'ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்': திருப்பூரில் பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்னைகள் - பிபிசி கள ஆய்வு

- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
(திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் வெப்ப அலையால் மாதவிடாய் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். அதுகுறித்து பிபிசி தமிழின் கள ஆய்வு)
ஒரு வீட்டின் மாடியில் இயங்கிக் கொண்டிருக்கும் சிறியளவிலான ஆடை தொழிற்சாலைக்குள் நுழைந்தபோதே அனல் வீசியதை நம்மால் உணர முடிந்தது. 10 மின் தையல் இயந்திரங்கள் நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தன. இயந்திரத்தையோ அல்லது அமரும் இடத்தையோ தொட்டாலே வெப்பத்தை உணர முடிகிறது.
திருப்பூரில் தாராபுரம் சாலையில் உள்ள செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது அந்த தொழிற்சாலை. வெளியே சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் தகித்தது. அதன் தாக்கம் ஆடை தொழிற்சாலைக்குள்ளும் நிலவியது. அங்கு காலையில் இருந்து கடும் வியர்வையுடன் துணிகளை தைத்துக் கொண்டிருந்த கௌரியை சந்தித்தோம்.
கோடை காலத்தில், தனக்கு மாதவிடாய் ஒழுங்கின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
"வெயில் காலத்தில் மாதவிடாய் நேரத்தில் அடிவயிற்றை பிய்த்துப்போட்டது போன்று வலி இருக்கும். ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் செல்ல முடியாது. அதற்கான பொருளாதார சூழல் எனக்கு இல்லை. நானே மெடிக்கல் சென்று வலிநிவாரணி மாத்திரைகளை வாங்கிக்கொள்வேன். வலி மிகவும் அதிகமாக இருந்தால் அதற்கென ஊசி போட்டுக்கொள்வோம். மாதவிடாய் ஏற்படும் 5 நாட்களும் இந்த நிலைதான்" என்கிறார் கௌரி.
மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2025-ஆம் ஆண்டு தகவலின்படி, இந்தியா முழுவதும் 4.5 கோடி பேர் ஆடை மற்றும் ஜவுளித் துறையில் பணிபுரிகின்றனர். இதில் 70% பேர் பெண்கள்.
தமிழ்நாடு ஜவுளித்துறை தரவுகளின்படி, ஜவுளித் துறையில் உள்ள மொத்த வேலைவாய்ப்புகளில் 28 சதவிகித பங்களிப்பை தமிழ்நாடு கொண்டுள்ளது.
மிக அடர்த்தியான தொழிற்சாலை கட்டமைப்புகள் மற்றும் கடுமையான பணி அழுத்தம் ஆகியவற்றால் ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடுமையான உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாவதாக, ஹீட் வாட்ச் எனும் அரசு-சாரா அமைப்பும் மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது.
பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாடு மற்றும் டெல்லியை சேர்ந்த 115 ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் வெப்ப அலையால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசியுள்ளனர்.
'அதிக ரத்தப்போக்கு, வலி'
"மாதவிடாய் சமயம் மட்டுமல்லாமல் வெப்பமான சூழல் நிலவும்போது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், பிறப்புறுப்பில் வலி இருக்கும், சிறு கட்டிகள் ஏற்படும். மருத்துவர்கள் இம்மாதிரியான சூழலில் மாத்திரை எடுத்துக் கொண்ட பின் 2 மணிநேரம் ஓய்வெடுக்குமாறு கூறுவார்கள். ஆனால் அவ்வாறு ஓய்வு எடுக்க நான் பார்க்கும் வேலை இடம் கொடுக்காது. ஓய்வெடுத்தால் வேலை செய்ய முடியாது" என்கிறார் கௌரி.
"வெயில் சமயங்களில் மாதவிடாய் தருணத்தில் கர்ப்பப்பையை நீக்கி விடலாம் என்று கூட தோன்றும். நீண்ட காலம் மாத்திரைகளை உட்கொண்டால் குழந்தையின்மை பிரச்னை ஏற்படும் என மருத்துவர் என்னிடம் எச்சரித்துள்ளனர்." என்கிறார் கௌரி.
அந்த சமயத்தில் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் என்று கூறும் கௌரி ஒன்று அல்லது ஒன்றரை மணிநேரத்துக்கு ஒரு நாப்கின் மாற்ற வேண்டியிருக்கும் என்கிறார்.
"இந்த வெயிலில் வேலை செய்ய நாங்கள் பழகிவிட்டோம்." என கூறுகிறார் கௌரி.
கௌரியின் பிரச்னை மட்டும் அல்ல இது. ஹீட் வாட்ச் ஆய்வறிக்கையின்படி, ஆய்வுக்காக பேசிய 96.8% பெண் தொழிலாளர்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். 94% பெண் தொழிலாளர்கள் வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது பொதுவாக ஈஸ்ட் தொற்றின் அறிகுறியாக கருதப்படுகிறது. 92.6% பெண்கள் மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கின்மை, அதிக வலி ஆகியவற்றை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கௌரியுடன் பணிபுரியும் மற்றொரு தொழிலாளரான கலைச்செல்வி, தான் வெயில் காலத்தில் அதிக வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
"காலை 6 மணிக்கு எழுந்து குழந்தைகள், கணவருக்காக உணவு சமைத்து எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு தான் கிளம்புவேன். வெயில் காலத்தில் வீட்டில் இத்தகைய வேலைகளை செய்வதே பெரும் சோர்வை ஏற்படுத்திவிடும். வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் நடந்துதான் வேலைக்கு வர வேண்டும். வரும்போதே வெயில் அதிகமாக இருக்கும். இந்த வெயில் காலத்தில் சில மாதங்களாக ஒருநாள் மட்டும் தான் மாதவிடாய் வருகிறது. அந்த ஒருநாளும் எரிச்சல், அதிக ரத்தப்போக்கு, வயிற்று வலி இருக்கும். மருத்துவர் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்ற பயத்திலேயே இன்னும் மருத்துவமனை செல்லவில்லை. யாரிடமும் எங்களுக்கு இத்தகைய பிரச்னை இருப்பதை சொல்லவும் முடியாது" என்றார் கலைச்செல்வி.
பணித்திறனில் பாதிப்பு
தொழிலாளர்கள் தங்களை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள மின்விசிறி மட்டுமே இருக்கிறது. அதிலிருந்தும் சூடான காற்றே வெளிவருகிறது. "அடிக்கும் வெயிலில் வெளியே செல்லவும் முடியாது" என்கின்றனர் தொழிலாளர்கள்.
"பெரும்பாலும் ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. இடைவேளை நேரத்தில் தேநீரை தொழிற்சாலைக்கே எடுத்து வந்து விடுவார்கள்." என்கிறார் கலைச்செல்வி.
வெயில் காரணமாக தாங்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்தாலும் அதனால் தங்கள் பணித்திறன் பாதித்து வருமானம் பாதிக்கப்படுவதாக கூறுகிறார் அவர்.
"வெகு நேரம் உட்கார்ந்து தைக்க முடியாது. வழக்கமாக, ஒருநாளைக்கு 350-400 ஆடைகள் (பீஸ்) தைப்போம். ஆனால், வெயில் காலத்தில் 300 பீஸ் தான் தைக்க முடியும். வாரம் ரூ.3,500-4,000 வாங்கும் இடத்தில் இப்போது ரூ. 3,000 தான் வாங்க முடிகிறது. அதை வைத்துதான் குடும்பத்தை நடத்துகிறோம்."
'தண்ணீர் நினைப்பே இருக்காது'

குப்புச்சிபாளையத்தில் சுமார் 100 தையல் இயந்திரங்களுடன் செயல்படும் பெரிய ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பாக்கியலட்சுமியை சந்தித்தோம்.
அதிகமான துணிகளை தைக்க வேண்டிய சூழல் இருக்கும்போது, சிறுநீர் கழிப்பதைக் கூட ஒத்திப் போட வேண்டியிருக்கும் என்கிறார் பாக்கியலட்சுமி.
"வேலை அதிகமாக இருந்தால் தண்ணீரை பற்றிய நினைப்பே இருக்காது. சிறுநீரும் சரிவர கழிக்க மாட்டோம். அப்போது எரிச்சலாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு, வயிற்றுவலி ஏற்படும். வெயில் காலத்தில் மின் தையல் இயந்திரத்தில் இருந்து வரும் சூடு உடலுக்கு நல்லதல்ல, சிறிது ஓய்வு எடுங்கள் என மருத்துவர் கூறியுள்ளார். ஆனாலும் ஓய்வெடுக்க முடியாது. வலிக்கு மாத்திரை எடுத்துக் கொண்டு வேலை செய்வோம்" என்கிறார் பாக்கியலட்சுமி.
நாங்கள் அவரை சந்தித்தபோது மணி மாலை 6 மணியை கடந்திருந்தது. காலை 9 மணிக்கு வேலையை அவர் ஆரம்பித்த நிலையில், திடீரென அதிகப்படியான துணிகளை தைக்க வேண்டியிருந்ததால் அன்றைய தினம் வேலையை முடிக்க 8 மணியாகிவிடும் என பாக்கியலட்சுமி உட்பட அங்கிருந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
"நீண்ட நேரம் அமர்ந்து தைக்கும் போது தலைசுற்றல் வரும். அப்போது மட்டும் தண்ணீர் குடிப்போம். இல்லையென்றால் வேலையை மட்டுமே பார்ப்போம். வெயில் காலத்தில் மாதவிடாயும் சரியான நேரத்தில் வருவதில்லை" என்கிறார் பாக்கியலட்சுமி.

குப்புச்சிபாளையம் பகுதியில் இயங்கும் ஆடை நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் செந்தில் குமார் கூறுகையில், "அரசு விதிமுறையின்படி கழிவறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 10 அடிக்கு ஒரு ஜன்னல் வைத்துள்ளோம். போதுமான அளவில் மின்விசிறிகள் உள்ளன, இந்த பகுதி பெரும்பாலும் காற்றோட்டமாக இருக்கும்." என்றார்.
"ஆடை தொழிற்சாலைகளில் ஏ.சி வசதி செய்வது மிகவும் செலவுகரமான ஒன்று. ஏசி வசதி செய்தால் தூசு உள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கும், அதனால் இன்னும் பிரச்னைகள் தான் அதிகமாகும்" என்றார் அவர்.
தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான வசதி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெப்ப அலையின் தாக்கத்தைத் தணிக்க எலுமிச்சை பழச்சாறு, மோர் போன்றவற்றை தொழிலாளர்களுக்கு வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

திருப்பூரில் இயங்கும் மருத்துவமனை ஒன்றின் மகப்பேறு மருத்துவர் கவிதா முத்துவேல், வெப்பமான நேரத்தில் அதிக நேரம் அமர்ந்து தையல் வேலை செய்யும்போது பெண்களுக்கு பலவித பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.
"இயல்பாகவே நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கும் போது உடல் வெப்பநிலை அதிகமாகும். அத்துடன், தண்ணீரும் சரிவர குடிக்காமல் இருந்தால் அது மாதவிடாயை பாதிக்கும். அதிக உதிரப்போக்கு, அடிவயிறு வலி, அசௌகரியம் போன்றவை ஏற்படும். 40 வயதுக்கு மேலான பெண்கள் என்றால் அதிக வெள்ளைப்படுதல் ஏற்பட்டு கருப்பையில் புண் உள்ளிட்டவை ஏற்படலாம். ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் குறிப்பாக பெண்கள் சுகாதாரம், போதுமான தண்ணீர் அருந்துதல், ஊட்டச்சத்துள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்." என்றார்.
சிறுநீர் பாதை தொற்று ஏற்படும்போது அது கர்ப்பப்பை வாயையும் பாதிக்கலாம் என்கிறார் மருத்துவர் கவிதா.
"தண்ணீர் குடிக்காமல், சரிவர சிறுநீர் கழிக்காமல் இருந்தால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம். சிறுநீர் பாதையும் கர்ப்பப்பை வாயும் அருகருகே இருப்பதால், இந்த தொற்று ஏற்படும்போது அது கர்ப்பப்பை வாயையும் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெள்ளைப்படுதல் ஏற்படும்."
நீரிழப்பால் ஹார்மோன் சுரப்பு பாதிக்கப்பட்டு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். தவிர, பிறப்புறுப்பில் அரிப்பு, புண்கள், கொப்புளம் ஏற்படும் என்றும் இதனை தவிர்க்க தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் அருந்துவதுடன், திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
அத்துடன், மருத்துவர் பரிந்துரையின்றி நீண்ட காலம் வலி நிவாரணி மாத்திரைகளை தாமாகவே மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்தினால், சிறுநீரக கோளாறு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட நேரிடலாம் என, மகப்பேறு மருத்துவர் கவிதா முத்துவேல் எச்சரிக்கிறார்.
பிரச்னையை சரிசெய்வது எப்படி?
வெப்ப அலையால் இத்தகைய ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வை அரசு நடத்த வேண்டும் என்றும், மாதவிடாய் சமயங்களில் இலவசமாக நாப்கின்களை வழங்க வேண்டும் என்றும் பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கே. செல்வி கூறுகையில், "ஆடை தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகளவில் வேலை பார்க்கின்றனர். இத்தகைய தொழிலாளர்களுக்கு வேலை அதிகம், சம்பளம் குறைவாக இருக்கிறது. காலையில் 8 மணிக்கு உள்ளே வந்தால் இரவு 8 மணி வரை வேலை செய்கின்றனர். நீண்ட நேரம் உட்கார்ந்து தைக்கும்போது அப்பெண்களுக்கு பலவித பிரச்னைகள் ஏற்படுகின்றன. நிறுவனங்கள் இடைவேளை நேரத்தில் சூட்டைத் தணிக்கும் வகையிலான பானங்களை வழங்க வேண்டும். தரமான நாப்கின்களை இலவசமாக வழங்க வழிவகை செய்ய வேண்டும். சுகாதாரமான கழிப்பறை வசதிகளை நிறுவனங்கள் செய்துகொடுக்க வேண்டும்" என்றார்.
இவை தவிர, அதீத வெப்பம் நிலவும் காலங்களில் அதை சமாளிப்பதற்கென தொழிலாளர்களுக்கு தனியே ஒரு தொகை வழங்குதல், அத்தகைய பிரச்னைகளை பணி சார்ந்த நோய்களாக கருதுதல், இ.எஸ்.ஐ சட்டம் 1948-ல் வெப்ப அழுத்தம் சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சை பெறும் வகையில் திருத்தம் செய்தல், தொழிலாளர்களிடையே அறிகுறிகளை கண்டறியும் வகையில் நிறுவனங்கள் தங்களின் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சியளித்தல் போன்றவற்றை ஹீட் வாட்ச் அமைப்பின் ஆய்வு பரிந்துரைக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































