'ப்ளஸ் 2 மாணவர் தலையில் காயம், போலீஸ் அத்துமீறல்' - சென்னை போராட்டத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?

பட மூலாதாரம், spl arrangements
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி டெல்லியில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமையன்று (அக்டோபர் 10) போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட தங்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். "தாக்குதலில் மாணவர் ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டது. சில பெண்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது" என, அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை காவல்துறை மறுத்துள்ளது. அனுமதி பெறாத இடங்களில் போராட்டம் நடத்தியதால் காவல்துறை தடுத்ததாக, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக சிஜேபி, இடதுசாரி அமைப்புகள் போராடி வரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் பதவி விலகலை முன்வைத்து டெல்லியில் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் காக்ரோச் ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் இடதுசாரி அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி இந்தப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சனிக்கிழமை காலை சென்னை அரசினர் தோட்டத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை பேரணியாகச் செல்வதற்கு இடதுசாரி மாணவர் அமைப்பினர் முடிவு செய்தனர்.
சுமார் 10.30 மணியளவில் அரசினர் தோட்டம் முன்பாக சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர் திரண்டனர். அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்ய முற்பட்டது. அப்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டது. மாணவர் அமைப்பைச் சேர்ந்த சில பெண் நிர்வாகிகளுக்குக் காயம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், spl arrangements
'தலையில் தாக்குதல்... காவல்துறை அத்துமீறல்'
அவர்களை திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் போலீசார் தடுப்புக் காவலில் வைத்தனர். பிபிசி தமிழ் அங்கு சென்றபோது, வளாகத்தின் உள்ளே மாணவர் அமைப்பினர் அமர வைக்கப்பட்டிருந்தனர். பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவருக்குத் தலையில் ஏற்பட்ட காயம் தொடர்பாக காவல்துறையினரிடம் மாணவர் அமைப்பினர் வாக்குவாதம் செய்தனர். அந்த மாணவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது பிபிசி தமிழிடம் பேசிய அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் வித்யா, "ஞானேஸ்குமார் பதவி விலக வலியுறுத்தி அமைதியான முறையில் பேரணி நடத்தினோம். ஆனால் தடுப்பரண்களை அமைத்து காவல்துறை எங்கள் மீது தாக்குதல் நடத்தியது" எனக் கூறினார்.
பெண் காவலர் ஒருவர் தன்னிடம் இருந்த சாவியால் முழுங்கைக்கு பின்புறம் குத்தியதில் காயம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், " சில ஆண் காவலர்கள் அத்துமீறி நடந்து கொண்டனர். மாணவரின் தலையில் தாக்குதல் நடத்தினர். ஜனநாயகத்துக்கு விரோதமாக காவல்துறை நடந்து கொள்கிறது" என்றார்.

பட மூலாதாரம், spl arrangements
பேரணியின்போது நடந்த விஷயங்களை விவரித்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் இப்ராஹிம், "பேரணியின்போது அமைதியான முறையில் முன்னேறிச் சென்றோம். ஆனால், காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டது. நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனால் திருடர்களைப் போல காவல்துறை எங்களைக் கையாள்கிறது. போராடும் உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. அதை மறுக்கும் வேலையை காவல்துறை செய்கிறது" என்றார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போது இடைமறித்த காவல்துறை, "ஊடகங்களுக்கு அனுமதியில்லை" எனக் கூறினர். அதற்கு மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
திருவல்லிக்கேணி உதவி ஆணையர் விளக்கம்
மாணவர் அமைப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பவ இடத்தில் இருந்த திருவல்லிக்கேணி உதவி ஆணையர் அழகுவிடம் பிபிசி தமிழ் கேட்டது.
அவற்றை முழுமையாக மறுத்த அவர், "பேரணியைத் தடுக்க முற்பட்டபோது எங்கள் தரப்பில் நான்கு காவலர்களுக்குக் காயம் ஏற்பட்டது. அத்துமீறியதாகக் கூறுவது தவறான தகவல்" என்றார்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் மாணவர் அமைப்பினர் மீது போராட்டம் தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், spl arrangements
'நாங்கள் கிரிமினல்கள் இல்லை'
சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையிலும் காக்ரோச் ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் என சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
'எஸ்.ஐ.ஆரை ரத்து செய்.. ஞானேஷ்குமாரே பதவி விலகு' எனக் கூறி அவர்கள் முழக்கம் எழுப்பினர். அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய காவல்துறை அதிகாரி ஒருவர், "சட்டரீதியாக அனுமதிக்கப்படாத இடங்களில் போராட்டம் நடத்துவது விதிமீறல்" எனக் கூறினார்.
இதை ஏற்க மறுத்த போராட்டக் குழுவினர், " நாங்கள் கிரிமினல்கள் இல்லை. சட்டவிரோதமாக எதையும் நாங்கள் செய்யவில்லை. பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் எங்களைக் கைது செய்யுங்கள்" எனக் கூறினர்.
"டெல்லிக்கு போக நினைத்தும் முடியவில்லை. அதனால்தான் 'டெல்லி சலோ' பரப்புரையில் இணைந்து சென்னையில் போராட்டம் நடத்துகிறோம்" என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
"தங்களைக் குற்றவாளிகளாக அரசு நடத்தக் கூடாது" எனக் கூறிய அவர், "ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை சென்னையில் போராட்டம் தொடரும்" எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, அவர்கள் வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், spl arrangements
தர்ணாவில் ஈடுபட்ட ஆ.ராசா, தமிழச்சி
கைதான போராட்டக் குழுவினரை அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் காவல்துறை அடைத்து வைத்தது. அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு திமுக எம்.பி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சென்றனர்.
அவர்களை விடுவிக்குமாறு காவல்துறையினரிடம் ஆ.ராசா வாக்குவாதம் செய்தார். "இவர்களை விடுவிக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம்" என்றும் அவர் கூறினார். தாங்கள் நடத்திய தர்ணாவை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை விடுவித்ததாக, தனது எக்ஸ் பக்கத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த கைது சம்பவத்தைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எஸ்.ஐ.ஆருக்கு எதிராகவும் ஞானேஷ்குமாரின் பதவி விலகலை வலியுறுத்தியும் போராடும் செயல்பட்டாளர்களைக் கைது செய்து டெல்லியில் உள்ள தனது எஜமானர்களை தவெக அரசு மகிழ்விக்க முயன்று வருகிறது" என விமர்சித்துள்ளார்.
அத்துடன், "ஞானேஷ்குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், எஸ்.ஐ.ஆர் நடைமுறை நிறுத்தப்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், spl arrangements
'தவறு நடந்துள்ளது.. ஆனால்?' - நிர்மல்குமார் விளக்கம்
தவெக அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர், "எஸ்.ஐ.ஆரை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராடிய ஒரே கட்சியாக தவெக உள்ளது. அதில் தவறு நடந்துள்ளதாகத் தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தோம்" எனக் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது குறித்துப் பேசிய அவர், "ஒரு சில இயக்கங்கள் போராடி வருகின்றன. அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை. அப்படிப்பட்ட இடங்களில் போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அனுமதிக்கப்படாத இடங்களில் யார் சென்றாலும் அவர்களைக் காவல்துறை தடுக்கவே செய்யும். இதுதொடர்பாக, நிலையான செயல்பாட்டு நடைமுறை உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன," என்றார்.
தனி அமைப்போ இயக்கங்களோ நடத்தும் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவு இல்லை என்று கூறிய நிர்மல்குமார். "எல்லா இயக்கங்களும் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள் எனத் தெரியாது. யார் யாரோ நடத்துகிற போராட்டத்திற்கு எப்படி ஆதரவு கொடுக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதே நேரம், "ஞானேஷ்குமார் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எஸ்.ஐ.ஆர் சரியாக நடந்திருந்தால் 170 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும். எஸ்.ஐ.ஆரில் தவறு நடந்துள்ளது 100% உண்மை" எனக் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், spl arrangements
'திமுக மாணவர் அமைப்பு போராடவில்லை' - டி.கே.எஸ்.இளங்கோவன்
தமிழ்நாட்டில் சென்னை, சேலம் எனச் சில இடங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் பதவி விலகலை முன்வைத்து போராட்டங்கள் நடந்தன.
திமுக செய்தித் தொடர்புக் குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, "இந்தப் போராட்டங்களில் திமுக மாணவர் அமைப்பினர் ஈடுபடவில்லை. திமுக மாணவர் அமைப்பினருக்கு போராட்டம் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை. நேரடியாக போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவெடுப்போம். அதேநேரம், ஞானேஷ்குமாருக்கு எதிராக அறிக்கை ஒன்றை திமுக தலைவர் வெளியிட்டுள்ளார்" எனக் குறிப்பிட்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை காவல்துறை தடுத்தால் "அதை எதிர்த்து திமுக போராடும்" எனக் கூறிய அவர், "திமுக மாணவர் அமைப்பு இதில் பங்கேற்பதைப் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை" என்றும் கூறினார்.
"மாணவர் அமைப்பினர் நடத்தும் போராட்டத்தில் உடன்படுகிறோம். தலைமைத் தேர்தல் ஆணையர் மீது மற்றவர்கள் வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். நாங்கள் அவ்வாறு முன்வைப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை" எனக் கூறுகிறார், டி.கே.எஸ்.இளங்கோவன்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடக்கம் முதலே அதிமுக ஆதரித்து வந்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றிருந்தார்.
தற்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், 'அ.தி.மு.கவின் நிலைப்பாடு என்ன?' என்பதை அறிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது. ஆனால் அவர், "தற்போதைய சூழலில் இதுகுறித்துப் பதிலளிக்க விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























