பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானின் செல்போன் பறிமுதல் ஏன்?

பட மூலாதாரம், Stu Forster/Getty Images
- எழுதியவர், ஷாசாத் மாலிக்
- பதவி, பிபிசி உருது
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ரிஸ்வானுக்கு எதிராக தேசிய சைபர் குற்றப் புலனாய்வு முகமை (National Cyber Crime Investigation Agency - (NCCIA) நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்துள்ளது.
என்சிசிஐஏ நோட்டீசுக்குப் பதிலளிக்குமாறு ரிஸ்வானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணியில் இருந்து ஏழு வீரர்களைத் திரும்பப் பெற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர்களில் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் ஆகா, அலி உஸ்மான், ஆமிர் ஜமால், ஓவைஸ் ஜஃபர் மற்றும் குர்ரம் ஷாஜாத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பான ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஒழுங்கு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
செப்டம்பர் தொடக்கத்தில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது சில வீரர்களின் செல்போன்களை பிசிபி பறிமுதல் செய்து, அவற்றை என்சிசிஐஏ-விடம் ஒப்படைத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ரிஸ்வான் மனு தள்ளுபடி
தனது மனுவில், என்சிசிஐஏ பறிமுதல் செய்த தனது செல்போன் மற்றும் பிற உடைமைகளைத் திரும்ப வழங்குமாறு முகமது ரிஸ்வான் கோரியிருந்தார்.
விசாரணைக்குப் பிறகு இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முகமது ரிஸ்வானின் மனுவை லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலியா நீலம் விசாரித்தார்.
கிரிக்கெட்டில் பந்தயம் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ரிஸ்வானுக்கு என்சிசிஐஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அவரது வழக்கறிஞர் காஸி உமைர் அலி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவரிடம் பேசிய தலைமை நீதிபதி அலியா நீலம், அந்த நோட்டீஸுக்கு பதிலளிக்குமாறு கூறினார்.
செப்டம்பர் 10-ம் தேதி ரிஸ்வானுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், அதற்கு அவர் பதிலளித்துவிட்டதாகவும் அவர் தரப்பு வழக்கறிஞர் உமைர் அலி வாதிட்டார்.
இதையடுத்து, நீங்கள் ஏன் நீதிமன்றத்துக்கு வந்தீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
விசாரணையின்போது, என்சிசிஐஏ-விடம் இருந்து பெறப்பட்ட நோட்டீஸ் மற்றும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான ஆவணங்கள் எங்கே உள்ளன என்று முகமது ரிஸ்வானின் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேட்டது.
அந்த ஆவணங்கள் தனது ஜூனியர் வழக்கறிஞரிடம் இருப்பதாக காஸி உமைர் அலி தெரிவித்தார். நீதிமன்றத்தில் ஆஜராகும்போது குறைந்தபட்சம் வழக்கு தொடர்பான ஆவணங்களையாவது அவர் தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
முகமது ரிஸ்வானின் வழக்கறிஞர் மேலும் வாதங்களை முன்வைக்க விரும்பினார். எனினும், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. என்சிசிஐஏ நோட்டீசுக்குப் பதிலளிக்குமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரிஸ்வான் நீதிமன்றத்திடம் என்ன கோரினார்?
தனது மனுவில், ஆகஸ்ட் 27 முதல் 30 வரை லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி முடிந்த உடனேயே, முழு அணியும் தங்கியிருந்த ஹோட்டலின் லாபிக்கு அதிகாலை 1 மணிக்கு தான் அழைக்கப்பட்டதாக முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.
மனுவின்படி, "அங்கு ஒரு அதிகாரி இருந்தார். அவர் அரசு அமைப்பைச் சேர்ந்தவர் போல் தோன்றினார்."
இதுகுறித்து முன்கூட்டியே எந்த தகவலும் தெரிவிக்காமல், அந்த அதிகாரி தன்னிடம் விசாரணை நடத்தியதாகவும், எந்தக் காரணத்தையோ விளக்கத்தையோ தெரிவிக்காமல் தனது செல்போனைப் பறிமுதல் செய்ததாகவும் முகமது ரிஸ்வான் தனது மனுவில் கூறியுள்ளார்.
முழுமையாகச் சோதிக்கப்பட்டு, அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் செல்போன் தன்னிடம் திருப்பி வழங்கப்படும் என்று உறுதியளித்ததன் அடிப்படையிலேயே தனது செல்போனை ஒப்படைத்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
முகமது ரிஸ்வான் தாக்கல் செய்துள்ள மனுவில் உள்துறை அமைச்சகம் மற்றும் என்சிசிஐஏ ஆகியவை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக என்சிசிஐஏ அனுப்பிய நோட்டீஸில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நோட்டீஸில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை மட்டுமல்லாமல், எந்த அடிப்படையும் இல்லாதவை என்றும் ரிஸ்வான் தரப்பு வாதிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை என்சிசிஐஏ மேற்கொண்ட விசாரணையில், குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, பந்தயம் கட்டியதாக கூறப்படும் தேதியைக்கூட என்சிசிஐஏ அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவின்படி, முகமது ரிஸ்வான் செப்டம்பர் 10 அன்று என்சிசிஐஏ முன் ஆஜரானார். செப்டம்பர் 14 அன்று, தன்னை எந்த அடிப்படையில் விசாரணைக்கு அழைத்தனர் என்று கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதினார்.
கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸும், அதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட விசாரணையும் சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிரிக்கெட்டில் போட்டி நிர்ணயம் அல்லது பந்தயம் தொடர்பான ஏதேனும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தால், அதை விசாரிக்கும் உரிமை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தன் மீது விசாரணை நடத்தப்படும் வழக்கு குறித்து மனுதாரரான முகமது ரிஸ்வானுக்கு எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் அல்லது விசாரணை என்ற பெயரில் என்சிசிஐஏ அதிகாரிகள் மனுதாரரை காவலில் வைக்கவோ அல்லது கைது செய்யவோ வாய்ப்புள்ளதாகவும் மனுவில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் மட்டுமின்றி, அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் விசாரணையையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும், என்சிசிஐஏ வசம் உள்ள முகமது ரிஸ்வானின் செல்போன் மற்றும் பிற உடைமைகளைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டுள்ளது.
லாகூரில் உள்ள என்சிசிஐஏ அதிகாரிகள், கிரிக்கெட் வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோரை செப்டம்பர் 10 அன்று விசாரணைக்கு அழைத்தனர்.
சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், இரு கிரிக்கெட் வீரர்களும் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், என்சிசிஐஏ அதிகாரிகள் அவர்களின் கைபேசிகளைப் பறிமுதல் செய்தனர்.
முகமது ரிஸ்வானிடம் என்சிசிஐஏ என்ன கேட்டது?
என்சிசிஐஏ முகமது ரிஸ்வானிடம் கேட்ட கேள்விகளை, அந்த அமைப்பின் வழக்கறிஞரும் உதவி அட்டர்னி ஜெனரலுமான ரஃபாகத் தோகர் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
முகமது ரிஸ்வானின் தனிப்பட்ட, நிதி மற்றும் பயண விவரங்களை என்சிசிஐஏ கேட்டுள்ளது.
கேள்விகளின்படி, முகமது ரிஸ்வானிடம் அவரது பெற்றோர், பிறந்த தேதி, பிறந்த இடம், மனைவி மற்றும் குழந்தைகள் குறித்த தகவல்களுடன், கடந்த 10 ஆண்டுகளில் அவர் பயன்படுத்திய ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகக் கணக்குகளின் விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்ற சம்பளம், வாடகை வருமானம், தொழில் மற்றும் விவசாயம் மூலம் கிடைத்த வருமானம், வங்கிகளில் வைத்திருந்த பணத்தின் மூலம் ஈட்டிய லாபம், குடும்பச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவுகள் குறித்த விவரங்களையும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
மரபுரிமையாகப் பெற்ற சொத்துகள் குறித்த முழுமையான தகவல்கள், அவற்றைப் பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் சொத்துகள் வாங்கியது மற்றும் விற்றது தொடர்பான பதிவுகள் ஆகியவற்றையும் முகமது ரிஸ்வான் வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணங்களின் விவரங்கள், அதற்காகச் செய்யப்பட்ட செலவுகள், தங்கியிருந்த கால அளவு, அனைத்து வங்கிக் கணக்குகள், கடன் அட்டைகள் மற்றும் எந்தவொரு நபர் அல்லது நிறுவனத்திடமிருந்து பெற்ற கடன்கள் குறித்த விவரங்களும் கேள்விகளில் இடம்பெற்றுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































