'குழந்தை இல்லையே என ஏங்கிய காலம் உண்டு' - கருத்தடை செய்துகொண்ட முன்னாள் நக்சல்கள் குழந்தை பெறுவது எப்படி?

Mother, Children, Bond, Naxalite, Pregnancy

பட மூலாதாரம், BHAGYASHREE RAUT

படக்குறிப்பு, மந்தா தார்பெட்டிக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்; அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
    • எழுதியவர், பாக்கியஸ்ரீ ராவத்
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"மற்றவர்களின் குழந்தைகளைப் பார்க்கும்போது, எனக்கும் ஒரு குழந்தை இருந்தால் அதை அழைத்துச் செல்வேன், அதன் மீது அன்பு பொழிவேன், கொஞ்சி மகிழ்வேன் என்று தோன்றும்."

தன் வீட்டு முற்றம், மரத்தடியில் அமர்ந்தபடி மந்தா தார்பெட்டி, தான் தாய்மையடைய எவ்வளவு ஏங்கினேன் என்பதை விவரிக்கிறார்.

மந்தா ஒரு முன்னாள் நக்சலைட். தற்போது மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் வசித்து வருகிறார். நான்கு அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டை அவர் கட்டியுள்ளார். வீட்டிற்கு அருகிலுள்ள நர்சரியில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

சரணடைந்த பிறகு, தம்பதிகளாக வாழ்வதைத் தாண்டி, குழந்தைகளுடன் ஒரு முழுமையான குடும்பமாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், நக்சல் இயக்கத்தில் இருந்தபோதே தனது கணவருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், அது சாத்தியமில்லை என்றே அவர் கருதியிருந்தார்.

இருப்பினும், இன்று மந்தாவின் தாய்மை கனவு நனவாகியுள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், மகிழ்ச்சியான குடும்பமாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கட்சிரோலி காவல் துறையின் 'பிராஜெக்ட் சஞ்சீவனி' திட்டத்தின் கீழ், அவரது கணவர் கிருஷ்ணாவிற்கு கருத்தடை அறுவை சிகிச்சையைச் சரிசெய்யும் வாய்ப்பு கிடைத்ததால் இது சாத்தியமானது.

"நான் கர்ப்பமாக இருந்தபோது, எங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறது, நாங்கள் அதைப் பார்த்துக்கொள்வோம் என நினைத்தேன். அந்தத் தருணம் எனக்கு மனதார மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது."

அவரது கணவர் கிருஷ்ணா தார்பெட்டி, பெண் குழந்தைகள் பிறந்த பிறகு தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

"கருத்தடை அறுவை சிகிச்சை நீக்கப்பட்ட பிறகுதான் எங்கள் முதல் மகள் பிறந்தாள். நான் வீட்டிற்கு வரும்போது, 'அப்பா வந்துவிட்டார், அப்பா வந்துவிட்டார்' என்று ஓடி வந்து என்னைக் கட்டிப்பிடிப்பாள். நான் என்ன வாங்கி வந்திருக்கிறேன் என்று ஆர்வத்துடன் பார்ப்பாள். இது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம்" என்கிறார் அவர்.

Mother, Children, Bond, Naxalite, Pregnancy

பட மூலாதாரம், BHAGYASHREE RAUT

படக்குறிப்பு, கிருஷ்ணா தார்பெட்டி தனது மகள்களுடன்.

'எங்கள் மகள்களைப் படிக்க வைப்பதே எங்கள் கனவு'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தந்தையான பிறகு கிருஷ்ணா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆனால், இந்த மகிழ்ச்சி அவரது வாழ்க்கையில் தொடக்கத்திலிருந்தே இருக்கவில்லை. 2003-ஆம் ஆண்டு நக்சல் இயக்கத்தில் அவர் இணைந்தார். கிராமத்திற்கு நக்சலைட்டுகள் வருவதையும், அவர்கள் பாடி ஆடுவதையும், அவர்களின் உடைகளையும், கையில் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கண்டு ஈர்க்கப்பட்டு அவர் அந்த இயக்கத்தில் சேர்ந்தார்.

2006-ல் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்தச் சமயத்திலேயே அவருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு 2014 வரை, அதாவது 11 ஆண்டுகள் நக்சல் இயக்கத்தில் அவர் பணியாற்றினார்.

ஆனால், காவல் துறையினரின் ரோந்துப் பணி அதிகரித்ததால் காட்டில் தங்குவது கடினமாக இருந்தது. எனவே, அவர் தனது மனைவியுடன் சென்று கட்சிரோலி காவல் துறையிடம் சரணடைந்தார்.

2009 முதலே காவல் துறையினரின் கண்காணிப்பு அதிகரித்ததாகக் கூறும் கிருஷ்ணா, "குடிப்பதற்குத் தண்ணீர் கிடைப்பதில்லை, சமைக்க உணவும் கிடைப்பதில்லை. எங்கு சென்றாலும் காவல் துறையினர் வந்துவிடுகிறார்கள். இங்கேயே இருந்து சாக வேண்டியதுதான் என்று தோன்றியது. எனவே, ஒரு இரவு மறைவாக வெளியேறி காவல் துறையிடம் சரணடைந்தோம்" என்கிறார்.

சரணடைந்தபோது நடத்தப்பட்ட விசாரணையின்போதே, தான் தந்தை ஆக விரும்புவதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

"காட்டில் இருக்கும்போது குழந்தைகளை வளர்க்க முடியாது. ஆனால், இங்கு வந்த பிறகு கருத்தடை அறுவை சிகிச்சையைச் சரிசெய்ய முடியுமா என்று தோன்றியது." என்கிறார் கிருஷ்ணா.

இதையடுத்து, அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அது வெற்றியும் பெற்றது. 2016-ல் கிருஷ்ணா - மந்தா தம்பதிக்கு முதல் மகள் பிறந்தார். இப்போது அவர்களது இரண்டாவது மகளுக்கு மூன்று வயதாகிறது. இதுவரை 50 முன்னாள் நக்சலைட்டுகளுக்கு இத்தகைய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிருஷ்ணாவும் மந்தாவும் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள். ஆனால், இப்போது அவர்களது மூத்த மகள் வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறாள். தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள்.

"நாங்கள் எதையும் கற்க முடியவில்லை. ஆனால், எங்கள் மகள்களைப் படிக்க வைப்பதே எங்கள் கனவு. அவர்கள் எவ்வளவு தூரம் படிக்க விரும்புகிறார்களோ, அவ்வளவு தூரம் படிக்கட்டும். நாங்கள் கூலி வேலை செய்தாவது பணம் தருகிறோம், அவர்களைப் படிக்க வைப்போம். அவர்களின் கனவுகளை நாங்கள் நிறைவேற்ற விடுவோம்" என்கிறார் கிருஷ்ணா.

சரணடைந்த 50 நக்சலைட்டுகளுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை நீக்கம்

Mother, Children, Bond, Naxalite, Pregnancy

பட மூலாதாரம், BHAGYASHREE RAUT

படக்குறிப்பு, கட்சிரோலி காவல் துறையிடம் சரணடையும் போது, பிரதான நீரோட்டத்திற்குத் திரும்புவதற்குத் தங்களுக்கு என்னென்ன தேவை என்று நக்சலைட்டுகளிடம் கேட்கப்படுகிறது.

கிருஷ்ணா மட்டுமல்ல, அவரைப் போன்ற 50 முன்னாள் நக்சலைட்டுகளுக்கு இதுவரை கருத்தடை அறுவை சிகிச்சை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேருக்குக் குழந்தைகள் பிறந்துள்ளன.

இது குறித்து முன்னாள் நக்சலைட் ஜானு ஹெடோ, "குழந்தைகள் இருந்தால் வாழ்க்கை அழகாகத் தெரிகிறது. நாம் வயதான காலத்தில் குழந்தைகள் நமக்கு ஆதரவாக இருப்பார்கள். காட்டில் குழந்தைகளை வளர்க்க இடமில்லை, அதனால் அங்கு அவர்களைப் பெற்றெடுக்க முடியவில்லை. ஆனால், இங்கு எங்களால் சுதந்திரமாக வாழ முடிகிறது" என்கிறார்.

ஜானுவிற்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். அவர் கட்சிரோலி நகரின் நவ்ஜீவன் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கட்சிரோலி காவல் துறையிடம் சரணடையும் போது, பிரதான நீரோட்டத்திற்குத் திரும்புவதற்குத் தங்களுக்கு என்னென்ன தேவை என்று அவர்களிடம் கேட்கப்படுகிறது. அந்தத் தேவைகளில் ஒன்றாக, 'நீங்கள் பெற்றோராக விரும்புகிறீர்களா?' என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது.

இது குறித்து அப்போதைய கட்சிரோலி காவல் கண்காணிப்பாளர் நிலோத்பல், "சரணடைதல் குறித்துப் பேசும்போது, பிரதான நீரோட்டத்திற்கு வரத் தேவையான அனைத்து உதவிகளையும் கட்சிரோலி காவல் துறை செய்யும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். பலர் சரணடைந்தனர். அவர்கள் 'நாங்கள் தம்பதிகளாக இருக்கிறோம், ஆனால் எங்களால் குடும்ப வாழ்க்கையை வாழ முடியவில்லை' என்று எங்களிடம் கூறினார்கள்."என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் பெற்றோராக விரும்புகிறோம், அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தாருங்கள் என்று கேட்டனர். இந்த வாய்ப்பை நாங்கள் கண்டறிந்தோம். கருத்தடை அறுவை சிகிச்சையை மீண்டும் சரிசெய்ய முடியும் என்பதால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் இந்த வசதியைச் சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு நாங்கள் வழங்கினோம்" என்றார்.

நிலோத்பல் பதவிக்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mother, Children, Bond, Naxalite, Pregnancy, Katchroli, SP, Nilothpal

பட மூலாதாரம், BHAGYASHREE RAUT

படக்குறிப்பு, கட்சிரோலியின் அப்போதைய காவல் கண்காணிப்பாளர் நிலோத்பல் பதவிக்காலத்தில், அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.

'திருமணத்திற்கு முன் கருத்தடை அறுவை சிகிச்சை கட்டாயம்'

கடந்த ஜனவரி மாதத்தில் பூபதி உட்பட சில நக்சலைட்டுகள் சரணடைந்தனர். அவர்கள் தற்போது காவல் துறை வளாகத்தில் உள்ள 'சரணடைதல் பிரிவில்' தங்கியுள்ளனர்.

இவர்களில் 14 பேருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கும் குழந்தைகள் பிறக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிவக்குமார் தல்லம், "காட்டில் எங்களால் குழந்தைகளை வைத்திருக்க முடியாது. ஒருவேளை குழந்தை இருந்தால், திடீரென காவல் துறையினர் வந்திருந்தால் நாங்கள் என்ன செய்திருப்போம்? இதுதான் எங்கள் முன் இருந்த கேள்வி. அதனால், திருமணத்திற்கு முன்பே கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்பது இயக்கத்தின் விதியாக இருந்தது. ஆனால், இப்போது அறுவை சிகிச்சை நீக்கப்பட்டிருப்பதால், எங்களுக்கும் குழந்தைகள் பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது" என்றார்.

30 வயதான ராம் தாராம் கூறுகையில், "இப்போது நாங்கள் இளமையாக இருப்பதால் வேலை செய்ய முடிகிறது. ஆனால், முதுமையில் எங்கள் கதி என்ன? முதுமை காலத்தில் ஆதரவாக இருக்கக் குழந்தைகள் தேவை. இப்போது நாங்கள் வீட்டிற்குச் சென்று விவசாயம் செய்வோம், எங்களுக்கும் குழந்தைகள் பிறப்பார்கள்" என்றார்.

Mother, Children, Bond, Naxalite, Pregnancy, Katchroli

பட மூலாதாரம், BHAGYASHREE RAUT

படக்குறிப்பு, சரணடைந்த முன்னாள் நக்சலைட்டுகள்

'இயக்கத்தைச் சேர்ந்தவர்களே செய்த அறுவை சிகிச்சைகள்'

இவர்கள் அனைவருக்குமான அறுவை சிகிச்சைகள் காட்டிற்குள்ளேயே மேற்கொள்ளப்பட்டன. உண்மையில் இந்த அறுவை சிகிச்சையைச் செய்தவர்கள், எம்பிபிஎஸ் மருத்துவர்களிடம் பயிற்சி பெற்ற நக்சல் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே.

காட்டிற்குள் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அர்ஜுன் இச்சாமி என்பவரை நாங்கள் சந்தித்தோம். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அர்ஜுன், காட்டிற்குள் நடந்த அனைத்து அறுவை சிகிச்சைகளையும் தானே செய்ததாகக் கூறுகிறார்.

"ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர் எனக்கு ஆறு மாதங்கள் பயிற்சி அளித்தார். நோய்கள் எப்படி ஏற்படுகின்றன, அவற்றுக்கு எப்படிச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற முழு அறிவியலையும் கற்றுக்கொண்டேன். அந்த மருத்துவர் எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார்" என்கிறார் அவர்.

"இதன்பிறகு நான் கருத்தடை அறுவை சிகிச்சை மட்டுமல்ல, வேறு சில அறுவை சிகிச்சைகளையும் செய்தேன். சிலர் சிகிச்சைக்காக ராய்ப்பூர் சென்றனர். அங்கு பலன் கிடைக்காதபோது, நான் காட்டிற்குள்ளேயே அவர்களுக்குச் சிகிச்சை அளித்தேன். இதுவரை நான் 500 பேருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளேன்" என்று அவர் கூறுகிறார்.

அர்ஜுன் ஒரு வருடத்திற்கு முன்பு சரணடைந்தார். தற்போது அவர் கசன்சூர் அருகிலுள்ள கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.

இருப்பினும், இந்தச் சிகிச்சைகளை ஆய்வு செய்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அமித் படிதார், இவர்களால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளில் சில குறைபாடுகள் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

"காட்டிற்குள் செய்யப்பட்ட சில அறுவை சிகிச்சைகள் தரமானதாக இல்லை. சிலருக்கு ஒரு பக்கத்தில் மட்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது, மறுபக்கத்தில் செய்யப்படவில்லை. ஏனெனில், காட்டிற்குள் பயிற்சி பெறாதவர்களே இந்த அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளனர்" என்று அவர் கூறுகிறார்.

"அறுவை சிகிச்சைகள் முறையான தரத்துடன் செய்யப்படவில்லை என்பது உண்மைதான், அதேநேரத்தில் அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை என்பதும் உண்மை" என்று குறிப்பிடுகிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு