You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஞ்சாபின் 'ஒரு கூட்டணி' மும்பையின் கனவை பறித்தது எப்படி?
மும்பை, பஞ்சாப் இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணி சார்பில் ரியான் ரிக்கெல்டன், குவின்டன் டி காக் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இரண்டு ஓவர்கள் முடிந்த நிலையில் அணியின் ஸ்கோர் 12 ஆக இருந்தபோது, 3வது ஓவரின் முதல் பந்தில் ரிக்கெல்டன் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் முதல் பந்திலேயே அவுட் ஆக, மும்பை அணி அதிர்ச்சியை எதிர்கொண்டது.
ஆனால் இதன்பிறகு அமைக்கப்பட்ட கூட்டணி மும்பை அணியின் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
நமன் திர் உடன் கூட்டணி சேர்ந்த குவின்டன் டி காக் ஒரு பிரமாண்ட பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்த இருவரும் 68 பந்துகளில் 122 ரன்கள் குவித்தனர்.
13.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 134 ஆக இருந்தபோது, நமன் திர் 31 பந்துகளில் 50 ரன்கள் குவித்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களிலும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், திலக் வர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும், மறுபக்கம் குவின்டன் டி காக் சதம் அடித்து அசத்தினார்.
அவர் 60 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதனால் தொடக்கத்தில் தடுமாற்றம் இருந்தபோதிலும் மும்பை அணி 195 ரன்களை குவித்தது.
பஞ்சாப் ஆட்டம் எப்படி?
அடுத்து ஆடிய பஞ்சாப் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
பிரியன்ஷ் ஆர்யா ஆரம்பத்தில் அதிரடி காட்டியபோதும், 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பிரப்சிம்ரன், கூப்பர் கோனோலி உடன் கூட்டணி சேர்ந்தபோதும், இந்த ஜோடியும் அதிக நேரம் நீடிக்கவில்லை. கூப்பர் கோனோலி 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு மும்பை அணிக்கு அமைந்தது போல பஞ்சாப் அணிக்கும் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் கிடைத்தது.
ஷ்ரேயாஸ் ஐயர், பிரப்சிம்ரன் கூட்டணி மிக அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியது. சிக்ஸர், பவுண்டரி என இருவரும் அனைத்து பக்கங்களிலும் ரன்களை குவித்தனர். இருவருமே அரைச்சதம் கடந்தனர்.
மும்பை அணி எவ்வளவோ முயன்றும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 66 பந்துகளில் 139 ரன்களை இந்த கூட்டணி குவித்தது.
இந்த நிலையில், 35 பந்துகளில் 66 ரன்களை எடுத்திருந்த ஷ்ரேயாஸ், ஷர்துல் தாகூர் பந்தில் அவுட் ஆனார்.
இறுதியாக இந்த கூட்டணியை மும்பை அணியால் பிரிக்க முடிந்தாலும், அதற்குள் பெரும்பாலான வேலை முடிந்திருந்தது. அதாவது ஷ்ரேயாஸ் அவுட் ஆகும்போது அணியின் ஸ்கோர் 184 ஆக இருந்தது.
அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனது பங்கிற்கு 4 பவுண்டரிகள் அடிக்க, பிரப்சிம்ரன் இறுதி வரை அவுட் ஆகாமல் 80 ரன்களை குவித்தார்.
இதன்மூலம் 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு