இபிஎஃப்ஓ சம்பள வரம்பு உயர்வு: ரூ.25,000 வரை ஊதியம் பெறும் நபர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும்?

இபிஎஃப்ஓ சம்பள வரம்பு உயர்வு: ரூ.25,000 வரை ஊதியம் பெறும் நபர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும்?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவதற்கான சம்பள வரம்பை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, இதுவரை மாதம் ரூ.15,000 ஆக இருந்த சம்பள வரம்பு தற்போது ரூ.25,000 ஆக உயர்த்தப்படுகிறது.

இந்த முடிவை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். இதற்கான முன்மொழிவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அரசிடம் சமர்ப்பித்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

இபிஎஃப்ஓ திட்டத்தின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF), தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) மற்றும் தொழிலாளர்களுக்கான பிடித்தம் செய்யக்கூடிய ஆயுள் காப்பீடு (EDLI) ஆகியவற்றின் பலன்கள் கிடைக்கும்.

இதுவரை மாதம் ரூ.15,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்தப் பலன்கள் கிடைத்து வந்தன. தற்போது இந்த வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்படுவதால், மாதம் ரூ.25,000 வரை சம்பளம் பெறும் ஊழியர்களும் இந்தத் திட்டங்களின் கீழ் வருவதற்கான தகுதியைப் பெறுகின்றனர்.

1. மத்திய அமைச்சரவை என்ன முடிவு எடுத்துள்ளது?

பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புதன்கிழமை ( செப். 16 ) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்தான், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கட்டாய வரம்பிற்கு உட்பட்ட மாத ஊதிய வரம்பு 15000 ரூபாய் என்பதிலிருந்து ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2. எத்தனை ஊழியர்கள் பலனடைவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது?

இந்த முடிவின் மூலம் கூடுதலாக 51 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இபிஎஃப்ஓ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. இபிஎஃப்ஓ ஊதிய வரம்பு முன்னர் எப்போது மாற்றப்பட்டது?

2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டு காலத்தில் இபிஎஃப்ஓ ஊதிய வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

செப்டம்பர் 2014-ல், இந்த வரம்பு மாதத்திற்கு ரூ. 15,000 ஆக உயர்த்தப்பட்டது.

4. ஊதிய வரம்பை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன் ?

இபிஎஃப்ஓ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டு காலத்தில் இபிஎஃப்ஓ (EPFO) ஊதிய வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளில் ஊதிய உயர்வு, வருமான வளர்ச்சி மற்றும் முறையான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டே இந்த ஊதிய வரம்பு ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

பல மாநிலங்கள் மற்றும் தொழில்களில் குறைந்தபட்ச ஊதியமும் தற்போதைய வரம்பை எட்டியுள்ளதாக அரசு குறிப்பிடுகிறது.

5. 15 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதித்து வரும் ஊழியர்களின் தற்போதைய நிலை என்ன?

தற்போது, மாதத்திற்கு ரூ. 15,000-க்கு மேல் ஊதியம் பெற்று பணியில் சேரும் ஒரு புதிய ஊழியர், தானாகவே இபிஎஃப் (EPF) வரம்பிற்குள் வருவதில்லை.

இதுபோன்ற ஊழியர்கள் கட்டாய வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காப்பீட்டுப் பலன்களை பெறுவதில்லை.

6. ரூ. 25,000 என்ற புதிய வரம்பால் என்ன மாறும்?

ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை ஊதியம் பெறும் ஊழியர்களும் இபிஎஃப்ஓ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

7. இபிஎஃப் வரம்பின் கீழ் என்னென்ன சமூக பாதுகாப்பு திட்டங்கள் உள்ளன?

ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை ஊதியம் பெறும் பெரும்பாலான ஊழியர்கள் கட்டாய சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள்.

பட மூலாதாரம், Getty Images

அனுமதிக்குப் பிறகு நடைமுறைக்கு வரவுள்ள இத்திட்டத்தின் மூலம், வருங்கால வைப்பு நிதி சேமிப்பு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் ஓய்வூதியப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான பிடித்தம் செய்யக்கூடிய ஆயுள் காப்பீடு (EDLI) ஆகியவை கிடைக்கும்.

8. இந்த முடிவினால் சந்தாதாரர்களின் பங்களிப்புத் தொகையிலும், ஓய்வூதியப் கணக்கீடுகளிலும் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும்?

தற்போதைய ஊதிய நிலைகளுக்கு ஏற்ப சட்டபூர்வமான பங்களிப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு உரிய ஊதிய கட்டமைப்பை சிறப்பாகப் பொருத்திக்கொள்ள இது உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உயர்ந்து வரும் ஊதியத்திற்கு ஏற்ப இபிஎஃப்ஓ அமைப்பைப் புதுப்பிக்கவும், மேலும் பல தொழிலாளர்களுக்கு முறையான சமூகப் பாதுகாப்புப் பலன்களை விரிவுபடுத்தவும் இந்த புதிய வரம்பு வழிவகுக்கும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

9. இதன் காரணமாக அரசுக்கு கூடுதலாக எவ்வளவு செலவு அல்லது நிதிச்சுமை ஏற்படும்?

மத்திய அரசின் தற்போதைய கட்டாய சமூகப் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு சுமார் ரூ. 10,250 கோடியாக உள்ள நிலையில், இந்த புதிய மாற்றத்தின் மூலம் அது தோராயமாக ரூ. 11,339 கோடியாக அதிகரிக்கும்.

ஐந்து ஆண்டுகளில் மதிப்பிடப்படும் மொத்தச் செலவு தோராயமாக ரூ. 56,696 கோடியாக இருக்கும் என்று அரசு கூறுகிறது.

இபிஎஃப்ஓ சம்பள வரம்பு உயர்வு: ரூ.25,000 வரை ஊதியம் பெறும் நபர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும்?

பட மூலாதாரம், Getty Images

10. இபிஎஃப்ஓ குறித்த முக்கிய தரவுகள்

உலகிலேயே மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக இபிஎஃஓ இயங்கி வருகிறது.

இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம் மற்றும் தொழிலாளர்களுக்கான பிடித்தம் செய்யக்கூடிய ஆயுள் காப்பீடு (EDLI)ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

சமீபத்திய இபிஎஃப்ஓ புள்ளிவிவரங்களின்படி, சுமார் 7.68 லட்சம் நிறுவனங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 7.98 கோடி தொழிலாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்; அதேசமயம் இபிஎஸ் மூலம் சுமார் 82 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெற்று வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு