'50% வரை எட்டிய சர்க்கரை விலை உயர்வு' - மோதி அரசு நடவடிக்கைகள் எடுத்தும் குறையாதது ஏன்?

பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உயர்ந்துவரும் சர்க்கரை விலை ஒரு தேர்தல் பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உயர்ந்துவரும் சர்க்கரை விலை ஒரு தேர்தல் பிரச்னையாக உருவெடுக்கக்கூடும்
    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

உலகளவில் சர்க்கரையை மிக அதிக அளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை இல்லாத அளவு சர்க்கரையின் விலை 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

திங்கள்கிழமை ஒரே நாள் வர்த்தகத்தில் சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் 12% வரை உயர்ந்தன. சர்க்கரை துறையின் எதிர்கால நிலை மேம்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த உயர்வு ஏற்பட்டது

பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர், அவத் சுகர் அண்ட் எனர்ஜி, டால்மியா பாரத் சுகர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், தாம்பூர் சுகர் மில்ஸ், துவாரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ், மகத் சுகர் அண்ட் எனர்ஜி, மவானா சுகர்ஸ், பொன்னி சுகர்ஸ் (ஈரோடு), உகர் சுகர் வர்க்ஸ் மற்றும் உத்தம் சுகர் மில்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாள் வர்த்தகத்தில் தங்களது 52 வார உச்சத்தை எட்டின.

சுமார் ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக, 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது. அதாவது, விலையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரியின்றி சர்க்கரையை இந்தியா வரவழைக்கிறது.

ஊடகச் செய்திகளின்படி, சில மாநிலங்களில் சர்க்கரையின் விலை உயர்வு 50 சதவிகிதத்தை எட்டியுள்ளது. உத்தராகண்ட், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் சர்க்கரையின் விலை கிலோ 65 ரூபாயைக் கடந்துள்ளது.

ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒடிசாவில் சர்க்கரையின் விலை கிலோவுக்கு அதிகபட்சமாக 67.40 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு இதன் விலை 55 ரூபாயாகவும், ஒரு மாதத்துக்கு முன்பு 50.78 ரூபாயாகவும், 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி கிலோ 46.89 ரூபாயாகவும் இருந்தது.

இந்தியாவில் சர்க்கரை நீண்ட காலமாகவே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற முக்கிய சர்க்கரை உற்பத்தி மாநிலங்களில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான்.

கடந்த சில நாட்களாக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்த முடிவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், அதிக இறக்குமதி செய்வது அல்லது எத்தனாலுக்கான சர்க்கரை ஒதுக்கீட்டைக் குறைப்பதன் மூலம் சர்க்கரையின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் அரசாங்கத்துக்குச் சில எல்லைகள் இருப்பதாகச் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

இல்லையெனில், அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் 2026-27 பருவகாலத்தில் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படத் தொடங்கக்கூடும்.

"தொழில்துறையின் கோணத்தில் பார்த்தால், ஒரு கிலோவுக்குச் சுமார் 50 ரூபாய் என்பது சாதகமான விலையாக இருக்கும். சர்க்கரை உற்பத்திச் செலவு தோராயமாக கிலோவுக்கு 42 முதல் 43 ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் ஆலைகள் உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைந்த விலைக்குச் சர்க்கரையை விற்றுள்ளன, இதனால் அவற்றின் நிதி நிலைமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது" என்று சர்க்கரை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்' ஊடகத்திடம் தெரிவித்தார்.

"எனவே, ஆலைகளில் இருந்து வெளிவரும் சர்க்கரையின் விலை தொடர்ந்து கிலோவுக்கு 50 ரூபாய் என்ற அளவில் நிலைபெற்றால், அது சர்க்கரை ஆலைகளின் நிதி நிலையை மேம்படுத்த உதவிகரமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக ஆலைகளுக்கு இத்தகைய நிலை தொடர்ந்து கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது," என்று அந்த மூத்த அதிகாரி சமீபத்தில் தெரிவித்தார்.

அரசால் ஏன் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை?

கரும்பு உற்பத்தி குறையவில்லை, அப்படியிருந்தும் சர்க்கரை விலை ஏன் அதிகரிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கரும்பு உற்பத்தி குறையவில்லை, அப்படியிருந்தும் சர்க்கரை விலை ஏன் அதிகரிக்கிறது?

சர்க்கரை துறையில் ஒரு சமநிலை பற்றி அடிக்கடி பேசப்படுவதுண்டு. நுகர்வோர், விவசாயி மற்றும் ஆலை உரிமையாளர் ஆகிய மூவர்தான் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். நுகர்வோர் தனக்குக் குறைந்த விலையில் சர்க்கரை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்; விவசாயி தனது கரும்புக்குச் சரியான மற்றும் அதிக விலை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்; ஆலை உரிமையாளர்களோ தங்களுக்கு அதிகபட்ச லாபம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இந்த மூன்று தரப்பினருக்கும் இடையே சரியான சமநிலையைப் பேண வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று பொருளாதார நிபுணர் பேராசிரியர் அருண் குமார் விளக்குகிறார். ஆனால், இந்த முறை அப்படி நடப்பதாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார்.

பேராசிரியர் அருண் குமார் கூறுகையில், "அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் தாக்கம் உடனடியாகத் தெரியவராது; ஏனெனில், நிலைமை முற்றிலும் கைமீறிப் போன பின்னர்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு ஏன் அனுமதி அளித்தது? எத்தனாலுக்காகச் சர்க்கரை ஏன் திருப்பிவிடப்பட்டது போன்ற கேள்விகளுக்கு அரசிடம் தெளிவான பதில் இல்லை" என்றார்.

நாடு முழுவதும் உள்ள சர்க்கரை விநியோகஸ்தர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரை 400 டன்கள் என்ற இருப்பு வரம்பை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மொத்த நுகர்வோர் தங்களது 15 நாள் நுகர்வுக்கு மேல் சர்க்கரையை இருப்பு வைத்திருக்க அனுமதி கிடையாது.

இருப்பினும், "இதன் தாக்கம் உடனடியாகத் தெரியவராது. விலைகள் முழுமையாகச் சீராகக் குறைவதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகலாம்" என்று பேராசிரியர் அருண் குமார் கருதுகிறார்.

சர்க்கரை விலை ஏன் அதிகரிக்கிறது?

இந்தியாவில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் விநாயகர் சதுர்த்தி, தசரா மற்றும் தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகளின் போது சர்க்கரையின் தேவை வழக்கமாக அதிகரிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் விநாயகர் சதுர்த்தி, தசரா மற்றும் தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகளின் போது சர்க்கரையின் தேவை வழக்கமாக அதிகரிக்கிறது.

இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (ISMA) தலைவர் நீரஜ் சிர்கான்கர் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "சர்க்கரை இருப்பும் விநியோகமும் போதுமான அளவில் உள்ளன; பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவையைப் பூர்த்தி செய்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது" என்றார்.

இந்தியாவில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் விநாயகர் சதுர்த்தி, தசரா மற்றும் தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகளின் போது சர்க்கரையின் தேவை வழக்கமாக அதிகரிக்கும். இக்காலக்கட்டத்தில் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் தின்பண்டங்களின் நுகர்வு அதிகமாக இருக்கும்.

சர்க்கரைக்குப் பற்றாக்குறை ஏதேனும் இருந்தால் அது செயற்கையானது என்றும், பதுக்கல் மற்றும் சட்டவிரோத வணிகத்தால்தான் இது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சிர்கான்கர் தெரிவித்தார். சந்தையில் நிலவும் கவலையைக் குறைக்கும் நோக்கத்துடன்தான் 10 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

செப்டம்பர் 30-ஆம் தேதி நிறைவடையும் சந்தைப்படுத்தல் ஆண்டில் இந்தியா 2.79 கோடி டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது ஆண்டுக்கு 2.8 கோடி முதல் 2.85 கோடி டன் என்ற அளவிலான நுகர்வைக் காட்டிலும் சற்று குறைவுதான் என்றாலும், கடந்த ஆண்டின் 2.61 கோடி டன் உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகும்.

சர்க்கரை ஆலைகள் சுமார் 30 லட்சம் டன் சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்குத் திருப்பிவிட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் சுமார் 8 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அரசு ஒட்டுமொத்தமாக 20 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்திருந்தது.

இந்தியா தனது புதிய சந்தைப்படுத்தல் ஆண்டை சுமார் 35 லட்சம் டன் தொடக்க இருப்புடன் தொடங்கவுள்ளது என்று அவர் தெரிவித்தார்; இது ஒரு வருடத்துக்கு முன்பு இருந்த 50 லட்சம் டன் இருப்பைக் காட்டிலும் குறைவானது ஆகும்.

எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக எழுப்பி வந்தாலும், இதுவரை அரசாங்கத்தால் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

எத்தனால் தயாரிப்பதற்காகச் சர்க்கரை திருப்பிவிடப்பட்டதே விலை அதிரிப்பதற்கு முக்கியக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மறுபுறம், பண்டிகைக்கால பருவம் தொடங்குவதற்கு முன்பே பெரிய வணிகர்கள் சர்க்கரை விலையைச் செயற்கையாக உயர்த்திவிட்டதாக விவசாய அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

தங்கள் தரப்பு விளக்கத்தில், நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததை விடக் குறைவு, பண்டிகைகளுக்கு முன்பு தேவை அதிகரிப்பு, சீரற்ற வானிலையால் கரும்புப் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம், உலகளாவிய அளவில் சர்க்கரை விநியோகம் குறைந்ததுடன் சட்ட விரோத வணிகம் மற்றும் பதுக்கல் ஆகியவையே சர்க்கரை விலை உயர்வுக்குப் பின்னால் உள்ள பல்வேறு காரணங்கள் என்று அரசாங்கம் கருதுகிறது.

இந்தாண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை 10 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி நாடு முழுவதும் சர்க்கரையின் சராசரி சில்லறை விலை கிலோவுக்கு 46.30 ரூபாயாக இருந்தது. ஆனால், ஆகஸ்ட் 23ஆம் தேதி இது அதிகரித்து கிலோவுக்கு 62.47 ரூபாயாக உயர்ந்தது; அதாவது ஒரே ஆண்டில் 34.92 சதவிகிதம் விலை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி சர்க்கரையின் விலை கிலோ 48.62 ரூபாயாக இருந்தது. அதாவது வெறும் 30 நாட்களில் விலை 28.49 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே ஆண்டில் சர்க்கரையின் விலை 40 முதல் 50 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த பெரிய பிரசாரம்

சுமார் ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக, 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையைச் சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுமார் ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக, 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையைச் சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.

எத்தனால் கலப்புத் திட்டத்தினால் தான் சர்க்கரையின் விலை அதிகரித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கரும்பினை எத்தனால் உற்பத்திக்குத் திருப்பிவிட்டதன் காரணமாகச் சர்க்கரை உற்பத்தி குறைந்துவிட்டதாகவும், இதனால் வெறும் 17 நாட்களுக்குள் சர்க்கரையின் விலை கிலோவுக்கு 20 ரூபாய் வரை உயர்ந்துவிட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இ20 (E20) கொள்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நுகர்வோருக்கு எத்தனால் கலக்கப்படாத பெட்ரோலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். நரேந்திர மோதி அரசின் தற்பெருமை மிக்க முடிவுகளால், மக்கள் விலை உயர்ந்த உணவுப் பொருட்கள் மற்றும் செலவு மிக்க பயணம் ஆகிய இரண்டுக்காகவும் சேர்த்து விலை கொடுக்க வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நுகர்வோருக்குத் தடையற்ற சர்க்கரை விநியோகத்தையும் விலைக் கட்டுப்பாட்டையும் உறுதி செய்யப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்" தெரிவித்தது.

சமீபத்தில் சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்குச் சர்க்கரை திருப்பிவிடப்பட்டதே காரணம் என்று குற்றம் சாட்டுவது முற்றிலும் சரியல்ல என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், "சர்க்கரையின் சமீபத்திய விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்கான சர்க்கரைத் திருப்பல்தான் காரணம் என்று கூறுவது தவறு. உண்மையில், எத்தனால் தயாரிப்புக்காகத் திருப்பிவிடப்படும் சர்க்கரையின் பங்கு 2022-23 இல் சுமார் 12 சதவிகிதத்திலிருந்து 2025-26 இல் சுமார் 9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. மேலும், தற்போது நாட்டில் உற்பத்தியாகும் எத்தனாலில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு தானியங்களில் இருந்தும், குறிப்பாக மக்காச்சோளத்திலிருந்தும் பெறப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலையும் நோய்களும் கரும்புப் பயிரைப் பாதித்துள்ளனவா?

இந்தியாவில் சர்க்கரை நீண்ட காலமாகவே அரசியல் ரீதியாக ஒரு உணர்வுபூர்வமான பொருளாக இருந்து வருகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் சர்க்கரை நீண்ட காலமாகவே அரசியல் ரீதியாக ஒரு உணர்வுபூர்வமான பொருளாக இருந்து வருகிறது

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) கீழ் இயங்கும், லக்னௌவைத் தளமாகக் கொண்ட இந்தியக் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.என். சுஷில், பிபிசி ஹிந்தியிடம், கரும்பு உற்பத்தி குறையவில்லை, மாறாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.

எஸ்.என். சுஷில் கூறுகையில், "இந்திய அரசின் மூன்றாவது மதிப்பீட்டின்படி, கரும்பு உற்பத்தி 500.06 மில்லியன் டன்களை எட்டியுள்ளது. இதில், 287.25 மில்லியன் டன்கள் அரவை செய்யப்பட்டுள்ளன. கரும்பு உற்பத்தியைப் பொறுத்தவரை, அது நன்றாக உள்ளது," என்றார்.

கடந்த ஆண்டு மதிப்பீட்டைப் பார்த்தால், அது 454.61 மில்லியன் டன்களாக இருந்தது. இந்த ஆண்டு அது 500 மில்லியன் டன்களாக உள்ளது. கரும்பு உற்பத்தி போதுமானதாக இருக்கிறது, உண்மையில் இது ஒரு சாதனை அளவாகும். ஐஎஸ்எம்ஏ (ISMA - இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிவாயு உற்பத்தியாளர்கள் சங்கம்) மற்றும் NC கூட்டுறவு கூட்டமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, 287.24 மில்லியன் டன்கள் கரும்பு அரைக்கப்பட்டுள்ளது. அரைத்தல் என்பது கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

எஸ்.என். சுஷில் மேலும் கூறுகையில், "இந்தியாவில் சர்க்கரையின் நுகர்வு அதிகரித்து வருகிறது. சர்க்கரை நுகர்வு குறித்துப் பொதுமக்களிடம் சிறிது விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அதனால்தான் நுகர்வு அதிகரித்துள்ளதாக நான் நினைக்கிறேன். நமக்குச் சர்க்கரையை அதிகமாக உண்ணும் பழக்கம் உள்ளது. குறிப்பாக இதனால்தான் பண்டிகைக் காலங்களில் தேவை அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைகளின் போது சர்க்கரையின் தேவை அதிகரித்து, அது விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பருவத்தில் விவசாயிகளுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக டீசல் மற்றும் உரங்களின் விலை உயர்ந்திருப்பது, இடுபொருள் செலவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது."

"கரும்பில் 'சிவப்பு அழுகல் நோய்' பற்றிப் பேசப்படுகிறது. ஆனால் சிவப்பு அழுகல் நோய் அவ்வளவு பெரிய பிரச்னையல்ல. எங்களது '0238' என்ற ஒரு கரும்பு ரகம் 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 85 சதவிகிதப் பரப்பளவில் பயிரிடப்படத் தொடங்கியது. கடந்த நான்கு-ஐந்து ஆண்டுகளில் அதில் சிவப்பு அழுகல் நோய் தாக்கியது. இவை அறிவியலின் தோல்வி அல்ல; நோய்க்கிருமியின் புதிய திரிபு (Strain) ஒன்று உருவாகியுள்ளது. அதன் புதிய ரகம் 'CF13' ஆகும். 'CF13' வந்ததன் காரணமாக அந்த ரகம் சிவப்பு அழுகல் நோய்க்கு எளிதில் பாதிப்புக்குள்ளாகும் தன்மையைப் பெற்றது. பின்னர் அந்த ரகத்தை மாற்ற வேண்டிய அவசியம் எழுந்தது."

"இப்போது அந்த ரகத்தின் உற்பத்தி எல்லா இடங்களிலும் குறைக்கப்பட்டுவிட்டது. அது இப்போது விதைச் சங்கிலியிலும் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் அதன் பரப்பளவு 85 சதவிகிதத்திலிருந்து 29 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. விவசாயிகள் மெல்ல மெல்ல அந்த ரகத்தைக் கைவிட்டுவிட்டனர். இப்போது மற்ற புதிய ரகங்கள் வேகமாக அறிமுகமாகி வருகின்றன. எனவே உற்பத்தி நன்றாகவே உள்ளது. இரண்டாவது விஷயமாக பலவீனமான பருவமழை பற்றிக் கூறப்படுகிறது, ஆனால் அந்தப் பயிரோ இப்போதும் விவசாய நிலத்தில்தான் உள்ளது. எனவே, அதன் தாக்கத்தை இப்போதே மதிப்பிட முடியாது" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு