போருக்கு மத்தியில் பறிபோன பல லட்ச இரானியர்களின் வேலைகள் – அந்நாட்டு அரசே ஒரு காரணம் ஏன்?

    • எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடந்து வரும் போரின் பிற பாதிப்புகளைத் தவிர, இரானில் இணையக் கட்டுப்பாடுகளால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரானில் சுமார் 10 மில்லியன் மக்கள் தங்கள் பணிக்காக நிலையான இணைய இணைப்பையே நம்பியுள்ளனர்.

ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, இணையத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. சில சுயாதீன மதிப்பீடுகள் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் பொருளாதாரம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனுடன், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைகளுக்கும் பரவலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், நாட்டில் நிலவும் இணையக் கட்டுப்பாடுகள் குறித்து இரான் அரசுக்குள்ளேயே முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இரானின் மூத்த அமைச்சர்கள், இணையக் கட்டுப்பாடுகளால் குடிமக்களின் வேலைகள் பறிபோவது குறித்தும், அதன் சமூக மற்றும் பொருளாதார தாக்கம் குறித்தும் எச்சரித்துள்ளனர்.

இணைய வசதி வழங்கப்படுவதில் பாகுபாடு காட்டப்படுவதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயம் அரசின் மற்றொரு தரப்பு 'சிறப்புச் சூழ்நிலைகள்' காரணமாக இணைய வசதியை மீண்டும் தர முடியாது என்றும் வாதிடுகின்றனர்.

மக்கள் இந்தச் சூழலில் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

'பாகுபாடான' முறைக்கு எதிரான எச்சரிக்கை

இரானிய அதிகாரிகள் மற்றும் ஊடக செய்திகளின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரின் பொருளாதார தாக்கம் ஆழமடைந்து வருகிறது.

இதன் அழுத்தம் வேலைவாய்ப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் முக்கிய தொழில்துறைகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போதைய கவலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இணையத் தடங்கல் பற்றியது, இது இப்போது 50 நாட்களை கடந்து நீடிக்கிறது. மூத்த அதிகாரிகள் சமமான மற்றும் நியாயமான இணைய வசதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இரானின் அதிகாரப்பூர்வ அரசு தகவல் தளத்தின்படி, நாட்டின் முதல் துணை அதிபர் முகமது ரஸா ஆரிஃப் ஏப்ரல் 22 அன்று, இணைய வசதி என்பது ஒரு உலகளாவிய உரிமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அவர் எந்தவிதமான பாகுபாடு அல்லது பல அடுக்கு முறை இணைய சேவைக்கு எதிராகவும் எச்சரித்தார். அதோடு, போரின்போது நிர்வாகம் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு நிலையான தகவல் தொடர்பு மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

வெவ்வேறு புள்ளிவிவரங்கள் இதன் தாக்கம் ஏற்கெனவே தொழிலாளர் சந்தையில் தெரியத் தொடங்கிவிட்டதாகக் கூறுகின்றன.

'ஜாமாரன் நியூஸ்' இணையதளத்தின்படி, துணை தொழிலாளர் அமைச்சர் குலாம் ஹுசைன் முகமதி, போரின் காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், 20 லட்சம் மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலையின்மையை எதிர்கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன என்றார்.

40 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயின அல்லது பாதிக்கப்பட்டுள்ளன

சில இரானிய ஊடக மதிப்பீடுகள், பொருளாதார நஷ்டத்தின் அளவு இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் எனக் கூறுகின்றன.

மிதமான போக்குடைய 'அஸ்ர்-ஏ இரான்' செய்தி இணையதளம் ஒரு அதிகாரபூர்வமற்ற மதிப்பீட்டைக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, போர் மற்றும் இணைய முடக்கத்தின் கூட்டு விளைவால் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன அல்லது பாதிக்கப்பட்டுள்ளன.

அதே செய்தியில், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்புகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது எந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டது என்பது விளக்கப்படவில்லை.

இரானின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் 2,150 டிரில்லியன் ரியால்களை (1.69 பில்லியன் டாலர்) எட்டியுள்ளது.

தினசரி நஷ்டத்தின் மதிப்பீட்டின்படி, டிஜிட்டல் சேவைகளுக்கு 5 டிரில்லியன் ரியால்களும் (3.9 மில்லியன் டாலர்), ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கு 50 டிரில்லியன் ரியால்களும் (39.2 மில்லியன் டாலர்) இழப்பு ஏற்படுகின்றன.

உள்ளூர் தளங்களால் தேவையைக் கையாள முடியவில்லை என்றும், இது திறன் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைக்கு யார் பொறுப்பு?

அதிகாரிகள் இணையக் கட்டுப்பாடுகளைப் போர்க்கால அவசியம் என்று கூறி நியாயப்படுத்த முயல்கின்றனர்.

அரசின் பொதுத் தொடர்பு கவுன்சில் தலைவர் எலியாஸ் ஹஸ்ராதி, மோதல் முடிவுக்கு வந்த பிறகே இணைய வசதி முழுமையாக அளிக்கப்படும் என்றார். 'சிறப்புச் சூழ்நிலைகள்' காரணமாக பொதுமக்கள் பொறுமை காக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஏப்ரல் 21 அன்று, தகவல் தொடர்பு அமைச்சர் சத்தார் ஹாஷெமி, நிலையான மற்றும் உயர்தர இணைய வசதி என்பது ஒரு 'பொது உரிமை' என்றார்.

'கபர் ஆன்லைன்' செய்தி இணையதளத்தின்படி, இந்தத் தடங்கல்கள் வெறும் தொழில்நுட்ப ரீதியானவை மட்டுமல்ல, பல துறைகளிலும் பரவியுள்ள ஒரு 'அமைப்பு ரீதியான' விஷயம் என்று அவர் எச்சரித்தார்.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட சுமார் 10 மில்லியன் மக்கள் தங்கள் பணிக்காக நேரடியாக டிஜிட்டல் இணைப்பையே நம்பியுள்ளனர் என்று ஹாஷெமி கூறினார்.

இந்தத் தொடர் நிலையற்ற தன்மை அவர்களின் வேலைகளுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இது பரந்த சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

தொலைத்தொடர்புத் துறை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி குறித்து சுட்டிக்காட்டிய அவர், சில நிறுவனங்களின் வருமானம் குறைந்து வருவதால் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு