ஏஎம்சிஏ திட்டம்: இந்தியா அனுபவம் மிக்க அரசு நிறுவனத்தை விடுத்து தனியாரை நாடுவது ஏன்?

ஏஎம்சிஏ திட்டம், இந்தியா, ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

இந்தியா தனது சொந்த மேம்பட்ட போர் விமானத்தை உருவாக்கும் திட்டம் குறித்து மே 27 அன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் (AMCA) ஐந்து ப்ரோரோடைப் (மாதிரி வடிவங்கள்) உருவாக்கப்படும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ப்ரோடோடைப் என்பது, முழு அளவிலான உற்பத்தி தொடங்குவதற்கு முன் உருவாக்கப்பட்டு, சோதிக்கப்படும் ஒரு விமானத்தின் ஆரம்பக்கட்ட மாதிரி வடிவமாகும்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, அமைச்சகம் மூன்று தனியார் துறை நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது. அவை, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் (Tata Advanced Systems), எல்&டி-பெல்-டைனமாடிக் கூட்டமைப்பு (L&T-BEL-Dynamatic Consortium), பாரத் ஃபோர்ஜ்-பி.இ.எம்.எல்-டேட்டா பேட்டர்ன்ஸ் கூட்டமைப்பு (Bharat Forge-BEML-Data Patterns Consortium) ஆகியவையாகும்.

இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் மேம்பட்ட போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க முன்வந்திருந்தன. அமெரிக்காவில் இருந்து எஃப்-35, ரஷ்யாவில் இருந்து சுகோய்-57 ஆகிய விமானங்களை வழங்க முன்வந்திருந்தன. இருப்பினும், இந்தியா அடுத்த தலைமுறை போர் விமானத்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் முயற்சியில் முன்னோக்கிச் செல்ல முடிவெடுத்துள்ளது.

இந்திய அரசுக்குச் சொந்தமான விமான உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இத்திட்டத்தின் தற்போதைய கட்டத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை என்பது இந்த அறிவிப்பின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமானது (ஏம்.எம்.சி.ஏ) நடுத்தர மற்றும் பல்திறனுடைய போர் விமானமாக இருக்கும். இது இரண்டு என்ஜின்களையும், 'ஸ்டெல்த்' (stealth) எனப்படும் எதிரி ரேடார் அமைப்புகளுக்கு புலப்படாதவாறு ஊடுருவும் திறன்களையும் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்திய விமானப் படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப இந்த விமானம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஏ.எம்.சி.ஏ முன்மாதிரிகளை உருவாக்குவதற்காக அரசாங்கம் சுமார் 1.56 பில்லியன் டாலர் (சுமார் 13,390 கோடி ரூபாய்) நிதியை ஒதுக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, இந்த முன்மாதிரி விமானங்களை உருவாக்குவதற்கும் சோதிப்பதற்கும் ஆகும் முழுச் செலவையும் இந்திய அரசே ஏற்கும்.

ஏஎம்சிஏ திட்டம், இந்தியா, ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏஎம்சிஏ திட்டம், இந்தியாவின் மிகவும் லட்சியமிக்க உள்நாட்டு வான் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது

அனுபவம் மிக்க அரசு நிறுவனத்தை விடுத்து தனியாரை நாடுவது ஏன்?

விமானத் திட்டங்களில் ஏற்படும் தாமதங்கள், விமானங்களை குறித்த நேரத்தில் விநியோகிக்கத் தவறியது ஆகிய காரணங்களால், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடட் நிறுவனத்தின் மீது இந்திய விமானப் படை முன்னரே தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. இத்தகைய தாமதங்கள் விமானப் படைக்குப் பெரும் கவலையாக இருந்து வருகின்றன.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஏ.எம்.சி.ஏ திட்டத்திற்காக தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்யும் முடிவு என்பது முற்றிலும் புதிதான ஒன்றல்ல என்று பாதுகாப்புத் துறை நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான ராகுல் பேடி கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, கடந்த காலத்திலும் இதேபோன்ற அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கிய ராகுல் பேடி, "2008-09ஆம் ஆண்டில், ஏ.கே.அந்தோணி பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது, இந்தியா 'ஏர்பஸ்' நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்தக் காலகட்டத்தில், ஒப்பந்த ஏல செயல்முறையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் இடம்பெறாது என்று ஏ.கே.அந்தோணி தெளிவாகக் கூறியிருந்தார்.

அந்த ஒப்பந்த ஏலத்தில் தன்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடட் நிறுவனம் கடுமையாக வலியுறுத்தியது. ஆனால், இந்தத் திட்டத்தைத் தனியார் நிறுவனத்திற்கே வழங்க வேண்டுமென அரசு முடிவு செய்தது" என்று குறிப்பிட்டார்.

இதன் விளைவாக, சி-295 ரக விமானத் திட்டத்திற்காக 'ஏர்பஸ்' நிறுவனம் 'டாடா' நிறுவனத்துடன் கைகோர்த்தது. இன்று, இந்தத் திட்டத்திற்கான உற்பத்தி ஆலையை டாடா நிறுவனம் பரோடாவில் இயக்கி வருகிறது.

ஹிந்துஸ்தான் நிறுவனம் ஏற்கெனவே பல திட்டங்களையும் ஒப்பந்தங்களையும் கையாண்டு வருவதாகவும், அதன் திறனுக்கு மீறிய அளவிலேயே அந்தத் திட்டங்கள் அமைந்து இருக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த 20 முதல் 40 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் விநியோகச் செயல்பாடு பெரும்பாலும் மந்தமாகவும், திருப்தியற்ற வகையிலும் இருந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இந்தக் காரணத்தால், ஏ.எம்.சி.ஏ திட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அதிகப்படியான பொறுப்புகளை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள், 'மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (ஏ.எம்.சி.ஏ)' திட்டத்தின் முதல் மாதிரி விமானத்தை உருவாக்கிச் சமர்ப்பிப்பதற்கு 30 மாத காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கான உற்பத்தி வசதி, ஆந்திர பிரதேசத்தின் புட்டபர்த்தியில் அமைந்துள்ள 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் அமைக்கப்படவுள்ளது. முழு அளவிலான உற்பத்தி தொடங்குவதற்கு முன்னதாக, விமானத்தின் உறுதித்தன்மை, வடிவமைப்பு ஆகியவற்றைச் சோதிப்பதற்காகப் பயன்படும் ஒரு 'கட்டமைப்பு சோதனை விமானம்' (structural test aircraft), பறப்பதற்குத் தகுதியான ஐந்து ஏ.எம்.சி.ஏ மாதிரி விமானங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கவே இந்த உற்பத்தி வசதி பயன்படுத்தப்படவுள்ளது.

ஏஎம்சிஏ திட்டம், இந்தியா, ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானம் சுகோய் சு-57

ரேடாரில் புலப்படாத நவீன போர் விமானம்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான ஒரு செய்தியின்படி, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் (AMCA), நவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட மறைந்திருந்து தாக்கும் அம்சங்களைக் கொண்ட, 25 டன் எடையுள்ள, இரட்டை என்ஜின் கொண்ட ஒரு போர் விமானமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

எளிதாகக் கூறுவதெனில், எதிரி ரேடார் அமைப்புகளுக்கு எளிதில் புலப்படாதவாறு இருக்கும் வகையிலான ஒரு போர் விமானமாக ஏ.எம்.சி.ஏ வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதன் மின்காந்தத் தடயத்தைக் குறைக்கும் வகையில் அதன் வடிவமும் தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால், ரேடார் மற்றும் பிற கண்காணிப்பு அமைப்புகளுக்கு அது எளிதில் புலப்படாது.

இந்த விமானத்தில் மேம்பட்ட உணர்விகளும் நவீன ஆயுத அமைப்புகளும் பொருத்தப்படும். இந்தத் தொழில்நுட்பங்கள், போரின் போது எதிரி விமானங்கள், ஏவுகணைகள் அல்லது இலக்குகளை விமானிகள் எளிதாகக் கண்டறிந்து, திறம்படத் தாக்குவதற்கு உதவும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, ஏ.எம்.சி.ஏ விமானத்தில் சுமார் 6.5 டன் எரிபொருளைக் கொண்டு செல்லக்கூடிய ஓர் உள் எரிபொருள் தொட்டி இருக்கும். வெளிப்புற எரிபொருள் தொட்டிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக விமானத்தின் உள்ளேயே எரிபொருளைக் கொண்டு செல்வது, அதன் மறைந்திருந்து தாக்கும் திறனை பராமரிக்க உதவுகிறது மற்றும் எரிபொருள் நிரப்புவதற்கென நிற்காமல் நீண்ட தூரம் பறக்க இது வழிவகுக்கிறது.

இந்த விமானத்தில் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களுக்காக ஒரு பிரத்யேக உள் ஆயுதக் கிடங்கும் இருக்கும். ஆயுதங்களை இறக்கைகளுக்குக் கீழே தொங்க விடுவதற்குப் பதிலாக, விமானத்தின் உள்ளேயே வைத்திருப்பது, ரேடாரின் பார்வையில் படுவதைக் குறைத்து, மறைந்திருந்து தாக்கும் செயல்திறனை (Stealth) மேம்படுத்த உதவுகிறது.

தற்போதைய திட்டங்களின்படி, ஏ.எம்.சி.ஏ மார்க்-1 என்று அழைக்கப்படும் இந்த விமானத்தின் முதல் பதிப்பு, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட GE-414 என்ஜின்களால் இயக்கப்படும். இந்த என்ஜின்கள் 90kN திறன் கொண்டவை. இவை விமானத்தின் செயல்திறன் மற்றும் போர்த் திறன்களுக்குத் தேவையான உந்துவிசையை வழங்கும்.

எதிர்கால ஏ.எம்.சி.எ மார்க்-2 பதிப்புக்காக, இந்தியா இன்னும் சக்தி வாய்ந்த என்ஜின் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய என்ஜின், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான கேஸ் டர்பைன் ரிசர்ச் எஸ்டாப்ளிஷ்மென்ட் (GTRE) மூலம் ஒரு வெளிநாட்டுப் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.எம்.சி.ஏ-வின் முதல் பதிப்பு இறக்குமதி செய்யப்பட்ட என்ஜின்களை பயன்படுத்தும் அதே வேளையில், அடுத்தடுத்த பதிப்புகளில் கணிசமான இந்திய பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மிகவும் மேம்பட்ட என்ஜின் இடம்பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது போர் விமானத் தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு அடைவதற்கு வழிவகுக்கும்.

ஏஎம்சிஏ திட்டம், இந்தியா, ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம்

'என்ஜின்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும்'

பாதுகாப்புத் துறை நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான ராகுல் பேடி, எந்தவொரு விமானத்திற்கும் அதன் என்ஜினே மிக முக்கியமான பாகம் என்கிறார்.

அவரது கூற்றுப்படி, "எந்தவொரு விமானத்திற்கும் என்ஜினே மிக முக்கியமான பாகம். ஒரு விமானத்தின் வடிவமைப்புகூட அந்த என்ஜினை மையமாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்தியாவால் இதுவரை தனக்கென ஒரு மேம்பட்ட விமான என்ஜினை உருவாக்கிக் கொள்ள இயலவில்லை."

இந்தச் சவாலை ஓர் உதாரணத்தின் மூலம் மேலும் விளக்கிய அவர், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நானோ காரில் பயன்படுத்தப்பட்ட என்ஜின்கூட ஆஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதே. நம் நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதும், அவை வளர்ச்சியடைய வேண்டும் என்பதும் உண்மையே. ஆனால் பல ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட, தேஜஸ் போர் விமானத் திட்டம், ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட முழுமையான முதிர்ச்சி நிலையை இன்னும் எட்டவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை," என்று தெரிவித்தார்.

ஏம்சிஏ (AMCA) திட்டம், இந்தியாவின் மிகவும் லட்சியமிக்க திட்டங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், நவீன ஸ்டெல்த் (ரேடார்களுக்கு புலப்படாத) போர் விமானம் ஒன்றை இந்தியாவிலேயே உருவாக்குவதும், மேம்பட்ட ராணுவ விமானங்களைச் சுயமாக வடிவமைத்துத் தயாரிக்கும் திறனை வலுப்படுத்துவதுமே ஆகும்.

மே 15 அன்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திர பிரதெச முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு ஆகியோர் இணைந்து, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் 15,803 கோடி ரூபாய் மதிப்பில் ஏ.எம்.சி.ஏ உள்கட்டமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

கடந்த ஆண்டு, ஏ.எம்.சி.ஏ திட்டம் செயல்படுத்தப்படவுள்ள கட்டமைப்பு வடிவத்திற்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார். இந்த மாதிரியின் கீழ், விமான மேம்பாட்டுப் பணிகளுக்குப் பொறுப்பான 'விண்வெளி மேம்பாட்டு முகமை' (ADA), தொழில் துறை பங்காளிகளுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி, இந்தத் திட்டத்தை முன்னின்று வழிநடத்தும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பு, தனியார் துறை, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்கிறது. இதில் இவ்விரு துறைகளும் இணைந்து பணியாற்ற இருப்பதால், இந்த ஏற்பாட்டை நிபுணர்கள் ஒரு 'பொது-தனியார் கூட்டாண்மை' மாதிரியை ஒத்ததாக விவரிக்கின்றனர்.

ஏஎம்சிஏ திட்டம், இந்தியா, ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் எந்த வகையில் வேறுபடுகின்றன?

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள், தற்போது உலகில் கிடைக்கும் மிகவும் மேம்பட்ட, நவீன போர் விமானங்களாகக் கருதப்படுகின்றன.

அவற்றின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஸ்டெல்த் தொழில்நுட்பம். எளிதாகக் கூறுவதெனில், எதிரி ரேடார் அமைப்புகள் இந்த விமானங்களை கண்டறிவதையும் கண்காணிப்பதையும் கடினமாக்க இந்த ஸ்டெல்த் தொழில்நுட்பம் உதவுகிறது. இது விமானங்கள் எளிதில் எதிரிகளின் கவனத்தை ஈர்க்காமல், போர் முனையில் மிகவும் திறம்படச் செயல்பட அனுமதிக்கிறது.

இந்த விமானங்களுக்கு சக்தி வாய்ந்த என்ஜின்கள் கூடுதல் உந்துவிசையை வழங்கும் என்பது இதிலுள்ள மற்றுமொரு முக்கிய நன்மை. அதோடு, அதிக அளவு எரிபொருளைப் பயன்படுத்தக் கூடிய ஆஃப்டர்பர்னரை பயன்படுத்தாமல், ஒலியின் வேகத்தைவிட வேகமான சூப்பர்சோனிக் வேகத்தில் இதனால் பறக்க முடியும். இந்தத் திறன், எரிபொருளை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதுடன், விமானங்கள் வேகமாகப் பயணிக்கவும் உதவுகிறது.

ஐந்தாம் தலைமுறை ஜெட் விமானங்கள் மிகவும் மேம்பட்ட ஏவியோனிக்ஸ் அமைப்புகள், சென்சார்கள், கணினி வலையமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. போரின்போது, இந்த அமைப்பு போர்க்களத்தில் இருந்து தகவல்களைச் சேகரித்துச் செயலாக்கி, அவற்றை நிகழ்நேரத்தில் விமானிக்கு வழங்குகின்றன.

இது, தங்களைச் சுற்றி நடப்பனவற்றைப் பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தை விமானிக்கு அளித்து, பணிகளின்போது வேகமான மற்றும் சிறந்த முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுகிறது.

பத்திரிகையாளரும் ஓய்வுபெற்ற கர்னலுமான அஜய் சுக்லா, இந்தியா இதற்கு முன் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை உருவாக்கியதில்லை என்றாலும், போர் விமானங்களை உருவாக்குவதில் நாட்டிற்கு ஏற்கெனவே அனுபவம் உள்ளது என்கிறார்.

சுக்லாவின் கூற்றுப்படி, "இந்தியா இதற்கு முன் இதுபோன்ற எதையும் உருவாக்கியிருக்காமல் இருக்கலாம். ஆனால் நாம் தேஜஸ் மார்க்-1, தேஜஸ் மார்க்-2 விமானங்களை நாட்டிலேயே வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம்."

மேலும் பேசிய அவர், "தேஜஸ் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தியா இப்போது மிகவும் மேம்பட்ட விமானத்தை நோக்கி நகர்கிறது என்ற நிலையில், அதைச் சாத்தியப்படுத்த முடியாது எனக் கூறுவதற்கு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை," என்றார்.

அதேநேரம், இதில் சவால்கள் இருப்பதாகவும் சுகால் ஒப்புக்கொள்கிறார். அதோடு, "தேஜஸ் விமானத்தை உருவாக்க நீண்ட காலம் எடுத்தது என்பது உண்மைதான். அது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களில் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த விமானத்தை நாமே வெற்றிகரமாக உருவாக்கினோம் என்பதுதான் முக்கியமான விஷயம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகெங்கிலும் போர் விமான மேம்பாடு என்பது ஒரு நீண்ட கால செயல்முறை என்று சுக்லா சுட்டிக்காட்டுகிறார். அவர் கூறுவதன்படி, "இந்தத் திட்டம் 1983இல் தொடங்கியது. 1992இல் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது. முதல் மாதிரி விமானம் 2001இல் தயாரிக்கப்பட்டது. இதற்கு நீண்டகாலம் பிடித்தது. ஆனால் இதுபோன்ற விமானங்களை உருவாக்கும் ஒவ்வொரு நாட்டிலும் போர் விமான மேம்பாட்டுக்கு நேரம் எடுக்கும்."

பாதுகாப்பு நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான ராகுல் பேடியும், இந்தியா தனது திறன்களைத் தனியார் துறையில் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கூறுகிறார்.

ராகுல் பேடியின் கூற்றுப்படி, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஸ்வீடன் போன்ற நாடுகளில் மேம்பட்ட போர் விமானங்களைத் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் இருப்பதற்கு, அந்த நாடுகள் தங்கள் தனியார் துறைகளில் நிபுணத்துவம், தொழில்நுட்பம், தொழில்துறை திறன்களை வளர்ப்பதில் பல தசாப்தங்களைச் செலவிட்டுள்ளதே முக்கியக் காரணம்.

இந்தியாவும் தனது தனியார் துறையில் இதேபோன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென பேடி வலியுறுத்துகிறார். இந்தச் செயல்முறை காலம் எடுப்பதாக இருந்தாலும், எதிர்காலத்தில் மேம்பட்ட ராணுவ விமானங்களை வடிவமைப்பதிலும் தயாரிப்பதிலும் இந்தியா அதிகளவில் தன்னிறைவு அடைய விரும்பினால், அத்தகைய நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது.

ஏஎம்சிஏ திட்டம், இந்தியா, ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் தற்போது ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்கள் ஏதுமில்லை. இந்திய விமானப் படை தற்போது முதன்மையாக நான்காம் மற்றும் 4.5ஆம் தலைமுறைப் போர் விமானங்களையே சார்ந்துள்ளது

சீனா முந்துகிறதா?

தற்போதைய நிலையில், இந்திய விமானப் படையிடம் எந்தவொரு ஐந்தாம் தலைமுறை போர் விமானமும் இல்லை. ஏஎம்சிஏ (AMCA) திட்டத்தில் பணியாற்றி வந்தாலும், அந்த விமானம் இன்னும் உருவாக்க நிலையிலேயே உள்ளது. அது இன்னும் முழுமையாகச் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.

தற்போதைக்கு, இந்திய விமானப் படை தனது போர் நடவடிக்கைகளுக்கு முக்கியமாக நான்காம் தலைமுறை மற்றும் 4.5ஆம் தலைமுறை போர் விமானங்களையே சார்ந்துள்ளது. சுகோய்-30 மார்க்-1, ரஃபேல், ஹெச்.ஏ.எல் தேஹஸ், மிக்-29, மிராஜ் 2000, SEPECAT ஜாகுவார் போன்ற போர் விமானங்கள் இதில் அடங்கும்.

சீனா ஏற்கெனவே மேம்பட்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களைத் தனது ராணுவத்தில் இணைத்துவிட்டது. அடுத்தக்கட்டமாக ஆறாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்குவதிலும் சீனா வெகுதூரம் முன்னேறிச் சென்றுள்ளது. ஷெங்டு ஜெ-36, ஷென்யாங் ஜெ-50 உள்ளிட்ட பல ஆய்வாளர்களால் 'ஆறாம் தலைமுறை போர் விமானக் கோட்பாடுகள்' என்று விவரிக்கப்படும் விமானங்களின் ப்ரோடோடைப்களையும் சீனா வெளியிட்டுள்ளது.

வரவுள்ள ஆண்டுகளில் பாகிஸ்தான் தனது விமானப் படையில் சீனாவின் 'ஷென்யாங் ஜெ-35ஏ' என்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தைச் சேர்க்கக் கூடும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஏஎம்சிஏ திட்டம், இந்தியா, ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சுகோய் போர் விமானம்

வாங்குவதா? உள்நாட்டிலேயே தயாரிப்பதா?

இந்தச் சூழலில், இந்தியா ஒரு மாறுபட்ட பாதையைத் தேர்வு செய்துள்ளது. ரஷ்யா அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து அதிநவீன 'ஸ்டெல்த்' போர் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக, 'ஏம்.எம்.சி.ஏ' திட்டத்தின் மூலம் தனது சொந்த ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 2035ஆம் ஆண்டுக்குள் இந்த விமானத்தை முழு தயார் நிலைக்குக் கொண்டு வருவதே இந்தியாவின் இலக்கு.

உலக அரசியல் மற்றும் பாதுகாப்புச் சுழல் நாளுக்கு நாள் அதிக நிச்சயமற்ற தன்மைக்கு மாறிவரும் இந்தக் காலகட்டத்தில் வெளிநாடுகளிடம் இருந்து ஏற்கெனவே, செயல்திறன் நிரூபிக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக, தனது சொந்த போர் விமானத் திட்டத்திற்காகக் காத்திருக்கும் அளவுக்கு இந்தியா திறன் மிக்கதாக இருக்கிறதா?

பத்திரிகையாளரும் ஓய்வுபெற்ற கர்னலுமான அஜய் சுக்லா, வெளிநாட்டு கொள்முதல்களை மட்டுமே சார்ந்திருப்பது ஒரு நீண்டகால தீர்வாக அமையாது எனக் கருதுகிறார்.

அவரது கூற்றுப்படி, "நாம் தொடர்ந்து இதே மனநிலையில் சிந்தித்து, பிற நாடுகளிடம் இருந்து விமானங்களை வாங்கிக் கொண்டே இருந்தால், நம்முடைய சொந்த விமானத் தயாரிப்புத் துறையை வளர்த்தெடுப்பது மிகவும் கடினமாகிவிடும்."

மேலும் பேசிய அவர், "இந்தப் பிரச்னைக்கு நாமே ஒரு தீர்வைக் காண வேண்டும். உள்நாட்டிலேயே தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவால் முன்னேற முடியும். இல்லையெனில், என்றென்றும் இறக்குமதிகளையே சார்ந்திருக்கும் நிலை தொடரும்," என்றார்.

பாதுகாப்பு நிபுணரும் மூத்த பத்திரிகையாளருமான ராகுல் பேடியும், இந்தச் செயல்முறை கடினமானதாகவும் பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருந்தாலும், இந்தியா இந்தத் திறனை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறார்.

"லாக்ஹீட் மார்ட்டின், போயிங், டசால்ட் போன்ற பெரிய தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் ஏதோவொரு புள்ளியில் இருந்துதான் தங்கள் பயணத்தைத் தொடங்கின. அவை ஒரே இரவில் உருவாகிவிடவில்லை. இந்தியாவும் இப்போது அத்தகையதொரு பயணத்தையே தொடங்கியுள்ளது. ஏதோவொரு கட்டத்தில், இந்தியா தனக்கான சொந்தத் திறன்களை வளர்த்தெடுத்தே தீர வேண்டும்" என்கிறார் பேடி.

எனினும், இந்த இலக்கை அடைவதில், நேரம், பணம் ஆகிய இரண்டும் அதிக அளவில் தேவைப்படும் என்கிறார் பேடி.

உதாரணமாக, "தேஜஸ் திட்டம் 1983ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அது தற்போதைய நிலையை அடைவதற்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளது. இன்றும்கூட, அந்த விமானம் சுமார் 60% முதிர்ச்சி நிலையையே எட்டியுள்ளது."

முக்கியமான தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கு இந்தியா இன்றும் வெளிநாட்டு விநியோகஸ்தர்களையே பெருமளவில் சார்ந்திருப்பதாக பேடி மேலும் குறிப்பிடுகிறார். அவரது கூற்றுப்படி, "தேஜஸ் விமானத்தில் பயன்படுத்தப்படும் பாகங்களில் சுமார் 50% இறக்குமதி செய்யப்பட்டவையே. இந்த விமானத்திற்கான என்ஜினை கூட இந்தியாவால் சுயமாக உருவாக்கிக்கொள்ள இயலவில்லை. எனவே, பல வகைகளில் நாம் இன்றும் தொடக்க நிலையிலேயே இருக்கிறோம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு