ஜியோ ஐபிஓ சாதனை: முதல் நாளே 3 மடங்கு விண்ணப்பங்கள் - முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் நிர்வாகப் பொறுப்பு இப்போது முகேஷ் அம்பானியின் அடுத்த தலைமுறையிடம் உள்ளது.
படக்குறிப்பு, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் நிர்வாகப் பொறுப்பு இப்போது முகேஷ் அம்பானியின் அடுத்த தலைமுறையிடம் உள்ளது.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீடு (IPO), தொடங்கிய சில நிமிடங்களிலேயே சாதனை படைத்துள்ளது.

புதன்கிழமை பங்கு வெளியீடு தொடங்கிய பத்து நிமிடங்களுக்குள், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (QIB) ஒதுக்கப்பட்ட 4.9 கோடி பங்குகளைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான பங்குகளுக்கு விண்ணப்பங்கள் கிடைத்தன. இந்தப் பிரிவில் 4,90,07,827 பங்குகள் விற்பனைக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், மிகக் குறைவான நேரத்தில், ஒதுக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான தேவை உருவானது.

இந்த பொது பங்கு வெளியீடு மூலம் ஜியோ ரூ.30,213 கோடி திரட்டவுள்ளது. இந்தத் தொகையைத் தனது கடனைத் திருப்பிச் செலுத்தவும், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் நிறுவனம் பயன்படுத்தும்.

முதல் நாளின் முடிவில், இந்த ஐபிஓ ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகமாக விண்ணப்பங்களைப் பெற்றது. தகுதிபெற்ற நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் ஒன்பது மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்தன. அதேவேளையில், சில்லறை முதலீட்டாளர்களுக்கான பங்குகளில் 68 சதவீதம் அளவுக்கு விண்ணப்பங்கள் கிடைத்தன.

இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட பொதுப் பங்கு வெளியீடுகளில் ஜியோவின் ஐபிஓதான் மிகப் பெரியது. செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட தேசியப் பங்குச் சந்தையின் ஐபிஓ ரூ.22,560 கோடி மதிப்புடையதாக இருந்தது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் தனது ஐபிஓவுக்கான ஒரு பங்கின் விலை வரம்பை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை என நிர்ணயித்துள்ளது.

இந்தப் பங்கு வெளியீடு வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.

செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட தேசியப் பங்குச் சந்தையின் ஐபிஓ ரூ.22,500 கோடிக்கும் அதிகமான மதிப்புடையதாக இருந்தது.
படக்குறிப்பு, செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட தேசியப் பங்குச் சந்தையின் ஐபிஓ ரூ.22,500 கோடிக்கும் அதிகமான மதிப்புடையதாக இருந்தது.

இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் காலகட்டத்தில் இந்த ஐபிஓ வெளியாகியுள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான நிஃப்டி-50, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 12 சதவீதத்துக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நிஃப்டி-50 குறியீட்டில் இந்தியாவின் 50 முன்னணி நிறுவனங்களின் பங்குகள் இடம்பெற்றுள்ளன.

இதுவரை ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் வெளியிடப்பட்ட 13 ஐபிஓக்களில் எட்டு, பங்குச் சந்தையில் பட்டியலானபோது பெரும்பாலான முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல தொடக்கத்தைப் பெறவில்லை. இத்தகைய சூழலில், ஜியோவின் ஐபிஓவுக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பங்குச் சந்தையில் மந்தநிலை நிலவினாலும், புதிய பங்கு வெளியீடுகளில் முதலீட்டாளர்களின் ஆர்வம் தொடர்வதாக கெஜ்ரிவால் ரிசர்ச் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸின் அருண் கேஜ்ரிவால் பிபிசியிடம் தெரிவித்தார். கவர்ச்சிகரமான மதிப்பீடுகளும், எதிர்காலத்தில் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான ஆர்வம் காரணமாகவும், நிறுவன முதலீட்டாளர்களும் சிறு முதலீட்டாளர்களும் ஐபிஓக்களில் முதலீடு செய்து வருவதாக அவர் கூறினார்.

ஏற்கெனவே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, குறைவான மதிப்பீட்டையும் குறைவான பங்கு விலை-வருவாய் விகிதத்தையும் (Price-to-Earnings Ratio — P/E Ratio) பிரதிபலிக்கும் வகையில் ஐபிஓக்களின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இதனால், ஐபிஓக்கள் முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்புடையவையாக மாறுகின்றன.

ஒரு நிறுவனத்தின் ஒரு பங்குக்கான லாபத்துடன் அதன் சந்தை விலையை ஒப்பிடுவதுதான் பங்கு விலை-லாப விகிதம் (P/E Ratio).

செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட தேசியப் பங்குச் சந்தையின் ஐபிஓ ரூ.22,500 கோடிக்கும் அதிகமான மதிப்புடையதாக இருந்தது.

ஐந்து பெரிய ஐபிஓக்கள் பட்டியலிடப்பட்டபின் என்ன நடந்தது?

தேசியப் பங்குச் சந்தை (NSE)

கடந்த செப்டம்பர் மாதம் தேசியப் பங்குச் சந்தையின் (NSE) பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்டன. அவை வெளியீட்டு விலையைவிட வெறும் 0.84% அதிக விலையில் பட்டியலிடப்பட்டன.

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா

2024 அக்டோபரில் வெளியிடப்பட்ட ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் ரூ.27,858 கோடி மதிப்பிலான ஐபிஓவும் மந்தமான தொடக்கத்தையே பெற்றது.

ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.1,960 ஆக இருந்த நிலையில், அதன் பங்குகள் ரூ.1,934 என்ற விலையில் பட்டியலிடப்பட்டன.

எல்ஐசி

இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டதும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமளித்தது.

2022 மே மாதத்தில், எல்ஐசியின் பங்குகள் ரூ.949 என்ற வெளியீட்டு விலைக்கு மாறாக ரூ.867.20 என்ற விலையில் பட்டியலிடப்பட்டன. இது வெளியீட்டு விலையைவிட 8.62% குறைவு.

பேடிஎம்

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸின் ரூ.18,300 கோடி மதிப்பிலான ஐபிஓ, 2021 நவம்பரில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து பல பெரிய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது.

பேடிஎம் பங்குகளின் ஐபிஓ வெளியீட்டு விலை ரூ.2,150 ஆக இருந்தது. ஆனால், அவை ரூ.1,950 என்ற விலையில் பட்டியலிடப்பட்டன. இது வெளியீட்டு விலையைவிட 9.3% குறைவு.

ஐபிஓ மூலம் ஜியோ தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதுடன், ரிலையன்ஸ் இன்ஃபோகாமின் செயல்பாடுகளையும் விரிவுபடுத்தவுள்ளது. எனினும், நிறுவனம் பல சவால்களையும் எதிர்கொள்கிறது.
படக்குறிப்பு, ஐபிஓ மூலம் ஜியோ தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதுடன், ரிலையன்ஸ் இன்ஃபோகாமின் செயல்பாடுகளையும் விரிவுபடுத்தவுள்ளது. எனினும், நிறுவனம் பல சவால்களையும் எதிர்கொள்கிறது.

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியாவின் ஐபிஓ 2025 அக்டோபரில் வெளியிடப்பட்டது. இதற்கும் முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது. அதன் பங்குகள் வெளியீட்டு விலையைவிட 50% கூடுதல் விலையில் பட்டியலிடப்பட்டன.

இந்த வகையில், பெரிய ஐபிஓக்களில் பட்டியலிடப்பட்ட முதல் நாளில் மிகப் பெரிய உயர்வைப் பதிவு செய்தது எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் ஐபிஓதான்.

ஜியோ எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில், வலுவான தொலைத்தொடர்பு வலையமைப்பைப் பொறுத்தவரை ஜியோ முன்னிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான உள்கட்டமைப்பும் தொடர்ந்து விரிவடைந்து வரும் டிஜிட்டல் சூழலமைப்பும் ஜியோவுக்கு நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகளை வழங்குகின்றன.

இருப்பினும், நிறுவனத்துக்கான போட்டி தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சேவைக் கட்டணங்கள் தொடர்பான போட்டியும், வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு மாறுவதற்கான சாத்தியமும் இதில் அடங்கும்.

குறைந்த விலையில் சேவைகளை வழங்குவதற்காக அறியப்படும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு, தொழில்நுட்பத் துறையின் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க் அண்மையில் வெளிப்படையாகச் சவால் விடுத்திருந்தார்.

தனது நிறுவனமான ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணையச் சேவை இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் என்று அவர் அறிவித்தார்.

தந்தை தீருபாய் அம்பானியுடன் முகேஷ் அம்பானி (கோப்புப் படம்)
படக்குறிப்பு, தந்தை தீருபாய் அம்பானியுடன் முகேஷ் அம்பானி (கோப்புப் படம்)

இந்தியாவில் வணிக ரீதியிலான சேவையைத் தொடங்குவதற்கான இறுதி அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், சமூக ஊடகத் தளமான எக்ஸில் அம்பானியை மஸ்க் விமர்சித்திருந்தார்.

அம்பானிதான் "இந்தியாவின் உண்மையான முதலாளியா?" என்று மஸ்க் கேள்வி எழுப்பியபோது, இந்த விமர்சனம் மேலும் தீவிரமடைந்தது.

இந்த விமர்சனங்களுக்கு அம்பானியோ ரிலையன்ஸ் நிறுவனமோ நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களை நீண்ட காலச் சொத்து உருவாக்கத்துக்கான நிறுவனங்களாகச் சில்லறை முதலீட்டாளர்கள் பல ஆண்டுகளாகக் கருதி வருகின்றனர். அக்குழும நிறுவனங்களின் ஐபிஓக்களுக்காகவும் அவர்கள் காத்திருக்கின்றனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தீருபாய் அம்பானி, பங்குதாரர்களை "ரிலையன்ஸ் குடும்பத்தின்" ஓர் அங்கம் என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்தார்.

இந்த மரபு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனங்களின் மீது விசுவாசம் கொண்ட சில்லறை முதலீட்டாளர்களின் வலுவான அடித்தளம் உருவாகியுள்ளது.

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு ரிலையன்ஸ் குழுமம் வெளியிடும் முதல் பொதுப் பங்கு வெளியீடு ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஐபிஓ ஆகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு