உணவுப் பழக்கம் ஒருவரின் கவனிக்கும் திறனை எப்படி பாதிக்கும்? மருத்துவர்கள் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லாரன் பாட்ஸ்
- பதவி,
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
உங்களால் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லையா? இதற்கு தூக்கம், போதிய நீர்ச்சத்து மற்றும் உடல் செயல்பாடு ஆகியவை முக்கியக் காரணிகளாக இருக்கலாம். இவற்றுடன் சேர்ந்து, உணவுப் பழக்கங்களும் கவனச் சிதறலுக்கு காரணமாகின்றனவா என்பதை ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது, இதய நோய் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஏற்கெனவே பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது, இத்தகைய உணவுகள் மூளையின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களுடனும் தொடர்புடையதாக இருக்கலாம் என புதிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் கவனச்சிதறலுக்கு காரணமாகுமா?
ஆம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2026ஆம் ஆண்டில் 2,100க்கும் மேற்பட்ட பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்கள், கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறனையும் தகவல்களைச் செயலாக்கும் வேகத்தையும் மதிப்பிடும் சோதனைகளில் மிகவும் குறைவான செயல்திறனைக் காட்டியது கண்டறியப்பட்டது.

பட மூலாதாரம், AFP via Getty Images
இதுகுறித்துப் பேசும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான பார்பரா கார்டோசோ, "ஒருவர் உட்கொள்ளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கும்போது, அவரது கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறனில் குறிப்பிடத்தக்க, அளவிடக்கூடிய சரிவு ஏற்படுவதைக் கண்டறிந்தோம்" என்கிறார்.
"சுருங்கச் சொன்னால், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அளவை 10% அதிகரிப்பது என்பது, உங்கள் அன்றாட உணவில் ஒரு பாக்கெட் சிப்ஸை சேர்த்து உண்பதற்குச் சமம்" என்றும் அவர் விளக்குகிறார்.
இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான ஆய்வுகளைப் போலவே, இதுவும் ஓர் அவதானிப்பு ஆய்வு மட்டுமே. அதாவது, குறிப்பிட்ட உணவுப் பழக்கத்துக்கும் கவனத்திறனுக்கும் இடையே உள்ள தொடர்பை மட்டுமே ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய முடியும். ஒன்றுதான் மற்றொன்றுக்கு நேரடிக் காரணம் என்பதை இத்தகைய ஆய்வுகளால் உறுதிப்படுத்த முடியாது என்பதையும் கார்டோசோவும் அவரது குழுவினரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே, பதப்படுத்தப்பட்ட உணவுகள் நேரடியாக மூளையின் ஆரோக்கியத்தையோ கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறனையோ பாதிக்கின்றன என்று இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு உறுதியாகக் கூறிவிடமுடியாது. இருப்பினும், அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும், சிந்தித்தல், கவனித்தல் உள்ளிட்ட அறிவாற்றல் செயல்பாடுகளில் குறைபாடுகள் ஏற்படுவதற்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று தெரிவிக்கும் பிற ஆய்வுகளின் முடிவுகளுடன், இந்த ஆய்வின் முடிவுகளும் ஒத்துப்போகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

பட மூலாதாரம், AFP via Getty Images
அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் வேறு எந்தெந்த மூளை சார்ந்த நோய்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது?
அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வதற்கும், மூளையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது மனச்சோர்வுடன் தொடர்புடையதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டது என்றால், மற்றொரு ஆய்வில் அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதுடன் இவற்றுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியது. மேலும் சில ஆய்வுகள், அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும் டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் மற்றும் அறிவாற்றல் திறன் குறைவதற்கும் இடையே தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் 33,650 பேரிடம் நடத்திய ஆய்வில், அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும் மூளையின் சில பகுதிகளில் ஏற்படும் கட்டமைப்பு மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. குறிப்பாக, உணவின் மூலம் கிடைக்கும் இன்பம் மற்றும் திருப்தி உணர்வில் பங்கு வகிக்கும் நியூக்ளியஸ் அக்கும்பென்ஸ், பசி மற்றும் உணவு உட்கொள்ளுதலைக் கட்டுப்படுத்தும் ஹைப்போதாலமஸ் ஆகிய பகுதிகளில் மாற்றங்கள் காணப்பட்டன.
"பசி, வயிறு நிறைந்த உணர்வு, இன்பம், திருப்தி என நாம் உணவு உட்கொள்ளும் முறையில் இந்த இரண்டு மூளைப் பகுதிகளும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன" என அந்த ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரும் முனைவர் பட்ட ஆய்வாளருமான அர்சேன் கன்யாமிப்வா விளக்குகிறார்.
"இதனால், ஒரு தீய சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். இதில் எது முதலில் நிகழ்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், ஒருவர் அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளத் தொடங்கினால், தொடர்ந்து அவற்றை உண்ண வேண்டும் என்ற ஆசையும் அதிகரிக்கக்கூடும்" என்று அவர் விளக்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அதிதீவிரப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அடிமையாக்குமா?
அதிதீவிரப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அடிமையாக்குமா?
"உணவுகள் அதிதீவிரமாகப் பதப்படுத்தப்படுவதாலேயே, குறிப்பிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற ஏக்கம் ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை" என்கிறார் கன்யாமிப்வா. இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான ஆய்வுகளைப் போலவே, அவரது ஆய்வும் காரணத்தையும் விளைவையும் உறுதிப்படுத்தவில்லை; அவற்றுக்கு இடையிலான தொடர்பை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், பீட்சா, டோனட்ஸ் போன்ற சர்க்கரை, கொழுப்பு, உப்பு அதிகம் உள்ள உணவுகள், சில போதைப்பொருட்களைப் போலவே மூளையின் திருப்திப் பாதைகளைத் தூண்டி, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடத் தூண்டக்கூடும் என்பதை கூறும் ஆய்வுகளும் போதுமான அளவில் உள்ளன.
ஆனால், உணவும் போதைப்பொருளும் ஒன்றல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில், நாம் உயிர்வாழ உணவு அவசியம். மேலும், "ஒரு உணவை உண்பதற்கான விருப்பம் அதீதமாவது மட்டுமே, அதற்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்று அர்த்தமல்ல" என்கிறார் அவர்.
"உணவுக்கு அடிமையாதல் என்ற கருத்து, அறிவியல் சமூகத்தில் இன்னும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது" என்கிறார் கன்யாமிப்வா.
"சில உணவுகளைப் போதை ஏற்படுத்துபவை என்று முத்திரை குத்துவது, ஒருவர் தனது உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவர் என்ற உணர்வைக் குறைத்துவிடலாம். மேலும், சிக்கலான உளவியல் நடத்தைகளுக்குத் தவறான பெயரிடவும் வழிவகுக்கலாம்" என்று சிலர் வாதிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், அதீதமாக பதப்பட்ட உணவுகளில் உள்ள பொருட்களின் கலவையே, அவற்றை மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற ஏக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். இத்தகைய உணவுகள் பொதுவாக அதிக சுவையுடனும், எளிதில் சாப்பிடக்கூடிய வகையிலும் தயாரிக்கப்படுகின்றன. இதனால், அவை விரைவாகச் செரிமானமாகி, மூளையின் திருப்தியடையும் அமைப்பை உடனடியாகத் தூண்டக்கூடும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது மூளையின் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவற்றை உண்ணும் பழக்கத்தை மேலும் வலுப்படுத்தக்கூடும். இத்தகைய உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போக்கு பலரிடம் காணப்படுவதற்கும், அவை அதிதீவிரமாகப் பதப்படுத்தப்படும் விதம் ஒரு காரணமாக இருக்கலாம்.
உணவுப் பழக்கம் மற்றும் அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்; ஆனால் பீதியடையத் தேவையில்லை. இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளன என்றும், விலங்குகளை மையமாகக் கொண்ட ஆய்வுகளைவிட மனிதர்களை மையமாகக் கொண்ட கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் கன்யமிப்வா கூறுகிறார்.
இதில் நடைமுறைச் சிக்கலும் உள்ளது. 2026-ஆம் ஆண்டில், அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமற்றதாக உள்ளது. இத்தகைய உணவுகள் நமது உணவு முறையில் ஆழமாக ஊடுருவிட்டன என்பதை மறுக்கமுடியாது. பலருக்கு இவை மலிவான, எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் வசதியான தேர்வாக உள்ளன. பிரிட்டனில், சராசரியாக வயது வந்த ஒருர் உட்கொள்ளும் கலோரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை இத்தகைய உணவுகளிலிருந்தே கிடைக்கின்றன.

மேலும், அனைத்து பதப்படுத்தப்பட்ட உணவுகளும் ஒரே மாதிரியானவை அல்ல. பேக் செய்யப்பட்ட பீன்ஸ், முழுத் தானிய உணவுகள் போன்றவை நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரங்களாக இருக்கின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து இன்னும் தெளிவான ஆதாரங்கள் கிடைக்கும் என்று கன்யமிப்வா நம்புகிறார்.
"இந்தக் கருத்து குறித்து இன்னும் பல நிச்சயமற்ற நிலைகள் உள்ளன. எனவே, விஞ்ஞானிகள் இதுகுறித்து மேலும் வலுவான ஆய்வுகளை வடிவமைப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
"அத்தகைய ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில், ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மலிவானதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, கொள்கை வகுப்பாளர்களைச் செயல்பட வைக்க வேண்டும்."
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்
அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதைத் தவிர்ப்பது எப்படி? என பொருள்படும் 'ஹெள நாட் டு ஈட் அல்ட்ரா ப்ராசஸ்ட்' என்ற நூலின் ஆசிரியரும் உணவியல் நிபுணருமான நிக்கோலா லட்லாம்-ரெய்ன், "மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய உணவுகளை நாம் அதிகம் தேர்ந்தெடுத்து உண்ணலாம்" என்கிறார்.
இதய நோய் ஏற்படும் அபாயம் மற்றும் அறிவாற்றல் திறன் குறையும் அபாயம் குறைவதுடன் தொடர்புடைய பாலிஃபீனால்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை அவர் பரிந்துரைக்கிறார். அதேபோல், சில ஆய்வுகளில் சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டுடனும் அறிவாற்றல் திறன் குறையும் அபாயம் குறைவதுடனும் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட வால்நட்களையும் அவர் பரிந்துரைக்கிறார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், சீரான இடைவெளிகளில் உணவு உட்கொள்வதும் முக்கியம். இவை ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைச் சீராக வைத்திருக்கவும், பசியில்லாத நேரங்களில் தேவையில்லாமல் நொறுக்குத்தீனிகளை உண்பதைத் தவிர்க்கவும் உதவும்.
'அதிக இன்பம் தரும்' உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதற்குப் பதிலாக, அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு, பின்னர் உணவைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் பழக்கச் சுழற்சியைத் தவிர்க்க, அவற்றையும் சமச்சீரான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாகத் திட்டமிட்டு உட்கொள்ள அவர் பரிந்துரைக்கிறார்.
அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மாற்றாகச் சில எளிய உணவுகளை முயற்சிக்கலாம் என்றும் லட்லாம்-ரெய்ன் கூறுகிறார். அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட அல்லது சுவையூட்டப்பட்ட தயிர்களுக்கும், பொட்டலங்களில் விற்கப்படும் தானிய பார்களுக்கும் பதிலாக, பழங்கள் மற்றும் கலவையான விதைகள் சேர்த்த தயிர், வாழைப்பழம் மற்றும் கொட்டைகள் அரைத்த விழுது தடவிய ஓட் கேக்குகள் மற்றும் டார்க் சாக்லேட் நிரப்பப்பட்ட மெட்ஜூல் பேரீச்சம்பழங்கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
"இறுதியில், இது சுயக்கட்டுப்பாடு அல்லது மன உறுதி பற்றிய விஷயம் மட்டுமல்ல,
"ஒட்டுமொத்தமாக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தின் ஒரு பகுதியாக, கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகமுள்ள உணவுகளையும் உணர்வுபூர்வமாகவும் அளவோடும் உட்கொள்வது நல்லது. கடுமையான உணவுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுவதைவிட, இத்தகைய சமநிலையான அணுகுமுறையை நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து கடைப்பிடிப்பது எளிதாக இருக்கும்" என்று நிக்கோலா லட்லாம்-ரெய்ன் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































