இடம்பெற்றுள்ள 'இந்துக்களின் பிரிவுகள்' (Sections of Hindus) என்ற சொல்லாடலின் பொருள் என்ன?
  • இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவின் கீழ் தனிநபர்களின் உரிமைகளுக்கும், 25-வது பிரிவின் கீழ் மதப் பிரிவினரின் உரிமைகளுக்கும் இடையிலான பரஸ்பரத் தொடர்பு என்ன?
சபரிமலை, இந்து கோவில்கள், சமஸ்கிருதம், தமிழ், உச்ச நீதி​மன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சபரிமலை செல்லும் பக்தர்கள் (கோப்புப் படம்)

சமஸ்கிருதம் மற்றும் தமிழ் தொடர்பான வாதங்கள்

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அன்று நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் சமஸ்கிருத மொழியை உயர்வாக பேசினார். இதனையடுத்து அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் எதிர்வினையாற்றினர்.

வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய், "ஆங்கிலத்தில் ஒரு வரம்பு உள்ளது. அதில் 26 எழுத்துக்கள் உள்ளன. கிட்டத்தட்ட 10 லட்சம் வார்த்தைகள் மட்டுமே உள்ளன. ஆனால், சமஸ்கிருதத்தில் 52 எழுத்துக்கள் உள்ளன. சுமார் 50 லட்சம் வார்த்தைகள் உள்ளன. அதனால்தான் டாக்டர் அம்பேத்கர் அரசமைப்பு சபையில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக சமஸ்கிருதத்தை அறிவிக்க வேண்டும் என்றார். துரதிர்ஷ்டவசமாக அந்த மசோதா தோல்வியடைந்தது. சில விஷயங்களை ஆங்கிலத்தில் விளக்கும்போது மிகவும் கடினமாக இருக்கிறது." என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், "நாம் விவாதிக்கும் பிரச்னைக்கு அப்பால் நீங்கள் பேசுகிறீர்கள். சமஸ்கிருதத்தில் 52 எழுத்துக்கள் இருப்பதாகவும் உலகின் மிகச்சிறந்த மொழிகளில் ஒன்று அது என்றும் நீங்கள் கூறினீர்கள். தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. அந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம். வழக்கு குறித்த வாதங்களை மட்டும் முன் வையுங்கள்" என்றார்.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா, "கன்னடத்தில் 52 எழுத்துக்கள் உள்ளன. இந்தியாவில் அனைவரும் சமம்." என்று அறிவுறுத்தினார்.

அதன் பிறகு வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் தனது வாதத்திற்கு மன்னிப்பு கேட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு