வைபவ் சூர்யவன்ஷி அதிரடி - 2வது குவாலிஃபயருக்கு ராஜஸ்தான் தகுதி பெற்றது எப்படி?

சூர்யவன்ஷி அதிரடி - சன்ரைசர்ஸுக்கு எதிராக 243 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று (மே 27) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகளும் இந்த சீசனில் மோதிய இரண்டு லீக் சுற்றுப் போட்டிகளிலுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், அதிமுக்கியமான இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றுவிட்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. 29 பந்துகளை மட்டுமே சந்தித்து 97 ரன்கள் விளாசினார் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.

பெரிய இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.

இந்த வெற்றியின் மூலம் ராயல்ஸ் அணி 2வது குவாலிஃபயர் போட்டிக்குத் தகுதி பெற்றது. வெள்ளிக்கிழமை (மே 29) நடக்கும் அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்ளும்.

இந்தப் போட்டியில் தோற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இத்தொடரிலிருந்து வெளியேறியது.

சூர்யவன்ஷியின் சிக்ஸர் மழை

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான முந்தைய போட்டியில் சதமடித்து மிரட்டியிருந்த வைபவ் சூர்யவன்ஷி, இந்தப் போட்டியில் அதே உத்வேகத்தோடு விளையாடினார். பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே தன் சிக்ஸர் மழையைத் தொடங்கினார் அந்த 15 வயது பேட்டர். மலிங்கா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலும் ஒரு சிக்ஸர் அடித்தார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

முதல் இரு ஓவர்களின் முடிவில் ராயல்ஸ் 20 ரன்கள் தான் எடுத்திருந்தது. ஆனால், மூன்றாவது ஓவரில் அதீத வேகம் எடுத்தார் சூர்யவன்ஷி. கம்மின்ஸ் வீசிய அந்த ஓவரில் அவர் தொடர்ச்சியாக 1 பவுண்டரியும், 3 சிக்ஸர்களும் விளாசினார். சகிப் ஹுசைன் வீசிய 4வது ஓவரிலும் 3 சிக்ஸர்கள் பறந்தன.

இதன் மூலம் 16 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார் வைபவ் சூர்யவன்ஷி. அதுமட்டுமல்லாமல், ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற கிறிஸ் கெய்ல்-ன் சாதனையை (59 சிக்ஸர்கள் - 2012 சீசன்) முறியடித்தார் அவர்.

சூர்யவன்ஷியின் இந்த அதிரடியின் காரணமாக பவர்பிளேவில் விக்கெட்டே இழக்காமல் 80 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

பவர்பிளே முடிந்த பிறகும் சூர்யவன்ஷியின் வேகம் கொஞ்சம் கூடக் குறையவில்லை. சகிப் ஹுசைன் வீசிய 7வது ஓவரில் அவர் 1 பவுண்டரியும், 1 சிக்ஸரும் அடித்தார். ஹிங்கே வீசிய 8வது ஓவரிலோ அந்த அதிரடி அடுத்த கட்டத்தை எட்டியது. அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார் சூர்யவன்ஷி.

அதனால், 28 பந்துகளில் 97 ரன்களை எட்டியிருந்தார் வைபவ். அடுத்த பந்தில் அவர் சதத்தைக் கடந்திருந்தால், ஐபிஎல் அரங்கின் அதிவேக சதம் என்ற கிறிஸ் கெய்ல்-ன் இன்னொரு சாதனையையும் (30 பந்துகள்) சூர்யவன்ஷி படைத்திருக்கலாம். ஆனால், அந்தப் பந்தில் தேர்ட் மேன் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர். அவர் அவுட்டானபோது ராயல்ஸின் ஸ்கோர் 8 ஓவர்களில் 125/1. ரன்ரேட் - 15.62.

இந்தப் போட்டியில் 334.48 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 334.48 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார் வைபவ் சூர்யவன்ஷி

தொடர்ந்த ராயல்ஸ் அதிரடியும், சன்ரைசர்ஸ் கம்பேக்கும்

சூர்யவன்ஷி அவுட்டான அடுத்த சில ஓவர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெளியேறினார். சூர்யவன்ஷி அதிரடி காட்டிக்கொண்டிருந்ததால் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

அதன்பிறகு துருவ் ஜுரெல் மற்றும் ரியான் பராக் ராயல்ஸின் அந்த அதிரடியைத் தொடர்ந்தார்கள். தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஜுரெல், கம்மின்ஸ் வீசிய ஒரு ஓவரில் கூட 2 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் விளாசினார்.

இவர்கள் அந்த அதிரடியைத் தொடர்ந்ததன் மூலம் ராயல்ஸின் ரன்ரேட் குறையாமலும் பார்த்துக்கொண்டார்கள். ஹிங்கே வீசிய 14வது ஓவரில் 1 பவுண்டரியும், 1 சிக்ஸரும் அடித்த ஜுரெல், 20 பந்துகளில் தன் அரைசதத்தைக் கடந்தார். ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.

மீண்டும் 16வது ஓவரை வீச வந்த ஹிங்கே, பராக் விக்கெட்டையும் வீழ்த்தினார். ராயல்ஸ் கேப்டன் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

அவர் ஆட்டமிழந்த பிறகு ராயல்ஸ் அணியின் ரன்ரேட் குறையத் தொடங்கியது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் ஒருபக்கம் சிறப்பாக செயல்பட, ராயல்ஸ் பேட்டர்கள் சில தவறான முடிவுகள் எடுத்தார்கள். அதனால், இருவர் ரன் அவுட் ஆனார்கள். கடைசி கட்டத்தில் பவுண்டரிகள் வருவது குறைந்தது. கடைசி 5 ஓவர்களில் 36 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது ராயல்ஸ். அதனால், 20 ஓவர்கள் முடிவில் 243/8 என தங்கள் இன்னிங்ஸை முடித்தது அந்த அணி.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக பிரஃபுல் ஹிங்கே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பவர்பிளேவில் மிரட்டிய ஆர்ச்சர்

மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இரண்டாவது பந்திலேயே அதிர்ச்சியளித்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். அவர் வீசிய அதிவேக பவுன்சரை அடிக்க முடியாமல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அபிஷேக் ஷர்மா. ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே முதல் விக்கெட்டை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

அடுத்து வந்த இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அவர் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினாலும் ஆர்ச்சர் அசரவில்லை. தொடர்ந்து அதிவேகமாகப் பந்துவீசிக்கொண்டே இருந்தார். அப்படி அவர் வீசிய ஒரு 150 கிமீ வேக பந்தில் வீழ்ந்தார் இஷான் கிஷன். அதிவேகமாக வந்த பந்தை அவர் சரியாக அடிக்காமல் போக, கவர் திசையில் கேட்ச் ஆனது. 11 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கிஷன்.

5வது ஓவரில் ஆர்.ஸ்மரன் விக்கெட்டை நாந்த்ரே பர்கர் வீழ்த்தினார். 4 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார் ஸ்மரன்.

முதலிரு ஓவர்களிலும் தலா 1 விக்கெட் வீழ்த்திய ஆர்ச்சர், தன் மூன்றாவது ஓவரிலும் விக்கெட் வீழ்த்தத் தவறவில்லை. அவர் வீசிய 150.4 kmph பந்து டிராவிஸ் ஹெட்டின் ஸ்டம்புகளை தகர்த்தது. 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார் ஹெட்.

பிரிஜேஷ் ஷர்மா வீசிய 6வது ஓவரில் 9 ரன்கள் வர 71/4 என பவர்பிளேவை முடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

சன்ரைசர்ஸை வெளியேற்றிய ராயல்ஸ்

பவர்பிளேவிலேயே அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் என சன்ரைசர்ஸ் அணியின் டாப் 3 பேட்டர்களை வெளியேற்றினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பவர்பிளேவிலேயே அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் என சன்ரைசர்ஸ் அணியின் டாப் 3 பேட்டர்களை வெளியேற்றினார் ஜோஃப்ரா ஆர்ச்சர்

பவர்பிளேவுக்குப் பிறகும் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். 7வது ஓவரை யஷ் ராஜ் புஞ்சா வீச, ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முற்பட்ட கிளாசன் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

6வது விக்கெட்டுக்கு நித்திஷ் குமார் ரெட்டி - சலில் அரோரா கூட்டணி சில ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடியது. அவர்கள் இருவரும் அதிரடியாகவே விளையாடி தங்கள் அணியின் ரன்ரேட் கிட்டத்தட்ட 12-ஐ சுற்றியே இருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள். நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், ஜடேஜாவின் பந்தை தூக்கி அடிக்க நினைத்து அவுட் ஆனார் நித்திஷ் குமார் ரெட்டி. அவர் 20 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். நித்திஷ் - சலில் கூட்டணி 24 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாகக் களமிறங்கிய சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். நித்திஷ் குமார் ரெட்டியை வீழ்த்தியதுபோல் சலில் அரோரா விக்கெட்டையும் ஜடேஜாவே கைப்பற்றினார். 21 பந்துகள் சந்தித்த சலில் 35 ரன்கள் எடுத்தார்.

இப்படி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ராயல்ஸ் நிர்ணயித்த பெரிய இலக்கை எட்ட முடியவில்லை. 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இதன்மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிஃபயர் 2 போட்டிக்குத் தகுதி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.

பிளேயிங் லெவனில் யார்?

ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்தப் போட்டிக்கான ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஷுபம் துபேவுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா நேரடியாக பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். அந்த அணி சுஷாந்த் மிஷ்ராவை இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்தியது.

பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), டானவன் ஃபெரீரா, தசுன் ஷனகா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், நாந்த்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா, யஷ் ராஜ் புஞ்சா.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ஷுபம் துபே, சுஷாந்த் மிஷ்ரா, அமன் ராவ், ரவி பிஷ்னாய், துஷார் தேஷ்பாண்டே.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்தப் போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் 1 மாற்றம் செய்யப்பட்டது. பிரஃபுல் ஹிங்கே மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். சலில் அரோரா இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்தப்பட்டார்.

பிளேயிங் லெவன்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹெய்ன்ரிக் கிளாசன், ஆர்.ஸ்மரன், நித்திஷ் குமார் ரெட்டி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, சகிப் ஹுசைன், பிரஃபுல் ஹிங்கே.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அனிகேத் வெர்மா, சலில் அரோரா, லியாம் லிவிங்ஸ்டன், ஹர்ஷ் துபே, ஹர்ஷல் பட்டேல்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு