நேரலை, கேரளாவில் பட்டாசு சேமிப்பு கிடங்கு விபத்து – 13 பேர் பலி

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கேரளாவில் பட்டாசு சேமிப்பு கிடங்கில் விபத்து - 13 பேர் பலி

    கேரள பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் பலி – பிரதமர் மோதி இரங்கல்

    பட மூலாதாரம், ani

    கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பட்டாசு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

  2. 'இரான் உடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால் குண்டுவீச்சுக்கு வாய்ப்புள்ளது' – டிரம்ப்

    டிரம்ப்

    பட மூலாதாரம், Reuters

    “இரான் அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றால், குண்டுவீச்சு நடத்த வேண்டிய நிலை வரும் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    புதன்கிழமை முடிவடைய உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க விருப்பமில்லை என்றும் அவர் சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    “அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்காக, இரான் பிரதிநிதிகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய நிலை தவிர அதற்கு வேறு வழியில்லை,” என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    “இறுதியில் அமெரிக்கா ஒரு சிறந்த ஒப்பந்தத்தைப் பெறும் என எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  3. தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான பரப்புரை நிறைவு - தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது

    தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலுக்கான பரப்புரை நிறைவு - தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது
  4. கரூர் விவகாரம், எடப்பாடி பழனிசாமி, திமுக, பாஜக பற்றி விஜய் பேசியது என்ன?

    கரூர் விவகாரம், எடப்பாடி பழனிசாமி, திமுக, பாஜக பற்றி விஜய் பேசியது என்ன?

    பட மூலாதாரம், tvk

    ’திமுக, அதிமுக என ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்று சேர்ந்து விஜய் என்ற ஒற்றை மனிதனை எதிர்க்கிறார்கள்’ என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று ( ஏப்ரல் 21 ) மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் தமிழக வெற்றிகழகத்தின் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் சென்னை நந்தனத்தில் நடைபெற்றது.

    தேர்தல் பரப்புரையின் போது பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ”கரூரில் நான் காலதாமதமாக வந்ததுதான் விபத்துக்கு காரணம் என என் மேல் பழி போடும் முதலமைச்சர், 20 ஆண்டுகளாக கரூரில் போட்டியிட்ட ஒருவரை ஏன் கோவைக்கு அனுப்ப வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

    கரூரில் என்ன நடந்தது என மக்களுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ''பிரச்னை என்றால் விஜய் வெளியே வர மாட்டார் என சொல்லும் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தைத் தவிர தமிழகத்தின் வேறு சட்டமன்ற தொகுதிகளில் நிற்க முடியுமா” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    ''சொந்த தொகுதியில் தோற்று விடுவோம் என்று தவெக சின்னத்தை திருடியவர் எடப்பாடி பழனிசாமி” என அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    பாஜகவில் உள்ள ஒரு மத்திய அமைச்சர் தன்னை வெறும் நடிகன் என்று சொன்னதை குறிப்பிட்டு பேசிய விஜய், “ நான் நடிகன் தான், ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கவில்லை, ஆனால் அரசியலில் இருந்துகொண்டே பலர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்

    திமுக அதிமுக என ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து விஜய் என்ற ஒற்றை மனிதனை எதிர்ப்பதாக தெரிவித்த அவர், ''புதுச்சேரி போல அதிக வாக்குகளை தமிழ்நாட்டிலும் பதிவு செய்து தமிழக மக்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்றார்.

  5. 'இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக இரானிய குழு இஸ்லாமாபாத் செல்லவில்லை' - இரான் அரசு ஊடகம்

    'இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக இரானிய குழு இஸ்லாமாபாத் செல்லவில்லை' - இரான் அரசு ஊடகம்

    பட மூலாதாரம், Iranian Parliament Speaker Office/ Handout/Anadolu via Getty Images

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு குழுவும் இஸ்லாமாபாத்திற்குச் செல்லவில்லை என்று இரான் அரசு ஊடகம் தனது டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.

    இரான் குழுவின் பயணம் அல்லது அதன் தேதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் 'வதந்திகள்' என்று அந்த டெலிகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அத்துடன், இரானிய அதிகாரிகளின் நிலைப்பாட்டையும் அந்தப் பதிவு உறுதிப்படுத்தியுள்ளது. இதில் முந்தைய பேச்சுவார்த்தைக்குழுவில் இடம்பெற்றிருந்தவரும் இரான் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பகர் காலிபாஃபும் அடங்குவார்.

    அவர் ஏற்கனவே, "அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் இரான் ஏற்காது," என்று குறிப்பிட்டிருந்தார்.

    மற்றொருபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நாட்டு குழு பாகிஸ்தான் செல்லும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்

  6. ஆயுஷ் மாத்ரே எஞ்சிய போட்டிகளில் ஆட மாட்டார் - சிஎஸ்கே

    ஆயுஷ் மாத்ரே ஐபிஎல்லின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாட மாட்டார்

    பட மூலாதாரம், ANI

    சிஎஸ்கே அணியின் இளம் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே ஐபிஎல்லின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சிஎஸ்கே தனது எக்ஸ் பக்கத்தில், "ஏப்ரல் 18-ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்த போது ஆயுஷ் மாத்ரேவுக்கு இடது தொடையில்(hamstring) காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆயுஷ் மத்ரே 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார்" என்று பதிவிட்டுள்ளது.

    ஆயுஷ் மாத்ரேவின் காயம் குணமாக 6 முதல் 12 வாரங்கள் வரை ஆகலாம் என்றும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்றும் சிஎஸ்கே குறிப்பிட்டுள்ளது.

    நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்கு நிலையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டாப் ஆர்டரில் பலம் சேர்த்த ஆயுஷ் மாத்ரே விளையாடாதது அந்த அணிக்கு ஏற்பட்ட ஒரு பின்னடைவாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

  7. 'இஸ்ரேல், அமெரிக்காவை ஐஆர்ஜிசி சோர்வடைய செய்துள்ளது'

    ஐ.ஆர்.ஜி.சி இஸ்ரேலையும் அமெரிக்காவையும் முற்றிலுமாகச் சோர்வடையச் செய்துவிட்டது என்று மேஜர் ஜெனரல் அப்துல்லாஹி கூறினார்

    பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images

    படக்குறிப்பு, ஐ.ஆர்.ஜி.சி இஸ்ரேலையும் அமெரிக்காவையும் முற்றிலுமாகச் சோர்வடையச் செய்துவிட்டது என்று மேஜர் ஜெனரல் அப்துல்லாஹி கூறினார் (கோப்புப்படம்)

    இரானின் புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், இரானின் மிகப்பெரிய ராணுவத் தலைமையகத்தின் தளபதி ஒருவரின் அறிக்கையை டெலிகிராமில் பகிர்ந்துள்ளது.

    ஃபார்ஸின் கூற்றுப்படி, மேஜர் ஜெனரல் அப்துல்லாஹி, "இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஐஆர்ஜிசி சோர்வடையச் செய்துள்ளது, இது அவர்களை போர் நிறுத்தத்தைக் கோர நிர்பந்திக்கிறது" என்று பாரசீக மொழியில் குறிப்பிட்டுள்ளார்.

    "குறிப்பாக ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில், கள நிலவரம் குறித்து பொய்யான கதைகளை புனைவதற்கு அமெரிக்க அதிபரை நமது படைகள் அனுமதிக்காது," என்றும் அவர் கூறினார்.

    அமெரிக்காவுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைக்காக இரானிய தூதுக்குழு இஸ்லாமாபாத் செல்லுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    இரானில் அரசியல் பதற்றம் நிலவுவதாகவும், அங்கு கடும்போக்காளர்கள் ராஜீய ரீதியிலான நடவடிக்கைகளுக்கு பதிலாக மோதலைத் தேர்ந்தெடுக்க அழுத்தம் கொடுப்பதாகவும் பிபிசி தெற்காசிய செய்தியாளர் அஸாதே மோஷிரி குறிப்பிடுகிறார்.

  8. 'இன்று பாகிஸ்தானுக்கு புறப்படுகிறார் ஜே.டி. வான்ஸ்' - அமெரிக்க ஊடகங்கள் தகவல்

    ஜே.டி. வான்ஸ்

    பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images

    படக்குறிப்பு, ஜே.டி. வான்ஸ்

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானுக்குப் புறப்படுவார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    ஜே.டி. வான்ஸ் செவ்வாய்க்கிழமை காலைக்குள் அமெரிக்காவிலிருந்து புறப்படுவார் என்று மூன்று அமெரிக்க வட்டாரங்கள் கூறியதாக, ஆக்சியோஸ் என்ற அமெரிக்க செய்தி இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது.

    அமெரிக்க மற்றும் இரானிய பிரதிநிதிகளுக்கு இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை புதன்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது என்று சிஎன்என்-க்கு வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதேசமயம், இந்தப் பேச்சுவார்த்தையில் தனது பங்கேற்பு குறித்து இரான் தெளிவுபடுத்தவில்லை.

    சற்று முன்பு, வெள்ளை மாளிகை, அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுப்பிய ஒரு செய்தியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது.

    "டிரம்ப் நிர்வாகத்தின்போது ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டால், அது இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் எல்லா இடங்களிலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒரு பாதுகாப்பான சூழலுக்கு உத்தரவாதம் அளிக்கும்," என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

  9. 3 பில்லியன் டாலர் கடன்: பாகிஸ்தான் 2-வது தவணையாக 1 பில்லியன் டாலர் பெற்றது

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்

    பட மூலாதாரம், ANGELA WEISS/AFP via Getty Images

    படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்

    சௌதி அரேபியா அறிவித்த 3 பில்லியன் டாலர் கடனில், இரண்டாவது தவணையாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை பாகிஸ்தானின் மத்திய வங்கி பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் அரசு வங்கி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "சௌதி அரேபியாவின் நிதியமைச்சகத்திடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகை ஏப்ரல் 20, 2026 அன்று வங்கியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது," என்று பதிவிட்டுள்ளது.

    மேலும் அப்பதிவில், "சௌதி அரேபியாவுடன் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் இரண்டாவது தவணை இதுவாகும். முதல் தவணையாக 2 பில்லியன் டாலர்கள், ஏப்ரல் 15, 2026 அன்று வங்கியால் பெறப்பட்டது," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக வியாழக்கிழமை, சௌதி அரேபியாவிலிருந்து இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் தொகையைப் பெற்றதை பாகிஸ்தானின் மத்திய வங்கி உறுதிப்படுத்தியிருந்தது.

    பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பின் மீது நெருக்கடி நிலவி வரும் ஒரு காலகட்டத்தில், இத்தொகை வந்து சேர்ந்துள்ளது.

    சௌதி அரேபியா, பாகிஸ்தானுக்காக வழங்கியிருந்த 5 பில்லியன் டாலர் வைப்புத்தொகை வசதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர, கூடுதலாக 3 பில்லியன் டாலர்களைத் தனியாக வைப்புத்தொகையாகச் செலுத்துவதாகவும் சௌதி அரேபியா உறுதியளித்துள்ளது.

  10. அமெரிக்காவுடன் அடுத்தக்கட்ட பேச்சு குறித்து இரான் கூறுவது என்ன?

    இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்

    பட மூலாதாரம், ATTA KENARE/AFP via Getty Images

    படக்குறிப்பு, இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தைகளை ஏற்கப்போவதில்லை என்று இரான் கூறியுள்ளது.

    "தடையை விதித்து, போர் நிறுத்தத்தை மீறுவதன் மூலம், டிரம்ப் தனது கற்பனையில் இந்தப் பேச்சுவார்த்தை மேசையை ஒரு சரணடைதல் மேசையாக மாற்ற அல்லது போரை நியாயப்படுத்த விரும்புகிறார்," என்று இரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    "அச்சுறுத்தல்களின் நிழலில் நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஏற்க மாட்டோம். கடந்த இரண்டு வாரங்களாக, போர்க்களத்தில் புதிய காய்களை நகர்த்த நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று காலிபாஃப் கூறினார்.

    அமெரிக்காவுடனான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் இரானிய தூதுக்குழுவுக்கு காலிபாஃப் தலைமை தாங்கி, பாகிஸ்தானுக்கும் பயணம் மேற்கொண்டார்.

    பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தனது தூதுக்குழு பாகிஸ்தான் செல்லும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ஆனால், "நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை," என்று இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் கூறியிருந்தார்.

  11. 'இரான் அதிஉயர் தலைவர் நலமாக உள்ளார்' - இரான் முன்னாள் அமைச்சர்

    இரான் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி

    பட மூலாதாரம், Morteza Nikoubazl/NurPhoto via Getty Images

    படக்குறிப்பு, இரான் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி

    இரான் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி "முழுமையான உடல்நலத்துடன்" இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இரான் ஒளிபரப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் சுற்றுலா அமைச்சருமான எஸத்தோல்லா ஸர்காமி, தன் எக்ஸ் தளத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக காமனெயி புகைப்படங்களையோ அல்லது ஒலிப்பதிவுகளையோ தற்போது வெளியிடுவது பொருத்தமற்றது என்று "நம்பகமான வட்டாரங்கள்" கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    மொஜ்தபா காமனெயி உடல்நிலை குறித்து நீண்ட காலமாகவே கேள்வி எழுப்பி வருபவர்களைக் குறிப்பிடும் வகையில், தேவையற்ற வதந்திகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம் என்று ஸர்காமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மார்ச் 8-ஆம் தேதி மொஜ்தபா காமனெயி அதிஉயர் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து, அவர் இதுவரை பொதுவெளியில் உரையாற்றவில்லை; ஊடகங்களின் முன் தோன்றவில்லை; அவரது சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    எனினும், கடந்த 40 நாட்களில், அவரது பெயரில் பல எழுத்துப்பூர்வ அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 20-ஆம் தேதி, தனது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சுன்னி மதகுருமார்களுக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

  12. வணக்கம் நேயர்களே!

    இன்று (21-04-2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தகவல்களை சுருக்கமாக வழங்குவது நந்தினி வெள்ளைச்சாமி.

  13. இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் - வெளியுறவு அமைச்சகம் கூறுவது என்ன?

    இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் - வெளியுறவு அமைச்சகம் கூறுவது என்ன?

    பட மூலாதாரம், ANI

    ஹோர்மூஸ் நீரிணையில் இருந்து தனது கப்பல்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காக, இந்தியா இரான் மற்றும் பிற நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார்.

    ''ஹோர்மூஸ் நீரிணையில் இருந்து எங்கள் கப்பல்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, நாங்கள் ஈரான் மற்றும் பிற நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறோம்," என்று ரந்தீர் ஜெயஸ்வால் கூறினார்.

    சனிக்கிழமையன்று இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து அவர் கூறுகையில், "துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே, நாங்கள் இந்த விஷயத்தை வலுவாகக் கவனித்தோம். நாங்கள் இரான் தூதரை வரவழைத்து, வெளியுறவுச் செயலாளருடன் ஒரு சந்திப்பை நடத்தினோம்" என்றார்.

    ரந்தீர் ஜெயஸ்வாலின் கூற்றுப்படி, இந்தியா தனது கப்பல்களின் பாதுகாப்புக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது

  14. அமெரிக்காவால் தடுக்கப்பட்ட இரான் கப்பல் - சீனா கூறியது என்ன?

    அமெரிக்காவால் தடுக்கப்பட்ட இரான் கப்பல் - சீனா கூறியது என்ன?

    பட மூலாதாரம், US Central Command/X

    சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் குவோ ஜியாகுன் செய்தியாளர் சந்திப்பில், “ ஒரு கப்பலை அமெரிக்க ராணுவம் பலவந்தமாக தடுத்தது குறித்து சீனா கவலை தெரிவிக்கிறது” என்று கூறினார் என ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    இதற்கு முன்பு, இரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை சீன வெளியுறவு அமைச்சகம் “பொறுப்பற்றதும் ஆபத்தானதுமான நடவடிக்கை” என விவரித்திருந்தது.

  15. 'யுரேனியம் இருப்பை வெளியேற்றுவது அல்லது யாரிடமாவது ஒப்படைப்பது என்பது திட்டத்தில் இல்லை' - இரான்

    'யுரேனியம் இருப்பை வெளியேற்றுவது அல்லது யாரிடமாவது ஒப்படைப்பது என்பது திட்டத்தில் இல்லை' - இரான்

    பட மூலாதாரம், Getty Images

    நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை யாரிடமாவது ஒப்படைப்பது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை என இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாபி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

    பிபிசி பாரசீக சேவையின் தகவலின்படி, இஸ்மாயில் பகாபி கூறுகையில், "தற்போதைய அல்லது கடந்த கால பேச்சுவார்த்தைகளின் எந்தவொரு கட்டத்திலும், இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டிற்கும் மாற்றுவது குறித்த திட்டம் எதுவும் இல்லை." என்றார்.

    முன்னதாக, வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பைப் பெறுவதற்கும், பின்னர் அதை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கும் இரானுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும் என்று தெரிவித்திருந்தார்.

  16. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை - மக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை - மக்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்

    பட மூலாதாரம், NHK

    ஜப்பானில் 7.4 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.ஹெச்.கே தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் நாட்டின் சன்ரிகு கடற்கரையிலிருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் குறித்த செய்தி வெளியானதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு ஜப்பானியப் பிரதமர் சனாயே தகாய்ச்சி வலியுறுத்தியுள்ளார்.

    ஜப்பானிய அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். உள்ளூர் ஊடகத் தகவல்களின்படி, சுனாமியின் முதல் அலைகள் இவாடே மாகாணத்தை வந்தடைந்துள்ளன.

    அங்குள்ள மியாகோ துறைமுகத்தில் ஒரு அலையின் உயரம் 40 சென்டிமீட்டர் வரை பதிவாகியுள்ளது. ஜப்பானின் முக்கியத் தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஆமோரி மாகாணக் கடற்கரையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் சுனாமி அலைகள் தென்பட்டதாக என்.ஹெச்.கே தெரிவித்துள்ளது.

    ஹொக்கைடோ மற்றும் இவாடே மாகாணங்களின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என்று ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஓனகாவா அணுமின் நிலையத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் தீவிரமாகப் பரிசோதித்து வருகின்றனர்.

  17. 'பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் மோதி அரசு தோல்வி' - ஜெய்ராம் ரமேஷ்

    ஜெய்ராம் ரமேஷ்

    பட மூலாதாரம், Vishal Bhatnagar/NurPhoto via Getty Images

    படக்குறிப்பு, ஜெய்ராம் ரமேஷ்

    பாகிஸ்தானை பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் தனிமைப்படுத்துவதில் மோதி அரசின் உத்தி தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    “அமெரிக்கா-இரான் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை அவர்கள் (பாகிஸ்தான்) நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது,” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    “பிரதமர் நரேந்திர மோதியின் பிராந்திய மற்றும் உலகளாவிய உத்தி பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டது. அதற்கு பதிலாக, 2008 மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உருவாக்கிய பிம்பத்திற்கு முற்றிலும் மாறான புதிய பிம்பம் மற்றும் அடையாளத்தைப் பாகிஸ்தான் பெற்றுள்ளது.”

    ஜெய்ராம் ரமேஷ் தன் பதிவில், “பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரியான ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சுகளே பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பாகும், அவர் தற்போது அதிபர் டிரம்பின் விருப்பமான நபராக மாறியுள்ளார்,” என்றார்.

    மேலும், “இது மோதியின் வெளியுறவு கொள்கைக்கு பெரும் பின்னடைவாகும். இந்தியா தன்னுடைய ராஜீய உத்தி மற்றும் முறைகளை முற்றிலும் மாற்ற வேண்டும், இதை மோதியால் செய்ய முடியாது.” என்றார்.

    அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் முன்னேற்பாடுகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, இரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அஜிஸி, "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர இரான் முடிவு செய்துள்ளது, ஆனால் எத்தகைய விளைவானாலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றோ அல்லது மறுதரப்பின் ஒவ்வொரு நிபந்தனையையும் ஏற்க வேண்டும் என்றோ இதற்கு அர்த்தமில்லை" என்று கூறியுள்ளார்.

  18. அமெரிக்காவுடனான பேச இரான் குழு பாகிஸ்தான் செல்லுமா? எம்.பி பதில்

    இரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அஜிஸி
    படக்குறிப்பு, இரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அஜிஸி

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடருவோம் என்று இரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் அஜிஸி கூறினார்.

    பிபிசி உருதுவின்படி, இப்ராஹிம் அஜிஸி, "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர இரான் முடிவு செய்துள்ளது, ஆனால் எத்தகைய விளைவானாலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றோ அல்லது மறுதரப்பின் ஒவ்வொரு நிபந்தனையையும் ஏற்க வேண்டும் என்றோ இதற்கு அர்த்தமில்லை" என்று கூறினார்.

    அவரைப் பொறுத்தவரை, இரானுக்கு சில 'எல்லைகள்' உள்ளன என்றும் அவை மனதில் கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

    பேச்சுவார்த்தைக்காக இரானிய தூதுக்குழுவை இஸ்லாமாபாத்துக்கு அனுப்புவது குறித்த கேள்விக்கு, இப்ராஹிம் அஜிஸி, "அது, இரானுக்கு சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கின்றனவா இல்லையா என்பதைப் பொறுத்தது. இன்றோ நாளையோ நாங்கள் நிலைமையை மீண்டும் மதிப்பாய்வு செய்வோம். சமிக்ஞைகள் நன்றாக இருந்தால், நாங்கள் பேசத் தயாராக இருப்போம்" என்று கூறினார்.

    அவர் மேலும், "இரான் தேசிய நலன்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது மற்றும் நாட்டின் நலன்களுக்கும் பாதுகாப்புக்கும் தேவையான ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்கும்" என்று கூறினார்.

    இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச்சுவார்த்தைக்காக ஒரு அமெரிக்க தூதுக்குழு இஸ்லாமாபாத்துக்குச் செல்லும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்க தூதுக்குழுவுக்கு தலைமை தாங்குவார்.

  19. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சௌதி பயணம்

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சௌதி வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான்

    பட மூலாதாரம், X/KSAmofaEN

    படக்குறிப்பு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சௌதி வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான்

    இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சௌதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அவர் ஞாயிற்றுக்கிழமை சௌதி வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான், எரிசக்தி அமைச்சர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முசைத் பின் முகமது அல்-ஐபன் ஆகியோரைச் சந்தித்தார்.

    இந்தத் தகவலை இந்தியத் தூதரகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    பிடிஐ செய்திப்படி, இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், பிராந்திய நிலைமை மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அஜித் தோவல் ஞாயிற்றுக்கிழமை ரியாத் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை இந்தியத் தூதர் சுஹைல் கான் மற்றும் சௌதி அரேபியாவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சவுத் அல்-சாதி ஆகியோர் வரவேற்றனர்.

    பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ள நேரத்தில் தோவலின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

    முன்னதாக, ஏப்ரல் 11-12 தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

  20. அமெரிக்காவில் 8 குழந்தைகளை கொன்ற நபர் சுட்டுக் கொலை

    அமெரிக்கா

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷ்ரீவ்போர்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 1 முதல் 14 வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை ஒரு குடும்பத் தகராறு என காவல்துறை விவரித்துள்ளது.

    காவல்துறையின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று, தாக்குதல் நடத்தியவர் 10 பேரைச் சுட்டுவிட்டு ஒரு காரில் தப்பிச் சென்றார். பின்னர், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் அந்த சந்தேக நபர் கொல்லப்பட்டார்.

    காவல்துறை பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடவில்லை. இதில், 7 குழந்தைகள் அவரின் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

    ஷ்ரீவ்போர்ட் மேயரின் தகவல் தொடர்பு இயக்குனர் லீ ஆன் எவன்ஸ்கி, பிபிசியிடம், சந்தேகப்படும்படியான தாக்குதல் நடத்தியவர் ஷமார் எல்கின்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    "இது ஒரு துயரமான சம்பவம், ஒருவேளை ஷ்ரீவ்போர்டில் நாம் இதுவரை கண்டிராத மிகவும் துயரமான சம்பவம் இதுவாக இருக்கலாம்," என்று ஷ்ரீவ்போர்ட் மேயர் டாம் அர்சனோ ஞாயிற்றுக்கிழமை கூறினார்.