அரியலூர் பள்ளியில் தலித் உதவியாளருக்கு நடந்த கொடூரம் - மேசையில் மனிதக் கழிவு வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணி

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விசிகவினர் போராட்டம்
படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விசிகவினர் போராட்டம்
    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நவம்பர் 10ஆம் தேதி காலை 9.15 மணிக்கு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் அறையைத் திறந்த ஆய்வக உதவியாளர் கண்ணதாசனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அவர் வழக்கமாக அமரும் மேசையின் மீது மனிதக் கழிவு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, மனிதக் கழிவு அப்புறப்படுத்தப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தச் சம்பவம் தனிப்பட்ட விரோதத்தின் வெளிப்பாடல்ல என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளியில் பட்டியலின ஆசிரியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நிகழ்ந்து வந்த சாதிப் பாகுபாடுகளின் நீட்சியே இது என்றும் கூறுகிறார் கண்ணதாசன். இந்தச் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், தங்களுக்குப் பல்வேறு வகைகளில் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டதாகவும், இது தொடர்பாகப் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்.

ஆனால், "இந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையே சாதி தொடர்பான பதற்றம் இருந்ததாக இதற்கு முன் முறையாகப் புகார் ஏதும் வந்தது இல்லை" என்கிறார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால்.

இரண்டு ஆண்டுகளாக நீடித்ததாகக் கூறப்படும் பாகுபாடு

இந்தப் பள்ளியில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் கண்ணதாசன், சில ஆசிரியர்கள் புதிதாகப் பணியில் சேர்ந்த பிறகே பட்டியலின ஆசிரியர்களுக்கு எதிரான பாகுபாடு தொடங்கியதாகக் கூறுகிறார்.

பள்ளியில் பணியாற்றிய ஐந்து பட்டியலின ஆசிரியர்களைப் பிற சமூகங்களைச் சேர்ந்த பன்னிரண்டு ஆசிரியர்கள் தனிமைப்படுத்தியதாகக் குற்றம்சாட்டும் கண்ணதாசன், பட்டியலின ஆசிரியர்களுடன் சேர்ந்து உணவருந்துவதைத் தவிர்த்து, அவர்கள் தனியாக அமர்ந்து சாப்பிடும் நடைமுறை இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

இந்தப் பாகுபாடு குறித்து அப்போதைய தலைமை ஆசிரியரிடமும் மாவட்டக் கல்வி அதிகாரிகளிடமும் புகார் அளித்ததாகவும், ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால், "பள்ளியில் ஆசிரியர்களிடையே சாதி தொடர்பான பதற்றம் இருந்ததாக இதற்கு முன்பு எந்த ஆசிரியரும் தம்மிடம் முறையாகப் புகார் அளிக்கவில்லை" என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கண்ணதாசன், பள்ளித் தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார். மேலும், பள்ளியில் நிலவிய பிரச்னைகளைத் தீர்த்து அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில், ஆய்வக உதவியாளர் கண்ணதாசனும் ஆசிரியர் ரவிச்சந்திரனும் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எழுதிய புகார் கடிதம்
படக்குறிப்பு, ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எழுதிய புகார் கடிதம்

நடவடிக்கை கோரி விசிக போராட்டம்

இந்தச் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நவம்பர் 23ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் நடந்த நவம்பர் 10ஆம் தேதியே தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறும் விசிக அரியலூர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் சிவகுமார், "பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்புடைய விவகாரம் என்பதால் உடனடியாக இதைப் பொதுவெளியில் எழுப்ப விரும்பவில்லை" என்றார்.

ஆனால், நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளுக்குப் பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருதியதால் நவம்பர் 23ஆம் தேதி போராட்டத்தை அறிவித்ததாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களே இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவது வெட்கக்கேடானது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார் சிவகுமார்.

'தீண்டாமை இன்னும் நீடிக்கிறது என்பதற்கான சான்று'

இந்தச் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் இளமுருகு முத்து, இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் தீண்டாமை இன்னும் நீடிப்பதற்கான சான்று என்கிறார்.

பட்டியலின மக்கள் கல்வியிலும் சமூக அந்தஸ்திலும் உயர்வதை இடைநிலைச் சாதியினர் விரும்புவதில்லை என்றும், அவர்கள் முன்னேறுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இன்னும் உருவாகவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார். இத்தகைய சம்பவங்களைத் தடுக்க அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் இளமுருகு முத்து
படக்குறிப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் இளமுருகு முத்து

வேங்கைவயல் சம்பவத்தில் போராடிய இளமுருகு முத்து, அந்த வழக்கில் போலீசார் பட்டியலின மக்களையே குற்றம் சாட்டியதாக விமர்சிக்கிறார். அரியலூர் சம்பவத்திலும் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படாமல் போகலாம் அல்லது பட்டியலின மக்கள் மீதே பழி சுமத்தப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

அரசியல் கட்சிகள் வாக்கு அரசியலைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் போவது நீதியே மறுக்கப்படும் நிலையை உருவாக்குவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மறுப்பு

இதற்கிடையே, பள்ளியில் சாதிப் பாகுபாடு நிலவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் முருகன் மறுக்கிறார்.

இது இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட விரோதம் என்றும், அவர்கள் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறுகிறார். அந்தத் தனிப்பட்ட பிரச்னைக்குப் பின்னர் சாதிச் சாயம் பூசப்பட்டதாகவும், ஒரு தரப்பினர் இதை அரசியல் ரீதியாக முன்னெடுத்ததாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சுமார் 80 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அந்தப் பள்ளியில் இதுபோன்ற பிரச்னைகள் இருந்ததில்லை என்றும், மாணவர்களும் ஆசிரியர்களும் நல்ல முறையில் இருந்ததாகவும் கூறும் முருகன், "இந்தப் பிரச்னை இரண்டு நபர்களுக்கு இடையிலானது மட்டுமே" என்கிறார்.

இருவரும் தற்போது வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும், போலீஸ் விசாரணையில் உண்மை விரைவில் தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை என்ன சொல்கிறது?

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்தபோது மேசையில் வீசப்பட்ட மனிதக் கழிவு சுத்தம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எஞ்சியிருந்த மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "தடயவியல் ஆய்வறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பொருள் மனிதக் கழிவுதானா, அது எப்போது அங்கு வைக்கப்பட்டது, யார் வைத்தது என்பன உள்ளிட்ட விவரங்களை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதுவரை இந்தச் சம்பவத்தில் யாரும் அடையாளம் காணப்படவில்லை," எனத் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் 2022 டிசம்பரில் வெளிச்சத்துக்கு வந்தது (கோப்புப் படம்)
படக்குறிப்பு, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் 2022 டிசம்பரில் வெளிச்சத்திற்கு வந்தது (கோப்புப் படம்)

தொடரும் அவலங்கள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழ்நாட்டில் மனிதக் கழிவு தொடர்பான இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் 2022 டிசம்பரில் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி, 2025 ஜனவரியில் மூன்று பட்டியலினத்தவரை குற்றம்சாட்டி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் விசாரணை முறைக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தலித் அமைப்புகள் கேள்வி எழுப்பின. 2026 செப்டம்பரில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்ததை ஏற்று, சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் 2026 ஆகஸ்டில் மனிதக் கழிவு கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே மாவட்டத்தில் பழனியை அடுத்த மானூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் நீர்த்தொட்டியிலும் அக்டோபரில் மனிதக் கழிவு கண்டறியப்பட்டது.

இந்த இரண்டாவது சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் விளையாட்டாகச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது தொடர்பாகவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்தச் சம்பவங்கள் ஒவ்வொன்றின் பின்னணியும் வேறுபட்டிருக்கலாம். ஆனால், அவை எழுப்பும் முக்கியமான கேள்விகள் ஒன்றுதான் என்கிறார் இளமுருகு முத்து. அது: "இத்தகைய செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வது யார்?"

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு